Skip to main content

சமஸ்கிருதத்திற்கு அக்கறை! மற்ற இந்திய மொழிகளுக்கு பாரபட்சம் ஏன்?

 

simbu

 

 

கடந்த 2014ஆம் ஆண்டில் எப்போது நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றாரோ, அப்போதிலிருந்து இந்தியாவில் மொழி திணிப்பு என்கிற தலைப்பு தவிர்க்க முடியாத ஒரு விஷயமாக மாறிவிட்டது. பிரசார்பாரதி நிறுவனத்தின் கீழ் செயல்படும் தூர்தர்ஷன் தலைமை அலுவலகத்திலிருந்து அனைத்து மண்டலத் தொலைக்காட்சி நிலைய அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள கோப்பு எண் 8/38/2020 பி1 என்ற எண் கொண்ட 26.11.2020 தேதியிட்ட சுற்றறிக்கையில்,  

 

“1) டெல்லி தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் தினமும் காலை 7.15 மணி முதம் 7.30 மணி வரை 15 நிமிடங்கள் ஒளிபரப்பாகும் சமஸ்கிருதச் செய்திகளை அனைத்து மாநில மொழி செயற்கைக்கோள் ஒளிபரப்பு அலைவரிசைகளும் அதே நேரத்தில் ஒளிபரப்ப வேண்டும் அல்லது அடுத்த அரை மணி நேரத்திற்குள் ஒளிபரப்ப வேண்டும்.

 

2) சனிக்கிழமை தோறும் மாலை 6 மணிக்கு டெல்லி தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும் வாரந்திர செய்தித் தொகுப்பை அதே நேரத்திலோ, அந்த நாளில் வேறு ஏதேனும் நேரத்திலோ ஒளிபரப்ப வேண்டும்” என்று ஆணையிடப்பட்டுள்ளது. 

 

ஏற்கனவே சமஸ்கிருதத்தில் ஒளிபரப்பப்படும் செய்திகளில் முக்கியத்துவம் வாய்ந்த செய்திகள் இல்லை என்று பலர் குற்றச்சாட்டு வைக்கின்றனர். இந்த நேரத்தில் மற்ற மாநில மொழியில் ஒளிபரப்பப்படும் துர்தர்ஷன் சேனல்களிலும், சமஸ்கிருத செய்திகளை ஒளிபரப்ப வேண்டும் என்பது என்ன மாதிரியான அறிவிப்பாக இருக்கும் என கேள்வியை எழுப்புகிறது. தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்களான ஸ்டாலின், ராமதாஸ், சு.வெங்கடேசன், ரவிக்குமார் உள்ளிட்டோர் இந்த சுற்றறிகைக்கு உடனடியாக தங்களின் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். 

 

கடந்த 2014ஆம் ஆண்டில் பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றதிலிருந்து சமஸ்கிருதத்திற்கான புரோமோஷன் என்பது பலமடங்காக உயர்ந்துகொண்டே இருக்கிறது. இதற்கு முன்னதாக 1996ல் வாஜ்பாய் பிரதமரானபோது சமஸ்கிருதம் அதிகப்படியாக பரப்பப்பட்டது. பாஜக ஆட்சியமைக்கும்போது இரு மொழிகள் மிக தீவிரமாக பரப்பப்படுகிறது. ஒன்று இந்தி மற்றொன்று சமஸ்கிருதம். வலதுசாரி கொள்கையை கொண்டு செயல்படும் பாஜகவின் நம்பிக்கைகளில் ஒன்றாக இருப்பது ‘ஒரே நாடு ஒரே மொழி’. இது ஒன்றுதான் இந்தியாவின் வளர்ச்சியை உறுதி செய்யும் என்று பல வருடங்களாக கூக்குரலிட்டு வருகிறது. எப்போது அதற்கு வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் அதை திணித்தும் வருகிறது.

 

மத்திய அரசின் புள்ளிவிவரங்களின்படி, சமஸ்கிருதம் பேசுபவர்களின் எண்ணிக்கை 14,000 பேர்தான். குடும்பமாக சமஸ்கிருதம் பேசுபவர்களின் எண்ணிக்கை மிக, மிக சொற்பமாக இருக்கிறது. காரணம், சமஸ்கிருத மொழி தேவ பாஷை என்று முதலில் நம்பப்பட்டு, மக்களின் மத்தியில் புழக்கமில்லாமல், ஒருசிலர் மட்டுமே அதை பயன்படுத்தி வந்தனர். இதனால் அது லத்தீன் மொழி போல தற்போது அழிவை நோக்கிய பாதையில் இருக்கிறது.

 

இந்நேரத்தில்தான் பாஜக அதை மீட்டெடுக்க, பல நூறு கோடிகள் மக்கள் வரிப்பணத்திலிருந்து செலவு செய்கிறது. 2020ஆம் ஆண்டு தொடக்கத்தில் மத்திய கலாச்சார அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, சமஸ்கிருதத்தின் வளர்ச்சிக்காக கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ. 643.84 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியா உள்ளிட்ட மற்ற ஐந்து மொழிகளுக்கு செய்யப்பட்ட மொத்த செலவு ரூ. 29 கோடி மட்டுமே. மற்ற மொழிகளைவிட சமஸ்கிருதத்திற்கு மத்திய அரசு செலவு செய்திருப்பது 22 மடங்கு அதிகம். 

 

இதுமட்டுமல்லாமல், பாஜகவை சேர்ந்த சில முக்கிய அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் சமஸ்கிருதம் குறித்து பல ஜோடிக்கப்பட்ட கருத்துகளை பேசுகின்றனர். இந்தியாவின் குடியரசு தலைவரான ராம்நாத் கோவிந்த், 2018ஆம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் பேசும்போது, கணினி மென்பொருள் மொழி மற்றும் அல்காரிதம்ஸ் போன்றவை சமஸ்கிருதத்திலிருந்து உருவாகியிருக்கிறது என்றார். இதுபோல பல அறிவியல் பூர்வமான விஷயங்களில் நாசாவை சம்மந்தப்படுத்தி இறுதியில் சமஸ்கிருதத்தில் முடித்து வருகின்றனர். “சமஸ்கிருதத்தில் பேசுவதனால் சர்க்கரை அளவு மற்றும் இரத்தக் கொதிப்பு சீரான அளவில் இருக்கும்” என்று பாஜக எம்.பி. ஒருவர் பேசியிருக்கிறார். 

 

இதற்கு முன்பு 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ஆம் தேதி முதல் சென்னை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பில் ஒலிபரப்பாகும் 4 மணி நேர இந்தி நிகழ்ச்சிகளைத் தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள உள்ளூர் வானொலிகள் மறு ஒலிபரப்பு செய்ய வேண்டும் என்று ஆணையிடப்பட்டிருந்தது. பின் அரசியல் தலைவர்களின் எதிர்ப்பால் அது கைவிடப்பட்டது. அதன்பின் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு பண்பலை வரிசையில் ஒலிபரப்பப்படும் 2 நிமிட செய்திகள் ரத்து செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக ஒரு மணி நேர இந்தி நிகழ்ச்சி திணிக்கப்பட்டது. தற்போது பொதிகை உள்ளிட்ட மற்ற மாநில தூர்தர்ஷன் சேனல்களில் 15 நிமிட சமஸ்கிருத செய்திகளை ஒளிபரப்ப வேண்டும் என்று கூறியுள்ளது.

 

திருக்குறள், பாரம்பரிய உடை என வெளிப்புறத்தில் பன்முகத்தவராக வெளிப்படும் பிரதமர் மோடியும், அரசும் நிறைவேற்றும் திட்டங்களில் மட்டும் ஒருதலைபட்சம் இருப்பது ஏன்? சமஸ்கிருதத்திற்கு மட்டும் ஏன் இந்த அக்கறை? இந்தி, சமஸ்கிருதம் அல்லாத மற்ற இந்திய மொழிகளுக்கு ஏன் இந்த பாரபட்சம்?

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்