Skip to main content

தி.மு.க போட்டியிடும் 20 தொகுதிகளில் ஏன் ஒரு முஸ்லீம் வேட்பாளரும் அறிவிக்கப்படவில்லை... - ஷானவாஸ் அதிரடி

Published on 22/03/2019 | Edited on 22/03/2019

சமீபத்தில் தி.மு.க வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதைத் தொடர்ந்து அதில் ஒரு முஸ்லீம் வேட்பாளரும் இடம்பெறவில்லை என்பது பலராலும் விமர்சிக்கப்படுகிறது. மேலும், இந்து மக்கள் கட்சியின் தலைவரான அர்ஜூன் சம்பத் “எங்கள் கோரிக்கையை ஏற்று தி.மு.க ஒரு முஸ்லீம் வேட்பாளரையும் அறிவிக்கவில்லை”என செய்தி வெளியிட்டார். இந்த சர்சைகள் குறித்து தி.மு.க கூட்டணி கட்சியான வி.சி.க-வின் துணைப் பொது செயளாலர் ஷானவாஸ் நமக்கு கொடுத்த பேட்டியின் தொகுப்பு. 

 

Shanavas speech about DMK canditas

 

அர்ஜூன் சம்பத் பேச்சையெல்லாம் கேட்டு தி.மு.க முடிவெடுக்கிறது என்பது அபத்தமானது. அர்ஜூன் இப்படி சொல்கிறார், ஆனால் எச்.ராஜா முஸ்லீம் லீக் கட்சியை வைத்துக்கொண்டு தி.மு.க மதசார்பற்ற கூட்டணி என்று சொல்கிறது என கூறுகிறார்.  இந்துத்துவா வலதுசாரி கட்சிகளில் அரசியல் அதிகாரத்தை முன்னெடுக்ககூடிய எச்.ராஜா, முஸ்லீம் லீக் இருக்கிற மதசார்பு கூட்டணியென தி.மு.க-வை கார்னர் செய்கிறார். அர்ஜூன் சம்பத் தி.மு.க முஸ்லீம்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை, அது எங்கள் பேச்சைக் கேட்டுத்தான் என்று சொல்கிறார். எனவே, அவர்களுக்குளேயே முரண்பாடுகள் இருக்கின்றன. அதை நாம் பெரிதுபடுத்த தேவையில்லை. 
 

தி.மு.க, முஸ்லீம் லீக் என்ற கட்சியைத் தன்னோடு இணைத்துக்கொண்டு அவர்களுக்கு ஒரு இடத்தையும் கொடுத்திருக்கிறது. எனவே, தி.மு.க வும் அ.தி.மு.க கூட்டணியும் ஒன்றல்ல, இரண்டையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்க முடியாது. அப்படி பார்த்தால், தி.மு.க கூட்டணியில் இரண்டு முஸ்லீம் வேட்பாளர்கள் இருக்கிறார்கள். ஆனால், அ.தி.மு.க-வில் முற்றிலுமாக முஸ்லீம் பங்களிப்பே கிடையாது.  தி.மு.க போட்டியிடும் 20 தொகுதிகளில் ஏன் ஒரு முஸ்லீம் வேட்பாளரும் அறிவிக்கப்படவில்லை என்பது நியாயமான கேள்வி. தி.மு.க-விடம் கேட்கவேண்டிய கேள்வியும் கூட, தி.மு.க-வை நோக்கித்தான் இத்தகைய கேள்விகள் வரும். ஏனென்றால், தி.மு.க தான் சமூக நீதியை முன்னிருத்துகிற கட்சி, அது அனைத்துச் சமுகத்திற்குமான அதிகார பரவலை யாரும் கேட்காமலே கொடுத்திருக்க வேண்டும். இந்த முறை நேர்ந்த தவற்றை எதிர்காலத்தில் சரிசெய்துகொள்ளவேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.  அதையும் தாண்டி, கடந்த 25 ஆண்டுகளாக, குறிப்பாக பாபர் மசுதி இடிக்கப்பட்டப் பிறகு வெகுஜன அரசியலில், அரசியல் கட்சிகளில் முஸ்லீம் இளைஞர்களின் பங்கேற்பு வெகுவாக குறைந்துள்ளது. தி.மு.க-வில் 25 ஆண்டுகளுக்கு முன்னால் முஸ்லீம் ஆளுமைகளாக சாதிக் பாட்ஷா, ஆயிரம் விளக்கு உஷேன், ரகுமான், மைதீன்கான், உமையத்துல்லா ஆகியோர் இருந்தனர். நாகூர் ஹனிபா என்கிற மிகப்பெரிய ஆளுமை தி.மு.க-வின் பிரச்சார முகமாக, கலைஞரின் நண்பராக இருந்தார் என்று ஒரு பட்டியலை சொல்ல முடியும். ஆனால், இப்போது ஆளுமைகளாக இருக்கிறார்கள் என்று யாரையாவது சொல்ல முடியுமா? நிறையபேர் இருக்கிறார்கள், ஆனால், தி.மு.க தலைமையால் அங்கிகரிக்கப்படக்கூடிய ஆற்றல் வாய்ந்த ஆளுமைகளாக இருக்கிறார்களா? கடந்த 25 ஆண்டுகளில் முஸ்லீம் இளைஞர்கள் தி.மு.க-வில் இணைந்திருக்கிறார்களா? அதன் முடிவுகளில் பங்கேற்கிற நிலைக்கு உயர்ந்திருக்கிறார்களா? என்றால், இல்லையே. தி.மு.க-வில் மட்டுமல்ல எந்த கட்சியிலும் பங்கேற்கவில்லையே. 
 

 

thirumavalavan with shanavas

 

நான் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருக்கிறேன். முப்பது வயதில் கட்சியின் துணைப் பொதுசெயளாலர் ஆனேன். அப்போது தலைவர் என்னை கலைஞரிடம் கூட்டிச் சென்றார். அப்போது என்னை கலைஞரிடம் அறிமுகம் செய்யும்போது அருகில் துரைமுருகன் அண்ணன் இருந்தார். அவர் “நானெல்லாம் 30 வருஷம் வேலைப் பார்த்தப்பிறகுதான் பொதுசெயளாலர் ஆனேன், நீ 30 வயசுலயே பொது செயளாலர் ஆயிட்ட”என்று சொன்னார். நான் ஒரு முஸ்லீம் இளைஞன், முஸ்லீம் அல்லாத ஒரு கட்சியில் இணைந்து, பணியாற்றி, என் ஆற்றலை நிருபித்து, அந்தக் கட்சியின் துணைப் பொது செயளாலராக பொறுபேற்க முடிகிறது. இதே சமூகத்திலில்ருந்துதான் நானும் வந்திருக்கிறேன். இந்த மைய நீரோட்ட அரசியல் என்னை விலக்கி வைக்கவில்லை, 30 வயதில் இவ்வளவு பெரிய பொறுப்புக் கொடுப்பதா என யாரும் கேள்வி கேட்கவில்லை.  என்னைவிட வயதில் மூத்தவர்கள் இந்தக் கட்சியில் இருக்கிறார்கள், இந்த கட்சிக்காக அர்பணித்து உழைத்தவர்கள் இன்னும் மாவட்ட செயளாலராக ஆகமுடியாமல் இருக்கிறார்கள். ஆனால், நான் 30 வயதிலேயே துணைப் பொது செயளாலராகிறேன், பொருளாலராக யூசூஃப் இருக்கிறார். அப்போ, பங்களிப்பு மட்டுமல்ல, ஆற்றல் கொண்டவர்களாகவும், அந்த கட்சிக்கு பொதுவெளியில் நன்மதிப்பை பெற்றுத்தரக் கூடியவர்களாக இருக்கவேண்டும். இத்தகைய ஆற்றலும், திறமையும் உள்ளவர்களுக்கு தேர்தல் களத்தில் அங்கிகாரம் கிடைத்துள்ளதே. எனக்கும் போட்டியிடுகிற வாய்ப்புக் கிடைத்தது, யூசூஃப்-க்கும் தி.மு.க அணியிலயே உளூந்தூர்பேட்டையில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்ததே. வெற்றிபெறவில்லை என்றாலும் எங்களுக்கான இடம் எங்களது பங்கேற்பால் கிடைத்தது. முஸ்லீம்களில் தி.மு.க அபிமானிகள் நிறைய இருக்கிறார்கள். ஆனால், தி.மு.க கொள்கைகளை பொதுவெளியில் முழங்கக்கூடிய அளவுக்கு, தி.மு.க தலைமையை தன் பக்கம் ஈர்க்கிற அளவுக்கு எத்தனை முஸ்லீம் இளைஞர்களின் பங்கேற்பு இருக்கிறது? பங்கேற்பு இருந்தால்தானே அங்குபோய் க்ளைம் பண்ணமுடியும். முதலில் வேட்புமனு கொடுக்கணும்ல, வேட்புமனு கொடுக்கிற அளவுக்கு கட்சியில் பங்களிப்பு இருக்கணும்ல. 
 

அடிமட்ட தொண்டனாக இருந்து தனது பங்களிப்பைக் கொடுக்ககூடிய பல முஸ்லீம்கள் இருக்கலாம், நான் அவர்களைச் சொல்லவில்லை. தனது பங்களிப்பால் கட்சியினுடைய கவனத்தை  மட்டுமல்ல, கட்சியின் முகமாக வெகுமக்கள் கவனத்தை ஈர்க்ககூடியவராக இருக்கவேண்டும். நான் வி.சி.க-வில் இருக்கிறேன், இப்போது நான் இந்த கட்சித் தலைவரின் கவனத்தை மட்டும் ஈர்க்கவில்லை, வெகுமக்கள் கவனத்தையும் ஈர்த்துள்ளேன். தலைவர் வெளியில் செல்லும்போது உங்க கட்சியிலிருந்து அந்த தம்பி நல்லா பேசினாங்க, நல்லா செயல்படுறாங்க என எல்லோரும் சொல்லுவார்கள். இதுபோல், இந்த 25 ஆண்டுகாலத்தில் பொதுகட்சிகளில் எத்தனை முஸ்லீம் இளையர்கள் தங்களது பங்களிப்பை கொடுத்திருக்கிறார்கள்? இதோடு பொறுத்தித்தான் இந்த பிரச்சனையைப் பார்க்கணும். வெறுமனே ஒரு அரசியல் கட்சியை குற்றம் சொல்லிவிட கூடாது. நான் தி.மு.க-வை காப்பாற்றுவதற்காக இதைப் பேசவில்லை. தேடிப் பிடித்தாவது ஒரு முஸ்லீம் சமுகத்தவருக்கு தி.மு.க இடம் கொடுத்திருக்கவேண்டும் என்பது உண்மை. அது ஒரு பக்கமிருந்தாலும், நான் கையை என்பக்கம் திருப்பி பார்க்கிறேன், என் சமூகத்தின் பக்கம் திருப்பி பார்க்கிறேன். அந்தவகையில், என் சமூகத்தின் பங்களிப்பு மிகவும் பின்தங்கியுள்ளது.

 

 

 

 

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Next Story

அ.தி.மு.க தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Edappadi Palaniswami appeals to ADMK volunteers

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் தனி முகவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதா காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அதிமுக அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பா.ஜ.கவின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.