Advertisment

என்ஆர்சிக்கு முஸ்லிம்கள் அச்சப்படுவது ஏன்?

அசாம் மாநிலத்தில் உரிய ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டினர் என்று 19 லட்சம் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் பாதிப் பேர் இஸ்லாமியர்கள். வெறுப்புக்கு எதிரான ஐக்கிய குழு என்ற அமைப்பு இந்த விவரத்தை வெளியிட்டிருக்கிறது. இந்தியாவில் 20 கோடி இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே பாஜக ஆட்சி இந்தியா முழுவதும் எடுக்கத் திட்டமிட்டுள்ள குடிமக்கள் பதிவேடு கணக்கை நினைத்து பயப்படுகிறார்கள். பாஜக அரசு தங்களை ஓரங்கட்டவே இந்தத் திட்டத்தை கையில் எடுப்பதாக அஞ்சுகிறார்கள்.

Advertisment

why islam people oppose nrc

பாஜக அரசு நிறைவேற்றிய குடியுரிமை திருத்தச்சட்டத்தை எதிர்த்து இந்தியா முழுவதும் நடைபெற்ற போராட்டத்தில் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பாஜக ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 22 பேர் பலியாகி இருக்கிறார்கள். பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று பக்கத்து நாடுகளில் இருந்து 2015க்கு முன் இந்தியாவுக்கு வந்த இஸ்லாமியர்களைத் தவிர, இந்து, பவுத்தம், ஜைனம், சீக்கியர், கிறிஸ்தவர்கள், பார்சிகள் என்ற ஆறு மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே குடியுரிமை என்று இந்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத அடிப்படையில் குடியுரிமை என்ற பாஜகவின் இந்த முடிவுக்கு நாடு முழுவதும் மதங்களைக் கடந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது இந்தியாவின் மதசார்பற்ற அரசியல் சட்டத்தை மீறுவதாக ஆவேசமான போராட்டங்கள் வெடித்தன. பாஜக அரசு தொடங்கப்போகும் குடியுரிமை பதிவேடுக்கு முன்னோடியாகவே இந்த சட்டம் நிறைவேற்றப் பட்டிருக்கிறது. இஸ்லாமியர்களின் குடியுரிமையை கேள்விக்குள்ளாக்கும் என்று வரலாற்று அறிஞர்களும், சட்ட வல்லுநர்களும் எச்சரித்திருக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடு முழுவதும் குடியுரிமை பதிவேடு தொடங்கப்படும் என்று கூறினார். ஆனால், மோடியோ அதுபோன்ற திட்டம் தங்களுக்கு கிடையாது என்றார்.

Advertisment

why islam people oppose nrc

2014ல் எனது அரசு பதவியேற்றதில் இருந்து என்ஆர்சி என்ற வார்த்தையைக் குறித்து விவாதித்ததே இல்லை என்று 130 கோடி இந்திய மக்களுக்கும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் என்று மோடி கூறினார். எனினும், நாடு முழுவதும் தேசிய மக்கள்தொகை பதிவேடுக்காக 8 ஆயிரத்து 500 கோடி ரூபாயை மோடி அரசு ஒதுக்கியிருக்கிறது. தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு உதவும் வகையிலேயே இந்த மக்கள்தொகை பதிவேடு நடத்தப்படுவதாக சமூக செயற்பாட்டாளர்கள் கூறியிருக்கிறார்கள். என்ஆர்சி குறித்து மோடி கூறியதை பொய் என்று ராகுல்காந்தி கூறினார். ஆர்எஸ்எஸ்சின் பிரதமர் மோடி, இந்தியத் தாயிடமே பொய் சொல்லியிருக்கிறார் என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறி்ப்பிட்டார்.

ஆனால், பாஜகவினர் ஒருபக்கம் குடியுரிமைப் பதிவேடு இருக்காது. இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு இருக்காது என்று கூறிக்கொண்டே நாடு முழுவதும் சட்டவிரோத குடியேறிகளுக்கு என்று மிகப்பெரிய சிறப்பு முகாம்களை கட்டிக்கொண்டே இருக்கிறது. ஜெர்மனியில் யூதர்களுக்காக கான்சென்ட்ரேஷன் கேம்ப் என்ற பெயரில் ஹிட்லர் அமைத்த முகாம்களை இத்துடன் ஒப்பிட்டு கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள். என்ஆர்சியில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கு சிறப்பு சலுகை கிடைக்கும்போது, பாதிக்கப்படுபவர்கள் இஸ்லாமியர்கள்தான் என்பது சிறு குழந்தைகளுக்குக்கூட புரியும் என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பேராசிரியரான தன்வீர் ஃபாஸல் கூறியிருக்கிறார்.

சட்டவிரோத குடியேறிகளுக்கான முகாம் என்ற பெயரில் அசாம் மாநிலத்தில் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதக் கணக்குப்படி 6 முகாம்கள் செயல்பாட்டுக்கு வந்திருக்கின்றன. அவை தவிர அசாம் மாநிலத்துக்கு வெளியே 4 முகாம்களும் கட்டி முடிக்கப்பட்டிருக்கின்றன என்று உள்துறை அமைச்சகம் சார்பில் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. ஏற்கெனவே இயங்கும் முகாம்கள் தவிர, அசாமில் 3 ஆயிரம் பேர் தங்கக்கூடிய வகையில் ஒரு மிகப்பெரிய முகாம் முடியும் நிலையில் இருக்கிறது. இந்த முகாம்களில் அடைக்கப்படும் நபர்களில் 98 சதவீதம் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள். மீதமுள்ள 2 சதவீதம்பேர் மியான்மர் நாட்டைச் சேர்ந்த ரோஹிங்கியா முஸ்லிம்கள்.

why islam people oppose nrc

அசாமில் உள்ள 6 முகாம்களில் 970 பேர் இருக்கின்றனர். இவற்றுடன் மாடியா, கோல்பாரா ஆகிய இடங்களில் 46 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் இரண்டு முகாம்கள் கட்டப்பட்டு வருகின்றன. அசாமில் உள்ள 6 முகாம்களில் மூன்றில் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே அடைக்கப்பட்டுள்ளனர். அசாமைத் தவிர, பஞ்சாப், கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் தலா ஒரு முகாமை கட்ட மத்திய அரசு அனுமதி கொடுத்திருக்கிறது.

பாஜக செயல்தலைவராக இருக்கிற நட்டா என்ஆர்சி அமல்படுத்தப்படும் என்கிறார். அமித் ஷா நாடாளுமன்றத்திலேயே என்ஆர்சியை நாடு முழுவதும் அமல்படுத்துவோம் என்கிறார். ஆனால், மக்கள் போராட்டம் தீவிரமானதும் எல்லாவற்றையும் மறைக்கப் பார்க்கிறார்.

என்ஆர்சியால் மக்கள் மட்டும் பாதிக்கப்பட போவதில்லை. அவர்களுக்காக அரசு லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை செலவு செய்ய வேண்டும். அசாமில் 19 லட்சம் பேரை குடியுரிமை அற்றவர்களாக அறிவித்துள்ளனர். அவர்களுக்காக முகாம்கள் கட்டப்படுவதாக சொல்லப்படுவதை மோடி மறுக்கிறார். ஆனால், படங்களுடன் செய்தி வருகிறது. 3 ஆயிரம் பேர் தங்குவதற்கு 40 கோடி செலவில் முகாம் கட்டப்படுகிறது. அப்படியானால், 19 லட்சம் பேரை தங்கவைக்க 24 ஆயிரம் கோடி ரூபாய் தேவை. இதெல்லாம் இப்போது தேவையா?இந்தியாவை இன்னொரு ஜெர்மனியாக மாற்றும் முயற்சியை அனுமதிக்க மாட்டோம் என்று சிதம்பரம் கூறியிருக்கிறார்.

குடியுரிமை கணக்கெடுக்கப் போவதாக சொல்லும் அரசு, அல்லது குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றி சட்டமாக்கிவிட்ட அரசு, குடியுரிமை பெற என்னென்ன ஆவணங்கள் தேவை என்பதைக்கூட அறிவிக்கவில்லை. அப்படியே எந்த ஆவணம் கேட்டாலும் முழுமையாக எத்தனை பேரிடம் அந்த ஆவணங்கள் இருக்கும் என்பது குறித்து ஒரு கணக்கெடுப்பு அதிர்ச்சி அளிக்கிறது. “தேசிய அளவில் NRC இன்னமும் அறிவிக்கப்படவில்லை. அப்படி வரும் பட்சத்தில் இந்தியக் குடிமக்கள் யாரும் இதில் பாதிக்கப்பட மாட்டார்கள்!” மத்திய அரசு வெளியிட்ட விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது. மேலோட்டமாக பார்த்தால் இந்திய குடிமக்களுக்கு பாதிப்பில்லையே என்றுதான் கேட்கத் தோன்றும். ஆனால், யார் இந்தியக்குடிமகன் என்று எப்படி நிரூபிப்பது என்பதுதான் இங்கே இருக்கும் சிக்கலே.

why islam people oppose nrc

ஆதார், பாஸ்போர்ட் போன்றவை மட்டும் போதாது. சரி, பிறந்த தேதியும், பிறந்த இடமும் உள்ள எல்லா ஆவணங்களும் ஏற்றுக்கொள்ளப்படும் (Date of Birth, Place of Birth) என்றே அறிவிக்கப்பட்டாலும் அதுவும் கூட போதாது.

பிறப்பு சான்றிதழ்: 2000ம் ஆண்டு வரை பிறந்த குழந்தைகளில் 56% பேருக்குத்தான் பதியப்பட்டுள்ளது. 2015ல் பிறந்த குழந்தைகளுக்கும் கூட 89%தான் இருக்கலாம் என்று அனுமானிக்கிறார்கள். (Civil Registration System)

ஆதார் அட்டை: மொத்தம் 90% இந்தியர்களுக்கு மட்டுமே ஆதார் அட்டை வழங்கப்பட்டு இருக்கிறது. வடகிழக்கு மாநிலங்களில் இந்த எண்ணிக்கை மோசம்: அஸ்ஸாம் 17%, மேகாலயா 29%, நாகாலாந்து 29%. (UIDAI, 2018)

பாஸ்போர்ட்: இதுவரை கிட்டத்தட்ட 8 கோடி பாஸ்போர்ட் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. (MEA, 2018)

வங்கிக்கணக்கு: மொத்தம் 80% இந்தியர்களிடம்தான் வங்கிக்கணக்கு இருக்கிறது. (RBI, 2017)

வாக்காளர் அட்டை: மொத்தம் 92 சதவிகித மேஜர் இந்தியர்களிடம் வாக்காளர் அட்டை இருக்கிறது. (Election Commission, 2017)

இடைநிலைப்பள்ளி சான்றிதழ்: 80% மக்களிடம் இடைநிலைப்பள்ளி சான்றிதழ் இருக்கலாம். 2004 வரை 51% பேரிடம்தான் இருக்கலாம். (HRD Ministry, 2016-17)

ஆக, எந்த வகையில் பார்த்தாலும் கிட்டத்தட்ட 10 முதல் 15 சதம் வரை மக்கள் விடுபட்டுப் போவார்கள். அதாவது 13 முதல் 18 கோடிப்பேர் வரை இந்தியரல்லர் என்று ஆகும் சாத்தியக்கூறு இருக்கிறது. அதாவது, இந்த அடையாள அட்டைகள் எல்லாம் செல்லும் என்று அரசு அறிவித்தால்தான் இந்த நிலையும்.

"NRC எங்கள் திட்டத்தில் இல்லை, பயம் தேவையில்லை என்றெல்லாம் சொல்லி தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டு இருக்கத்தேவையில்லை, CAA மற்றும் NRC இரண்டிலும் மாற்றம் கொண்டு வருகிறோம், வேறு ஆவணங்களை சேர்க்கிறோம் என்றெல்லாம் சப்பைக்கட்டு கட்டத் தேவையில்லை. நாடு இருக்கும் நிலையில், ஒட்டுமொத்தமாக இவையெல்லாமே தேவையில்லாதவைதான்" என்பதே பலரின் கருத்தாக உள்ளது.

nrc list
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe