Skip to main content

“திருமா பேசினால் மட்டும் உங்களுக்கு ஏன் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது” - நாஞ்சில் சம்பத் கேள்வி!

Published on 09/01/2021 | Edited on 09/01/2021

 

jl

 

சென்னையில் நடைபெற்ற திருமாவளவனுக்கு விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட நாஞ்சில் சம்பத், நடப்பு அரசியல் தொடர்பாக பேசினார். அவரின் பேச்சு வருமாறு, " நினைத்ததெல்லாம் பேசுவதற்கு தற்போது நேரமில்லை. இந்த நிகழ்ச்சிக்கு நான் வன்னி அரசால் அழைக்கப்பட்டபோது இந்த நிகழ்ச்சிக்கு நான் வர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். யாரும் செய்ய முடியாத விஷயங்களைச் செய்பவர்கள் ‘பெரியவர்கள்’ என்று அழைக்கப்படுவார்கள். அந்த வகையில் தமிழக அரசியலில் செய்ய முடியாத பல செயல்களைத் தொடர்ந்து செய்து வருபவர் திருமாவளவன். செயற்கறிய செயலைச் செய்திருக்கின்ற அவரை நான் பாராட்டினால் என்னையும் நான் புதுப்பித்துகொள்ள முடியும் என்கிற சுயநலத்தால் நான் இங்கே அவரை பாராட்ட வந்துள்ளேன். தொல்.திருமாவளவனுடைய ஒவ்வொரு நடவடிக்கைகளையும் ஒரு பார்வையாளனாக நான் பார்த்து வருகிறேன். மனுநீதிக்கு எதிராக அவர் சொன்னதை வைத்து அவரைச் சிதைத்துவிடலாம் என்று சிலபேர் நினைத்தபோது, நான் ஒரு ஊடகத்துக்கு சொன்னேன், ‘திருமா தோண்டினால் தங்கம், சீண்டினால் சிங்கம்’ என்றேன். அதில் எப்போதும் மாற்றமில்லை. திருமா தொடமுடியாத உயரத்தில் இருக்கிறார் என்பதை அவர்களும் அறிவார்கள். 

 

திருமாவளவன், தூசிகள் தொடமுடியாத வானம். ஆனால் அவரை அவமரியாதை செய்ய வேண்டும் என்பதற்காக இந்த பிரச்சனைகளைக் கையில் எடுத்தார்கள். அவர்கள் அதில் தோல்வி அடைந்தார்கள். இன்று கலைஞர் இல்லை, ஜெயலலிதா இல்லை என்பதற்காக பாசிசத்தை இங்கே பரப்ப, காலில்லாத கயவர்கள் எல்லாம் இன்றைக்கு ஆட்சி அதிகாரம் நம்மிடம் இருக்கிறது என்று முயன்று பார்க்கிறார்கள். இதனை அரசியல் ரீதியாக சொல்கிறேன், இதனை எதிர்க்கிற ஆற்றல் ஒருவருக்குப் பரிபூரணமாக இருக்கிறது என்றால் அது திருமாவளவனுக்கு மட்டும்தான் இருக்கிறது. ஆகவே அதில் அவர் சமரசம் செய்துகொள்ளவில்லை. எப்போதும் அவர் அதற்கு முயல மாட்டார் என்பதைக் கூட நம்மால் உறுதியாக சொல்ல முடியும். மாயாவதி, விபி.சிங் பெற்ற இந்த விருதை தற்போது எங்கள் திருமாவளவன் பெற்றுள்ளார். அந்த வகையில் ஒரு புதிய அரசியல் வரலாற்றை அவர் படைத்துள்ளார் என்றால் அது மிகையல்ல. அவர் தமிழகத்துக்கும் மட்டுமான தலைவர் இல்லை, ஒட்டுமொத்த இந்திய தேசத்துக்கான தலைவராக தன்னை அவர் தயார்படுத்திக்கொண்டுள்ளார். அவரின் பயணம் தற்போது முழுமூச்சில் ஆரம்பித்துள்ளதாகவே கருதுகிறேன்.

 

இன்றைக்கு கடவுள் முருகளை அடிப்படையாகக் கொண்டு சிலர் நாடகம் நடத்துகிறார்கள். அவர் எங்களை ஏற்றுக்கொண்டாலும், உங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்பதை அவர்கள் எப்போது புரிந்துகொள்வார்கள் என்று தெரியவில்லை. உங்களுக்கு ஏதாவது முருகனைப் பற்றி தெரியுமா? பச்சை வேட்டி கட்டி, காவி சட்டை போட்டு ஊடக வெளிச்சத்தில் உயிர்வாழ பார்க்கிறீர்களா? இது உங்களுக்கே மலிவாக தெரியவில்லையா? ஊடகம் உங்களுக்கு எப்போது ஒத்துழைக்க ஆரம்பித்துள்ளதோ அப்போதே உங்களுக்கு சனி பிடிக்க ஆரம்பித்துவிட்டது என்று அர்த்தம். உங்களின் கேந்திரம் நாக்பூர், அங்கேயே நீங்கள் தோல்வி அடைந்தீர்கள். தெலூங்கானாவில் உள்ளாட்சி தேர்தலில் அந்த மாநில முதல்வருக்கே தெரியாமல் தேர்தல் பிரச்சாரம் செய்ய தலைவர்கள் வருகிறார்கள், உள்துறை அமைச்சர் வருகிறார், ஆனால் தேர்தல் முடிவு என்ன. அவர்களால் வெற்றி பெற முடிந்ததா? எல்லா இடங்களிலும் தோற்றுக்கொண்டே வருகிறீர்கள். ஆனால் அது பத்திரிக்கை செய்திகளில் வருவதில்லை. எனவே வல்லாதிக்கத்திற்கு எதிராக மக்கள் அணிதிரண்டு வருகிறார்கள். திருமாவளவன் பேசினால் மட்டும் அவர்களுக்கு ஆத்திரம் வருகிறது என்றால் அவர் தலைவராகிவிட்டார் என்று அர்த்தம். எனவே அவரின் தோளுக்குத் தோள்கொடுக்க வேண்டிய கட்டாயம் நமக்கு உண்டு" என்றார்.