Skip to main content

நான் ஏன் ''நீங்க யார்'' என்று கேட்டேன்?- ரஜினியிடம் கேள்வி கேட்ட சந்தோஷ் விளக்கம்

Published on 31/05/2018 | Edited on 01/06/2018

தூத்துக்குடி ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் நடந்த வன்முறையில் பதிமூன்று பேர் கொல்லப்பட்டனர். நூறுக்கும்  மேற்பட்டோர் காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டிற்குக் கண்டனம் தெரிவித்து பல அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களை சந்தித்து வந்தனர். 30 மே 2018 அன்று நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து மருத்துவமனை வரை திறந்த காரில் கையசைத்தபடி சென்று மக்களை சந்தித்தார். போராட்டத்தில்  காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த சந்தோஷ் என்ற இளைஞர் தங்களைப் பார்க்க வந்த ரஜினிகாந்த்தைப் பார்த்து ''யார் நீங்கள்?'' என்று கேள்வி எழுப்பிய வீடியோ வைரலானது. அந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட 'நான்தான்பா ரஜினிகாந்த்' என்ற ஹேஷ் டேக் ட்ரெண்டானது. சந்தோஷிடம் பேசினோம்...


 

snthosh

 

 

 

பேஸ்புக், வாட்ஸ் ஆப் எல்லாவற்றிலும் ‘நான்தான்பா ரஜினி’ என்ற ஹேஷ் டேக் நம்பர் ஒன் இடத்தில் இருக்கு. அங்க என்ன நடந்தது?

நான் அவர் வந்தவுடனே ''யார் சார் நீங்க?'' என்றுதான் கேட்டேன். ''யார் நீ'' என்று கேட்கவில்லை. உடனே ''நான்தான்பா ரஜினிகாந்த்'' என்று பதில் சொன்னார். "அப்படியா, சார் எனக்கு தெரியாது. நீங்க எங்க இருந்து வர்றீங்க?'' என்று கேட்டேன். சென்னை என்றவுடன் ''சென்னையிலிருந்து வர 100 நாட்கள் ஆகுமா?'' என்று கேட்டேன். ''ம்ம்ம்ம்ம்...'' சொல்லிட்டு போயிட்டாங்க. இதுதான் நடந்தது. நாங்க கேட்ட நோக்கம் வேற, அவங்க பரப்பி இருப்பது வேற. 

நீங்கள் கேட்ட நோக்கம்தான் என்ன? 

உங்களுக்கே தெரியும் ரஜினிகாந்த் என்பவர், பவர் இருக்கோ இல்லையோ, அவங்களுக்கென ஒரு தனி மரியாதை உண்டு. 100 நாட்களில் ஒரு நாள் எங்கள் போராட்டத்தில் கலந்து இருந்தால் எங்கள் போராட்டம் கொஞ்சம் பலமடைந்திருக்கும். 22-ஆம் தேதி வந்திருந்தால், 'சமூக விரோதிகள், சமூக விரோதிகள்' என்று சொல்கிறாரே... அப்படி சொல்லிருக்க மாட்டார். போலீசும் அடித்திருக்க மாட்டார்கள். எதுக்கு அடித்தார்கள் என்று அவர்களுக்குத் தெரிந்து இருக்கும். எல்லாரையும் சும்மா சமூக விரோதி என்று சொல்வதுதான் கஷ்டமாக இருக்கு. போலீஸ் வந்து சமூக விரோதியைத்தான் தாக்கி இருக்கிறார்கள், சமூக விரோதியைத்தான் சுட்டிருக்கிறார்கள் என்று சொல்லி இருக்கிறார்கள். அப்புறம் ஏன் சமூகவிரோதியை பார்க்க வந்தார்கள்? மக்கள் என்பதால்தானே பார்க்க வந்தார்கள்? இங்கு வந்து மக்கள்... மக்கள்.... என்று சொல்லிவிட்டு வெளியே போய் சமூக விரோதிகள் என்று சொன்னால் என்ன அர்த்தம்? 

 

 


மக்களைத் தூண்டிவிடுவதற்கு அரிவாள், கத்தி, கம்பு வைத்து நாங்க பிரச்சாரம் செய்யவில்லை. இன்றை வரைக்கும் நாங்கள் அறவழியில்தான் போராடி வந்தோம். கலவரம் பண்ண வேண்டுமென்றால் நாங்க ஏன் பிஸ்கட், தண்ணீர், பால் இதையெல்லாம் எடுத்து போகப்போறோம்? இல்லை ஏன் நாங்க குழந்தை குட்டியோடு போராடப் போகப்போறோம்? சொல்லுங்க... உண்மையிலேயே ரஜினிகாந்த் போராட்டத்தைப் பற்றிப் பேசியது கொச்சைப்படுத்துவது போல் இருந்தது. 

'போலீஸை அடிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது' என்று சொல்கிறாரே... நான் கேட்கிறேன், 'இப்ப உங்க மனைவி பக்கத்தில் நிக்குறாங்க, அவங்கள போலீஸ் தாக்கும்போது என்ன செய்வீங்க? தடுப்பீங்க, தள்ளிவிடுவீங்க.. அதைத்தான் நாங்களும் செய்தோம். அதனால்தான் இந்தக் கேள்விகளை எல்லாருகிட்டயும் கேட்டோம். போராட்டத்துக்கு அவங்க வந்திருந்தா அந்தக்  கேள்வியை நாங்க ஏன் கேட்கப்போறோம்? 144 தடை உத்தரவு எடுத்து 3 நாள் ஆகிவிட்டது. 100வது நாள் தடை உத்தரவு போட்டார்கள். 99 நாட்கள் அறவழியில்தான் போராடினோம், அப்ப வந்து பார்த்திருக்கலாம். 

இந்த அரசு கார்ப்ரேட்டுக்கு ஆதரவாக எங்களை முடக்குபோதுதான் எங்க போராட்டத்தை ஆரம்பித்தோம். உனக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, நீங்க போராடக்கூடாது என்று சொல்வது ஒடுக்குமுறை. 50 வருடம் முன்னாடி போய் பார்த்தீர்கள் என்றால் இந்தமாதிரி இல்லை. நம்ம தமிழ்நாடு எல்லா விஷயத்திலும் முன்னோடியாக இருந்தது. சுதந்திரப்  போராட்டத்தில் தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய பங்கு இருந்தது. அப்போதெல்லாம் தமிழ்நாடு சிறப்பாக விளங்கியது. நாங்க எல்லா கம்பெனியையும் மூட வேண்டும் என்று சொல்லவில்லை. மக்களின் அடிப்படை உரிமையை பறிக்கின்ற இந்த மாதிரி கம்பெனி வேண்டாம் என்றுதான் போராடுகிறோம். நேற்று காலேஜ் படிக்கிற ஒரு பெண் புற்றுநோயால் இறந்துவிட்டது. அந்தப்  பெண்ணுக்கு என்ன கெட்ட பழக்கம் இருந்தது சொல்லுங்க. அந்த பெண் ஏன் சாக வேண்டும்? 

 

 


எல்லார்கிட்டயும் நான்தான் கேள்வி கேட்டேன். கேள்வியை நான் வம்படியாக எல்லாம் கேட்கவில்லை. அவங்ககிட்ட தகாத கேள்வி எழுப்பவில்லை. கடம்பூர் ராஜு, துணை முதல்வர் யார்கிட்டயும் நான் தவறான கேள்விகள் எதுவும் எழுப்பவில்லை. எங்களின் உரிமைக்காக சரியான கேள்வியைத்தான் கேட்டிருக்கின்றேன். அந்த நடிகர்தான் நாங்க 99 நாட்கள் போராடிய போது வரவில்லையே, நாங்க இருக்கிறோம் என்று ஆறுதல் சொல்ல வரவில்லையே... இத்தனைக்கும் வராதவர்கள் இன்றைக்கு ஏன் வரவேண்டும்? கேட்டால், 'மக்கள் சந்தோஷப்படுவார்கள் என்று வந்தேன்' என்கிறார். நாங்க சந்தோஷப்பட நாங்க ஒன்றும் விழா நடத்தவில்லை, துக்கத்தில் இருக்கிறோம். அந்த துக்கத்தில் இருந்து மீண்டு வர முடியாமல் உட்கார்ந்து இருக்கிறோம். அப்படியிருக்கின்ற பட்சத்தில் மக்களை சந்தோஷப்படுத்த வாரேன் என்று சொன்னால் என்ன அர்த்தம்?

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜனநாயக கடமையாற்றினார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Actor Rajinikanth cast his vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  அதன்படி நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Tuticorin incident Court action order

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (27.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” என பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.