Skip to main content

“உங்களுக்கு சீட் கொடுக்க அவர் விரும்பவில்லை..!” “நான் என்ன ஏமாளியா?” ஜெயிப்பது யார்? சூடு பிடிக்கும் சூதாட்டம்!

Published on 24/09/2020 | Edited on 24/09/2020
admk

 

 

எடப்பாடியின் முதல்வர் வேட்பாளர் கனவுக்கு வேட்டு வைக்க அமைச்சர்களை ஒருங்கிணைக்கும் ரகசிய திட்டத்தில் குதித்திருக்கிறார் ஓ.பி.எஸ். அது தொண்டர்கள் வரை தாக்கம் ஏற்படுத்தியிருப்பதை 18ந் தேதி தலைமை கழகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தின்போது எழும்பிய முழக்கங்கள் உணர்த்தின.

 

admk

 

ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள எடப்பாடியும் பன்னீரும் தனித்தனியாக அ.தி.மு.க. தலைமையகத்துக்கு வந்தபோது, நிரந்தர முதல்வரே வருக என எடப்பாடி ஆதரவாளர்களும், வருங்கால முதல்வரே என ஓபிஎஸ் ஆதரவாளர்களும் முழக்கமிட்டு கோஷ்டி பூசலை அம்பலப்படுத்தினர். அதற்கேற்ப உள்ளேயும் நாகரீகமான முறையில் பூசல் வெடித்தது. 28-ந் தேதி கூடும் அதிமுக செயற்குழுவில் மல்லுக்கட்ட இரு தரப்பும் முஷ்டியை உயர்த்துவதால் அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு திடீர் மவுசு கூடியுள்ளது.

 

admk

 

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் நடக்கும் எந்த ஒரு ஆலோசனைக் கூட்டத்திலும் ஓப்பன் பேட்ஸ்மேனாக களமிறங்குவது கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனு சாமிதான், இம்முறையும் அவரேதான்.

 

‘எனக்கு பிறகும் 100 ஆண்டுகாலம் அ.தி.மு.க. இருக்கும் என அம்மா(ஜெ.) சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். அப்படிப்பட்ட நிலையில், கட்சியில் சமீபகாலமாக எதிரொலிக்கும் பிரச்சனைகள் ரசிக்கும்படியாக இல்லை. அதிமுக ஆட்சி மீண்டும் அமைய வேண்டும். நீங்கள் ரெண்டு பேருமே (இபிஎஸ், ஓபிஎஸ்.) அதிமுகவின் இரட்டைக்குழல் துப்பாக்கிகள்; இருவரும் ஒற்றுமையாக இருப்பதுதான் தி.மு.கவையும் துரோகிகளையும்(தினகரன்) வீழ்த்துவதற்கு பயன்தரும்’’ என்றிருக்கிறார்.

 

admk

 

இதனையடுத்துப் பேசிய துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம், "முதல்வர் வேட்பாளரை மையப்படுத்தி கட்சிக்குள் நடக்கும் பிரச்சனைகளால் கீழ்மட்ட நிர்வாகிகள் சோர்வடைந்திருக்கிறார்கள். தொண்டர்கள் சோர்வடைந்தால் அது கட்சியை பாதிக்கும். தேர்தல் நேரத்தில் கட்சி நல்லா இருந்தாதான் ஆட்சியை நாம் மீண்டும் பிடிக்க முடியும். ஆட்சியில் நாம் இருக்கிறோம். ஆனா, இதன் நன்மைகள் தொண்டர்களுக்கு கிடைக்கவில்லைங்கிற வருத்தம் அவர்களிடம் இருக்கிறது. தேர்தலுக்கு முன்பு இதையெல்லாம் சரி பண்ணுங்கள்'' என்றார்.

 

admk

 

ஓ.பி.எஸ். ஆதரவாளரான ஜே.சி.டி.பிரபாகரன், "அம்மாவின் ஆன்மா உண்மையில் ஓ.பி.எஸ்.ஸிடம்தான் இருக்கிறது. அவரது மனதை காயப்படுத்துபோல பல நிகழ்வுகள் நடக்கிறது. அவர் மனம் வருந்தினால் கட்சிக்கு நல்லதில்லை'' என்று முதல்வர் வேட்பாளர் விஷயத்தில் எடப்பாடியும் அவருக்கு ஆதரவு அமைச்சர்களும் நடந்து கொள்வதை மறைமுகமாக சுட்டிக்காட்டும் விதத்தில் அவர் பேசிக் கொண்டேயிருக்க, அமைச்சர் உதயக்குமார் சட்டென்று குறுக்கிட்டு, பேச்சின் திசையை மாற்றினார்.

 

 

admk

 

"தேர்தலை எதிர்கொள்ள எல்லோரையும் ஒருங்கிணைக்கும் தலைமை அவசியம். அந்த தலைமை உருவானால்தான் ஆட்சியை நாம் தக்கவைத்துக்கொள்ள முடியும். தேர்தலுக்கு முன்பு சின்னம்மா (சசிகலா) விடுதலையாகும்போது அவரை கட்சியில் இணைத்துக்கொள்ள வேண்டும். அவரது தலைமையில் தேர்தலை சந்தித்தால் நமக்கு வெற்றி நிச்சயம்'' என்று உதயக்குமார் சொல்ல, அதனை அமைச்சர் செல்லூர் ராஜு வழிமொழிய, கூட்டத்தில் எதிர்ப்புக்குரல்கள் எழுந்தன.

 

admk

 

அப்போது பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "சசிகலா எதிர்ப்பு நிலையை துவக்கத்திலிருந்தே செய்து கொண்டிருக்கிறோம். இப்போ திடீர்னு அவரை மையப்படுத்திப் பேசினால் எப்படி? பொதுச்செயலாளர் பதவியிலிருந்து அவரை விலக்கி வைத்துவிட்டு, கட்சிக்குள் ஒருங்கிணைப்பாளர்கள் என்கிற கட்டமைப்புக்குள் நாம் இயங்கிக் கொண்டிருக்கும்போது மீண்டும் அவரை உள்ளே நுழைப்பது வீண் பேச்சு. கட்சிக்கும் சசிகலாவுக்கும் சம்மந்த மில்லைன்னு எல்லோரும் சேர்ந்துதானே முடிவு செய்தோம். இப்போ, அதற்கு மாறாக பேசினால் என்னன்னு நினைக்கிறது? சசிகலா விஷயத்தில் கட்சியில் எடுத்த முடிவுப்படி இத்தனை நாள் பேசிய நான் என்ன ஏமாளியா?''’என்று கோபம் காட்டியிருக்கிறார்.

 

admk

 

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் பேசிய அமைச்சர்கள் தங்கமணியும் வேலுமணியும், "தேவையற்ற பேச்சுகள் இங்கு தேவையில்லை. இந்த தேர்தல் நமக்கு சவாலான தேர்தல். அதனால் நாம் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே தேர்தலில் நமக்கான வெற்றி கிடைக்கும். பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்கிற அந்தச் சூழலில், சில முடிவுகளை தீர்மானித்திருந்தோம். ஆனால், இன்றைய சூழல்களுக்கு அது தேவையில்லை. அதனால், முதல்வர் வேட்பாளர் யார் என்பதை சொல்லிவிட்டு தேர்தலை சந்திக்கலாம். ஒற்றுமையாக, ஒரு மனதாக விவாதிப்போம்’ என்று சொல்ல, முதல்வர் வேட்பாளரை அறிவித்துவிட்டு தேர்தலை சந்திப்பது அதிமுகவுக்கு சரிப்பட்டு வராது. தேர்தலுக்கு பிறகுதான் அதனை முடிவு செய்ய வேண்டும்'' என்று வைத்தியலிங்கம் சொல்லவும் சலசலப்புகள் உருவானது.

 

admk

 

சட்டென்று எழுந்த அமைச்சர் சி.வி. சண்முகம், "முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்தி தேர்தலை சந்தித்தால் குறிப்பிட்ட சமூகத்துக்கு ஆதரவான கட்சியாக அ.தி.மு.க.வை விமர்சிப்பார்கள். ஏற்கனவே, இப்படி ஒரு முத்திரை நம் கட்சிக்கு இருந்துச்சு. மீண்டும் அப்படிப்பட்ட விமர்சனங்கள் வரக்கூடாது. இப்போதுகூட, ஆட்சியில் கிடைக்கும் எல்லா நல்லவைகளும் குறிப்பிட்ட சமூகத்துக்கே கிடைக்கிற நிலை இருக்கிறது‘’ என்று எடப்பாடியின் சமூகத்தை மனதில் வைத்துப் பேச, எதிர்ப்பு கிளம்பியது. ஆதாரத்துடன் பேசுவதாகவும், கோபத்தை கிளறி, உண்மையைப் போட்டு உடைக்க வைத்துவிடாதீர்கள்'' எனக் காட்டம் காட்டியிருக்கிறார் சண்முகம்.

 

சலசலப்புகள் அடங்கியது. மீண்டும் பேசிய அவர், குறிப்பிட்ட சமூகத்திற்கான கட்சிங்கிற விமர்சனம் நமக்கு நல்லதல்ல. முதல்வர் வேட்பாளரை அறிவித்து விட்டுத்தான் தேர்தலை சந்திக்கணும்னு மக்களோ தொண்டர்களோ கேட்கலை. அ.தி.மு.க.வில் எல்லோருக்கும் எல்லா வாய்ப்புகளும் கிடைக்கும்ங்கிறது நம் கட்சியின் பலம். இதில் குறிப்பிட்ட ஒருவரை முன்னிறுத்துவது தேவையில்லாதது'' என்றார் ஆவேசமாக.

 

எல்லாவற்றையும் எடப்பாடி உன்னிப்பாக கவனித்து வந்த நேரத்தில், எழுந்த ஓபிஎஸ், "அதிகாரத்துக்கு அடித்து கொள்வது நம் கட்சியில் யாருக்கும் இல்லாத பழக்கம். அம்மா விட்டுச் சென்ற பணிகளை நாம் ஒற்றுமையாக இருந்து நிலை நிறுத்த வேண்டும் என்றுதான் சகோதரர் பழனிசாமியிடம் சொல்லி வருகிறேன். அவரும் ஏற்றுக்கொண்டிருக்கிறார். ஆட்சியும் கட்சியும் வலிமையாக இருக்க எந்த தியாகம் செய்யவும் நான் தயார். என்னை சந்திப்பவர்களிடமும் இதைத்தான் சொல்லி வருகிறேன்.

 

admk

 

நாம் தீர்மானித்தபடி, 11 பேர் கொண்ட வழிகாட்டும் குழு அமைப்பதுதான் ரொம்ப முக்கியம். இதனை அமைப்பதில் நாம் ஏன் சுணக்கம் காட்ட வேண்டும்? கட்சிக்குள் முரண்பாடுகள் வந்தால் அதனை சரி செய்ய வழிகாட்டும் குழுவை அமைக்கலாம்ங்கிற யோசனை சொன்னவர் நீங்கள்தான். இப்போ, அதற்கு எதிராக இருக்கிறீர்கள். வழிகாட்டும் குழுவை அமைத்து அதன் வழியாக தேர்தலை சந்திப்பதுதான் ஆரோக்கியமாக இருக்கும்'' என்றார் ஒரே போடாக.

 

இதனை ஏற்க மறுத்த எடப்பாடி, "கட்சியை வழிநடத்த ஒருங்கிணைப்பாளர்கள் இருக்கிறோம். இதுதவிர, எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும் அமைச்சர்கள், அமைப்பு செயலாளர்கள், மூத்த நிர்வாகிகளோடு விவாதித்துத்தான் எடுக்கிறோம். அப்படியிருக்க புதிதாக ஒரு குழு எதற்கு? தேவையற்ற மனக்கசப்புகளும் குழப்பங்களும்தான் வரும். 11 பேர் எனில் அனைத்து சமூகத்தினரையும் இதில் திருப்திப்படுத்திட முடியுமா? வாய்ப்பு கிடைக்காதவர்கள் அதிருப்தியடைய மாட்டார்களா? அதனால் வழி காட்டும் குழுங்கிறது தேவையில்லாதது” என்று சொல்ல, கொங்கு அமைச்சர்களும், எடப்பாடியின் ஆதரவாளர்களாக இருக்கும் மற்ற அமைச்சர்கள் சிலரும் கைதட்டி மகிழ்ந்தனர்.

 

இதனையடுத்து, செயற்குழு-பொதுக்குழுவினை கூட்டி இறுதி முடிவை எடுக்கலாம் என கே.பி.முனுசாமி சொல்ல, அதனையடுத்து வருகிற 28-ந்தேதி செயற்குழுவை கூட்டுவது என முடி வெடுத்து ஓபிஎஸ்சும் இபிஎஸ்சும் அறிவிப்பு செய்தனர். கூட்டமும் முடிவுக்கு வந்தது.

 

கூட்டம் முடிந்ததும் தனது ஆதரவு அமைச்சர்களிடம் தனியாக ஆலோசனை நடத்திய எடப்பாடி, "அனைத்து அமைச்சர்களையும் சுதந்திரமாக இயங்க அனுமதித்தும் என் மீது எதற்கு இவ்வளவு வன்மம்? என்னை விட்டு விடுங்கள். யார் தலைமையில் வேண்டுமானாலும் தேர்தலை சந்தியுங்கள். எல்லா பிரச்சனைகளையும் எதிர்கொள்வது நான். ஆனா, எனக்கு எதிராகத்தான் இருப்பார்களெனில், நானும் தடலாடி அரசியல் செய்துதான் ஆக வேண்டுமா?'' என்று வெடித்திருக்கிறார் எடப்பாடி. அமைச்சர்கள் அவரை சமாதானப்படுத்தியுள்ளனர்.

 

இதற்கிடையே, எடப்பாடியின் சமூக அமைச்சர்களை தவிர்த்து மற்ற சமூகத்தின் அமைச்சர்கள், மா.செக்கள் அனைவரையும் தன் தலைமையில் ஒருங்கிணைப்பதில் வேகம் காட்டி வருகிறார் ஓபிஎஸ். ஏற்கனவே, இது குறித்து ஒரு ரவுண்ட் பேசி முடித்துள்ள ஓபிஎஸ், தற்போதைய ஆலோசனை கூட்டம் முடிந்ததும் மீண்டும் அவர்களிடம் விவாதித்துள்ளார். 28-ந்தேதிகூடும் செயற்குழுவில் முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவிக்க வேண்டும் என்று எடப்பாடியும், அதனை தடுக்கும் வியூகத்தில் ஓபிஎஸ்சும் தத்தம் ஆதரவாளர்களை திரட்டி வருகின்றனர். செயற்குழுவில் தனக்கான ஆதரவு குரல்களே அதிகம் எதிரொலிக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கும் எடப்பாடி, அதற்காக என்ன விலை கொடுக்கவும் திட்ட மிட்டிருக்கிறார்.

 

admk

 

அதனை முறியடிக்க, ஜூனியர் அமைச்சர்கள், மா.செ.க்கள், ஒ.செ.க்கள் பலரையும் தொடர்புகொண்டு, "எடப்பாடியின் ஹிட் லிஸ்டில் நீங்கள் இருக்கிறீர்கள்; உங்களுக்கு சீட் கொடுக்க அவர் விரும்பவில்லை; அவரையா நீங்கள் ஆதரிக்க போகிறீர்கள்?'' என எடப்பாடிக்கு எதிராக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிலர் பேசி வருகின்றனர். செயற்குழுவில் வலிமைகாட்ட ஓபிஎஸ்சும், இபிஎஸ்சும் வியூகம் அமைப்பதால் அதிமுகவில் பரபரப்பு அதிகரித்தபடி இருப்பதால் வெல்லப்போவது யார்? என்கிற சூதாட்டமும் சூடுபிடித்துள்ளது.

 

 

 

Next Story

ஆஜரான எம்.ஆர்.விஜயபாஸ்கர்; அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
nn

கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்து உள்ளனர் என்று கூறியிருந்தார்.

மேலும் இது தொடர்பாக மேலக்கரூர் பொறுப்பு சார்பதிவாளரும் கரூர் நகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதே சமயம் இந்த வழக்கில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என்று கருதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து நில அபகரிப்பு வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கரின் முன் ஜாமீன் மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

இதற்கிடையே தலைமறைவாக கேரளாவில் பதுங்கி இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் தனிப்படை போலீசாரால் கடந்த 16 ஆம் தேதி (16.07.2024) கைது செய்யப்பட்டார். இத்தகைய பரபரப்பான சூழலில் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு வரும் 31ஆம் தேதி வரை என 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சிபிசிஐடி போலீசார் தாங்கள் தொடர்ந்த வழக்கு தொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என ஏழு நாட்கள் அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்திருந்தது. குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் இரண்டு மணி நேரம் விசாரணை நடைபெற்றது. விசாரணைக்குப் பின்னர் நீதிமன்ற நடுவர் பரத்குமார் இரண்டு நாட்கள் எம்.ஆர் விஜயபாஸ்கரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

Next Story

அதிமுக திமுக காரசார விவாதம்; வாக்குவாதத்தில் முடிந்த நகர் மன்ற கூட்டம்!

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
DMK AIADMK political debate in Kallakurichi Municipal Council meeting

கள்ளக்குறிச்சி நகராட்சியில் சாதாரண நகர மன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டம் நடைபெறுவதற்காக அனைத்து கவுன்சிலர்களுக்கும் ஏற்கனவே நகராட்சி கூட்டம் குறித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதை கண்ட அதிமுக கவுன்சிலர்கள் தமிழகத்தையே உலுக்கிய கள்ளச்சாராயம் சம்பவத்தில் கள்ளக்குறிச்சியில் 67 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு ஒரு இரங்கல் தீர்மானம் இல்லாததாலும், மேலும் நகர மன்ற கூட்டத்தில் இரங்கல் தீர்மானத்தை எழுத்துப்பூர்வமாக நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி கருப்பு சட்டை அணிந்து அதிமுக கவுன்சிலர்கள் நகராட்சி கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதை கண்ட சேர்மன் சுப்பராயலு  வாய்மொழியாக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி தெரிவிக்கப்படும் என தெரிவித்து கூட்டத்தை தொடங்கினார்.

இந்த கூட்டத்தில் பேசிய அதிமுக நகரச் செயலாளரும், 11-வது வார்டு கவுன்சிலருமான பாபு, “கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் அது தொடர்பாக ஒரு தீர்மானம் கூட நிறைவேற்றாமல் இரங்கல் தீர்மானம் இல்லாமல் இந்த கூட்டம் நடப்பதால் இதிலிருந்து நாங்கள் வெளியேறுகிறோம்” என்று கூட்டத்திலிருந்து வெளியேறினர். அப்போது நகராட்சி சேர்மன் சுப்புராயலு உடனடியாக எழுந்து மைக்கை பிடித்து மக்கள் முதல்வர் வாழ்க என கோஷம் எழுப்பினார்.

இதற்கு அதிமுக கவுன்சிலர்களும், “எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்க...” என முழக்கம் எழிப்பினர். இதனால் திமுக கவுன்சிலர்களும், அதிமுக கவுன்சிலர்களும் தங்கள் தலைவர்கள் புகழைப் பாடிக்கொண்டு கோஷம் எழுப்பினர். மேலும் ஒரு கட்டத்தில் வாக்குவாதம் ஆக மாறி  பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அப்போது திமுக கவுன்சிலர்கள் தங்கள் ஆட்சியில் செய்த சாதனைகளை சொல்லியும் அதிமுக கவுன்சிலர்கள் இந்த திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படாத பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தும் வலுவாக கோஷம் எழுப்பி மேஜயை தட்டி பயங்கர வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கூட்டு அரங்கம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் கள்ளச்சாராயம் குடித்து  உயிரிழந்த பட்டியலின மக்களுக்கு விரோதமாக நகராட்சி ஆணையரும் தமிழக முதல்வரும் செயல்படுவதாக அதிமுக கவுன்சிலர்கள் கோஷம் எழுப்பியவாறு வெளிநடப்பு செய்தனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அதிமுக கவுன்சிலர் வெளியேறிய பின்பு திமுக கவுன்சிலர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது.