Skip to main content

விஜய்க்கு ஓவியத்தைப் பரிசு தந்த மாற்றுத்திறனாளி மாணவர் யார்?

Published on 17/06/2023 | Edited on 17/06/2023

 

Who was the differently-abled student who gifted the painting to Vijay?

 

நடிகர் விஜய், இன்று தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். 

 

இந்த நிகழ்ச்சியின் துவக்கமாக அரங்கத்திற்குள் வந்த விஜய் முதலில் மேடை ஏறினார். பிறகு சட்டெனக் கீழே இறங்கி சான்றிதழ் பெற வந்த மாணவர்களை நோக்கி வந்தார். அப்படி வந்த அவர் முதல் வரிசையில் இருந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் மத்தியில் அமர்ந்தார். அப்போது 10 ஆம் வகுப்பில் தான் படித்த பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற இரு கைகள் இழந்த மாற்றுத்திறனாளி மாணவரான கீர்த்தி வர்மா பக்கத்தில் அமர்ந்தார். அப்போது கீர்த்தி வர்மா தான் கொண்டு வந்த ஓவியத்தை விஜய்யிடம் கொடுத்தார். அதனை உடனே பிரித்துப் பார்த்த விஜய், கீர்த்தி வர்மாவிடம் அந்த ஓவியத்தைப் பற்றிக் கேட்டார். அதற்கு கீர்த்தி வர்மா பதில் அளித்ததும் அவரைக் கட்டித் தழுவி நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.  

 

யார் இந்த கீர்த்தி வர்மா:

 

கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்காடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கஸ்தூரி - அருள்மூர்த்தி தம்பதியினர். இவர்களது மகன் கீர்த்தி வர்மா தனது நான்கு வயதில் வீட்டில் விளையாடிய போது மின்சாரம் தாக்கியதில் இரு கைகளையும் இழந்தார். மகனின் இந்த நிலையைக் கண்டு கீர்த்தி வர்மாவின் தந்தை வீட்டில் இருந்து சென்று விட, ஆதரவற்ற நிலையில் கஸ்தூரி தனது மகனுடன் பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு கூலி வேலை பார்த்து கஸ்தூரி மகனைப் படிக்க வைத்து வருகிறார். 

 

தொடர் தடைகளால் துவண்டு போகாமல் தன்னம்பிக்கையுடன் வேப்பனப்பள்ளி அருகே நெடுமருதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கீர்த்தி வர்மா 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மே மாதம் 19 ஆம் தேதி வெளிவந்த 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் கீர்த்தி வர்மா 500க்கு 437 மதிப்பெண்கள் எடுத்து அவர் படித்த பள்ளியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். 

 

Who was the differently-abled student who gifted the painting to Vijay?

 

இரு கைகளை இழந்தும் தனது விடாமுயற்சி மூலம் சாதித்துக் காட்டிய மாணவர் கீர்த்தி வர்மாவிற்கு பலரும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர். அந்த வகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் மாணவரை போனில் தொடர்பு கொண்டு பாராட்டினார்.

 

நடிகர் சிவகார்த்திகேயன், கீர்த்தி வர்மாவுக்கு தொலைப்பேசியில் அழைத்து "சூப்பர்...கலக்கிட்டீங்க..." எனச் சொல்லி பாராட்டு தெரிவித்தார். மேலும், அவரது மேற்படிப்பிற்காக என்ன உதவி வேண்டுமானாலும் செய்யத் தயாராக உள்ளதாக உறுதியளித்தார். அந்த மாணவன் தனக்கு மருத்துவராக வேண்டுமென்று ஆசை என சிவகார்த்திகேயனிடம் கூறியிருந்தார். 

 

 

சார்ந்த செய்திகள்