பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,500 கோடி ரூபாய் முறைகேடு வைர வியாபாரம் செய்யும் தொழிலதிபர் நிரவ் மோடியால் நடத்தப்பட்டது. இந்தியாவில் தொழிலதிபர்களாக இருக்கும் பல பேர் இவ்வாறுதான் வங்கியிடம் கடன் பெற்று அதை திருப்பிச் செலுத்தாமல் முறைகேடு செய்துவருகின்றனர். இவர்கள் வரிசையில் புதிதாக 'ரோடோமாக்' பேனா தயாரிக்கும் நிறுவனத்தின் தலைவர் விக்ரம் கோத்தாரி சேர்ந்துள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vikram kothari 1.jpg)
இவர் அப்படி என்ன மோசடி செய்தார்? கார் வாங்குகிறேன் என்று சொல்லி கடன் வாங்கிவிட்டு, கார் வாங்காமல் வேறு செலவு செய்தால் எப்படி இருக்கும்? வாகனக் கடன்களில் பணத்தை மீட்க, வாகனத்தை கைப்பற்றுவார்கள். வாகனமே இல்லையென்றால்? அப்படித்தான் விக்ரம் கோத்தாரி ஏற்றுமதிக்கென வாங்கிய கடனில் ஏற்றுமதி செய்யாமல், சிங்கபூரைச் சேர்ந்த நிறுவனத்துக்கு பணத்தை அனுப்பி அந்த நிறுவனம் மீண்டும் ரோடோமாக் நிறுவனத்துக்கே திருப்பி அனுப்பிவிட்டது. ஆனால் ஒன்று, நாம் வாகனக் கடன் வாங்கினால், வங்கியே வாகனத்தை வாங்குவதை உறுதி செய்துவிட்டு கார் விற்பனை நிறுவனத்திடம் தான் பணத்தைக் கொடுக்கும். ஆனால், கோத்தாரி போன்றவர்களுக்கு கேட்டவுடன் அள்ளிக் கொடுப்பவர்கள் தான் வாங்கி உயரதிகாரிகள்.
'ரோடோமாக்' என்னும் இவரது நிறுவனத்தின் பெயரில் ஏழு வங்கிகளிடம் சுமார் 3,695 கோடி கடனை வாங்கியிருக்கிறார். வாங்கிய கடன்களுக்கான தவணையையும் சரியாக கட்டாமல் இருந்துள்ளார். ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக வாங்கிய கடனை, இவர் வேறு விதமாக பயன்படுத்தியுள்ளார். இதுபோன்ற குற்றச்சாட்டுகளில் சிபிஐ இவர் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்துள்ளது. மேலும் இந்த வழக்கில் இவரது மனைவி மற்றும் மகனின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vikram rathore 2.jpg)
விக்ரம் கோதரியின் பங்களா வீடு
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 'ரோடோமாக்' நிறுவனத்திற்காக வங்கிகள் மொத்தம் 2,919 கோடி ரூபாய் கொடுத்து இருக்கின்றன. வாங்கிய கடனுக்கு அவர் கொடுக்கவேண்டிய வட்டியையும் அபராதத்தையும் சேர்த்தால் மொத்தம் 3,695 கோடி வருகிறது. பாங்க் ஆப் இந்தியாவில் 754.77 கோடி, பாங்க் ஆப் பரோடாவில் 456.63 கோடி, ஓவர்சீஸ் பாங்க் ஆப் இந்தியாவில் 771.07 கோடி, யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் 458.95 கோடி, அலஹாபாத் வங்கியில் 330.68 கோடி, பாங்க் ஆப் மஹாராஷ்டிராவில் 49.82 கோடி, ஓரியன்டல் பாங்க் ஆப் காமர்ஸில் 97.47 கோடி என இந்த ரோடோமாக் நிறுவனம் கடன் வாங்கியிருப்பதாக வழக்கை பதிவு செய்த பரோடா வங்கி தெரிவித்துள்ளது.
விக்ரம் கோத்தாரியின் தந்தை தான் இந்தியாவின் புகழ் பெற்ற 'பான்பராக்' பான்மசாலா நிறுவனத்தைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தியவர். வழக்கம் போல தந்தையின் மறைவுக்குப் பின் மகன்களின் சண்டையில் சரிவைச் சந்தித்தது நிறுவனம். மேலும் ஒரு சிறப்பு செய்தி, வங்கி முறைகேட்டில் சிக்கிய பெரும் கோடீஸ்வரர்களில், வெளிநாடு செல்வதற்குள் சிக்கியவர் இவராகத்தான் இருக்க வேண்டும். அந்த வகையில் மட்டும் நாம் ஆறுதல் போட்டுக்கொள்ளலாம். வேறு எந்த வகையிலும் இல்லை...
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/18057647_719886548191985_4542912737982370865_n.jpg)