Skip to main content

மாவோயிஸ்ட் டூ மாநில அமைச்சர்... அரங்கத்தை அதிரவைத்த சீதாக்கா....

Published on 08/12/2023 | Edited on 08/12/2023
Who is this telangana minister Seethakka

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாகத் தேர்தல் நடந்து முடிந்தது. இதனையடுத்து, மிசோரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நடைபெற்றது.

அதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. மேலும், தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று முதன் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேபோல், கடந்த 4 ஆம் தேதி மிசோரமில் நடந்த வாக்கு எண்ணிக்கையில், ஸோரம் மக்கள் இயக்கம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.

இந்த நிலையில் தெலுங்கானாவில் நேற்று முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. மாநிலத்தின் முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை தொடர்ந்து சில அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். அப்போது, சீதாக்கா என்பவர் அமைச்சராக பதவியேற்கும் போது, அரங்கமே அதிரும் அளவிற்கு பாகுபலி படத்தில் வருவதை போல அனைவரும் ‘சீதாக்கா...சீதாக்கா.. என்று கோஷம் எழுப்பியது, பலரையும் யார் இவர் என்று பலரும் கூகுளில் தேட வைத்துள்ளது.

Who is this telangana minister Seethakka

கடந்த 1971 ஆம் ஆண்டு சத்தீஸ்கரின் எல்லையான முலுகுவில் உள்ள ஜக்கண்ணபேட்டாவில் பிறந்தார் தன்சார் அனசூயா என்ற சீதாக்கா. பழங்குடி வகுப்பை சேர்ந்த இவர், தனது 14 வயதில் ஜனசக்தி நக்சல் இயக்கத்தில் சேர்ந்தார். ஆயுதம் ஏந்தி நக்சல் போராளியாக  போராட்டத்தில் ஈடுபட்ட சீதாக்கா, 1994ஆம் ஆண்டில் நக்சல் இயக்கத்தில் இருந்து விலகி பொது மன்னிப்பு பெற்றார். பின்பு சீதாக்கா சட்டப்படிப்பை படித்து முடித்து வழக்கறிஞராக இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2004 ஆம் ஆண்டு சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்த சீதாக்கா, அப்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், முலுக் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். ஆனால் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏவானார்.

இதைத் தொடர்ந்து 2014 தேர்தலில் மீண்டும் தோல்வி அடைந்த சீதாக்கா, 2017 ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏவான அவர், தெலங்கானாவின் மகிழா காங்கிரஸின் பொதுச்செயலாளராக பணியாற்றியிருக்கிறார். இந்த காலகட்டத்தில் கொரானா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்கள் பலருக்கு நிவாரண பொருட்களை தலையில் சுமந்து சென்று உதவியுள்ளார். மேலும் தனது தொகுதி மக்களுக்கு பல்வேறு உதவிகளையும் செய்து மக்களின் ஆதர்ச நாயகியாகவே வலம் வந்துள்ளார். இதனிடயே 2022 ஆம் ஆண்டு ‘அரசியல் அறிவியலில்’ முனைவர் பட்டம் பெற்றார்.

இந்த நிலையில்தான் தற்போது நடந்து முடிந்த தேர்தலிலும் வெற்றி பெற்று மாநிலத்தின் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். நேற்று நடந்த பதவியேற்பு விழாவில் ஆளுநர் தமிழிசை பதவி பிரமாணம் செய்ய அழைத்த போது. அவரின் பெயரை கேட்டவுடனே அரங்கத்தில் இருந்த பலரும் சீதாக்கா... சீதாக்கா என்று கோஷம் எழுப்ப அரங்கமே அதிர்ந்தது. 

சார்ந்த செய்திகள்

Next Story

'என் அனுபவத்தில் இவிஎம் நம்பிக்கையானது'- கார்த்தி சிதம்பரம் கருத்து

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
nn

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

இவிஎம் மெஷினுக்கு மாற்றாக வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் உள்ளிட்ட சில கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன. அண்மையில் தேர்தல் அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் திமுக விவிபேட் குறித்து சந்தேகங்களை எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இவிஎம் மெஷின் நம்பிக்கையானது தான் என சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் இது குறித்த கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய கார்த்தி சிதம்பரம், விவி பேடை எடுத்து விட்டால் இவிஎம் நம்பிக்கையானது. என்னை பொறுத்தவரை எலக்ட்ரானிக் ஓட்டிங் மெஷினில் இதுவரை என்னுடைய அனுபவத்தில் எந்த தவறும் நடந்ததாக தெரியவில்லை. ஆனால் மற்றவர்களுக்கு வேறு கருத்து இருக்கிறது என்பதை நான் முழுமையாக அறிகிறேன்'' என்றார்.

Next Story

'அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து'- நீதிமன்றம் தீர்ப்பு  

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
'Cancellation of the order releasing Minister I. Periyasamy'-Court verdict

வீட்டுவசதி துறையில் வீடு ஒதுக்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டிருந்தது ரத்து செய்யப்படுவதாக சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் வீட்டு வசதி துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி அதிகாரத்தை பயன்படுத்தி அன்றைய முதல்வர் கலைஞரின் பாதுகாவலர் ஒருவருக்கு வீடு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஐ.பெரியசாமி தரப்பில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் ஐ.பெரியசாமியை விடுவித்து உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை மறு விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.

இந்த வழக்கினுடைய விசாரணை கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று இந்த வழக்கில்  நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பை வழங்கியிருக்கிறார். அந்த தீர்ப்பில், 'சிறப்பு நீதிமன்றம் ஐ.பெரியசாமியை  விடுவித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மீண்டும் வழக்கு சிறப்பு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். முறையாக ஒப்புதல் பெற்று லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும்' என உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

மேலும், மார்ச் 28ஆம் தேதிக்குள் நேரில் ஆஜராகி ஒரு லட்சம் ரூபாய் பிணை செலுத்த வேண்டும் எனவும் ஐ.பெரியசாமிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு, இந்த விசாரணையை சிறப்பு நீதிமன்றம் 2024 ஜூலை மாதத்திற்குள் முடிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.