Skip to main content

ப.சிதம்பரம் கைதுக்கு காரணமான இந்திராணி முகர்ஜி யார்?

Published on 22/08/2019 | Edited on 22/08/2019

ஐஎன்எக்ஸ் மீடியா என்ற நிறுவனத்தில் முறைகேடுகளில் தொடர்பு இருப்பதாகக் கூறித்தான் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
 

indirani mukherjee

 

 

இந்திய தொலைக்காட்சிகளில் புகழ்பெற்றவரான பீட்டர் முகர்ஜியும் அவருடைய இரண்டாவது மனைவியான இந்திராணி முகர்ஜியும் இணைந்து உருவாக்கியதே ஐஎன்எக்ஸ் மீடியா.
 

இந்த மீடியா தனது பங்குகளை விற்பதற்கும், சட்டவிரோதமாக 305 கோடி ரூபாய் அளவுக்கு வெளிநாட்டு நிதியை பெறுவதற்கும் ப.சிதம்பரம் உதவியதாகத்தான் சிபிஐ மூலம் பாஜக அரசு குற்றம்சாட்டுகிறது.
 

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி 2018 ஜூன் மாதம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனுத்தாக்கல் செய்கிறார். அந்த மனு மீதான விசாரணை 2019 ஜனவரி 25 ஆம் தேதி முடிகிறது. ஆனால், தீர்ப்பை ஒத்திவைப்பதாக நீதிபதி கவுர் அறிவிக்கிறார்.
 

இதற்கிடையே பாஜக பெரும்பான்மை பலத்துடன் இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கிறது. 2019 ஜூலை மாதம் ஐஎன்எக்ஸ் மீடியாவின் உரிமையாளர்களில் ஒருவரான இந்திராணி முகர்ஜி இந்த வழக்கில் அப்ரூவராக அதாவது அரசுத்தரப்பு சாட்சியாக மாற ஒப்புதல் அளிக்கிறார். அவர் இப்போது எங்கிருக்கிறார் தெரியுமா? மகளை கொலை செய்த வழக்கில் கணவர் பீட்டர் முகர்ஜியுடன் சிறையில் இருக்கிறார் என்பதை முக்கியமாக கவனிக்க வேண்டும்.
 

இப்படிப்பட்ட ஒருவர் அரசுத்தரப்பு சாட்சியாக மாற ஒப்புக்கொண்டவுடன், ஆகஸ்ட் 20 ஆம் தேதி ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளிக்கிறார் கவுர். அதாவது, ஒரு முன் ஜாமீன் வழக்கில் சுமார் ஒரு ஆண்டு கழித்து தீர்ப்பு வெளிவருகிறது.
 

சரி, இப்போ இந்திராணி முகர்ஜி விவகாரத்துக்கு வருவோம். அவருடைய கதையைக் கேட்டால் மூக்கைப் பொத்திக்கிற மாதிரி இருக்கு.
 

1972 ஆம் ஆண்டு அசாம் மாநில தலைநகரான கவுகாத்தியில் உபேந்திரகுமார் போராவுக்கும் துர்கா ராணிக்கும் பிறந்தவர் இந்திராணி. இவருக்கு பொறி போரா என்றுதான் பெயர் வைத்தார்கள். பிறகுதான் பெயரை மாற்றியிருக்கிறார்.
 

indrani peter


10 ஆம் வகுப்பு படிக்கும்போது கவுகாத்தியில் உள்ளூர் பூசாரி ஒருவருடன் சில காலம் காணாமல் போனாராம். பிறகு தேடிக் கண்டுபிடித்து அழைத்துவந்து மீண்டும் பள்ளியில் சேர்த்தார்கள். 12 ஆம் வகுப்பு படிக்கும்போது, 1987 ஆம் ஆண்டு விண்ணுப் பிராசத் சவுதரி என்பவரை காதலித்தாராம். சுமார் நான்கு மாதங்கள் இந்திராணியுடன் உறவில் இருந்ததாக விண்ணுப் பிரசாத்தே கூறியிருக்கிறார்.
 

12 ஆம் வகுப்பு முடித்து ஷில்லாங்கில் உள்ள லேடி கேண் காலேஜில் சேர்ந்தார் இந்திராணி. காலேஜில் படிக்கும்போதே 1988ல் சித்தார்த்தா தாஸ் என்பவருடன் லிவிங் டுகெதெர் என்ற அடிப்படையில் திருமணம் செய்யாமலே குடித்தனம் செய்திருக்கிறார். இருவருக்கும் 1989 பிப்ரவரி 11ல்  சீனா போரா என்ற மகளும், 1990ல் மைக்கேல் போரா என்ற மகனும் பிறந்திருக்கிறார்கள். மகன் பிறந்த ஆண்டே காதலனைப் பிரிந்து, கவுகாத்திக்கு வந்த இந்திராணி, தனது பிள்ளைகள் இருவரையும் பெற்றோருக்கே தத்துக்கொடுத்தார். 
 

அடுத்து கொல்கத்தாவில் தங்கி கணிணி வகுப்புகளுக்கு சென்றார். அங்கு சஞ்சீவ் கண்ணா என்ற தொழில் அதிபரை வளைத்துப் போட்டிருக்கிறார். இருவரும் 1993 ஆம் ஆண்டு முறைப்படி திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு 1997ல் விதி கண்ணா என்ற மகள் பிறந்தார். பின்னர் குடும்பத்தோடு மும்பைக்கு மாறினார்கள்.
 

2002 ஆம் ஆண்டு பீட்டர் முகர்ஜியை சந்தித்தார் இந்திராணி. அவரைச் சந்தித்த வேகத்தில் சஞ்சீவ் கண்ணாவை விவாகரத்து செய்துவிட்டு பீட்டரை திருமணம் செய்தார். அதைத்தொடர்ந்து மகள் விதி கண்ணாவையும் தன்னுடன் அழைத்துச் சென்றார். பீட்டரும் விதி கண்ணாவை சட்டப்படி தனது மகளாக தத்தெடுத்தார்.
 

இந்நிலையில்தான் பெரியவர்களா வளர்ந்துவிட்ட தனது முதல் பிள்ளைகளான சீனா போரா, மைக்கேல் போரா ஆகியோருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார் இந்திராணி. தனது பிள்ளைகளையே சகோதரி என்றும் சகோதரன் என்றும் பீட்டரிடம் அறிமுகப்படுத்தினார். சீனா போராவை 2006 ஆம் ஆண்டு மும்பைக்கு அழைத்து வந்த இந்திராணி, கல்லூரி ஒன்றில் சேர்த்து படிக்க வைத்தார். பீட்டருடன் இணைந்து 2007 ஆம் ஆண்டுதான் ஐஎன்எக்ஸ் மீடியாவை தொடங்கினார். அதன்பிறகு பீட்டரும், இந்திராணியும் மும்பை, பிரிட்டனில் உள்ள பிரிஸ்டல், ஸ்பெயினில் உள்ள மார்பெல்லா ஆகிய நகரங்களில் மாறிமாறி வாழ்க்கையை நடத்தினர். இந்நிலையில்தான் 2012 ஆம் ஆண்டு ஏப்ரலுக்கு பிறகு சீனா போரா காணாமல் போனார்.
 

இந்த வழக்கில் 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி மும்பை போலீஸார் இந்திராணி முகர்ஜியை கைது செய்தனர். தனது மகளான சீனா போராவையே தங்கை என்று கூறியதும், அவளை கொலை செய்திருப்பது நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்தக் கொலையில் அவருக்கு உடந்தையாக இருந்ததாக பீட்டரும் சிறையில் இருக்கிறார்.
 

sheena bora

 

 

இப்பேர்பட்ட நேர்மையான பெண்மணியான இந்திராணி முகர்ஜிதான் இப்போது ப.சிதம்பரத்துக்கு எதிராக அரசுச் சாட்சியாக மாற ஒப்புக்கொண்டிருக்கிறார்.

 


 

Next Story

காங்கிரஸ் ஆட்சியில் ராகுல் செய்யப்போவது என்ன? - ப.சிதம்பரம் பேட்டி

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
'Rahul's five guarantees'-P. Chidambaram interview

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டில் திமுக தீவிரம் காட்டி வருகிறது. நேற்று விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு கையெழுத்தான நிலையில் இன்று மாலை ஆறு மணிக்கு காங்கிரஸுடன் தொகுதிப்பங்கீடு கையெழுத்தாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இந்தநிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் அதன் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ப.சிதம்பரம், ''காங்கிரஸ் கட்சியினுடைய முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஐந்து வாக்குறுதிகளை தந்திருக்கிறார். ஐந்து கேரண்டி தந்திருக்கிறார். இந்த ஐந்து வாக்குறுதிகளும் தேர்தல் அறிக்கையில்  இடம்பெற இருக்கிறது. அந்த ஐந்து வாக்குறுதிகள் குறித்து நான் இங்கே பேசப் போகிறேன்.

முதல் கேரண்டி இன்று வேலையில்லாமை கோரத்தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது. அரசு வெளியிடுகின்ற புள்ளி விவரங்களை எல்லாம் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. மொத்த வேலையில்லாமை எட்டு சதவீதம். பட்டதாரிகள் மத்தியில் வேலையில்லாமை 42 சதவிகிதம். அதற்கு பல உதாரணங்களை சொல்ல முடியும். அதையெல்லாம் இப்பொழுது சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த வேலையில்லாமையை போக்குவதற்கு முதல் வழி, மத்திய அரசில் இருக்கக்கூடிய காலியிடங்களை நிரப்புவது, மத்திய அரசினுடைய நிறுவனங்கள், மத்திய அரசினுடைய கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய கல்வி நிலையங்கள், மத்திய பல்கலைக்கழகங்கள், மத்திய அரசினுடைய பொதுத்துறை, மத்திய அரசின் மருத்துவமனைகள் இவைகள் எல்லாம் சேர்த்து பார்த்தால் 30 லட்சம் காலி இடங்கள் இருக்கிறது.

இந்த 30 லட்சம் இடங்களையும் பூர்த்தி செய்யலாம். முதல் கேரண்டி காங்கிரஸ் கட்சியின் தலைமையில் அரசு அமைந்தால் 30 லட்சம் காலி இடங்களையும் பூர்த்தி செய்வோம். இரண்டாவது கேரண்டி அரசு நடத்தக்கூடிய தேர்வுகளில் கேள்வித்தாள் கசிவது என்பது வழக்கமாகிவிட்டது. உத்திரபிரதேசத்தில் மட்டும் கடந்த 10,  15 நாட்களில் இரண்டு கேள்வித்தாள்கள் கசிந்திருக்கிறது. இதற்காக தேர்வை ரத்து செய்தார்கள். எத்தனை செலவு, எவ்வளவு அலைச்சல், எவ்வளவு துன்பம், எவ்வளவு மனச்சோர்வு அந்த குடும்பங்களுக்கு ஏற்பட்டிருக்கும். இதையெல்லாம் தடுக்க முடியும். காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் தேர்வுத்தாள் கசிவை தடுப்போம்.

மூன்றாவது கேரண்டியாக ஆன்லைன் டெலிவரி ஊழியர்களுக்கு சட்டப் பாதுகாப்பு சமுதாய பாதுகாப்பு ஏற்படுத்தி தரப்படும்' என தொடர்ந்து பேசி வருகிறார்.

Next Story

பிரதமர் மோடியின் அறிவிப்பு; ப. சிதம்பரம் சரமாரி கேள்வி!

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
PM Modi's announcement; P. Chidambaram questions

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதி பங்கீடுகள் பற்றிய பேச்சு வார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகளில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இத்தகைய சூழலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி ராஜஸ்தானில் பாரத் ஜோடா யாத்திரையின் போது இளைஞர்களுக்கான 5 தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி வழங்கினார். அதில், ‘காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் 30 லட்சம் மத்திய அரசின் காலிப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும். வினாத்தாள் கசிவுகளுக்கு எதிராக கடுமையான சட்டம் கொண்டு வரப்படும். இந்த சட்டத்தில் சிறைத்தண்டனை விதிக்கப்படும் வகையில் அமையும். கிக் (ஆன்லைன் டெலிவரி) தொழிலாளர்களுக்கான சட்டத்தை மத்திய அரசு இயற்றும். இது ராஜஸ்தான் கிக் தொழிலாளர்கள் சட்டத்தின் அடிப்படையில் இருக்கும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சுமார் 10 கோடிகள் என மொத்தம் 5000 கோடிகள் தொழில் தொடங்க நிதி வழங்கப்படும். பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ முடித்த பிறகு ஒரு லட்சம் ரூபாய் உதவித் தொகையுடன் 1 வருடக் கட்டாய பயிற்சி அளிக்கப்படும்’ எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம், ராகுல் காந்தி அளித்துள்ள வாக்குறுதிகள் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தேர்வுகளின் போது வினாத்தாள் கசிவை தடுக்கும் வகையில் சட்டம் வலுவாக்கப்படும். ஆன்லைன் டெலிவரி ஊழியர்களுக்கு சட்டப் பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பு ஏற்படுத்தி தரப்படும். புத்தொழில் நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்படும். புத்தொழில் நிறுவனங்களுக்கான மூலதன நிதியாக ரூ. 10 ஆயிரம் கோடி உள்ளது. அனைத்து தொகுதிகளிலும் புத்தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்கு ஊக்குவிக்கப்படும்.

காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி அறிவித்த 5 வாக்குறுதிகளை தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்வைப்போம். வேலைவாய்ப்பின்மை மற்றும் விலைவாசி உயர்வு பற்றி பிரதமர் மோடி பேசுவதில்லை. 42 சதவீத பட்டதாரிகள் வேலையின்றி தவித்து வருகின்றனர். ஆனால் பொய்யான புள்ளி விவரங்களை அளித்து மத்திய அரசு ஏமாற்றுகிறது. தேர்தல் நெருங்குவதால் சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் இந்த விலையை மேலும் குறைப்பார்கள். தேர்தலுக்குப் பிறகு சமையல் எரிவாயு விலை உயர்த்தப்படாது என பிரதமர் மோடி மக்களுக்கு வாக்குறுதி தர முடியுமா. பிரதமர் மோடி யாரையெல்லாம் கடுமையாக விமர்சிக்கிறாரோ அவர்களுடன் பா.ஜ.க. கூட்டணி வைக்கிறது. தேர்தல் பத்திரங்கள் ஒவ்வொன்றையும் யார் வாங்கினார்கள் என்பதும், யார் பணம் கொடுத்தார்கள் என்பதும் எஸ்.பி.ஐ. வங்கிக்கு தெரியும்” எனத் தெரிவித்தார்.

PM Modi's announcement; P. Chidambaram questions

முன்னதாக மகளிர் தினத்தை ஒட்டி சமையல் கேஸ் சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைத்து இன்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. பிரதமர் மோடி இதற்கான உத்தரவை பிறப்பித்திருந்தார். சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு என்பது பல கோடி குடும்பங்களின் நிதிச்சுமையை கணிசமாகக் குறைக்கும் எனத் தெரிவித்துள்ள பிரதமர், சமையல் எரிவாயு மிகவும் மலிவு விலையில் வழங்குவதன் மூலம் குடும்பங்களின், குறிப்பாக பெண்களின் ஆரோக்கியம் உறுதி செய்யப்படும் எனத் தெரிவித்திருந்தார்.