Skip to main content

35 வருடங்களுக்குப் பிறகு திண்டுக்கல்லில் களம் காணப் போகும் சி.பி.எம். வேட்பாளர் யார்?

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
who is Dindigul MP CPM Candidate

தி‌.மு.க. கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியின் சிட்டிங் தி.மு.க. எம்.பி. வேலுச்சாமி, கடந்த தேர்தலில் 5 லட்சத்து 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தமிழ்நாட்டில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றவர் எனப் பெயர் பெற்றார். எனவே இந்த முறையும் தி.மு.க. நேரடியாக திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் எனக் கட்சியினர் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், கூட்டணிக் கட்சியான சி.பி.எம்.க்கு திண்டுக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டது. 

ஏற்கனவே கடந்த 1989 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிட்டது. அப்போது வரதராஜன் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் வேட்பாளர் என்.எஸ்.வி. சித்தன் வெற்றி பெற்றார். அதன் பின் தொடர்ந்து திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியை அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிகள் தான் வெற்றி பெற்று வந்தன. அதேசமயம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பழனி, திண்டுக்கல் ஆகிய சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறது. 

who is Dindigul MP CPM Candidate

35 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தற்போது திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் சி.பி.எம். போட்டியிடுகிறது. சி.பி.எம். பொறுத்தவரை மாநிலத் தலைமையில் யாரை கை நீட்டுகிறார்களோ அவர்தான் வேட்பாளராக களம் இறங்குவார். 

திண்டுக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரை மாநில செயற்குழு உறுப்பினரும் மூன்று முறை திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த பாலபாரதி தொகுதி மக்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் முடிந்த அளவுக்கு தீர்த்து வைத்து அதன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தும் இருக்கிறார். அதோடு தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவராகவும் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரக் கூடியவராகவும் இன்னும் இருந்து வருகிறார். இப்படிப்பட்ட தோழருக்கும் பாராளுமன்றத் தொகுதியில் போட்டிப் போட வாய்ப்பு இருப்பதாகவும் தோழர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. 

who is Dindigul MP CPM Candidate

அதுபோல் சென்னையைச் சேர்ந்த மத்திய கமிட்டி உறுப்பினரான வாசுகிக்கும் சீட் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதேபோல் கடந்த சட்டமன்றத் தேர்தலில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை எதிர்த்துப் போட்டியிட்டு குறைந்த ஓட்டில் தோல்வியைத் தழுவிய மாநில செயற்குழு உறுப்பினரான பாண்டிக்கும், மாவட்டச் செயலாளராக இருக்கக் கூடிய சச்சிதானந்தம், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினர் சண்முகம் உள்ளிட்டோரில் யாரேனும் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் எனச் சொல்லப்படுகிறது. அதேபோல் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வேட்பாளராக களமிறக்கப்படுவார் எனவும் சொல்லப்படுகிறது. 

மார்ச் 15 ஆம் தேதி சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டத்தில் தான், யார் வேட்பாளர் என்பது முடிவு செய்யப்படும் என்று தோழர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. 

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Next Story

திண்டுக்கல் தொகுதியில் வீதி வீதியாக வாக்கு கேட்ட உடன் பிறப்புகள்!

Published on 13/04/2024 | Edited on 14/04/2024
dmk who voted street by street for the cpm

திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எஸ்டிபி கட்சியில் முகமது முபாரக், பா.ம.க.வில் திலகபாமா, நாம் தமிழர் கட்சி உட்பட சுயேட்சைகளும் தேர்தல் களத்தில் போட்டி போடுகிறார்கள். இந்த வேட்பாளர்களுக்கு ஆதரவாக அந்தந்த கட்சியினர் மக்களை சந்தித்து நகரம் முதல் பட்டி தொட்டிகள் வரை ஆதரவு திரட்டியும் வருகிறார்கள்.

இந்த நிலையில் திண்டுக்கல் மாநகரில் உள்ள மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், துணை மேயர் ராஜப்பா மற்றும் கிழக்கு பகுதிசெயலாளரான ராஜேந்திரகுமார், வடக்கு பகுதி செயலாளரான ஜானகிராமன், மேற்கு பகுதி செயலாளரான அக்கு, தெற்கு பகுதி செயலாளரான சந்திரசேகர் ஆகிய கட்சி பொறுப்பாளர்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியும், கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் ஆகியோர் அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.

அதைத் தொடர்ந்து வார்டு பொறுப்பாளர்களுடன் கவுன்சிலர்களையும் அழைத்துக் கொண்டு திண்டுக்கல் மாநகரில் உள்ள 48வார்டுகளிலும் உள்ள பொதுமக்களை வீதி வீதியாக சந்தித்து சிபிஎம் கட்சி சார்பில் போட்டியிடும் சச்சிதானந்தத்திற்கு ஆதரவாக அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்  சின்னத்திற்கு வாக்களிக்குமாறு வலியுறுத்தினார்கள்.

dmk who voted street by street for the cpm

இதில் 17வதுவார்டு மாநகர கவுன்சிலரான வெங்கடேஷ் கட்சி பொறுப்பாளர்களுடன் அப்பகுதியில் உள்ள கடைகள், வீடுகளில் பிட் நோட்டீஸ்களை கொடுத்து அரிவாள் சுத்தியல் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு மக்களிடம் இருகரம் கூப்பி ஓட்டு கேட்டார். அதேபோல் மற்ற பகுதிகளிலும் மேயர், துணை மேயர் பகுதிச் செயலாளர்கள் ஆகியோர் தலைமையில் கட்சிப் பொறுப்பாளர்கள் திண்டுக்கல் மாநகரில் உள்ள மக்களை சந்தித்து அவர்களிடம் கடந்த மூன்றாண்டு தி.மு.க. ஆட்சியில் செய்த திட்டங்களையும், சலுகைகளையும் கூறி வரக்கூடிய தேர்தலில்  சச்சிதானந்தத்திற்கு அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என பிட் நோட்டீஸ்களையும் கொடுத்து ஆதரவு திரட்டினார்கள்.

இப்படி திடீரென ஒரே நேரத்தில் திண்டுக்கல் மாநகரில் அனைத்து வார்டுகளிலும் உபிக்கள் தோழர் சச்சிதானந்தத்திற்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்  சின்னத்திற்கு வாக்கு கேட்டது தேர்தல் களத்தில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.