Skip to main content

யார் அந்த அதிகாரிகள்; அமைச்சர் வீட்டு ரெய்டில் நடந்தது என்ன? - ‘திமுக’ சித்திக் விளக்கம்!

Published on 30/05/2023 | Edited on 30/05/2023

 

 Who are those officers; What happened in the minister's house raid? - 'DMK' Siddique's explanation!

 

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது; அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது போன்ற சம்பவங்களை மையப்படுத்தி திமுகவின் செய்தித் தொடர்பாளர் சித்திக் அவர்களிடம் கேள்விகளை முன்வைத்தோம். அவர் அளித்த பதில் பின்வருமாறு.

 

வருமான வரித்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டிற்கு வரும் பொழுது அவர்களை மறித்து ஊர் மக்கள் சுற்றி வளைத்து வருமான வரித்துறையினரிடம் அடையாள அட்டையை காண்பிக்குமாறு அவர்களை வலியுறுத்தினர். ஆனால், அடையாள அட்டையை காண்பிக்க மறுத்துள்ளனர் வருமான வரித்துறையினர். மேலும் சில நாட்களுக்கு முன்பு பிஜேபியினர் சிலர் வருமான வரித்துறையினர் போல் நடித்து சில வீட்டில் கொள்ளையடித்துள்ளனர். அதனைக் கருத்தில் கொண்டுதான் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் பொதுமக்கள். மேலும் இதை உறுதிப்படுத்தும் விதமாக பிஜேபியின் தமிழக பொறுப்பாளர் அண்ணாமலை  நான் சொன்னது போல் ரெய்டு நடந்துள்ளது. இதனால்தான் பொதுமக்கள் கட்டுப்பாட்டை மீறியுள்ளனர் என்றிருக்கிறார்.

 

மேலும் இந்த பிஜேபி, அரசு அதிகாரிகளை தன்வசப்படுத்தி அவர்களை தங்களுக்கு சாதகமாக்கி வருகின்றனர். இதை உச்சநீதிமன்ற நீதிபதிகளே, எங்களுக்கு அழுத்தம் தரப்படுகிறது என்று ஒப்புக்கொள்கின்றனர். மேலும் பாராளுமன்றத்தில் எந்தவித சட்ட மசோதாவையும் விவாதத்துக்கு உட்படுத்த மறுக்கின்றனர். மேலும் சில மாதங்களுக்கு கர்நாடகாவில் பிஜேபி ஆட்சி செய்தபோது  காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பாளராக இருந்த டி.கே. சிவகுமார் வீட்டில் அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தினர். ஆனால் அன்றைக்கு இருந்த பிஜேபி அரசு 40 சதவீத ஊழல் நடந்தது என்று ஒப்பந்ததாரர்கள் உறுதியளித்தனர். ஆனால் அவர்கள் வீட்டில் ரெய்டு நடக்கவில்லை. இதேபோல் தான் ப. சிதம்பரம் அவர்கள், பிஜேபியினால் பொருளாதாரத்தில் பொதுமக்கள் நாம் என்னென்ன இழப்புகளை சந்தித்து வருகிறோம் என்று மாநாடு ஒன்றில் பேசினார். ஆனால், அடுத்த நாளே ப.சிதம்பரம் வீட்டில் ரெய்டு நடந்தது.

 

இதேபோல் பிஜேபியை யார் எதிர்த்து கேள்வி கேட்கிறார்களோ அவர்கள் வீட்டில் அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர். சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து சில மாயைகளை செய்து சில இடங்களை கைப்பற்றியது பிஜேபி. ஆனால் ஈரோடு இடைத்தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் பிஜேபியை ஓட ஓட விரட்டி அடித்தனர். மேலும் கர்நாடகாவின் முந்தைய முதலமைச்சரான குமாரசாமி அவர்கள் சட்டமன்றத்தில், பிஜேபியோடு இணக்கமாக செயல்படவில்லை எனில் எங்களுக்கு அமலாக்கத்துறையினால் ரெய்டு நடத்தப்படும் என்று எங்களை மிரட்டினார்கள் என்று அனைவர் முன்பும் சட்டமன்றத்தில் பேசினார்.

 

அதனால் டி.கே. சிவகுமார், ப.சிதம்பரம், குமாரசாமி என பிஜேபியை எதிர்த்து கேள்வி கேட்டால் ரெய்டு நடத்தி அவர்களின் அதிகார பலத்தை காட்டி வருகின்றனர். ஆனால் இவர்கள் இதுவரை நடத்திய வருமான வரிச் சோதனையின் போது எடுத்த ஆதாரங்களை சேகரித்து வழக்கு நடக்கிற புள்ளி விவரம் வெறும் 0.35 % தான் என்று புள்ளி விவரம் சொல்கிறது. அதனால் இந்த பிஜேபி அரசு எங்களிடம் பூச்சாண்டி காட்டுகிறது. இதை பார்த்து இந்த திராவிட அரசு என்றைக்கும் துளி கூட பயம் கொள்ளாது.