Skip to main content

மக்கள் நம்புவது யாரை?-ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்! 

Published on 04/04/2019 | Edited on 04/04/2019

தேர்தல்களம் சூடு பிடித்திருக்கிறது. கலைஞரும், ஜெயலலிதாவும் இல்லாமல் நடைபெறும் தேர்தல் என்பதால் எதிர்பார்ப்பும் கூடியிருக்கிறது. தேர்தல் ஆணையம் இறுதி வேட்பாளர் வெளியிடுவதற்கு முன்பாகவே முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் தேர்தல் களத்திற்கு சென்று மக்களைச் சந்தித்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் மக்கள் எந்தளவுக்கு வரவேற்பு தருகிறார்கள். எந்தளவு ஆர்வம் காட்டுகிறார்கள்? கட்சியினரின் மனநிலையும், கூட்டணிக் கட்சியினரின் ஒத்துழைப்பும் எப்படி? போன்றவற்றை அறிய அவர்களின் பிரச்சார வாகனத்தைப் பின்தொடர முடிவுசெய்தோம். 

சேலத்தில் பிரச்சாரத்தைத் தொடங்கிய எடப்பாடி பழனிசாமி, மார்ச் 23-ந்தேதி திருவண்ணாமலை எம்.பி. வேட்பாளர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வேலூர் மாவட்டம் திருப்பத்தூருக்கு வந்திருந்தார். பிரச்சார வேனில் நின்றுகொண்டு கும்பிட்டபடியே வந்தவரை, சாலையில் நடந்துசென்ற பொதுமக்கள்கூட கண்டுகொள்ளவில்லை. கந்திலி கிராமத்தில் ஆயிரம் பேர், திருப்பூர் - வேலூர் சாலையில் மூவாயிரம் பேர் மத்தியில் உரையாற்றினார். கூட்டம் குறைவாக இருப்பதால் சீக்கிரமாகவே பேசி முடித்துவிட்டு அமைச்சர் வீரமணியின் சொந்த ஊரான ஜோலார்பேட்டைக்கு விரைந்தார். அங்கோ திருப்பத்தூரே பரவாயில்லை என்கிற அளவுக்குத்தான் கூட்டம் இருந்தது. 

 

eps campaignஅடுத்ததாக வேலூர் எம்.பி. வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து வாணியம்பாடியிலும், இடைத்தேர்தலுக்காக ஆம்பூரிலும் பேசினார் எடப்பாடி. இஸ்லாமியர்கள் அதிகமுள்ள பகுதிகளில் தப்பித்தவறி கூட மோடியின் பெயரை உச்சரிக்கவில்லை. ஆம்பூர் தொகுதி வேட்பாளர் ராமலிங்கராஜாவின் சொந்த ஊரான மாதனூரில் நூறுபேர்கூட கூடவில்லை. 

 

pmk campaignகே.வி.குப்பம் பேருந்து நிலையத்தில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரவு ஏழு மணி கூட்டத்திற்காக நான்கு மணிக்கெல்லாம் லோடுவண்டிகளில் கட்சியினர் மற்றும் வயதானவர்களை கூட்டி வந்திருந்தார்கள். எடப்பாடியின் வேன் வந்ததுமே, யாரும் நெருங்காமல் இருப்பதற்காக கயிறுகளைக் கட்டி மறித்தனர் காவலர்கள். இதில் தடுமாறி கீழேவிழுந்த முதியவர் தாமோதரன், மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்துபோனார். அதேபோல், லத்தேரி விழுந்தகால் கிராமத்தில் இருந்து தலைக்கு ரூ.250 பேசி லோடு ஆட்டோவில் 30 பேரை ஏற்றி வந்தபோது, டயர் வெடித்ததில் ஆட்டோ கவிழ்ந்து 20 பெண்களுக்கு காயம் ஏற்பட்டது. 

முதல்வர் வரும்போது கூட்டத்தைக் காட்டவேண்டும் என்பதற்காக 13 நகர்க்குழுக்களுக்கு தலா 3 லட்சமும், 23 ஒன்றியங்களுக்கு தலா 6 லட்சமும் கொடுத்திருந்தார் அமைச்சர் வீரமணி. பிரச்சாரம் நடக்கும் இடத்திற்கு அருகாமை கிராமங்களில் இருந்து தலைக்கு ரூ.250, மதியம் பிரியாணி எனச்சொல்லியே மக்களைக் கூட்டிவந்திருந்தனர். கட்சி நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, "காசு கொடுத்தாலும் மக்கள் வரலைங்கிறாங்க. அம்மாவுக்காக அஞ்சு மணிநேரம் வெயில்ல காத்துக்கிடந்த அதே மக்கள், இப்ப அதைவிட கூடுதலாக தந்தாலும் எடப்பாடிக்காக நிற்க முடியாதுங்கிறாங்க''’என்றனர்.

 

stalinபா.ம.க. வலிமையாக உள்ள பகுதிகளில்கூட எடப்பாடிக்காக கூட்டம் கூடவில்லை. தே.மு.தி.க.வில் இருந்து நிர்வாகிகள்தான் வருகிறார்களே தவிர, தொண்டர்களைப் பார்க்க முடியவில்லை. நவீன மைக் மாட்டிக்கொண்டு அன்புமணி ஸ்டைலில் பேசுகிறார் எடப்பாடி.

திருவாரூரில் பிரச்சாரத்தைத் தொடங்கிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், சேலம் வேட்பாளர் பார்த்திபன், தர்மபுரி வேட்பாளர் டாக்டர் செந்தில்குமாருக்கு ஓட்டு கேட்டுவிட்டு, மார்ச் 23-ந்தேதி மாலை திருவண்ணாமலை வந்தார். 

 

stalin campaignதிருவண்ணாமலை -திருக்கோவிலூர் சாலையில் 20 ஏக்கர் பரப்பளவுள்ள மைதானத்தில் பிரச்சாரக்கூட்டம் நடந்தது. அதில், தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சியினர் 20 ஆயிரம்பேர் வந்திருந்தனர். மேடைக்கு அருகில் நின்று கொண்டிருந்த தி.மு.க. நிர்வாகி ஒருவரிடம்  கூட்டம் பற்றி கேட்டதற்கு, "திருவண்ணாமலையில் இருக்கும் ஒவ்வொரு ஊராட்சியின் கட்சி நிர்வாகிக்கும் கொடுக்கப்பட்ட ரூ.2 ஆயிரம், வண்டி வாடகைக்கே போதலை. கட்சியினரை மட்டும் அழைச்சி வந்திருந்தாங்க, அதுல சிலர் கலந்துக்கணும்ங்கிற ஆர்வத்தோட வந்தவங்க. ஒருசில ஒன்றியத்தில் இருந்து தலைக்கு ரூ.200, ரூ.300ன்னு பேசி அழைச்சிக்கிட்டு வந்திருந்தாங்க''’என்றார். 

கூட்டத்திற்கு வந்தவர்களில் கூட்டணிக்கட்சி நிர்வாகிகள்தான் அதிகமே தவிர, அந்தக் கட்சிகளின் தொண்டர்களை அதிகம் காணமுடியவில்லை. இதுபற்றி கூட்டணிக் கட்சி நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, ""அதிகாரத் தொனியில் பழகும் தி.மு.க.வில் கீழ்மட்ட நிர்வாகிகள், கூட்டணிக் கட்சித் தொண்டர்களை மதிப்பதே கிடையாது. கூட்டத்துக்கும் அழைப்பதில்லை. அதான் நிறையபேர் கலந்துக்கலை''’என்றார். 

ஏற்கனவே ஆட்சியில் இருப்பவர்கள் என்பதால் எடப்பாடி கொடுக்கும் வாக்குறுதிகளை பெரும்பாலான மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதேசமயம், ஸ்டாலினின் வாக்குறுதிகளுக்கும் ஆர்வம் பெரிதாக தெரியவில்லை என்றாலும், எதிர்ப்பலை இல்லை. 

மத்திய-மாநில ஆட்சியாளர்களை உள்ளூர் நிலவரங்களுடன் சேர்த்து வைத்து காரசாரமாகப் பேசுகிறார் ஸ்டாலின். இது புது பாணியாக இருந்தாலும், "கலைஞர் இருந்திருந்தால்...' என்ற பேச்சும் தொண்டர்களிடம் எதிரொலிக்கிறது. 

அதேபோல், எடப்பாடியை விட ஸ்டாலினுக்கே கூட்டம் கூடுகிறது என்றாலும், "கூட்டத்தை எல்லாம் ஓட்டாக மாற்றுவாரா ஸ்டாலின்?' என்ற கேள்வி எழுகிறது. மக்கள் புறக்கணிப்புக்கிடையே அவர்களை இரட்டைஇலைப் பக்கம் இழுக்க எடப்பாடி என்ன செய்வார் என்ற எதிர்பார்ப்பும் வலுக்கிறது.