Skip to main content

எனக்கேற்ற துணை எங்கே? -மாற்றுத்திறனாளிகளின் தேடல் விழா!

indiraprojects-large indiraprojects-mobile

 

“இந்த அஜித் மாதிரி.. அப்புறம் விஜய் மாதிரி.. சூர்யா மாதிரி மாப்பிள்ளை வேணும்னு இங்கே யாரும் சொல்லப்போறதில்ல.”
-விருதுநகரில் மாற்றுத்திறனாளிகளுக்கு சுயம்வரம் நடத்திய அந்த  அற்புதமான மேடையில்,  சிம்மச்சந்திரன் என்பவர் இப்படிச் சொன்னபோது,  பார்வையாளர்கள் ஆர்ப்பரித்தனர். 

 

a

 

மாற்றுத்திறன் கொண்ட மகத்தான மனிதர்கள்!

உடல் குறைபாடு, புலன் குறைபாடு (பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல், உணர்தல்), அறிவுத்திறன் குறைபாடு, உளவியல் குறைபாடு மற்றும் சில நோய்கள் தொடர்பான குறைபாடு உள்ளவர்கள்தான் மாற்றுத்திறனாளிகள்.  உடலிலோ, மனதிலோ ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக,  சில செயல்களை செய்யமுடியாமல் போய்விடுகிற காரணத்தால், அவர்கள் அவ்வாறு  அழைக்கப்படுகின்றனர். மரபணுவினால் பிறப்பிலேயே ஏற்படும் மாற்றங்கள், தாயின் கருவில் இருக்கும்போது அல்லது பிறந்தவுடன் ஏற்படும் நோய்கள் மூலம் ஏற்படும் மாற்றங்கள், கடுமையான நோயினாலோ, விபத்தினாலோ உருவாகும் மாற்றங்கள், வேறு தெரியாத சில காரணங்கள் என, மாற்றுத்திறன் என்பது வகைப்படுத்தப்படுகிறது. 

மாற்றுத்திறனாளியாகப் பிறந்தது அவர்கள் குற்றமல்ல. ஆனாலும், தங்கள் வாழ்க்கையை வாழ இயலாதவாறு, சமூகத்தில் அவர்களைத் தடுக்கின்ற சில தடைகள் உண்டு. இது மனித உரிமைகளோடு தொடர்புடையது. உலக சுகாதார நிறுவனம், மாற்றுத்திறனாளிகளை உலகின் மிகப்பெரிய சிறுபான்மையினர் என்று குறிப்பிடுகிறது. 

 

திருமணம் என்பதே சவால்தான்!


திருமணம் என்பது இரு மனங்களும், இரு உடல்களும் அலாதியான உணர்வோடு இணைந்து, நெடுந்தூரம் செல்லக்கூடிய ஒரு இனிய பயணம். அதனால், வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனம் செலுத்துவார்கள்.  நல்ல உடலமைப்பு கொண்டவர்களும், பொருளாதார வசதி உள்ளவர்களும்,  ஜாதகம், பொருத்தம், தோஷம் என, தட்டிக்கழித்து விடுவதால்,  அவர்களுக்கும் திருமணம் தள்ளிப்போய் விடுகிறது. மாற்றுத்திறனாளிகள் அப்படி கிடையாது. மற்றவர்களைப் போல்,  முக அழகுக்கோ, உடல் நிறத்துக்கோ முக்கியத்துவம் தந்து, வாழ்க்கைத் துணையைத் தேட முடியாது. நேரில் பார்த்தும், விசாரித்தும்,   தங்களுக்கேற்ற துணை யாரென்பதை தீர்மானிக்கிறார்கள். ஆனாலும், மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணம் என்பது மிகப்பெரிய சவாலாகத்தான் உள்ளது. இதனை எதிர்கொள்ளும் விதமாகத்தான் விருதுநகரில் சுயம்வரம் விழா நடத்தினார்கள். 

 

சுகத்திலும் துயரிலும் பங்குகொள்ள ஆயத்தமான ஜோடிகள்!

 

a

 

மனவளர்ச்சி குன்றியவரான குட்டிப் பாண்டியம்மாளை தேர்வு செய்தார் தேசிங்குமுத்து. உடல் ஊனமற்ற ஈஸ்வரியின் தேர்வாக,  ஒரு கை ஊனமுற்ற ராமமூர்த்தி இருந்தார். கஸ்தூரி – பாலகிருஷ்ணன், கார்த்தீஸ்வரி – முனுசாமி, சந்திரன் – சுமதி  ஆகியோர் அவரவர் துணையைத் தேர்ந்தெடுத்தனர். ‘ஒருவரை ஒருவர் அன்பு கொண்டு, வரும் சுகத்திலும் துயரிலும் பங்கு கொண்டு, இருவரும் ஒருவரில் பாதி என்று, இன்புற வாழட்டும் பல்லாண்டு’ என பின்னணியில் திரைப்பாடலை ஒலிக்கவிட்டு, முதலில் தேர்வான ஐந்து ஜோடிகளின் தலையிலும் பூமழை பொழிந்தார்கள், சுயம்வரத்தை ஏற்பாடு செய்த அமைப்பினர். 

 

கடைசி வரையிலும் காப்பாற்றுபவர் யார்? 

பெண்கள் சிலர், பெற்றோருடன் மேடையேறி,  தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு, தங்களின் வாழ்க்கைத்துணை எவ்வாறு இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை, பரிதவிப்போடு வெளிப்படுத்தினார்கள். 

 

mo

 

இஸ்லாம் மார்க்கத்தைச் சேர்ந்த மோனிஷா 10-வது வரை படித்திருக்கிறார். 25 சதவீதம் மனவளர்ச்சி குன்றிய இவர்  “எனக்கு நல்ல மாப்பிள்ளை வேண்டும். அவர் என்னை நல்லா பார்த்துக்கணும்.” என்று மழலை மொழியில் பேச, அவருடைய அம்மா “என் மகளைத் தேர்வு செய்பவர், இஸ்லாத்துக்கு மாற வேண்டும். வேறு எந்த மதத்துக்கும் நாங்கள் மாற மாட்டோம்.” என்று நிபந்தனை விதித்தார். 

 

m

 

குள்ளமாக, வயதான தோற்றத்தில் இருந்த மீனாட்சிக்கு வயது முப்பதுதான். அவர் மேடைக்கு வந்தபோது, “இன்னுமா உனக்கு திருமணம் ஆகவில்லை?” என்று கமெண்ட் அடித்தார் ஒரு நிர்வாகி. மீனாட்சி அலட்டிக்கொள்ளாமல் மைக் பிடித்தார்.  “என்னைத் திருமணம் செய்துகொள்பவரை நான் நன்றாகப் பார்த்துக்கொள்வேன்.” என்று கூற, பார்வையாளர்கள் கை தட்டினர். மீனாட்சியின் கார்டியன் “இவள் மிகவும் சுறுசுறுப்பான பெண். இவளை மணம் முடிப்பவருக்கு வீடு கட்டித் தருவோம். ஜாதி, மதம் பார்க்க மாட்டோம்.” என்றார். 

 

ma

 

“எம்மதமும் சம்மதம். என் மகள் மாரியைக் கண் கலங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான். மாரி யாரைக் கை காட்டுகிறாளோ. அவர்தான் மாப்பிள்ளை” என்றார் மாரியின் தாய் லட்சுமி. 

 

m

 

தன் மகள் பன்னீர்செல்விக்காகப் பேசினார் ராமராஜ் “வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்க வேண்டும். கட்டிய வேட்டி, சட்டையோடு வந்தால் போதும். எல்லாவற்றையும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் சரிதான். ஆனால், ஜாதி செட்டியாராக இருக்க வேண்டும்.” என்றார். 

 

m

 

விவகாரத்தானவர் மாரீஸ்வரி. தேவர் ஜாதியில் மாப்பிள்ளை வேண்டும் என்றார். குறைவான ஊனம் என்றால் ஏற்றுக்கொள்வதாகக் கூறினார். 

 

p


பார்வையற்ற மாரியம்மாள், வயர் கூடை பின்னி வாழ்க்கை நடத்தி வருகிறார்.  “இந்த உலகத்தையே என்னால பார்க்க முடியல. ஜாதி, மதத்தையா பார்க்கப் போறேன்? கடைசிவரையிலும் என்னைக் காப்பாற்றக் கூடியவர் யாராவது இந்தக் கூட்டத்தில் இருக்கிறாரா?” என்று கேட்டார். 

 

சுயம்வரத்தில் கலந்துகொண்டவர்கள் 182 பேர் என்றும், தேர்வானது 11 ஜோடிகள் என்றும், இவர்களுக்கு முறையாக மருத்துவ பரிசோதனை மற்றும் சட்ட ஆலோசனைகளை வழங்கி, கீதாபவன் அறக்கட்டளை சார்பில் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான 51 வகையான சீர்வரிசையோடு, 2 கிராம் தங்க மாங்கல்யத்துடன், நவம்பர் 4-ஆம் தேதி சென்னையில் திருமணம் செய்து வைக்கபப்படும் என்றார்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டளர்களான பி.டபிள்யூ.டி. டிரஸ்ட் மற்றும் டீட் பவுன்டேஷன் இயக்குநர்கள். 

 

நல்ல மனங்கள் கூடும் இடங்களே சொர்க்கம்! அந்த வகையில், இந்த மாற்றுத்திறனாளிகளின் திருமணங்களும் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கின்றன!
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...