Skip to main content

100 கோடி ரூபாய் எங்கே? - மனைவியின் தோழியுடன் ஊர் ஊராகச் சுற்றும் நகைக்கடை அதிபர்!

Published on 16/11/2023 | Edited on 16/11/2023

 

Where is the Rs 100 crore? The jewelry shop owner who travels his wife's friend!
சபரி சங்கர்

 

சேலத்தில், நகை சீட்டு மற்றும் டெபாசிட்டு தொகைக்கு அதிக வட்டி தருவதாக ஆசை வலை விரித்து 100 கோடி ரூபாய் வரை சுருட்டிக்கொண்டு தலைமறைவான நகைக்கடை அதிபர் பற்றி மேலும் பல பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. 

 

சேலம் அருகே உள்ள வலசையூரைச் சேர்ந்தவர் சபரி சங்கர் (40). இவர், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, அம்மாபேட்டையைத் தலைமையிடமாகக் கொண்டு எஸ்.வி.எஸ். ஜூவல்லர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நகைக் கடையைத் தொடங்கினார். நகை சீட்டு திட்டம், பழசுக்கு புதுசு என்ற பெயரில் பழைய நகைகளுக்குப் புதிய நகைகள் வழங்குவது, டெபாசிட்டுக்கு 2.50 ரூபாய் வட்டி எனப் பல்வேறு கவர்ச்சி அறிவிப்புகள் மூலம் குறுகிய காலத்தில் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களின் அபிமானத்தை இந்த நிறுவனம் பெற்றது. 

 

Where is the Rs 100 crore? The jewelry shop owner who travels his wife's friend!
எஸ்.வி.எஸ். ஜூவல்லர்ஸ்

 

இதன் தொடர்ச்சியாகச் சேலத்தில் சீலநாயக்கன்பட்டி, தாரமங்கலம், ஆத்தூர் மட்டுமின்றி நாமக்கல், திருச்செங்கோடு, கோவை, தர்மபுரி, அரூர், கரூர், திருச்சி ஆகிய இடங்களிலும் இதன் கிளைகளைத் தொடங்கினார் சபரி சங்கர். டெபாசிட்தாரர்களுக்கும், நகை சீட்டுத் திட்டங்களில் சேர்ந்த உறுப்பினர்களுக்கும் தொடர்ந்து வட்டி, புதிய நகைகளைச் சரியாக பட்டுவாடா செய்து வந்த எஸ்.வி.எஸ். ஜுவல்லர்ஸ், கடந்த சில மாதங்களாக ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது. 

 

தீபாவளி பண்டிகையைக் குறிவைத்து நகை சீட்டு திட்டத்தில் சேர்ந்தவர்களும், பணத்தை நேரடியாக முதலீடு செய்தவர்களும் ஒரே நேரத்தில் கடைக்கு நெருக்கடி கொடுக்கவே, அவர்களுக்கு உரிய பதிலைச் சொல்ல முடியாமல் ஊழியர்கள் தடுமாறி வந்துள்ளனர். இதன்பிறகே, சபரி சங்கர் கடந்த நவ. 10ம் தேதி அதிகாலை, சொல்லாமல் கொள்ளாமல் திடீரென்று தலைமறைவாகி இருப்பது விசாரணையில் தெரியவந்தது. 

 

Where is the Rs 100 crore? The jewelry shop owner who travels his wife's friend!
ரஞ்சித்

 

நக்கீரன் நடத்திய கள விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. எஸ்.வி.எஸ். ஜுவல்லர்ஸ் நிறுவனம் தொடங்கியதில் இருந்து கடையில் பெரும்பாலும் சபரி சங்கர் இருப்பதில்லை. அவருடைய நெருங்கிய நண்பர்களான முரளி, முருகன், ரஞ்சித், உமாசங்கர், அப்புராஜ் ஆகியோரை நம்பியே கடையின் மொத்த ஆபரேஷன்களையும் விட்டுச் சென்றுள்ளார். 

 

ஒரே சமூகத்தைச் சேர்ந்த சபரி சங்கரின் நெருங்கிய உறவினர்தான் ரஞ்சித். மற்றொரு முக்கிய நிர்வாகியான அப்புராஜ் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்றாலும், சபரி சங்கரின் முதல் மனைவி ஆராதனாவின்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) தங்கையை காதலித்து மணந்த வகையில் அவருக்கு சகலை உறவுமுறை ஆகிறது. இவர்களில் உமாசங்கர்தான், கடையின் உரிமையாளருக்கு வலதுகரமாகச் செயல்பட்டு வந்துள்ளார். இவர்தான் 11 இடங்களில் உள்ள கடைகளின் மொத்த செயல்பாடுகளையும் கண்காணிக்கக் கூடியவர். நிறுவனத்தின் வங்கி பரிவர்த்தனைகள், நகைகள் செய்து கொடுக்கும் டீலர்களுடனான பிஸினஸ் டீல் ஆகியவற்றை கவனித்து வந்துள்ளார். 

 

Where is the Rs 100 crore? The jewelry shop owner who travels his wife's friend!
அப்புராஜ்

 

மற்றொரு முதன்மைச் செயல் அதிகாரியான முருகன், இந்நிறுவனத்திற்குச் சொந்தமான 119 வாடிக்கையாளர் சேவை மைய செயல்பாடுகளையும், மற்ற இரு சி.இ.ஓ.,க்களான முரளி, ரஞ்சித் ஆகியோர் கடையின் கணக்கு வழக்குகளையும் கவனித்து வந்துள்ளனர். 

 

ஆரம்பக் காலகட்டத்தில் அப்புராஜ், சபரி சங்கருடன் நெருக்கமாக இருந்து வந்தாலும், அவர் மனைவியின் தோழியுடன் நெருக்கமாக பழகியதைப் பிடிக்காமல் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு, 16.8.2021ம் தேதியே கடையில் இருந்து வெளியேறி விட்டார் அப்புராஜ். 

 

Where is the Rs 100 crore? The jewelry shop owner who travels his wife's friend!
உமா சங்கர்

 

இந்நிலையில், மீண்டும் அவரை சமாதானப்படுத்தி கடைக்கு அழைத்துள்ளார் சபரி சங்கர். இதை அடுத்தே, கடந்த இரு மாதங்களாக மீண்டும் அப்புராஜ் எஸ்.வி.எஸ். நகைக் கடையில் பணியாற்றி வருகிறார். சபரி சங்கருக்கு இவர் சகலை உறவுமுறை என்பதால் அவருக்கும் இந்த மோசடியில் தொடர்பு இருக்கலாம் எனப் பாதிக்கப்பட்டோர் கருதுகின்றனர். 

 

Where is the Rs 100 crore? The jewelry shop owner who travels his wife's friend!
முருகன்

 

ஆக, முதன்மைச் செயல் அதிகாரிகளான முருகன், உமாசங்கர், ரஞ்சித், முரளி, அப்புராஜ் ஆகியோர்தான் கடையின் மொத்த நிர்வாகப் பொறுப்புகளையும் கவனித்து வந்துள்ளனர். இவர்களும், சபரி சங்கரும் ஆரம்பத்தில் சேலத்தில் உள்ள பிரபல கார்ப்பரேட் நகைக் கடையில் ஒன்றாக வேலை செய்து வந்துள்ளனர். அங்கு ஏற்பட்ட நெருக்கமான நட்பும், அங்கு கிடைத்த அனுபவத்தையும் கொண்டே இவர்கள் புதிதாக நகைக் கடையைத் திறந்துள்ளனர். 

 

முதன்மைச் செயல் அதிகாரிகள் நிலையில் உள்ள 10 ஊழியர்களுக்கு மாதம் 50 ஆயிரம் ரூபாய் ஊதியம், ஒவ்வொருக்கும் ஓட்டுநருடன் கூடிய தனி கார் ஆகிய வசதிகளையும் செய்து கொடுத்துள்ளார். அடிப்படையில் சபரி சங்கர், ஒரு ஜாலி பேர்வழி என்கிறார்கள். மது மற்றும் பல விஷயங்களில் கில்லாடி என்கிறார்கள். 

 

Where is the Rs 100 crore? The jewelry shop owner who travels his wife's friend!
சபரி சங்கர்

 

இவருடைய மனைவி ஆராதனா, சாரதா கல்லூரி சாலையில் பொம்மைகள் விற்கும் கடையில் வேலை செய்து வந்துள்ளார். இவர், சபரி சங்கர் வேலை செய்து வந்த நகைக் கடையில் சீட்டுப் போட்டுள்ளார். அந்தக் கடைக்கு சென்று வந்ததில், இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இரு தரப்பு பெற்றோரும் காதலுக்கு சிவப்புக்கொடி காட்டிய நிலையில், பெற்றோர் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

 

இந்நிலையில், ஆராதனாவின் தோழியான நித்யஸ்ரீ(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர், அடிக்கடி அவருடைய வீட்டுக்குச் சென்று வந்தார். இதில், சபரி சங்கருக்கும் நித்யஸ்ரீக்கும் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. ஆராதனா, இதுகுறித்து கணவரிடம் கேட்கப்போக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, விவகாரம் நீதிமன்றம் வரை சென்றுள்ளது. விவாகரத்து பெற்றுவிட்டதாக ஒரு சாராரும், வழக்கு முடிவுக்கு வரவில்லை என்று சிலரும் சொல்கின்றனர்.

 

Where is the Rs 100 crore? The jewelry shop owner who travels his wife's friend!

 

ஆனாலும் எதைப் பற்றியும் கண்டுகொள்ளாத சபரி சங்கர், நித்யஸ்ரீயை சொகுசு காரில் அழைத்துக் கொண்டு கோவா, பெங்களூர், டெல்லி, கேரளா என மாதக்கணக்கில் உல்லாசமாகச் சுற்றி வந்துள்ளார். நித்யஸ்ரீயை அழைத்துக் கொண்டு வெளி மாநிலங்களுக்குச் சென்றுவிட்டால், மூன்று மாதங்கள் கழித்துதான் சபரி சங்கர் நகைக்கடைப் பக்கமே தலைகாட்டுவார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். அவரை அழைத்துச் செல்வதற்காகவே ஜாக்குவார், பி.எம்.டபுள்யூ, ஆடி ஆகிய சொகுசு கார்களை வாங்கியுள்ளார் சபரி சங்கர்.

 

இது ஒருபுறம் இருக்க, நித்யஸ்ரீக்கு சொந்தமாக சபரி சங்கர் ஒரு வீடு கட்டிக் கொடுத்துள்ளதாகவும், அவருடைய தந்தைக்கு குமாரசாமிப்பட்டி பகுதியில் சிறிய அளவில் நகைக்கடை வைத்துக் கொடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. சபரி சங்கர், சொந்த ஊரில் 6 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக ஒரு வீடு கட்டிக் கொண்டிருக்கிறார். இவர் மட்டுமின்றி, முதன்மைச் செயல் அதிகாரிகளாக பணியாற்றி வரும் முருகன், ரஞ்சித், முரளி ஆகியோரும் சொந்த வீடு கட்டி செட்டில் ஆகிவிட்டனர். வலது கரமாக கருதப்படும் உமா சங்கர் மட்டும் பொன்னம்மாபேட்டை புத்து மாரியம்மன் கோயில் அருகே வாடகை வீட்டில் வசிப்பதாகக் கூறுகின்றனர். இந்த மோசடி விவகாரத்தில் சபரி சங்கருக்கு மட்டுமின்றி முதன்மைச் செயல் அதிகாரிகளுக்கும் முக்கிய பங்கு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அவர்களும் தலைமறைவாகி விட்டதோடு, செல்போன் எண்களையும் அணைத்து வைத்துள்ளனர். 

 

இந்நிலையில் முதன்மைச் செயல் அதிகாரி முருகன் என்பவர் எடப்பாடியைச் சேர்ந்த சவுந்திரவள்ளி என்பவரிடம் நவ. 15ம் தேதி இரவு செல்போனில் சில நிமிடங்கள் பேசியிருக்கிறார். இதுபற்றி சவுந்திரவள்ளி கூறுகையில், “எஸ்.வி.எஸ். நகைக்கடையில் பழசுக்கு புதுசு திட்டத்தின் கீழ் என்னுடையது மற்றும் என் தாயார், தங்கை ஆகியோரிடம் இருந்து பெற்ற 4.75 பவுன் தாலிக்கொடி, குண்டு உள்ளிட்ட நகைகளை கொடுத்திருந்தேன். திடீரென்று கடையை மூடிவிட்டு கடை உரிமையாளர் தலைமறைவாகி விட்டார். நான் என் உறவினர்களுக்கு என்ன பதில் சொல்வது? 

 

இதுபற்றி முருகனிடம் கேட்டபோது, நானும் இந்தக் கடையில் நகை கொடுத்து ஏமாந்துவிட்டேன் என்றும், இதுகுறித்து சபரி சங்கர் மீது காவல்துறையில் புகார் அளிக்கும்படியும் கூறினார். அவருடைய பேச்சின் மீதும் சந்தேகம் உள்ளது. “சபரி சங்கர், முருகன் உள்ளிட்ட மோசடி ஆசாமிகள் மட்டும் கையில் சிக்கினால் வெளுத்துவிட்டுடுவேன்” என ஆவேசமாக கூறினார். 

 

நகைக்கடையை தொடங்குவதற்கு முன்பு சபரி சங்கர், ஆத்தூர், தாரமங்கலம், அரூர், பேளூர் ஆகிய இடங்களில் குபேரன் அடகு கடை என்ற பெயரில் நகை அடகு கடைகளை தொடங்கினார். இதனால் அவருக்கு வங்கிகளுடன் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்திக்கொண்ட சபரி சங்கர், ஏலத்துக்கு வரும் அடமான நகைகளை கிலோ கணக்கில் வாங்கி வியாபாரம் செய்து வந்துள்ளார். அதன் பிறகுதான் அவர் நகைக் கடைகளைத் தொடங்கினார் என்கிறார்கள். 

 

சபரி சங்கர் காவல்துறையில் பிடிபட்டால் மட்டுமே மோசடி தொகையின் உண்மை மதிப்பும், இந்த விவகாரத்தில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்ற விவரங்களும் தெரியவரும். அவரை காவல்துறை தனிப்படையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

சிறுமியிடம் பாலியல் சீண்டல்; அரசுப்பள்ளி ஆசிரியர் பணியிடைநீக்கம்

Published on 27/11/2023 | Edited on 27/11/2023

 

salem omalur government school headmaster suspended

 

ஓமலூர் அருகே, சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

 

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே எம்.செட்டிப்பட்டியில் உள்ள அரசுத் தொடக்கப்பள்ளியில், வேலக்கவுண்டனூரைச் சேர்ந்த மயில்வாகனன் (50) என்பவர் ஆசிரியராக பணியாற்றினார். அந்தப் பள்ளியில் 5ம் வகுப்பு பயிலும் சிறுமிகளை தனியாக அழைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததாக மயில்வாகனன் மீது அண்மையில் புகார்கள் கிளம்பின. இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு மீண்டும் ஒரு சிறுமியிடம் தவறாக நடந்துள்ளார். 

 

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி, பெற்றோரிடம் அழுது புலம்பினார். அதன்பேரில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஓமலூர் மகளிர் காவல்நிலையத்திற்குத் திரண்டு சென்று ஆசிரியர் மயில்வாகனன் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்தனர். புகாரில் முகாந்திரம் இருந்ததை அடுத்து, காவல்துறையினர் மயில்வாகனன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

 

இதையடுத்து, மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் ராஜூ அவரை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். ஆசிரியர்கள் மீது தொடர்ந்து பாலியல் புகார்கள் வருவது பள்ளிக்கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

“கூறு போட்டு விற்கப்படும் பெரியார் பல்கலை” - ராமதாஸ்

Published on 23/11/2023 | Edited on 23/11/2023

 

“Periyar University is sold by installments” - Ramadoss

 

“தமிழக அரசையும், உயர் கல்வித்துறையையும் எள் முனையளவுக்குக் கூட மதிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டு வரும் சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர், அவரது கூட்டாளிகள் சிலருடன் இணைந்து பெரியார் பல்கலைக்கழகத்தின் சார்பில் கல்வி வழங்குவதற்காக தனி நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளார். பெரியார் பல்கலைக்கழகத்தை கூறு போட்டு விற்பனை செய்வதற்கு சமமான இந்த நடவடிக்கை குறித்து தமிழக அரசுக்கு தெரியும் என்ற போதிலும்,  அதற்கு காரணமானவர்கள் மீது  எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பல வாரங்களாக வேடிக்கை பார்த்து வருவது கண்டிக்கத்தக்கதாகும்” என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

 

மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் போன்ற மிகவும் பின்தங்கிய பகுதி மக்களுக்கு உயர்கல்வி வழங்குவதற்காக சேலத்தில் பெரியார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. ஆனால், கல்வி வளர்ச்சிக்காக ஆக்கப்பூர்வமாக எதையும் செய்யாத பெரியார் பல்கலைக்கழகத்தில் ஊழல்கள் தான் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றன. அதன் அடுத்தகட்டமாக பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகநாதன், பொறுப்பு பதிவாளர் தங்கவேல், கணினி அறிவியல் துறை இணைப் பேராசிரியர் சதீஸ், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் ராம் கணேஷ் ஆகிய நால்வரும் இணைந்து பூட்டர் அறக்கட்டளை (Periyar University Technology entrepreneurship and Research Foundation) என்ற கல்வி நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர். இது தவிர தங்கவேல் உள்ளிட்ட மூவர் இணைந்து அப்டெக்கான் ஃபோரம் என்ற இன்னொரு அமைப்பை உருவாக்கியுள்ளனர். இவர்கள் பெரியார் பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகளாக இருந்து, பல்கலைக்கழகத்தின் துணை அமைப்புகளாக அவற்றை தொடங்கவில்லை. மாறாக, தங்களை இயக்குநர்களாகக் கொண்டு, பல்கலைக்கழகத்தை விட அதிக வருவாய் ஈட்டும் நிறுவனங்களாகவே தொடங்கியுள்ளனர். அதுமட்டுமின்றி, இந்த நிறுவனங்களால் பெரியார் பல்கலைக்கழகம் பாதிக்கப்படும்.

 

பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன், பொறுப்பு பதிவாளர் தங்கவேல், கணினி அறிவியல் துறை இணைப் பேராசிரியர் சதீஸ் ஆகிய மூவரும் பெரியார் பல்கலைக்கழக சட்டப்பிரிவு 19-ன்படி பொது ஊழியர்களாக கருதப்படுவார்கள். அவர்கள் புதிதாக எந்தத் தொழிலையும் தொடங்க முடியாது; தனியார் நிறுவனம் தொடங்குவதாக இருந்தாலோ அல்லது அதில் முதலீடு செய்ய வேண்டும் என்றாலோ அதற்கு பல்கலைக்கழக அனுமதியும், தமிழக அரசின் அனுமதியும் பெற வேண்டும். ஆனால், எந்த அனுமதியும் பெறாமல் நிறுவனங்களைத்  தொடங்கியுள்ள இவர்கள், அதற்காக தங்களின் சொந்தப் பணத்தை முதலீடு செய்துள்ளனர். இந்த இரு நிறுவனங்களும் பல்கலைக்கழக வளாகத்தில்  இருந்து செயல்படும்; அதில் கிடைக்கும் லாபத்தை பல்கலைக்கழகத்திற்கு தராமல் துணைவேந்தர் உள்ளிட்டவர்களே எடுத்துக் கொள்வார்கள். அவர்கள் ஓய்வு பெற்ற பிறகும் இதே நிலை தொடரும்.

 

இரு புதிய நிறுவனங்களில் பூட்டர் அறக்கட்டளையும், பெரியார் பல்கலைக்கழகமும் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் குழு ஒப்புதலுக்காகவும் அந்த ஒப்பந்தம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பெரியார் பல்கலைக்கழகத்தின் சார்பில் தொழில்நுட்பம், தொழில்முனைவு போன்ற படிப்புகளை பூட்டர் அறக்கட்டளை நடத்தும்; அதற்காக பெரியார் பல்கலைக்கழகத்தின் கட்டமைப்புகளை பயன்படுத்திக் கொள்ளும். அதேநேரத்தில் பெரியார் பல்கலைக்கழகம் வழக்கமாக வசூலிக்கும் கட்டணத்தை விட பல மடங்கு அதிக கட்டணத்தை வசூல் செய்யும் பூட்டர் அறக்கட்டளை, அந்த வருவாயில் ஒரு சிறிய பங்கை மட்டும் பல்கலைக்கழகத்திற்கு கொடுக்கும். பூட்டர் அறக்கட்டளை லட்சக்கணக்கில் கட்டணம் வசூலித்தாலும், இட ஒதுக்கீட்டை மதிக்காமல் மாணவர் சேர்க்கை நடத்தினாலும் அதுபற்றி பல்கலைக்கழகத்தால் வினா எழுப்ப முடியாது.

 

சுருக்கமாக கூற வேண்டுமானால், பெரியார் பல்கலைக்கழகத்தை அதன் துணைவேந்தரும், கூட்டாளிகளும் கூறு போட்டு விற்றுக் கொண்டிருக்கின்றனர்; பெரியார் பல்கலைக்கழகத்திற்கு கிடைக்க வேண்டிய வருமானத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கின்றனர். பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக் கொண்டே, அதில் புதிய நிறுவனத்தை தொடங்குவது சட்டவிரோதம். இதற்காகவே துணைவேந்தர் உள்ளிட்டோர் மீது  தமிழக அரசு நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், அரசு அதை செய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

 

பெரியார் பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக ஊழல்கள் தடையின்றி நடைபெற்றுக் கொண்டுள்ளன. அவற்றை பல முறை அறிக்கைகள் மூலம் நான் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளேன். ஆனால், அவற்றின் மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த 13  வகையான முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த கடந்த ஜனவரி 9ஆம் நாள் உயர்நிலைக்குழுவை அரசு அமைத்தது. அந்தக்குழு இரு வாரங்களில் விசாரணை நடத்தி அரக்கு அறிக்கை தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால், அடுத்த ஜனவரி மாதமே வரவிருக்கும் நிலையில் அந்த விசாரணை முடிந்து அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இத்தகைய அணுகுமுறைகள் காரணமாக தமிழக அரசை பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தரும் அவரது கூட்டாளிகளும் மதிப்பதே கிடையாது.

 

இனியும் நிலைமை மோசமடையாமல் தடுக்க, பெரியார் பல்கலைக்கழகத்தின் அதன் துணைவேந்தரும், அவரது கூட்டாளிகளும் தனி நிறுவனம் தொடங்கியிருப்பது குறித்து அரசு விசாரணை நடத்த வேண்டும். விசாரணை செம்மையாக நடைபெறுவதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அனைவரையும் பணி நீக்க வேண்டும். கடந்தகாலத்தில் நடந்த பல்வேறு முறைகேடுகள் குறித்த வழக்கு விசாரணைகளை விரைவு படுத்தி, தவறு செய்த அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும்” எனக் கூறியுள்ளார். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்