kasturi mahalingam

இரண்டு நாட்கள் கடந்தும் அந்த முகம் மனதை வாட்டுகிறது. மன அழுத்தம் குறையவில்லை.

Advertisment

அந்தக் காட்சியை காணக் கூடாதென்று மனம் நினைக்கிறது. ஆனால் அந்த பிள்ளையின் உடன் இருக்க தோன்றுகிறது. தொலைக்காட்சிகளின் இணைய நேரலைக் காட்சிகள் நெஞ்சை அறுத்தது.

Advertisment

தேர்வு மய்யத்தில் இருந்து வெளியே வந்த பிள்ளை கேட்ட அந்தக் கேள்வி காலத்திற்கும் மனதை அறுத்துக் கொண்டே இருக்கும். "அப்பா எங்கே?".

யார் பதில் சொல்வது. யாருக்கு பதில் சொல்ல தைரியம் இருந்தது. பதில் சொல்ல வேண்டியவை கல் நெஞ்சுக்கார மத்திய அரசும், கையாலாகாத மாநில அரசும். அவை சார்பாக யாரும் இல்லை. சம்பந்தமில்லாதவர்கள் சுற்றி நிற்கிறார்கள்.

Advertisment

kasturi mahalingam

விளக்குடியில் கிளம்பும் போது, என்ன நினைத்துக் கொண்டு கிளம்பி இருப்பார்கள் அப்பாவும், மகனும். நூலகராக பணிபுரிந்த தந்தை கிருஷ்ணசாமிக்கும், மாற்றுத் திறனாளியான தாய் ஆசிரியை பாரதிமகாதேவிக்கும் இந்த நீட் தேர்வில் மகன் வெற்றிப் பெற்று தம் குடும்ப நிலையை உயர்த்துவான் என்று நினைப்பு இருந்திருக்கும்.

மகன் கஸ்தூரி மகாலிங்கம் தன் வாழ் நாள் கனவு நிறைவேறும், தான் மருத்துவப் படிப்பிற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவோம் என்ற எண்ணத்தோடு தான் கிளம்பியிருப்பான்.

எளிய குடும்பமாக இருந்தாலும், குழந்தைகளுக்கு நல்ல கல்வியை தர வேண்டும் என்ற எண்ணம் கொண்ட குடும்பம் கிருஷ்ணசாமி - பாரதிமகாதேவி தம்பதி குடும்பம். அதனால் தான் தனியார் பள்ளியில் மகனை படிக்க வைத்திருக்கிறார்கள்.

பள்ளி இறுதியில் நல்ல மதிப்பெண் எடுத்து, மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்து மருத்துவராவான் என்பது அவர்கள் கனவு.

modi-eps-ops

ஆனால் அவர்கள் கனவில் மண் அள்ளிப் போட்டது பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசு. மருத்துவ கல்விக்கு "நீட்" தேர்வை கொண்டு வந்து திணித்தார்கள், கடந்த ஆண்டு.

அதற்கு முந்தைய ஆண்டு வரை நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு இருந்தது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, அ.தி.மு.க அரசை ஆட்டுவிக்கும் பா.ஜ.க, நீட் தேர்வு விஷயத்தில் அ.தி.மு.க தலைமையிலான தமிழக அரசை பணிய வைத்தது.

ஆனால், கடைசி வரை நீட் தேர்விலிருந்து விலக்கு தருகிறோம் என்று தமிழகத்தை நம்ப வைத்து கழுத்தறுத்தது மத்திய அரசு.

Anita

நம்பி ஏமாந்தவர்களில் ஒருவர் அப்பாவி மாணவி அனிதா. மத்திய அரசோடு உச்சநீதிமன்றமும் ஏமாற்றிய நிலையில் தன் இன்னுயிரை மாய்த்துக் கொண்டார் அனிதா. நீட் தேர்விற்கு எதிராக அனிதா ஏற்றிய நெருப்பு அணையவில்லை.

இந்த ஆண்டு அடுத்த சோகம் நிகழ்ந்து விட்டது.

நீட் தேர்வு தான், வேறு வழியில்லை என்று தமிழக மாணவர்கள் நீட் தேர்விற்கு தங்களை தயார்படுத்திக் கொண்டார்கள். அவர்களுக்கு அடுத்த அடியை கொடுத்தது மத்திய அரசு.

தேர்வு எழுத, ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மய்யத்தை ஒதுக்கியது, தேர்வு நடத்தும் சி.பி.எஸ்.இ அமைப்பு.

காரணம் கேட்டால், தமிழகத்தில் எதிர்பார்த்ததை விட அதிக மாணவர்கள் விண்ணப்பித்து விட்டார்களாம். என்ன பைத்தியக்காரத்தனம் இது. இதை கூட எதிர்பார்க்க முடியவில்லை என்றால் எதற்கு அரசு, நிர்வாகம் நடத்துகிறார்கள்.

அப்படியே அதிக மாணவர்கள் விண்ணப்பித்ததாக இருக்கட்டும், அதற்கு ஏற்ப கூடுதல் மய்யங்கள் திறப்பதில் என்ன சிரமம் இருக்கப் போகிறது. கேரளாவில் கூடுதல் மய்யம் திறக்க முடியும் என்றால், தமிழகத்தில் திறக்க முடியாமல் தடுத்தது எது ?

இந்த எந்த கேள்விகளுக்கும் விடை இல்லாத நிலையில், மதுரை உயர்நீதிமன்ற கிளையை அணுகினார்கள். தமிழகத்திலேயே மய்யங்கள் திறந்து, தமிழக மாணவர்கள் இங்கேயே தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது உயர்நீதிமன்றம்.

அதை செய்து கொடுக்க வேண்டிய சி.பி.எஸ்.இ நிர்வாகம், தமிழக மாணவர்களின் அவலக் குரலுக்கு காது கொடுக்கவில்லை. தன் நிலையை உறுதிப்படுத்த உச்சநீதிமன்றத்தை அணுகியது சி.பி.எஸ்.சி.

cbse

அனிதாவின் எளியக் குரலுக்கே காது கொடுக்காத அமைப்பு தானே அந்த உச்சநீதிமன்றம். இப்போது மாத்திரம் தமிழ் பிள்ளைகளின் சிரமத்தை புரிந்துக் கொள்ள முன் வருமா?

தமிழ் மக்களின் குரலுக்கு இரங்க மனம் இல்லா உச்சநீதிமன்றம், சி.பி.எஸ்.இ நிலைப்பாடே சரி என்றது. சி.பி.எஸ்.இ அமைப்பின் அரக்கத்தனத்திற்கு வழிமொழிந்தது. தமிழ் நாட்டு மாணவர்கள் அடுத்த மாநிலத்திற்கு சென்று தான் தேர்வு எழுத வேண்டும் என்று தெரிவித்தது.

இருப்பதோ இடையில் இரண்டு நாட்கள் தான். பயண ஏற்பாட்டிற்கு பரிதவித்து போனார்கள் தமிழக மாணவர்களின் பெற்றோர்கள்.

தமிழக மாணவர்களுக்காக வாதிட்டிருக்க வேண்டிய தமிழக அரசு கள்ள மௌனம் காத்தது. மத்திய அரசின் நிலைப்பாட்டை ஆதரித்து தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், எரியும் நெருப்பில் எண்ணெயை உற்றினார்.

வெளி மாநிலத்தில் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு முன் பணம் ஆயிரம் ரூபாய் கொடுக்க உத்தரவிட்டு தன் 'கடமை'யை கடமைக்கு செய்து ஒதுங்கினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

ernakulam busstand.jpg

அய்யாயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள், வெளி மாநிலங்களுக்கு தேர்வு எழுத கிளம்பினார்கள். அவர்களில் மாணவர் கஸ்தூரி மகாலிங்கமும், அவரது தந்தை கிருஷ்ணசாமியும் அடங்குவர்.

மொழி தெரியாத ஊரான எர்ணாகுளம் சென்றடைந்தவர்கள், தனியார் விடுதியில் தங்கி இருக்கிறார்கள். விடுதி மேலாளர் ஓர் தமிழர் என்பது மாத்திரமே அவர்களுக்கு கிடைத்த ஓரே ஆறுதல்.

500 கிலோமீட்டர் தூரம், பத்து மணி நேரம் பயணித்து, மொழிபுரியா மாநிலத்திற்கு வந்ததிலேயே மகாலிங்கத்திற்கு மனதில் ஓர் அழுத்தம் வந்திருக்கும். அவர் தந்தை கிருஷ்ணசாமிக்கும் வந்திருக்கும்.

உடல் நலக்குறைவாக உணர்ந்த கிருஷ்ணசாமி, மகன் மகாலிங்கத்தை விடுதி மேலாளர் உடன் அனுப்பி வைத்து விட்டு ஓய்வெடுத்திருக்கிறார். மகனை மாத்திரமல்ல உலகையே பிரியப் போகிறோம் என கிருஷ்ணசாமி அறிந்திருக்க மாட்டார்.

கஸ்தூரி மகாலிங்கம் தேர்வறைக்கு சென்றார். பிள்ளை அங்கே தேர்வெழுதிக் கொண்டிருக்கும் போதே இங்கே தந்தையின் உயிர் பிரிந்து விட்டது. தேர்வு எழுதி முடித்து வெளிவந்த மகாலிங்கத்திற்கு தந்தை இறந்த செய்தி தெரியாது.

பள்ளிக்கு வெளியே கிருஷ்ணசாமி இறப்பு செய்தியை அறிந்த மற்ற தமிழகப் பெற்றோர்கள் அந்தப் பிள்ளையை காண, துளிர்க்கும் கண்ணீரோடு காத்திருந்திருக்கிறார்கள். செய்தியாளர்கள் கேமராவுடன் குவிந்து விட்டனர். போலீசாரின் கடும் பாதுகாப்பு.

இந்த பரபரப்புகளால் பள்ளியில் இருந்து மாணவர்கள் வெளியே வர அனுமதிக்கப்படவில்லை. கஸ்தூரி மகாலிங்கத்தை அடையாளம் கண்டு காவல்துறையினர் வெளியே அழைத்து வந்திருக்கின்றனர்.

ஒரு சோக திரைப்படத்தின் உச்சக்கட்ட அவலக் காட்சியை கூட அது போல் சிந்திக்க இயலாது.

வெளியில் வந்த மகாலிங்கம் கேட்ட கேள்வி, "அப்பா எங்கே?".

ernakulam busstand.jpg

சுற்றி இருந்த பெற்றோர்கள் அந்தக் கேள்வியால் கதறி துடித்திருந்திருக்கின்றனர். செய்தி புரியாமல் மலங்க, மலங்க விழிக்கும் பிள்ளை மகாலிங்கத்தின் முகத்தை நேரலையில் கண்ட எந்த தகப்பனையும், தாயையும் கதறடித்திருக்கும். அதற்கு அசங்காதவர்கள் மிருகங்களாகத் தான் இருக்க வேண்டும்.

மகாலிங்கத்தை அரவணைத்து வாகனத்தில் ஏற்றிய காவல்துறையினர் செய்தியை சொல்லவில்லை. யாருக்கு தான் அந்த செய்தியை சொல்ல தைரியம் வரும்.

அங்கிருந்து பயணித்து மருத்துவமனை பிணவறையை அடைந்து தந்தை முகத்தை காணும் வரை அந்தப் பிள்ளை என்ன, என்ன நினைத்திருப்பான். என்ன தான் காவல்துறையினராக இருந்தாலும் உடன் பயணித்த அதிகாரிகள் மனம் எவ்வளவு பதைத்திருக்கும்.

பிணவறையில் தந்தை முகத்தை பார்த்த பிள்ளை எப்படி துடித்திருப்பான். நினைக்கவே மனம் கனக்கிறது.

அந்தக் கேள்வி மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கும், " அப்பா எங்கே?".

neet

இந்த நிலைக்கு காரணமான மத்திய அரசின் பிரதமர், பொய் வாக்குறுதி கொடுத்த மத்திய அமைச்சர்கள், தமிழக முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் ஆகியோரின் காதுகள் அதிகாரப் பஞ்சால் அடைக்கப்பட்டிருக்கலாம். அதனால், அந்தக் கேள்வி இப்போது காதில் விழாமல் இருக்கலாம்.

அந்த அதிகாரப் "பஞ்சு" ஒரு நாள் அடிக்கும் காற்றில் பறந்து போகும். அப்போது காதை மாத்திரமல்ல, நெஞ்சையும் குடையும் அந்தக் கேள்வி.

உங்கள் இறுதி காலம் நிச்சயம் மகிழ்ச்சிகரமானதாக மாத்திரம் இருக்காது. உங்கள் பிள்ளைகள் அந்தக் கேள்வியை கூட கேட்க முடியாமல் தவித்துப் போவார்கள். அதேக் கேள்வி தான்....

"அப்பா எங்கே?"

sivashankar-dmk