Skip to main content

கோவை விபத்து என்ஐஏ தோல்விதான்; அமித்ஷாவுக்கு அண்ணாமலை எப்போது கண்டனம் தெரிவிப்பார்...? - எஸ்.பி. லட்சுமணன் கேள்வி

Published on 04/11/2022 | Edited on 04/11/2022

 

ி

 

கோவையில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் தமிழக அரசு முற்றிலும் தோல்வி அடைந்து விட்டது என்று பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து கூறி வருகிறாரே, அதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் என பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணனிடம் கேள்வி எழுப்பிய நிலையில் அவரின் அதிரடியான பதில் வருமாறு, " அதை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், அதனை முழுமையாக நிராகரிக்கவும் வேண்டாம். தமிழ்நாட்டில் ஒரு காரும், ஒரு சிலிண்டரும் கிடைக்காத ஒன்றல்ல. கோடிக்கணக்கான சிலிண்டர்களையும், காரையும் நாம் பார்க்கலாம். ஆனால் குற்றச்சாட்டுக்கு ஆளான அந்த இளைஞரின் வீட்டிலிருந்து ஒரு மூட்டையை அவர் எடுத்துச் செல்வது போல் ஒரு வீடியோவை அடுத்த நாளே காவல்துறையினர் வெளியிட்டனர். அதில் வெடிபொருட்கள் இருந்திருக்கலாம், அவர் வீட்டிலிருந்தும் வெடிபொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்திருந்தனர்.

 

மேலும் அந்த வெடி பொருட்களை உருவாக்கக் கூடிய பொட்டாசியம் நைட்ரேட் உள்ளிட்டவற்றை அவர் சேகரிக்கும் வரையில் காவல்துறைக்குத் தெரியவில்லை என்றால் அதனை நாம் உளவுத்துறையின் தோல்வி என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். காவல்துறைக்கு எல்லாமே தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் என்ஐஏ கோவையை மையமாக வைத்துக் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தீவிரமாகச் சோதனை செய்து வருகிறார்கள். அதை இவர்கள் சரியாகக் கவனிக்கவில்லை என்றால் உளவுத்துறையின் தோல்வி என்றுதான் சொல்லவேண்டும். மொத்தமாக அப்படிச் சொல்லக்கூட முடியாது. உளவுத்துறையில் உள்ள கியூ பிரிவின் தோல்வி என்றுதான் சொல்ல வேண்டும்.

 

இந்த மாநில அரசின் உளவுத்துறைக்கு இருக்கின்ற அதே பொறுப்பு மத்திய அரசின் குறிப்பாக அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற உளவுத்துறைக்கும் இருக்கிறது. இதே முபினை 2019ம் ஆண்டு என்ஐஏ விசாரித்திருக்கிறார்கள். அவரிடம் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். கூடுதல் ஆதாரம் வேண்டியோ அல்லது விட்டுப் பிடிக்கலாம் என்ற காரணத்தாலோ அவரை விட்டுவிடுகிறார்கள். அப்படிக் கண்காணிக்க வேண்டிய நபரைக் கண்காணிக்கத் தவறியது என்ஐஏ தான். இதற்கு அண்ணாமலை மன்னிப்பு கேட்பாரா? அமித்ஷாவுக்குக் கண்டனம் தெரிவிப்பாரா? இதை அமித்ஷாவின் தோல்வி என்று அண்ணாமலை சொல்வாரா? 

 

சம்பவம் நடந்த அன்றே எப்படி என்ஐஏ விசாரணைக்கு உத்தரவிட முடியும். இரண்டு நாள் விசாரித்து அதில் உள்ள பின்புலத்தை ஆராய்ந்து தற்போது என்ஐஏ விசாரணைக்கு முதல்வர் மாற்றியுள்ளார். நீங்கள் ஏன் உடனே செய்யவில்லை, நீங்கள் ஆதாரத்தை வெளியிடுகிறீர்களா இல்லை நான் வெளியிடட்டுமா என்று அண்ணாமலை கேட்கிறார். இப்போது வழக்கு என்ஐஏவுக்கு போய்விட்டது. இப்போது தன்னிடம் உள்ள அனைத்து ஆதாரங்களையும் வெளியிட வேண்டியது தானே? இப்போது அண்ணாமலை தினமும் பிரஸ்மீட் வைப்பாரா? வைக்க வேண்டும். அப்படி அவர் செய்யவில்லை என்றால் அவர் நேர்மையற்றவர் என்று நீங்கள் உறுதியாகக் கூறலாம். 

 

மாநில அரசு விசாரணை செய்யும்போது நீங்கள் உள்ளே புகுந்து சேட்டை செய்வீர்கள். விசாரணை நடந்துகொண்டு இருக்கும்போதே ஒவ்வொரு ஆதாரமாக வெளியே சொல்வீர்கள். என்ஐஏ கைக்கு வழக்குப் போன உடனே அவர் வாயை மூடிக் கொள்வாரா? அவர் என்ன செய்கிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அண்ணாமலையைப் பத்திரிகையாளர்கள் கண்காணிக்க வேண்டும். ஆனால் அதைச் செய்ய யாரும் விரும்பவில்லை. ஏனென்றால் விசாரணை அமைப்பின் உள்ளே புகுந்து ஆட்டையைக் கலைக்கும் வேலைகளை யாரும் செய்யக் கூடாது" என்றார்.