Skip to main content

பெண்களை அலறவைக்கும் வாட்ஸ் அப் குருப்! பதைபதைக்க வைக்கும் வாக்குமூலங்கள்!

 

WhatsApp group that makes women scream!

 

சில கேரள வாட்ஸ் அப் குரூப்களில் இளம் பெண்கள் மற்றும் குடும்பப் பெண்களின் தனிப்பட்ட படங்களும், வீடியோக்களும் உலா வந்து, அம்மாநிலத்தையே அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியிருக்கிறது. அதில் கேரளப் பெண்கள் மட்டுமல்ல; தமிழகத்தைச் சேர்ந்த வசதியான வி.ஐ.பி குடும்பத்தைச் சேர்ந்த பெண்களும் இருக்கிறார்கள் என்பது கூடுதல் ஷாக்.


சமீபகாலமாக ஏடாகூட வாட்ஸ்-ஆப் குரூப்களை ட்ரேஸ் செய்துவரும் கேரள சைபர் க்ரைம் டீம், அந்த குரூப்களின் அட்மின்கள் பலரையும் கைது செய்திருக்கிறது. இது குறித்து விசாரணை டீமைச் சேர்ந்த அதிகாரி ஒருவரிடம் நாம் விசாரித்தபோது, "இங்கே இருக்கும் கண்ணூர் மாவட்டம் காஞ்சன்கோடு காவல்நிலையத்தில் ஷிபுகுமார் என்பவர் ஒரு புகாரோடு வந்தார். அவரது மருமகள் பாத்ரூமில் குளிக்கும் வீடியோ காட்சிகள், ஒரு வாட்ஸ்-ஆப் குரூப்பில் உலாவருவதாக அவர் பதறினார். இது சம்பந்தமாக விசாரணை நடத்தியபோது, அந்த பெண் தனக்கு தெரியாமல் யாரோ வீடியோ எடுத்து இருக்கிறார்கள் என்றாள். அவளின் பேச்சு சந்தேகத்தை ஏற்படுத்தவே, அந்த புகார் எங்கள் சைபர் க்ரைமிடம் வந்தது. உடனே, அந்தப் பெண்ணிடம் கிடுக்கிப் பிடி விசாரணை மேற்கொண்ட போது, அந்தப் பெண்ணே, தான் குளிப்பதை வீடியோ எடுத்து, அதைத் தனது தோழிக்கு அனுப்பியதை ஒப்புக்கொண்டாள். அந்த தோழியோ, தான் அட்மினாக இருக்கும் ஒரு வாட்ஸ்-ஆப் குரூப்பில், அந்த வீடியோவை அப்லோட் செய்திருக்கிறாள்.


அந்த வாட்ஸ்-ஆப் குரூப்பில் 256 பேர் இருக்கிறார்கள். உடனே அந்த 26 வயதான தோழியைப் பிடித்து விசாரித்தபோது, அவள் இதேபோல் 4 வாட்ஸ்-ஆப் குரூப்பில் தொடர்பு வைத்திருப்பதும், அவளை அவளது ஆண் நண்பர் ஒருவர் தான், இந்த மாதிரியான வாட்ஸ்-ஆப் குரூப்பில் சேர்த்துவிட்டார் என்றும் தெரியவந்தது. மேலும், அந்தப் பெண், தனக்கு நெருங்கிய தோழிகளையும் உறவுக்காரப் பெண்களையும் கூட ஒவ்வொரு குரூப்பிலும் சேர்த்திருப்பதும் தெரியவந்தது.


இது ஒரு பெரிய நெட்வொர்க் என்பதால், கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களிலும் ரகசிய விசாரணைக்கு டி.ஜி.பி. உத்தரவிட்டார். ஒவ்வொரு மாவட்டத்திலும் பல பெயர்களில் நூற்றுக்கணக்கான இதுபோன்ற வாட்ஸ் அப் குரூப் செயல்படுவதைக் கண்டுபிடித்திருக்கிறோம். இளைஞர்கள், இளம் பெண்கள், தொடங்கி மாணவ மாணவிகள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், ஐ.டி. நிறுவன ஊழியர்கள் என்று சுமார் 25 ஆயிரம் பேர்வரை, ஒவ்வொரு மாவட்டத்திலும் இப்படிப்பட்ட குரூப்புகளில் உள்ளனர். அதேபோல் குரூப்புக்கு சுமார் 10 அட்மின்கள் இருக்கிறார்கள். இந்த குரூப்புகள் கேரளாவில் மட்டுமல்ல; எல்லா மாநிலங்களிலும் ரகசியமாக செயல்படுகின்றன. இதன் மூலம் ஏராளமான இளம் பெண்கள் சீரழிந்துகொண்டிருக்கிறார்கள். இந்த குரூப்பில் சேர்ந்தவர்கள் அதிலிருந்து வெளியே வரமாட்டார்கள். ஏனெனில் அது ஒரு போதை. கேரளாவில் திருவனந்தபுரம், எர்ணாகுளம், ஆலப் புழா, திருச்சூர், கண்ணூர், காசர்கோடு, மலப்புரம் என்று பல மாவட்டங்களிலும் இப்படிப்பட்ட குரூப்புகள் வேகமாக வளருகின்றன''’என்றார் கவலையாக. 

 

இந்த நிலையில் எர்ணாகுளத்தைச் சேர்ந்த குரூப் அட்மின்கள் 22 பேரை அங்கு சைபர் க்ரைம் போலீசார் பிடித்து விசாரித்தனர். பிடிபட்ட நபர்களில் ஒருவர் கொடுத்த வாக்குமூலம் இது, "ஒவ்வொரு குரூப்பிலும் தினமும் சுமார் 250-க்கும் மேற்பட்ட வீடியோக்களை பகிர்ந்து கொள்கிறோம். இந்த குரூப்களில் காதலனும், காதலியும் தனிமையில் இருப்பது போன்ற வீடியோக்களை எங்களுக்கு அனுப்புவார்கள். குரூப்பில் இருப்பவர்கள் வருகிற வீடியோக்களை மட்டும் பார்த்துவிட்டுப் போகக்கூடாது. அவர்களும் எதாவது வீடியோக்கள், புகைப்படங்களைப் போட்டுக்கொண்டே இருக்கவேண்டும். இல்லையென்றால் அவர்கள் வெளியே தள்ளப்படுவார்கள். அதனால் இந்த போதை உலகத்திலிருந்து, எளிதில் வெளியே வர முடியாததால் பலரும் இப்படி வீடியோ எடுத்து அனுப்புகிறார்கள்'' என்று அந்த அதிர்ச்சி வாக்குமூலம் தொடர்ந்திருக்கிறது.


நம்மிடம் பேசிய ஒரு காவல்துறை அதிகாரி, "எங்களின் விசாரணையில், கருநாகப்பள்ளியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், தனது அண்ணன் மனைவியின் வீடியோ ஒன்றை குரூப்பில் போட்டிருக்கிறாளாம். அந்தளவுக்கு அந்த குரூப் மீது போதை. இதே போல் திருப்புனித்துறையைச் சேர்ந்த ஒருவன் தனது தங்கையின் படத்தை குரூப்பில் போட்டிருக்கிறான். இதேபோல் ஆலுவா பகுதியைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவரான மாமியாரும் மருமகனும் ஒரே குரூப்பில் இருக்கிறார்கள். அவர்கள் ரெண்டுபேரும் தனிமையில் இருக்கு வீடியோவை எடுத்து அந்த குரூப்பில் போட்டிருக்கிறார்கள். அங்கமாலியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் திருமணத்துக்கு முன்பே இந்த குரூப்பில் இருக்கிறார். கடந்த மாதம் அவருக்குத் திருமணம் நடந்தது. அவர் மனைவிக்குத் தெரியாமல் அவரின் வீடியோவை, அவர்களின் இருவருடைய முகத்தையும் மறைத்து, இந்த வாட்ஸ் அப் குரூப்பில் போட்டுவிட்டார். இந்த விசயம் வெளியே தெரிந்ததால், மனைவி தற்கொலைக்கு முயன்றிருக்கிறாள். அதன்பிறகு அங்கமாலி காவல் நிலையத்தில் மனைவி புகார் கொடுக்க, கணவன் கைது செய்யப்பட்டான்''என்று ஒரு நீண்ட பட்டியல் போட்டார். 

 

மேலும், கேரளாவில் உள்ளவர்கள் மட்டுமல்ல இந்த குரூப்புகளில் தமிழகத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், மாணவிகள் என ஏராளமானோர் இருக்கிறார்கள் அவர்களும் இந்த மாதிரி தாங்களே ஷூட் செய்த ஏராளமான வீடியோக்களைப் போடுகிறார்கள். இந்த குரூப்பில் இருக்கும் நம்பர்களை சோதனை செய்து பார்த்ததில் அரசியல் பிரமுகர்களின் வாரிசுகளும் வி.ஐ.பி. அந்தஸ்தில் இருப்பவர்களின் வாரிசுகளும், குடும்பப் பெண்களும் அதிகம்பேர் உள்ளது தெரியவந்தது. மாணவர்களைத் திருத்த வேண்டிய ஆசிரியர்களும் மாணவர்களும் கூட ஒரே குரூப்பில் இருக்கிறார்கள். மேலும் இந்த குரூப்களில் வரும் வீடியோக்களை இணைய தளங்களுக்கு விற்பனை செய்து, குரூப் அட்மின்கள் பணம் பார்ப்பதும் உண்டு. கரோனா காலகட்டத்தில்தான் இந்த மாதிரி குரூப்புகள் அதிகம் முளைத்தன. தற்போது அது வேகமாக பரவிவிட்டது. இப்போது பல குரூப்புகள் முடக்கப்பட்டுள்ளன” என்றார் உறுதியான குரலில்.

 

WhatsApp group that makes women scream!
டாக்டர் சோனியா ஜோர்ஜி

 

இது குறித்து சமூக ஆர்வலர் டாக்டர் சோனியா ஜோர்ஜியிடம் கேட்டபோது, "வாட்ஸ் அப் என்பது செய்திகளையும் தகவல்களையும் நல்ல கருத்துகளையும் பரிமாற, அறிந்து கொள்ள கிடைத்த நவீன வசதியாகும். நல்ல விசயத்துக்குப் பயன்படுத்த வேண்டிய இதை, சமூகச் சீரழிவுக்குப் பயன்படுத்துவது என்பது வேதனை. பிள்ளைகள் தனியாக இருந்து செல்போனைக் கிளறும்போது, பெற்றோர்கள் அதைக் கண்காணிக்க வேண்டும். இது ஒரு தொற்று நோய் போல் பரவிவருகிறது. சைபர் க்ரைம், குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும்''” என்கிறார் அக்கறையாய்.


ஏற்கனவே கேரளாவில் "கப்பிள்ஸ் மீட்' என்ற பெயரில் மனைவிகளை கைமாற்றும் கணவன்மார்களின் கூத்தடிப்புகள் பற்றிய செய்திகள் அதிரவைத்த நிலையில், தற்போது சமூகத்தைச் சீரழிக்கும் வாட்ஸ்- ஆப் குரூப்புகளும் மிரட்டிவருகின்றன.


இவற்றுக்கெல்லாம் தீர்வை யார் ஏற்படுத்துவது?