Skip to main content

பயங்கரவாதி படுகொலையும்; இந்திய - கனடா பிரச்சனையும்

Published on 22/09/2023 | Edited on 22/09/2023

 

What was the problem between India and Canada

 

காலிஸ்தான் பயங்கரவாதிகள் தங்களுக்கென்று ஒரு தனி நாடு வேண்டும் என்று பல வருடங்களாக வலியுறுத்தி வருகின்றனர். இதில் இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் வாழும் காலிஸ்தான் பயங்கரவாதிகள் காலிஸ்தானுக்கான கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். இதில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் தலைமையில் காலிஸ்தான் கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஹர்தீப் சிங் நிஜ்ஜார் இருந்த 'நீதிக்கான சீக்கியர்' குழுவை, பிரிவினை ஏற்படுத்துவதன் காரணமாக UAPA சட்டத்தின் கீழ் 2019 ஆம் ஆண்டு மத்திய அரசு தடை செய்தது. மேலும், 2020 ஆம் ஆண்டில் இந்திய அரசு, காலிஸ்தான் குழுக்களுடன் தொடர்புடைய 9 பேரை பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது.  

 

காலிஸ்தான் தனி நாடு கோரும் பஞ்சாப்பின் பிரிவினைவாத ஆதரவாளர்களில் முக்கியமானவர் தான் இந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவர் 1997ஆம் ஆண்டிலேயே கனடாவிற்கு இடம்பெயர்ந்து விட்டார். இவர் கனடாவில் இருந்தபடியே, காலிஸ்தான் டைகர் போர்ஸ் தலைவராகவும், சிக்ஸ் பார் ஜஸ்டிஸ் அமைப்பின் கனடா பிரிவின் தலைவராகவும் இருந்துள்ளார். இந்த இரண்டு அமைப்புகளுமே, பிரிவினை தாக்குதலை ஏற்படுத்துவதன் காரணமாக இந்திய அரசால் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கம் ஆகும். 

 

கடந்த 2010ஆம் ஆண்டு பஞ்சாப் பாட்டியாலாவின் சத்ய நாராயண் கோவிலில் பயங்கர குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்தது. இந்த சம்பவத்தில் நிஜ்ஜாருக்கு தொடர்பு இருப்பதாக பஞ்சாப் காவல்துறையினர், நிஜ்ஜார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அதனையடுத்து 2016ஆம் ஆண்டு ஜலந்தரைச் சேர்ந்த மூத்த ஆர்.எஸ்.எஸ்.தலைவர் பிரிகேடியர் ஜகதீஷ் கக்னேஜா கொல்லப்பட்ட வழக்கில் நிஜ்ஜாருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.  மேலும், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மீது 2021ஆம் ஆண்டு இந்து மதகுரு ஒருவரை தாக்கியதாக வழக்கு ஒன்றும் உள்ளது. இந்த வழக்கில், நிஜ்ஜார் மற்றும் மூவருக்கும் தொடர்பு உள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பின் குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிக்கை வெளியிட்ட மூன்று வாரத்தில், அதாவது கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட நிஜ்ஜார் பற்றி தகவல் தெரிவிப்பவர்க்கு ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு அமைப்பு தரப்பில் அறிவிக்கப்பட்டது.

 

எனினும், இந்தியாவுக்கு எதிரான ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் நடவடிக்கைகள் கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் தொடர்ந்து வருவதாகவும் கூறப்பட்டது. அதில் கனடா நாட்டில் உள்ள இந்து கோவில்கள் மீது அதிக தாக்குதல் நடத்தப்பட்டதற்கு காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு உள்ளதாக கூறப்பட்டது.. கனடாவில் உள்ள காலிஸ்தான் டைகர் படைப்பிரிவின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜார் மற்றும் காலிஸ்தான் பயங்கரவாதிகளின் செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் கனடா அரசிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. 

 

அதில் தாங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக கனடா அரசால் தெரிவிக்கப்பட்ட போதிலும், அங்கு காலிஸ்தான் பயங்கரவாதிகளின் செயல்கள் அதிகரித்து கொண்டு தான் இருந்தது. இதையடுத்து, பிரிட்டன் தலைநகரில் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தை காலிஸ்தான் அமைப்பினர் சூறையாடி, இந்திய கொடியை அகற்றி காலிஸ்தான் கொடியை ஏற்றினர். இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், காலிஸ்தானின் இந்த செயலுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தங்களது கண்டனத்தை தெரிவித்தது. 

 

இந்த நிலையில் தான், ஹர்தீப் சிங் கனடாவின் சுரே நகரின் குருத்துவாரா அருகில் உள்ள அடையாளம் தெரியாத 2 மர்ம நபர்களால் கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார்.  ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் படுகொலைக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை காலிஸ்தான் ஆதரவாளர்கள் நடத்தி வந்தனர். அதன் பிறகு, ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் படுகொலைக்கு பின் இந்திய தூதரக அமைப்பிற்கு தொடர்பு இருப்பதாக காலிஸ்தான் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டி வந்தனர். அதன் அடிப்படையில், இந்திய தூதரகத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் எதிரான சுவரொட்டிகளை ஒட்டி ஜூலை மாதம் காலிஸ்தான் ஆதரவாளர்கள் பேரணி நடத்தப்போவதாகவும் அறிவித்தனர். மேலும் அந்த பேரணியில், சீக்கிய மெய்க்காப்பாளர்களால் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டதை சித்திரிக்கும் வகையில் புகைப்படத்தை வைத்து காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். 

 

காலிஸ்தான் இந்த செயலுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது கண்டனத்தை தெரிவித்திருந்தது. இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறும் போது, “காலிஸ்தான் ஆதரவாளர்கள் தீவிரவாத கொள்கைகளைக் கொண்டிருப்பதால், அவர்களின் செயல்களுக்கு இடம் அளிப்பது கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு நல்லதல்ல” என்று தெரிவித்திருந்தார். மேலும், கனடாவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது குறித்து பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனடா பிரதமருக்கு மத்திய அரசு தெரிவித்திருந்தது. 

 

அதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் கனடாவில் உள்ள இந்து கோவிலான லட்சுமி நாராயண கோவிலில் உள்ள பொருளை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சேதப்படுத்தி இருந்தனர். மேலும், ஹர்தீப் சிங் படுகொலைக்கு  இந்தியாவின் பங்கு இருப்பதாகவும், அதுகுறித்து விசாரிக்க வேண்டும் எனவும் சுவரொட்டிகளை கோவில் நுழைவு வாயில் மற்றும் கோவில் சுவற்றில் ஒட்டி இருந்தனர். இது தொடர்பான வீடியோ அப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இதற்கு கனடாவில் உள்ள இந்திய தூதரகம், காலிஸ்தான் ஆதரவாளர்கள் செய்த இந்த செயல் கனடாவில் உள்ள இந்திய மக்களின் மனதை புண்படுத்தியுள்ளது என்று தனது கவலையை தெரிவித்திருந்தது. 

 

இந்த நிலையில் தான் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலைக்கு இந்திய அரசின் ஏஜெண்டுகளுக்கு தொடர்பு உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, “இந்திய அரசாங்க ஏஜெண்டுகளுக்கும் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் படுகொலைக்கும் தொடர்பு இருப்பதற்கான நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகள் உள்ளன. கனடாவில் குடிமகன் ஒருவர் படுகொலைக்கு அந்நியர் ஒருவரின் அல்லது வெளிநாட்டு அரசின் தொடர்பு இருப்பது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால், சில இந்தோ-கனடியர்கள் கோபத்திலும் அச்சத்திலும் உள்ளனர். இந்த விவகாரத்தில், உண்மை விவரங்கள் தெரிய கனடாவுக்கு இந்திய அரசு ஒத்துழைப்பு தர வேண்டும்” என்று கூறியிருந்தார். 

 

What was the problem between India and Canada

 

அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய கனடா நாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் மெலானி ஜூலி, “ தங்கள் நாட்டின் குடியுரிமை பெற்ற ஹர்தீப் சிங் நிஜாரின் கொலைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் இந்தியாவின் மூத்த தூதரக அதிகாரியை நாட்டில் இருந்து வெளியேற்றியுள்ளோம். அவர் இந்தியாவின் வெளிநாடு புலனாய்வு அமைப்பின் ஆராய்ச்சி மற்றும் ஆய்வு பிரிவின் (RAW) தலைவராக செயல்பட்டவர்” என்று கூறினார்.

 

இதனிடையே, ஹர்தீப் சிங் நிஜாரின் கொலைக்கு இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா அளித்துள்ள புகாருக்கு இந்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், இது அடிப்படை ஆதாரமற்ற அபத்தமான குற்றச்சாட்டு என இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. கனடாவில் இந்தியாவுக்கு எதிரான தேசத்துரோக செயல்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. அதைத் தொடர்ந்து, இந்தியாவின் மூத்த தூதரக அதிகாரியை கனடா அரசு வெளியேற்றியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியாவிற்கான கனடா நாட்டு தூதரை நேரில் அழைத்து, இந்தியாவை விட்டு ஐந்து நாட்களுக்குள் வெளியேறுமாறு வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆணை பிறப்பித்தது. 

 

What was the problem between India and Canada

 

இதற்கிடையே, காலிஸ்தான் தலைவர் கொலையில் இந்தியா மீது கனடா அரசு குற்றம் சாட்டியதற்கு அமெரிக்கா கவலை தெரிவித்தது. இதனையடுத்து, கனடாவில் வாழும் இந்தியர்கள், மாணவர்கள் உட்பட அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “ கனடாவில் உள்ள அனைத்து இந்தியர்கள் மற்றும் அங்கு செல்லவிருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கனடாவில் அச்சுறுத்தல் உள்ள பகுதிகளுக்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்” என்று தெரிவித்திருந்தது. 

 

இந்த நிலையில், கனடாவின் வின்னிபக் என்ற பகுதியில், மற்றொறு காலிஸ்தான் பயங்கரவாதி இன்று சுட்டுக்கொல்லப்பட்டார். சுக்தூல் சிங் என்ற அந்த காலிஸ்தான் பயங்கரவாதி, இரண்டு கும்பல்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டார் என்று கூறப்படுகிறது. இதனிடையே, கனடா நாட்டுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், விசா வழங்கும் சேவையை இந்தியா நிறுத்தி உள்ளது. இதன்படி, கனடாவில் இருந்து இந்தியா வருவதற்கான ‘விசா’ சேவைகளை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்குமாறு விசா சேவை மையங்களிடம் இந்திய அரசு தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்