Skip to main content

“பிசிசிஐ தலைவராக அமித்ஷா மகனுக்கு என்ன தகுதி இருக்கு? கிரிக்கெட் எப்படி விளையாடுவாங்கன்னு அவருக்குத் தெரியுமா?” - காந்தராஜ் கேள்வி

Published on 23/12/2022 | Edited on 23/12/2022

 

பரக

 

தமிழக அமைச்சரானதும் உதயநிதி தொடர்பான செய்திகள் கடந்த சில வாரங்களாக ஊடகங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் அவர் அமைச்சராவதற்கு என்ன தகுதி இருக்கு என்று அதிமுகவின் தலைவர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். குறிப்பாக எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை உள்ளிட்டவர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள். இந்நிலையில் இதுதொடர்பாக அரசியல் விமர்சகர் கந்தராஜ் அவர்களிடம் கேட்டபோது, " இந்தியாவில் எந்த கட்சியில் வாரிசு அரசியல் இல்லை என்று சொல்லச் சொல்லுங்கள். பாஜகவில் வாரிசு அரசியல் இல்லை என்று அண்ணாமலை சொல்வாரா? இவர் வேண்டுமானால் முதல்முறையாக அரசியலுக்கு வந்திருக்கலாம். ஆனால் இவரைப் போல் பல பேர் பாஜகவில் வாரிசு என்ற அடிப்படையில் மட்டுமே பதவி பெற்றுள்ளார்கள்.

 

உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மிக முக்கியப் பதவியில் இருக்கிறார். இது எந்த அரசியல் என்று பாஜகவினர் சொல்ல வேண்டும். அவருக்கும் கிரிக்கெட்டுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? அமித்ஷா மகன் என்ன கிரிக்கெட் பிளேயரா? ஆல் ரவுண்டரா? இல்லை இந்திய அணியின் கேப்டனாக இருந்துள்ளாரா? குறைந்தபட்சம் ரஞ்சி டிராபி விளையாடி உள்ளாரா? எத்தனை ரன் அடித்தார், எத்தனை விக்கெட் எடுத்தார் என்பதை அவர் கூறுவாரா? கிரிக்கெட் என்றால் என்னவென்றே தெரியாத ஒருவர் பல்லாயிரம் கோடி புழங்குகின்ற ஒரு விளையாட்டின் தலைமை பொறுப்புக்கு வருவது வாரிசு அரசியலுக்குக் கீழ் வராதா என்பதை அண்ணாமலை அமித்ஷாவிடம் கேட்டுச் சொல்ல வேண்டும். 

 

எத்தனை மத்திய அமைச்சர்களின் உறவினர்கள் சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்ற பட்டியலை வெளியிட்டால் அதற்கு அண்ணாமலை பதில் சொல்வாரா? இவர்கள் என்னவோ அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை என்ற கொள்கைகளை விடாப்பிடியாகக் கடைப்பிடிப்பவர்கள் போல வாயில் என்ன வருகிறதோ அதைப் பேச வேண்டும் என்ற கொள்கையை விடாப்பிடியாக வைத்துள்ளனர். தன் மீது இருக்கிற எந்த ஒரு தவற்றைப் பற்றியும் யாரும் பேசக்கூடாது, ஆனால் தான் மட்டும் அனைவர் பற்றியும் பேசுவேன் என்ற மனநிலையில்தான் அவர்கள் தொடர்ந்து இருக்கிறார்கள். எனவே அடுத்தவர்களைப் பற்றியோ இல்லை அடுத்த கட்சியில் ஏன் இவர்களை அமைச்சர் ஆக்குறீங்க என்றோ கேட்கிற தார்மீக தகுதி இவர்கள் யாருக்கும் இல்லை"என்றார்.


 

 

Next Story

'எல்லாம் சமஸ்கிருதமா?'-அமித்ஷாவுக்கு பறந்த கடிதம்

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
'Everything is Sanskrit?'- Tamil Nadu Chief Minister's letter to Amit Shah

புதிதாக நிறைவேற்றப்பட்ட மூன்று குற்றவியல் நடைமுறை சட்டங்கள் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக முதல்வர் எழுதியுள்ள அந்த கடிதத்தில் மூன்று குற்றவியல் சட்டங்களுக்கும் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் அதில், 'மத்திய அரசின் மூன்று சட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்க தங்களுக்கு (மாநிலங்களுக்கு) அவகாசம் தரப்படவில்லை. இந்த மூன்று சட்டங்களுக்கும் எந்த ஆலோசனையும் இல்லாமல் அவசரகதியில் நிறைவேற்றப்பட்டுள்ளன. நிறைவேற்றப்பட்ட புதிய குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் மாநில அரசுகளுக்கு சில சிக்கல்கள் உள்ளது.

எதிர்க்கட்சிகளின் பங்கேற்பு இல்லாமலேயே புதிய மூன்று குற்றவியல் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா என சட்டங்களின் பெயர்கள் அனைத்தும் சமஸ்கிருதத்தில் பெயரிடப்பட்டுள்ளன. சட்டங்கள் ஆங்கிலத்தில் இருப்பது கட்டாயம். சட்டங்களில் சில அடிப்படை பிழைகள், முரண்பாடுகள் உள்ளது. எனவே புதிய குற்றவியல் நடைமுறை சட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும்' என தமிழக முதல்வர் கடிதம் வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்கள் ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் தமிழக முதல்வரின் இந்த கடிதம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.  

Next Story

'முன் மொழிந்த ராஜ்நாத் சிங்; வழி மொழிந்த அமித்ஷா' - கைதட்டி வரவேற்ற ஓபிஎஸ்

Published on 07/06/2024 | Edited on 07/06/2024
nda alliance MP meeting in delhi

ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது.

ஆட்சி அமைக்க தனிப்பெம்ருபான்மை இல்லாத பா.ஜ.கவுக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடுவும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நிதிஷ்குமாரும் ஆதரவு தருவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளார்.

இந்நிலையில் பாஜக கூட்டணி எம்.பிக்கள் கூட்டம் பழைய நாடாளுமன்றத்தின் வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மோடி வந்திருந்த பொழுது எம்பிக்கள் அனைவரும் 'மோடி... மோடி...' என முழுக்கமிட்டு அவரை வரவேற்றனர். தொடர்ந்து பேசிய பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, 'தனது வாழ்க்கையை நாட்டுக்காகவே அர்ப்பணித்துள்ளார் மோடி. அனைவருக்கும் அனைத்தும் என்ற நோக்கத்துடன் பாஜக கூட்டணி அரசு செயல்படும். கடந்த 10 ஆண்டுகளில் யாரும் நினைத்துப் பார்க்காத வளர்ச்சியை மோடி வழங்கி உள்ளார்' என்றார்.

அதனைத் தொடர்ந்து பேசிய ராஜ்நாத் சிங், ''இந்தக் கூட்டணி நிபந்தனையில் உருவான கூட்டணி இல்லை அர்ப்பணிப்பில் உருவான கூட்டணி. என்.டி.ஏ கூட்டணி அரசுக்கு எந்தவித அழுத்தமும் கிடையாது. அறுபது ஆண்டுகள் கழித்து தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்று புதிய சாதனை படைத்துள்ளோம். மோடியை மீண்டும் பிரதமர் ஆக்குவதற்கு நான் முன்மொழிகிறேன்'' என்றார்.

மோடியின் பெயரை உச்சரித்ததும் தேசிய ஜனநாயகக்  கூட்டணியின் எம்பிக்கள் 'மோடி... மோடி..' என முழக்கமிட்டனர். பின்னர் பேசிய அமித்ஷா மோடியை மீண்டும் பிரதமர் ஆக்குவதற்கு வழிமொழிந்ததோடு நாடாளுமன்றக் குழு தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து பேசிய சந்திரபாபு நாயுடு, 'பிரதமர் மோடியின் பத்தாண்டுகள் ஆட்சியில் மகத்தான வளர்ச்சியை நாடு அடைந்துள்ளது. உலக அளவில் சிறந்த தலைவர் பிரதமர் மோடி' எனப் புகழாரம் சூட்டி பேசினார்.

தமிழகத்தில் இருந்து என்.டி.ஏ கூட்டணியில் உள்ள ஓ.பன்னீர்செல்வம், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனும் கலந்து கொண்டு எழுந்து நின்று கைதட்டி உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.