Skip to main content

'சேலத்தில் நடந்தது இன்னொரு சாத்தான்குளம் சம்பவமே'-நடந்ததை விளக்கும் விசிக மாநில செயலாளர்!

 

'What happened in Salem is another Satankulam incident' - VCK Secretary of State special interview!

 

சேலம் மாவட்டம், கருப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 45). மாற்றுத்திறனாளியான இவரை திருட்டு வழக்கில் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் போலீசார் கடந்த 11ஆம் தேதி கைது செய்து, அந்த மாவட்ட கிளை சிறையில் அடைத்தனர். இந்நிலையில், 12ஆம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட அவர் அன்று இரவே உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து பிரபாகரன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். 

 

பிரபாகரனுக்கு ஆதரவாக அவரது குடும்பத்தாருடன் விசிகவின் மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு செயலாளர் சௌ.பாவேந்தன் மற்றும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் அரசு மருத்துவமனைக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரைப்படி திருச்செங்கோடு தாலுகா முதல்நிலை காவலர் குழந்தைவேல், புதுச்சத்திரம் சப்-இன்ஸ்பெக்டர் பூங்கொடி, சேந்தமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் ஆகியோரை சஸ்பெண்டு செய்து மேற்கு சரக ஐ.ஜி. பொறுப்பில் உள்ள சேலம் மாநகர போலீஸ் கமி‌ஷனர் நஜ்மல் கோடா உத்தரவிட்டார்.இதையடுத்து சேலம் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ள பிரபாகரனின் உடலை பெற்றுக்கொள்ள அவரது உறவினர்கள் சம்மதித்துள்ளனர். 

 

'What happened in Salem is another Satankulam incident' - VCK Secretary of State special interview!

 

இந்த சம்பவம் குறித்து பிரபாகரனின் குடும்பத்தாருடன் போராட்டத்தில் ஈடுபட்ட விசிகவின் மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு செயலாளர் சௌ.பாவேந்தன் கூறுகையில், ''பிரபாகரன் வயது சுமார் 45. தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி. அவருடைய மனைவி அம்சலா. அவரும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பிரபாகரனின் மனைவியின் அக்கா வீடு தர்மபுரி மாவட்டம் அரூர் பக்கத்தில் உள்ளது. அவரது அக்கா வீட்டுக்காரர் நடராஜன் மேல நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கு பதியப்பட்டிருந்தது. திருட்டு வழக்கு பதியப்பட்ட அவரை பிடிக்க முடியாததால் போலீசார் சேலம் மாவட்டம், ஓமலூர் தாலுகா, கருப்பூர் ஆதிதிராவிடர் தெருவில் இருக்கும் பிரபாகரனை (மாற்றுத்திறனாளி. போலியோ வந்து இரண்டு கால்களையும் இழந்தவர் ) திடீரென 4 போலீசார் அடித்திருக்கிறார்கள். அவர்கள் போலீஸ் என்று அவர்களுக்கே தெரியாது. 'ஏன் அடிக்கறீங்க' என கேட்ட பொழுது, அவரது மனைவியையும் பெண் போலீசார் தள்ளிவிட்டு தாக்கியுள்ளனர். அடித்து தரதரவென இழுத்துச் செல்கையில் ஊர்மக்கள் அனைவரும் ஒன்று கூடினர். 'நீங்கள் யார்?' என்று கேட்டபொழுது பக்கத்திலே இருக்கிற கருப்பூர் ஸ்டேஷன் கான்ஸ்டபிள் வந்து 'இவர்கள் நாமக்கல் போலீஸ் விசாரிக்க கூட்டிட்டு போறாங்க.. ஒன்னும் பிரச்சினையில்ல விட்டுருங்க' அப்படின்னு சொன்னாங்க. உடனே அவர்களை நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அழைத்துச் சென்றுள்ளனர். அதுவும் கால் டாக்ஸி வரவழைத்து அழைத்து சென்றுள்ளனர். அவர்கள் காவல் வாகனத்திலும் வரவில்லை போலீஸ் ஜீப்பிலும் வரவில்லை. இந்த சம்பவம் நடந்தது 8 ஆம் தேதி. சுமார் மூன்றரை மணி அளவில் இங்கிருந்து அவர்களை அழைத்து சென்றனர். சேர்ந்தமங்கலம் போவதற்கு மாலை ஐந்து மணி ஆகிவிட்டது. நாமக்கல் சென்றவுடன் ஸ்டேஷனில் 5 நிமிடம் இருந்துவிட்டு ஸ்டேஷன் அருகிலேயே உள்ள காவலர் குடியிருப்பில்விட்டு அவரை அடிக்கிறார்கள். தொடர்ந்து 'ஒத்துக் கொள்.. ஒத்துக்கொள்... உன்னுடைய சகலை எங்கிருக்கிறார்' என சாப்பாடு வாங்கி தந்து அடித்தனர். இவர்களுடைய மகன்கள் அப்பாவையும் அம்மாவையும் காணவில்லை என தவித்துள்ளனர். ஜோன்ஸ், ஜோயல் என்ற இரு மகன்களும் அப்பா அம்மா இல்லாமல் தவித்துள்ளனர். 12 வயசு பையன் ஜோயல், அவங்க பெரியப்பா பொண்ணோட உதவியோட ஆன்லைனில் 'எங்க அப்பாவை புடிச்சிட்டு போனாங்க... போலீஸ்னு சொல்றாங்க... யாருன்னு தெரியல' என புகாரளித்தவுடன். 11ஆம் தேதி அவசரஅவசரமாக இது கம்ப்ளைன்ட் ஆகிறது என தெரிந்த உடனே நாமக்கல் கிளை சிறையில் பிரபாகரனை அடைக்கிறார்கள். அதே திருட்டு வழக்கை போட்டு அவரது மனைவி அம்சலாவை சேலம் பெண்கள் கிளைச்சிறையில் அடைக்கிறார்கள்.

 

12 ஆம் தேதி பிரபாகரனுக்கு உடல்நிலை சரியில்லை என்ற உடனே இவர்களே ஒரு வக்கீலை வைத்து பெயில் போட்டு எடுத்து நாமக்கல் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போகிறார்கள். அங்க முடியவில்லை என்ற உடனே சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கூட்டிட்டு போறாங்க. 12 ஆம் தேதி இரவு 11 மணிக்கு குடும்பத்தாருக்கு போன் வருகிறது. 'உங்கள் தம்பி ஸ்டேஷனில் இருந்தபோது உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனையில் சேர்த்திருக்கிறோம் வாங்க' அப்படின்னு. உடனே போனா ஒரு மணி நேரமாக காட்டுறேன் காட்டுறேன் சொல்லிட்டு  திடீர்னு இறந்துட்டாங்கனு மார்ச்சுவரியில் தள்ளிவிட்டு போய் விட்டார்கள். இதற்கு அடுத்த நாள் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பிரபாகரனின் குடும்பத்தாரோடு உறவினர்கள் எல்லாம் சேர்ந்து மருத்துவ கல்லூரி மருத்துவமனை வாசலில் போராட்டம் செய்தோம்.  என்னென்ன கோரிக்கைகள் வைத்தோம் என்றால், உடனடியாக அம்சலாவை மத்திய சிறையிலிருந்து கொண்டு வரவேண்டும்.  போலீசார்களை கொலையாளிகளாக ஐபிசி 302 ல் வழக்குப்பதிவு செய்ய வேண்டும், தமிழக அரசு ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கில் அவர்களுக்கு கொடுத்தது போல அரசு வேலை கொடுக்க வேண்டும். இது எல்லாவற்றையும் தாண்டி இவர்கள் இருவரும் எஸ்சி, எஸ்டி ஆக இருப்பதால் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைத்தோம்.

 

ஆனால் போலீசார், கஸ்டடியில் வைத்து 174 சந்தேக மரணம் என்று இல்லாமல் 176/1 என்ற செக்ஷனில் வழக்கு பதிவு பண்ணினார்கள். அதற்கு அடுத்த நாள் கலெக்டர் கூப்பிடுகிறார். சேலம், நாமக்கல் எஸ்பி முன்னிலையில் விசாரணை செய்கிறார். நாங்கள் எங்கள் கோரிக்கையை எல்லாம் சொல்கிறோம். 13-ஆம் தேதி இரவு 8 மணிக்கு நாங்கள் போராட்டம் பண்ணும்போதே அம்சலாவை விடுதலை செய்து கூட்டிக்கொண்டுதான் கலெக்டரிடம் போகிறோம். இந்த ஐந்து போலீஸ்காரர்களை குறைந்தபட்சம் சஸ்பெண்ட் பண்ணனும். சஸ்பெண்ட் செய்தால் பிரேதப் பரிசோதனை செய்ய ஒத்துக் கொள்கிறோம் என்று சொன்னோம். நேற்று உடல் பிரேதப் பரிசோதனையையும் அவர்களே ஏற்பாடு செய்தார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக பார்த்திபன் என்கின்ற பாவேந்தனாகிய நானும், இளைஞரணி செயலாளர் சாமுராய் குரு ஆகிய இருவரும் கட்சி சார்பில் போனோம். குற்றவியல் நடுவர் முன்னிலையில் டாக்டர்கள் குழுவில் இரண்டு பேர் இருந்தார்கள். கேமராவில் பிரேதப் பரிசோதனையை வீடியோ எடுத்தார்கள். எல்லா போலீசாரும் வெளியே சென்று விட்ட நிலையில் நானும், சாமுராய் குரு, பிரபாகரனின் மனைவி, பிரபாகரனுடைய அண்ணன், நடுவர் என ஐந்து பேர் உள்ளே சென்றோம். காலிலிருந்து தரவாக உடலில் எங்கெல்லாம் காயங்கள் ஏற்பட்டுள்ளது என்பதை நோட் செய்து கொண்டோம். கன்னத்தில் ஒரு கன்னம் வீங்கியிருந்தது. தொடையில் அடிபட்டிருந்தது. முட்டியில் வட்டவட்டமாக தழும்புகள் கன்னிப்போய் இருந்தது. ஆண்குறி விரைப்பை தோலுரிந்து இருந்தது. இதையெல்லாம் குறித்துக் கொண்டோம். உடனே நாமக்கல் எஸ்.பியின் பரிந்துரையின் பேரில் மூன்று பேருக்கு சஸ்பெண்ட் ஆர்டர் கொடுத்திருக்காங்க. இரண்டு பேரை சஸ்பெண்ட் பண்றேன்னு சொல்லியிருக்காங்க இன்னைக்கு. இதனால் உடலை வாங்கிக்கொண்டு இன்று அடக்கம் செய்துவிட்டோம். இன்னைக்கு தான் முடிந்தது உடல் அடக்கம்''என்றார்.

 

 

 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !