Skip to main content

ஏற்கனவே போட்ட ரோட்டுக்கு டெண்டர்... அதிர வைக்கும் ஊழல் ரிப்போர்ட்... முதல்வர் துறையில் என்ன நடக்கிறது? 

Published on 18/05/2020 | Edited on 18/05/2020

 

eps


முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டிலுள்ள தமிழக நெடுஞ்சாலைத்துறையில் ஏற்கனவே நடந்து முடிந்த வேலைகளுக்கு மீண்டும் டெண்டர் விட்டு 1,530 கோடி ரூபாயை சத்தமில்லாமல் சுருட்டும் பலே ஊழல்கள் குறித்த தகவல்கள் அதிர வைக்கின்றன.
 


தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையிலுள்ள கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகு என்கிற பிரிவு, தமிழகத்தில் 59,405 கி.மீ. நீளமுள்ள சாலைகளைப் பராமரித்து வருகிறது. கடந்த 2014 வரை 'ஒருங்கிணைந்த சாலைகள் கட்டமைப்பு மேம்பாடு' (சி.ஆர்.ஐ.டி.பி.) திட்டத்தின் மூலம் இவை அனைத்தும் மேம்படுத்தப்படுத்தப்பட்டன. ஆனால், கடந்த 2014 முதல் ’செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்தம் (பி.பி.எம்.சி.) என்கிற திட்டத்தை அமல்படுத்தி வருகிறார் முதல்வர் எடப்பாடி  பழனிசாமி. இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு வருடமும் ஒரு கோட்டத்தைத் (டிவிஷன்) தேர்வு செய்து, அதில் அடங்கியுள்ள மாநில சாலைகளையும், மாவட்டத்தின் முக்கியச் சாலைகளையும் தேர்வு செய்து அதனைப் பராமரிக்கும் முறையை அமல்படுத்தி வருகிறது நெடுஞ்சாலைத் துறை. இதில்தான், ஏற்கனவே செய்த வேலைகளுக்கு மீண்டும் டெண்டர் விட்டு மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடிக்கின்றனர்.
 

road


இது குறித்து நம்மிடம் விவரித்த நெடுஞ் சாலைத்துறையினர், ‘செயல்பாடு அடிப்படையிலான பராமரிப்பு காண்ட்ராக்ட்டின் படி, சாலைகளின் பழுதுகளைச் சரி செய்யும் பராமரிப்பு பணிகளை மட்டுமே செய்ய வேண்டும். ஆனால், ஒருங்கிணைந்த சாலைகள் மேம்பாடு திட்டத்தில் முழுமையாகச் செய்து முடிக்கப்பட்ட பணிகள் அனைத்தையும் செயல்பாடு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்தத்தில் சேர்த்து விடுகின்றனர். இதனால், ஒரு கோட்டத்திலுள்ள அனைத்துச் சாலைகளையும் முதல்வர் எடப்பாடிக்கு நெருக்கமான காண்ட்ராக்டருக்கு 5 வருடத்துக்கு குத்தகைக்கு கொடுத்து ஒதுக்கப்பட்ட கோடிகள் பங்கு பிரிக்கப்படுகின்றன.

அதாவது, 2014 ஆம் வருடம் பொள்ளாச்சி கோட்டமும், 2015-16- இல் கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், திருவள்ளூர் கோட்டங்களும், 2018- இல் விருதுநகர் கோட்ட மும், 2019- இல் பழனி, சிவகங்கை கோட்டங்களும் செயல்பாடு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்தத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
 

tender


இதில், பழனி கோட்டத்தை மதுரையைச் சேர்ந்த ஆர்.ஆர்.கன்ஸ்ட்ரக்ஷனுக்கும், சிவகங்கையைத் தவிர்த்து மற்ற 5 கோட்டங்களையும் செய்யாதுரை நாகராஜனின் எஸ்.பி.கே. நிறுவனத்துக்கும் தாரை வார்க்கப் பட்டுள்ளது. சிவகங்கை கோட்டத்தையும் செய்யாதுரைக்கே தாரை வார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வரிசையில் தற்போது தஞ்சாவூர் கோட்டமும் இணைந்துள்ளது. இந்தக் கோட்டத்திலுள்ள 833.658 கி.மீ. சாலைகளை, செயல்பாடு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்தத்தின் கீழ் இரண்டு நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதற்காக 2 டெண்டர்களாக பிரித்து டெண்டர் கோரியிருக்கிறது நெடுஞ்சாலைத் துறை. இந்த 833.658 கி.மீ.சாலைகளுக்கான டெண்டர் மதிப்பீடு 1,947 கோடியே 24 லட்ச ரூபாய். முதல்வர் மற்றும் துறையின் அமைச்சர் என்கிற வகையில் இதற்கு ஒப்புதலளித்திருக்கிறார் எடப்பாடி. அந்த வகையில், ஒரு கிலோ மீட்டர் சாலைக்கான செலவு 2 கோடியே 34 லட்ச ரூபாய்.
 


இந்த 833.658 கி.மீ.சாலைகளில் ஏற்கனவே 58.200 கி.மீ. சாலைகள் தரம் உயர்த்தப்பட்டு விட்ட நிலையில் மீண்டும் அந்த சாலைகளை தற்போதைய டெண்டரில் இணைத்திருக்கிறார்கள் அதிகாரிகள். கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி நெடுஞ்சாலைத்துறையில் ஒரு அரசாணை பிறப்பிக்கப்பட்டது (ஜி.ஓ.நெம்பர்: 40).

அந்த அரசாணையில், மாநில நெடுஞ்சாலைகள் எண்-64 மற்றும் எண்-200 ஆகியவைகளின் முறையே 17.800 கி.மீ. மற்றும் 40.400 கி.மீ. சாலைகள் (மொத்தம்: 58.200 கி.மீ.) தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்தப்பட்டிருப்பதாகச் சொல்லியுள்ளது. தற்போது டெண்டர் கோரப்படும் போது, மொத்த நீளமான 833.658 கி.மீட்டரிலிருந்து 58.200 கி.மீ. நீளத்தைக் கழிக்காமலே அதற்கும் சேர்த்து நிதி மதிப்பீடு செய்து ஒப்புதல் பெற்றிருக்கிறார்கள். இதன்மூலம், மொத்த மதிப்பீட்டில் சுமார் 136 கோடி ரூபாய் ( 58.200 ஷ் 2.34 கோடி) கூடுதலாகச் சேர்க்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
 

tender


அதேபோல, 391.054 கி.மீ. நீளமுள்ள மாநில நெடுஞ்சாலைகளில் ஆரம்பக்கட்ட பழுது பார்த்தல், காலமுறைப்படி பழுதுபார்த்தல், அகலப்படுத்துதல் ஆகிய பணிகளுக்கான செலவு மதிப்பீடாக 984 கோடியே 49 லட்ச ரூபாய் எனவும், 442.604 கி.மீ.நீளமுள்ள மாவட்ட முக்கியச் சாலைகளின் செலவு மதிப்பீடாக 586 கோடியே 49 லட்ச ரூபாய் என அரசாணையில் குறிப்பிடுகிறது நெடுஞ்சாலைத் துறை. அந்த வகையில், தஞ்சை கோட்டத்தில் மட்டும் 1,570 கோடியே 98 லட்ச ரூபாய் மதிப்பீட்டிற்குத்தான் டெண்டர் கோரப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 1,947 கோடியே 24 லட்சத்துக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதன் மூலம், 376 கோடி ரூபாய் கூடுதலாகச் சேர்க்கப்பட்டு ஒப்புதல் வாங்கியுள்ளனர் உயரதிகாரிகள். இத்தகைய ஊழல் ஒரு புறமிருக்க, 1 கி.மீ. சாலை பணிக்காகச் செலவாகும் தொகையையும் கூடுதலாகக் காட்டப்பட்டுள்ள ஊழலும் நடந்துள்ளது‘’ என்கிறார்கள் அதிர்ச்சியாக!

டெண்டர் ஊழல்கள் குறித்து தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த 21 முதல்நிலை ஒப்பந்ததாரர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். அவர்களில் துரை. ஜெயக்குமார் மற்றும் செல்வேந்திரனிடம் பேசிய போது, "தஞ்சாவூர் கோட்டத்தில் ஒருங்கிணைந்த சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் செய்யப்பட்ட சாலை பணிகளில் 1 கிலோ மீட்டருக்கு 1 கோடியே 5 லட்ச ரூபாய் செலவிடப்பட்டது. தற்போது இதனை 1 கிலோ மீட்டருக்கு 2 கோடியே 34 லட்ச ரூபாயாக அதிகப்படுத்தியிருக்கிறார்கள். இதனால் சுமார் 1,000 கோடி ரூபாயை மொத்த மதிப்பீட்டில் அதிகரிக்கச் செய்திருக்கிறார்கள்.

மேலும், குறிப்பிட்ட டெண்டரை எடுப்பதற்குத் தகுதியான காண்ட்ராக்டர்கள் யார் என்பதற்கு இந்தியன் ரோடு காங்கிரசும், வெளிப்படையான டெண்டர் நடைமுறைகளுக்கான சட்டத்திலும் சில விதிகளை வகுத்துள்ளனர். அதன்படி, டெண்டர் மதிப்பீட்டில் வருட சராசரியாக 40 சதவீதம் தொகைக்குக் கடந்த 5 வருடங்களில் காண்ட்ராக்ட் எடுத்து வேலை செய்திருக்க வேண்டும் எனச் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது, 100 கோடிக்கான டெண்டருக்கு ஒருவர் விண்ணப்பிக்கிறார் எனில், முந்தைய 5 வருடங்களில் வருசத்துக்கு 40 கோடி ரூபாய்க்கான வேலையை அவர் செய்திருக்க வேண்டும். தற்போதைய டெண்டரை, தங்களுக்கு வேண்டப்பட்ட 2 காண்ட்ராக்டர்களுக்குக் கொடுப்பதற்காக 40 சதவீதம் என்கிற தகுதியை 20 சதவீதமாக குறைத்துள்ளது நெடுஞ்சாலைத்துறை. பொதுவாக, டெண்டர் மதிப்பீடு அதிகரிக்க அதிகரிக்க காண்ட்ராக்டர்களின் தகுதி மதிப்பீடும் அதிகரிக்க வேண்டும். ஆனால், நெடுஞ்சாலைத் துறையில் மட்டும் அதனைக் குறைத்திருப்பது விந்தையாக இருக்கிறது எனச் சுட்டிக்காட்டுகிறார்கள்.
 

http://onelink.to/nknapp


மேலும் நாம் புலனாய்வு செய்தபோது, கடந்த 2019- இல் விடப்பட்ட பழனி கோட்டத்தின் டெண்டரில் கூட 1 கிலோ மீட்டருக்கு 1 கோடியே 36 லட்ச ரூபாய்தான் செலவிடப்பட்டுள்ளது. இதனை ஒப்பீடும் போது தற்போது 1 கிலோ மீட்டருக்கு 98 லட்ச ரூபாயை அதிகப்படுத்தியிருக்கிறார்கள். அந்த வகையில் கணக்கிட்டாலும் கூட, 833.658 கிலோ மீட்டர் சாலைக்குக் கூடுதலாக 817 கோடி ரூபாயை செலவினமாக காட்டுகிறார்கள்.

இது தவிர, தஞ்சாவூர் கோட்டத்தில் ஒருங்கிணைந்த சாலைகள் கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின் கீழ் அனைத்து சாலைகளும் ஏற்கனவே மேம்பாடு செய்யப்பட்டுள்ளதால், தற்போது செயல்பாடு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்தத்தின் கீழ் அனைத்து சாலைகளையும் பராமரிப்பு செய்தால் மட்டுமே போதுமானது. அதனடிப்படையில், 1 கி.மீ. சாலையைப் பராமரிக்கச் செலவு அதிகப்பட்சம் 50 லட்சம் என்றாலும், 833.658 கி.மீ.சாலைக்கும் 417 கோடிதான் தேவைப்படும். ஆனால், தற்போது 1,947 கோடிக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதன்மூலம், 1,530 கோடி ரூபாயைச் சுருட்ட திட்டமிட்டுள்ளனர் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள்.

இந்த நிலையில், தஞ்சாவூர் ஒப்பந்ததாரர்களின் இரண்டு ரிட் மனுக்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் 14-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சாலைகளின் வலிமையை மதிப்பிடுவதற்காகப் பயன்படுத்தப்படும் கலிஃபோர்னியா பேரிங் விகிதத்தை இந்த வேலைக்கான மதிப்பீடுகளில் நெடுஞ்சாலைத்துறை அதிகரித்துள்ளது என்றும், முந்தைய ஆண்டுகளின் இத்தகையை மதிப்பு குறித்த முழுமையான விபரங்களைத் தரவேண்டும் என்றும் ஒப்பந்ததாரர்கள் கேட்டதற்கு, தர முடியாது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து 26- ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்துள்ளது நீதிமன்றம். இதற்கிடையே, டெண்டர் தேதியை மீண்டும் தள்ளிவைத்துள்ளது நெடுஞ்சாலைத்துறை.