Advertisment

ரூ.68,000 கோடி என்னாச்சு? சமாளிக்க முடியாமல் திணறும் பாஜக அரசு... என்ன நடந்தது... வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

bjp

Advertisment

பொருளாதார நெருக்கடியோடு, கரோனா அச்சுறுத்தலால் தொழில்துறையும் முடங்கி இருப்பதால், மிகப்பெரிய இறுக்கத்திலிருக்கிறது நாடு. மாநிலங்கள் கேட்ட நிதியை ஒதுக்கித் தர இயலவில்லை என்று கைவிரிக்கும் மத்திய அரசு, நிதி நெருக்கடியைச் சமாளிக்க வரி வருவாயை அதிகப்படுத்தியதோடு, மத்திய அரசு ஊழியர்களின் பஞ்சப்படியிலும் கை வைத்துவிட்டது.

இத்தனை நெருக்கடிக்கு மத்தியிலும், வங்கிகளிடம் கடன்பெற்று திரும்பிச் செலுத்தாமல் தப்பியோடிய கார்ப்பரேட் முதலாளிகளின் கடனை, திருப்பிச் செலுத்த தேவையில்லாத நிலையை உருவாக்கி, தன் விசுவாசத்தைக் காட்டியிருக்கிறது மோடி அரசு.

கடந்த பிப்ரவரி மாதமே நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இதுதொடர்பாக கேள்வியெழுப்பியபோது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும், நிதித்துறை இணையமைச்சர் அனுராக் சிங் தாக்கூரும் முறையான பதிலளிக்கவில்லை. இந்நிலையில்தான், ஆர்.டி.ஐ. ஆர்வலர் சாகேத் கோகலே என்பவர் தாக்கல்செய்த ஆர்.டி.ஐ. மனுவிற்கு, ஆர்.பி.ஐ. பொதுத் தகவல் அதிகாரி அபய்குமார் பதிலளித்துள்ளார்.

Advertisment

இதில், “2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நிலுவையில் இருந்த ரூ.68 ஆயிரத்து 607 கோடியைக் கணக்கியல் ரீதியாகத் தள்ளுபடி செய்துள்ளோம்" எனத் தெரிவித்துள்ளதோடு, எந்தெந்த நிறுவனங்களுக்கு எவ்வளவு கடன் தள்ளுபடி செய்யப்பட்டது என்ற விவரங்களையும் தந்துள்ளார். இதில் அதிகபட்சமாக, கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் 5,492 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் மோசடி செய்து தப்பிச்சென்ற மெகுல் சோக்ஷிக்கு சொந்தமான இந்த நிறுவனம் உட்பட, இதே குழுமத்தின் கிலி இந்தியாவுக்கு 1,447 கோடியும், நக்ஷத்ரா பிராண்ட்ஸ்க்கு 1,109 கோடியும் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சாமியார் பாபாராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் வாங்கியுள்ள சோயா நிறுவனமும் கடன் தள்ளுபடியால் பலன் பெற்றுள்ளது.

கடன் மோசடி செய்து தப்பிச்சென்ற மெகுல் சோக்ஷி ஆண்டிகுவா குடியுரிமையுடன் தலைமறைவாக இருக்கிறார். இவரது உறவினரும், பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் தொடர்புடைய வைர வியாபாரியுமான நீரவ் மோடி, லண்டனில் இருக்கிறார். இதேபோல், கடந்த ஓராண்டாக அமலாக்கத்துறையின் கண்காணிப்பில் இருக்கும் சந்தீப் மற்றும் சஞ்சய் ஜுஜுன்வாலாவின் ரெய் அக்ரோ நிறு வனத்திற்கு ரூ.4,314 கோடியும், தலைமறைவாகிச் சென்ற வைர வியாபாரி ஜதின் மேத்தாவின் வின்சம் டைமண்ட் நிறுவனத்தின் ரூ.4,076 கோடியும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, கடன் மோசடி செய்து நீண்ட நாட்களாக வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் விஜய் மல்லையாவின் கிங்ஃபிஷர் ஏர்லைன் நிறுவனத்தின் ரூ.1,943 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது, கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோக, மேலும் சில நிறுவனங்கள், தனிநபர்கள் என 50 பேருக்கு 68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்துள்ளதாக ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் மோடி அரசு மீது கடுமையான குற்றச்சாட்டை வைத்துள்ளது காங்கிரஸ்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "இந்தக் கடன்களைக் கணக்கியல் ரீதியாக மட்டுமே தள்ளுபடி செய்துள்ளோம். உண்மையான தள்ளுபடி அல்ல. வாராக்கடன் என்றே சொல்லவேண்டும். அதை வசூல் செய்வதற்கான பணிகள் தொடரும்'' என்று தெரிவித்துள்ளார். வங்கி அதிகாரிகள் தரப்பில் இதுதொடர்பாக விசாரித்தபோது, "கணக்கியல் ரீதியாகத் தள்ளுபடி என்பது, திரும்பச் செலுத்தாதவரின் கடன் தொகையைவங்கி அதன் லாபம் அல்லது முதலீட்டில் இருந்து செலுத்தும். இப்படிச் செய்வதால், வங்கிகளுக்கு நஷ்டம்தான். கடன் வாங்கிவிட்டு வெளிநாடுகளில் தலைமறைவாகி இருக்கும் தொழிலதிபர்களிடம் வசூல் செய்வோம் என்று சொல்வதே வேடிக்கையாக இருக்கிறது'' ’என்று யதார்த்தத்தை விளக்குகிறார்கள்.

bjp

கடந்த பத்தாண்டுகளில் ரூ.7 லட்சம் கோடி வரை கணக்கியல் ரீதியாகத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதில் 80 சதவீதம் கடந்த ஐந்தாண்டுகளில் செய்யப்பட்டவை என்கிறது ஒரு தகவல். இப்படித் தள்ளுபடி செய்யப்படும் கடன் தொகையிலிருந்து வங்கிகளுக்கு 15 சதவீதம் திரும்பி வந்தாலே மிகப்பெரிய விஷயம் என்கிறார்கள் வங்கித்துறையைச் சேர்ந்தவர்கள்.

இந்தநிலையில்தான், வங்கிகளின் இழப்பை ஈடுசெய்ய மக்களின் வரிப்பணத்தைப் பயன்படுத்தும் அரசு, கார்ப்பரேட் முதலாளிகளுக்குச் செய்வதுபோல், விவசாயக் கடனை ஏன் தள்ளுபடி செய்வதில்லை என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ்.-ன் பொருளாதார அமைப்பான சுவதேசி ஜகரன் மன்ச் விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்வதால், வங்கிகளின் நிலைமை மேலும் மோசமாகும் என்று பரிந்துரை செய்தது. இதையேற்ற மோடி அரசு, வரி செலுத்துவோரின் பணத்தை விவசாயக் கடனில் வீணடிக்க முடியாது என்று பதிலளித்ததே, விவசாயிகளின் மீதான இந்த அரசு கொண்டிருக்கும் அக்கறையின் சான்று.

http://onelink.to/nknapp

கரோனா பாதிப்புகளில் இருந்து இந்திய ஏழைகளைக் காக்க, ரூ.65 ஆயிரம் கோடி தேவை என்கிறார், ஆர்.பி.ஐ. முன்னாள் ஆளுநர் ரகுராம்ராஜன். அதே தொகையைத் தலைமறைவாக உள்ள பரம ஏழைகளுக்குப் படியளந்திருக்கிறது மோடி அரசு.

-ச.ப.மதிவாணன்

congress ECONOMIC SURVEY minister modi politics
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe