Advertisment

எதிர்க்கட்சி எம்.பி.க்களால் என்ன செய்ய முடியும்? வரலாறு பதில் சொல்லும்! -கோவி.லெனின்

தமிழ்நாட்டில் மத்திய-மாநில ஆட்சியாளர்களுக்கு எதிரான தி.மு.க தலைமையிலான கூட்டணி 37 நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பதால் ஒரு பிரயோஜனமுமில்லை என்று ஆளுங்கட்சிக் கூட்டணியினரும் அவர்களுக்கு ஆதரவானவர்களும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். இந்திய அளவில் பா.ஜ.க. 303 எம்.பிக்களுடன் அபரிமிதமான வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், தமிழ்நாட்டு வாக்காளர்கள் தி.மு.க. கூட்டணியை வெற்றி பெற வைத்து மிகப் பெரிய தவறை செய்துவிட்டது போலவும், இதனால் தமிழ்நாட்டின் எதிர்காலமே இருண்டுவிடும் என்பதாகவும் பயமுறுத்துகிறார்கள்.

Advertisment

modi

மக்களின் தீர்ப்பை அவமதிக்கும் இந்த வார்த்தைகளால் அச்சப்படவேண்டியதில்லை. ஒவ்வொரு எம்.பி.யும் தனது தொகுதிக்காக-மாநில உரிமைக்காக-நாட்டு நலனுக்காக நடாளுமன்றத்தின் மக்களவை-மாநிலங்களவையில் குரல் கொடுக்க முடியும். இதனைஅறிஞர் அண்ணா, ஈ.வெ.கி.சம்பத் காலத்திலிருந்து திருச்சி சிவா, கனிமொழி எம்.பியாக உள்ள இன்றைய காலகட்டம்வரை தமிழ்நாடு நிரூபித்து வந்திருக்கிறது.

Advertisment

2019 தேர்தலில் பா.ஜ.க. பெற்றிருக்கின்ற பெரும்பான்மையவிட, 1984 தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஏறத்தாழ 100 இடங்களைக் கூடுதலாகப் பெற்றிருந்தது. இந்திராகாந்தி அம்மையார் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு நடந்த அந்த தேர்தலில் ராஜீவ்காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி 404 இடங்களைப் பிடித்தது. தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களிலும் காங்கிரஸ் கூட்டணியே வென்றது. அந்தக் கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. 12 இடங்களைப் பிடித்தது. பக்கத்தில் உள்ள ஆந்திராவில் மட்டும் காங்கிரசால் அத்தகைய வெற்றியைப் பெற முடியவில்லை. அங்கே என்.டி.ராமராவ் தலைமையிலான தெலுங்குதேசம் கட்சி 30 தொகுதிகளில் வென்றது. நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சி ஆனது. பா.ஜ.க.வின் அப்போதைய பலம் வெறும் இரண்டுதான்.

rajeev gandhi

காங்கிரசின் 400+ தொகுதிகளை ஒப்பிடும்போது, தெலுங்கு தேசத்தின் 30 என்பது பத்தில் ஒரு மடங்குக்கும் குறைவு. தங்கள் மாநிலம் மட்டும் தனித்துவிடப்பட்டதே என்று தெலுங்கு தேச எம்.பிக்கள் கவலைப்படவில்லை. இன்றைய பா.ஜ.க. வகையறாக்களைப்போல, ஆந்திராவுக்கு திட்டங்களே கிடைக்காது என அவர்களை யாரும் அச்சுறுத்தவில்லை. நாடாளுமன்றத்தில் தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் தங்கள் மாநிலத்திற்காகவும், மற்ற பிரச்சினைகளுக்காகவும் மிருகபல பெரும்பான்மை கொண்டிருந்த காங்கிரசுக்கு எதிராக வலிமையாகக் குரல் கொடுத்தார்கள். அனுமதி மறுக்கப்பட்டபோது வெளிநடப்பு செய்தனர். போராட்டங்களை நடத்தினர்.

ஆளுங்கட்சிக்கு எதிரான ஒவ்வொரு பிரச்சினையிலும், தெலுங்கு தேசம் கட்சியுடன் மற்ற எதிர்க்கட்சிகளும் இணைந்து நின்றன. அதில் தி.மு.க.வின் 2 எம்.பிக்களும் அடங்குவர். குரல் கொடுப்பதிலும் வெளிநடப்பு செய்வதிலும் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்தன. அ.தி.மு.க.வின் 12 எம்.பிக்கள் மட்டும், ஆளுங்கட்சியான காங்கிரசுக்கேற்ப செயல்பட்டனர்.

NTR

அசைக்க முடியாத பலத்துடன் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி, ஐந்தாண்டுகளுக்குள் தனது செல்வாக்கை இழந்தது. போஃபர்ஸ் விவாகரம், வி.பி.சிங் தலைமையிலான ஜனமோர்சா உருவாக்கம், பல மாநிலங்களில் ஏற்பட்ட சிக்கல்கள் இவற்றை எதிர்க்கட்சிகள் சரியாகக் கையிலெடுத்தன. நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அவர்களின் செயல்பாடுகள் ஒருங்கிணைக்கப்பட்டன. மக்களின் கவனத்திற்கு கொண்டுசென்று, அவர்களின் ஆதரவைத் திரட்டின. அதன் விளைவுதான், 1988ல் உருவான தேசிய முன்னணி.

அதன் ஒருங்கிணைப்பாளராக (கன்வீனர்) என்.டி.ராமராவ்தான் இருந்தார். தேசிய முன்னணியின் தொடக்கவிழா பேரணியால் சென்னையைக் குலுங்க வைத்து, இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தார் தி.மு.க. தலைவர் கலைஞர். என்.டி.ஆரும் கலைஞரும் இந்திய அரசியலைத் தீர்மானிக்கக்கூடிய தென்னிந்திய தலைவர்களானார்கள். அதன்விளைவாக, மத்தியில் ஆட்சி மாற்றத்தை உருவாக்கினார்கள்.

kalaignar

1989 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தனது பெரும்பான்மையை இழந்தது. தேசிய முன்னணி அதிக இடங்களைப் பிடித்தது. பா.ஜ.க. 82 தொகுதிகளில் வெற்றி பெற்று புதிய சக்தியானது. இடதுசாரிகள் மற்றும் பா.ஜ.க. ஆதரவுடன் தேசிய முன்னணி சார்பில் வி.பி.சிங் பிரதமரனார். ஆனால், அந்த தேர்தலில் தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான தி.மு.கவும், ஆந்திராவில் ஆளுங்கட்சி அந்தஸ்தை இழந்த தெலுங்குதேசமும் எம்.பி. தேர்தலில் வெற்றி காணமுடியவில்லை. தி.மு.க.வுக்கு ஒரு எம்.பி.கூட கிடைக்கவில்லை. அனாலும், மாநிலங்களவையில் முரசொலி மாறன், வைகோ, விடுதலை விரும்பி உள்ளிட்டோர் எம்.பிக்களாக இருந்த நிலையில், வி.பி.சிங் தலைமையிலான ஆட்சியில் மாநில நலனுக்காக தி.மு.க .முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறின.

காவிரி நடுவர் மன்றம், இலங்கையிலிருந்து இந்திய அமைதி காப்பு படை திரும்பப் பெறுதல், மண்டல் கமிஷன் பரிந்துரையின்படி மத்திய அரசு பணிகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு என தமிழகத்தின் கோரிக்கைகளும் கொள்கைகளும் மத்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மாநிலக் கட்சிகளான தி.மு.க, தெலுங்குதேசம் ஆகியவற்றின் முனைப்பால் ஒருங்கிணைக்கப்பட்ட தேசிய முன்னணி அரசு, மாநிலங்களின் நலன்களைக் காக்கும் வகையில் செயல்பட்டது. அதனால்தான், 11 மாதங்களில் அந்த ஆட்சிக்கான ஆதரவை வாபஸ் பெற்று கவிழ்த்தது பா.ஜ.க. எனினும், மாநிலக் கட்சிகள் பங்குபெற்ற தேசிய முன்னணி அரசு ஏற்படுத்திய தாக்கத்தை இன்று வரை இந்திய அரசியல் களத்திலிருந்து தகர்க்க முடியவில்லை.

இடஒதுக்கீட்டைப் ‘பிச்சை’ என்றவர்கள், அந்தப் ‘பிச்சை’யை மேல்சாதியினருக்கும் போடுவோம் என்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். மாநிலக் கட்சிகளை ஒழித்து, ‘கழகங்கள் இல்லாத தமிழகம்’ எனக் கனவு கண்டவர்கள், தமிழ்நாட்டில் மட்டுமல்ல, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சிறிய கட்சித் தலைவர்களின் வீடு தேடிச் சென்று கூட்டணி அமைத்தார்கள். எந்த வேடம் போட்டாவது வெற்றியை நிலைநாட்ட அவர்கள் காட்டிய வேகமும் வியூகமும் வெற்றியைத் தந்துள்ளது.

stalin

அதேநேரத்தில், மிருகபல மெஜாரிட்டி கொண்ட கட்சியைப் புறக்கணித்த மாநிலம் தனது தனித்தன்மையை வெளிப்படுத்தியுள்ளது. இதனால், வளர்ச்சி கிடைக்காது, எதிர்காலம் இருண்டுவிடும் என்று மிரட்டுவது நாடாளுமன்ற ஜனநாயகத்தில் பூச்சாண்டிதான் என்பதை 1984ல் ஆந்திர மாநிலம் நிரூபித்தது. 2019ல் அந்த வாய்ப்பு தமிழ்நாட்டிற்குக் கிடைத்துள்ளது.

இந்திய நாடாளுமன்ற மக்களவையின் மூன்றாவது பெரிய கட்சியாகத் தமிழ்நாட்டின் தி.மு.க. உருவெடுத்துள்ளது. சமூகநீதி+மதநல்லிணக்கம்+ஒடுக்கப்பட்டோர் உரிமை+முற்போக்கு சிந்தனை கொண்ட இயக்கங்களின் சார்பில் 37 எம்.பி.க்கள் வெற்றி பெற்றுள்ளனர். நாடாளுமன்றத்தில் இவர்களின் தனிப்பட்ட செயல்பாடுகளும், மற்ற மாநிலத்தவருடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ளும் முயற்சிகளும் அமைகின்ற விதத்தைப் பொறுத்து, ஜனநாயகத்தின் வெற்றி உறுதியாகும். Let us, Wait and See.

mk stalin TDP congress
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe