Skip to main content

ஏ.ஆர்.ரஹ்மான் என் காதில் சொன்ன விஷயம்... - பாடகர் ஜெகதீஷ்

Published on 23/02/2018 | Edited on 28/02/2018
singer


சென்னையிலேயே வாழ்ந்திருக்கும் எனக்கு தென்தமிழகம் சென்றால் அங்குள்ள டவுன் பஸ்களில் பயணிக்கும் வேளையில் ஒலிக்கும் கிராமத்து மணம் கலந்த சினிமா பாடல்கள், மிகப்பெரிய சுகம் தான். இளையராஜாவின் 'மச்சானை பார்த்திங்களா' முதல் ரகுமானின் 'மானூத்து மந்தையிலே' வரை பாடல்கள் பேருந்துகளில் கேட்கும்பொழுது நம் பயணம் ஒரு தனி உற்சாகத்துடன் இருக்கும். இப்பொழுதெல்லாம் இதுபோன்ற பாடல்கள் அதிகமாக வருவதில்லை. சமீபத்தில் அப்படிப்பட்ட பயணத்தின் பொழுது "அய்யோ அடி ஆத்தே" என்று ஒரு பாடலும் பாடலின் குரலும் கவனிக்க வைத்தன. 'கொடிவீரன்' படப் பாடலான இதில் வரும் இந்தக் குரலுக்கு சொந்தக்காரர் யார் என்று பார்த்த பொழுது,  அவர்தான் பின்னணி பாடகர் பால்ராஜ் ஜெகதீஷ் குமார் என்று தெரிய வந்தது. அவருடன்  சிறு உரையாடல்...
 

சொல்லுங்க ஜெகதீஷ், நீங்க சூப்பர் சிங்கரா, சப்தஸ்வரங்களா, சன் சிங்கரா... எதுல இருந்து வந்தீங்க?   
ஹா...ஹா...ஹா..எதுவும் இல்லைங்க. என் குடும்பமே ஒரு இசைக்குடும்பம்ங்க. என் இசைப் பயணம் என்  குடும்பத்திலிருந்தே ஆரம்பித்தது.  எனக்கு சொந்த ஊர் சென்னைதான். பள்ளி மேடைகளில் நன்றாகப் பாடிய என்னை "மீரா மெலோடிஸ்" என்ற இசைக்குழுவில் என் சித்தப்பா தன்ராஜ் சேர்த்துவிட்டார். என் சித்தியுடன் சேர்ந்து டூயட் பாடினேன். என் மற்றொரு சித்தப்பா நாகேஷ் என்னுடைய இன்ஸ்பிரேஷன். 2001இல் இருந்து 2012 வரை பல இசைக்குழுக்களில் பாடி, பின்னர்  ஏ.ஆர்.ரஹ்மான் சாரின் கே.எம். கன்சர்வேட்டரியில சேர்ந்தேன்.

2012ஆம் ஆண்டுக்கு பிறகு சினிமாவில் பின்னணி பாடகராக வேண்டும் என்று வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த பொழுது ஜீவன் மயில் சார்தான் முதலில் ஒரு விளம்பரப் படத்தில் பாட வாய்ப்பளித்தார். இந்தத் துறையில் அவர்தான் என் முதல் குரு. சினிமாவில் 2013ஆம் ஆண்டு "சொன்னா புரியாது" என்ற படத்தில் இசையமைப்பாளர் யதீஷ் மகாதேவ் இசையில் மதன் கார்க்கியின் வரிகளில் "கேளு மகனே கேளு" என்ற பாடலை பாடினேன். அதன் பின் சி.சத்யா, சித்தார்த் விபின், சந்தோஷ் தயாநிதி, விஜய் ஆன்டனி, என்.ஆர்.ரகுநந்தன், ஸ்ரீகாந்த் தேவா என்று அடுத்தடுத்து பல இசையமைப்பாளர்கள் வாய்ப்பளித்தனர் தமிழ், கன்னடம், தெலுங்கு மூன்று மொழிகளில் பாடல்களை பாடியுள்ளேன்.  கன்னடத்தில்  சாய் அவர்களும் தெலுங்கில் எஸ்.ஏ.ராஜ்குமார் அவர்களும் வாய்ப்பளித்தனர். 

முன்பெல்லாம் ஒரு பாடலை பாடுபவர் யார் என்று மக்களுக்குத் தெரிந்தது. யேசுதாஸ், எஸ்.பி.பி, ஜானகி இவர்கள் பாடினால் அவர்கள் குரல் என்று தெரிந்தது. ஆனால் இப்பொழுது அதுபோல் பாடலைப் பாடுவது  யார் என்றே தெரிவதில்லையே...  சித் ஸ்ரீராம் போன்ற வெகு சிலரைத் தவிர ஒரு தனித்துவமான குரல் என்று யாருடையதையும் சொல்லமுடியவில்லையே ஏன்?
இதுக்கு ஒரு நல்ல பதில் இருக்கு. ஒரு உதாரணம் சொல்கிறேன், கொஞ்சம் மொக்கையா கூட இருக்கலாம். வெளியில் நாம் செல்லும்பொழுது வேறு ஒருவரின் குரலை கேட்கும் பொழுது நம் அப்பா குரல் போல் உள்ளதே, மாமா குரல் போல் உள்ளதே என்றெல்லாம் சொல்வோம். அதனை சிறிது நேரம் கேட்டபிறகுதான் அதன் வேறுபாடு தெரியும். நீங்கள் சொன்னமாதிரி பார்த்தால் எஸ்.பி.பி சார் குரலையும் மனோ சார் குரலையும் பிரித்து கண்டுபிடிக்காதவர்கள் இருக்கிறார்கள். இதனை சுலபமாக கண்டுபிடிப்பவர்களும் உள்ளனர். ஒரு பாடலை நாம் மக்களிடம் இனிமையாகச்  சேர்த்தாலே நாம் தனித்துவமாக தெரிவோம்.

முதல் பாடல் பாடிய பிறகு, இருக்கும் பின்னணி பாடகர் எண்ணிக்கையில், அடுத்த பாடலை பாட இசையமைப்பாளர்களுடன் ஒரு இணக்கமான உறவு வைத்துக் கொண்டால் மட்டும்தான் வாய்ப்பு கிடைக்குமா இல்லை நமக்கு திறமை இருந்தால் போதுமா? 
திறமை தான் முக்கியம். திறமைக்குள் ஒரு விஷயம் அடங்குகிறது. ஒரு பாடல் பாடுவதற்கு இசையமைப்பாளர் வாய்ப்பு வழங்குகிறார் என்றால் அந்தப் பாடலை நம் பாடலாக நினைத்து அர்ப்பணிப்போடும் கவனமாகவும் செய்தாலே போதும், இசையமைப்பாளர்கள் மனதில் நாம் இடம் பிடித்துவிடுவோம். அதற்கு பின்பு அவர்களே பாடல்கள் வரும்பொழுது வாய்ப்பளிப்பார்கள்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசைப் பள்ளியில் படித்திருக்கிறீர்கள். அது பற்றி?  
ஏ.ஆர்.ரஹ்மான் சார் பற்றி நினைத்தாலே எனக்கு மிகவும் பெருமையாக இருக்கும். அவர் இசைப்பள்ளியில் மாணவனாக இணைந்து படித்தது இன்னும்  பெருமையாக  உள்ளது. அவர் முன் நின்று பாடுவது ஒரு நடுக்கமான விஷயம். ஒரு முறை ரேடியோ மிர்ச்சி 'நறுமுகையே' பாடலை ஒரு வீடியோவாக பதிவு செய்தனர். நான் பாடி முடிக்கும் பொழுது  அனைவரும் கைதட்டினர். அப்பொழுது, 'நன்றாக பாடிவிட்டோம், அதற்குத்தான் கைதட்டல்' என்று நினைத்தேன். பின்னே பார்த்தால் ரஹ்மான் சார் அமைதியாக வந்துள்ளார், அதற்காகத்தான் கைதட்டியுள்ளார்கள். நான் கவனிக்கவில்லை. அனைவருடன் புகைப்படம் எடுத்தார். அப்பொழுது நான் பாடியதைக் குறிப்பிட்டு "நைஸ் மேன்" என்றார். ஒரு முறை அவசரமாக வேறு  ஒரு நிகழ்ச்சிக்கு சென்றுகொண்டிருந்தவர் நான் அணிந்திருந்த டி-ஷர்ட்டை பார்த்து என் காதருகில்  வந்து  "நைஸ் டி-ஷர்ட் மேன்" என்று சொல்லிவிட்டுப் போனார். அவர் மிகவும் எளிமையானவர். அந்த இசைப்பள்ளிக்கு ரஹ்மான் சார் தங்கை ஃபாத்திமா தலைமையாசிரியர். அவர்களும் மிகவும் ஊக்கமளிப்பார்கள்.

singer


இப்பொழுதெல்லாம் பைலட்டுகளை விட பாடகர்கள் தான் அதிக நாடுகளை சுற்றுகிறார்கள். நீங்கள் எப்படி? 
கொழும்பு, மஸ்கட், சிங்கப்பூர், துபாய் போயிருக்கேன். நான் மேடைப் பாடகராக இருந்த பொழுது மஸ்கட் சென்றிருந்தேன். அங்கு பாடிய பிறகு எம்.எஸ்.வி சார் கையால் பரிசளித்தார்கள். அதனை மறக்க முடியாது. அதன் பின் 2.0 இசைவெளியீட்டு  விழாவில் குழுப்பாடகராக சென்ற அனுபவம் நன்றாக இருந்தது. அதுவும் மறக்க முடியாத அனுபவம். எனக்கு வெளிநாடுகளில் சென்று பாடுவதை விட இங்கு சினிமாவில் பாடுவது நிறைவாக உள்ளது. 

இப்பொழுது பாடகர்கள் பலர் இசையமைக்கிறார்கள். எப்பொழுது இசையமைப்பாளர் அவதாரம் எடுக்க போகிறீர்கள் ?

எனக்கு அந்த ஆசை இல்லை, வேலை அதிகம். அதனால் பின்னணி பாடகராக இருந்து நிறைய பாடல்கள் பாடவேண்டும். அதான் என்  ஆசை.
 

உரையாடலை முடித்த என்னைத் திரும்ப அழைத்து, 'நான் இன்னும் பெருசா வளர வேண்டியிருக்கு. ஆனாலும், இதுவரை எனக்கு பிடிச்ச வேலையை நான் செய்ய சப்போர்ட் பண்ற என் அம்மா, அப்பா, நண்பர்கள் மற்றும் என் அனைத்து குருமார்கள், வாய்ப்பளித்த இசையமைப்பாளார்கள், இயக்குனர்கள் அனைவருக்கும்  என்னோட நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்' என்று கூறினார். நன்றி செலுத்தும் மனம் நல்ல மனம் தான்.

 

 

 

Next Story

“அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்!”- ரஜினிகாந்த்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Rajinikanth has said that he will not answer political questions

வேட்டையன் படப்பிடிப்பிற்காக சென்னையிலிருந்து ஹைதராபாத் சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த், படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார்.ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளிவரும் திரைப்படமான வேட்டையன் படப்பிடிப்பு, ஹைதராபாத் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து வருகிறது.

அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள, சென்னையிலிருந்து விமானம் மூலம் கடந்த 9ஆம் தேதி ஹைதராபாத் புறப்பட்டார். 75 சதவீத படப்பிடிப்பு நிறைவுற்ற நிலையில், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

“படப்பிடிப்பு நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது..” என்று மீடியாக்களிடம் ரஜினிகாந்த் தெரிவித்தபோது, நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு  “அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்..” என்று கூலாகச் சொல்லிவிட்டு கிளம்பினார். 

Next Story

12 வயது நவ்யா உமேஷ் பாடியுள்ள இறைவி பாடல்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
12 year old Navya Umesh sung iraivi album

சர்வதேச செஸ் ஒலிம்பியாட், குளோபல் இன்வெஸ்டர்ஸ் மீட், கேலோ இந்தியா என குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் மட்டுமல்லாது மாவீரன், ஜெயிலர், ஜவான் மற்றும் லால் சலாம் படங்களின் ஆடியோ லான்ச், எனப் பல நிகழ்வுகளை வெற்றிகரமாக நிகழ்த்திய கலை இயக்குநரும் நிகழ்வு மேலாளருமான உமேஷ் ஜே குமார் மற்றும் நிகழ்வு மேலாளர் ராகிணி முரளிதரன் ஆகியோரின் மகள் நவ்யா உமேஷ்.

ஏழாம் வகுப்பு படித்து வரக்கூடிய இவர், பாடி நடித்த ‘இறைவி’ பாடல் மகளிர் தின கொண்டாட்டமாக வெளியாகியுள்ளது. வெங்கடேசன் இயக்கியுள்ள இப்பாடலை நவ்நீத் சுந்தர் இசையமைத்துள்ளார். சமூக தொழில் முனைவோர் தீப்தி வரிகளை எழுதியுள்ளார். ‘என்ஜாய் எஞ்சாமி’ மற்றும் ‘கட்சி சேரா’ போன்ற வைரல் வீடியோக்களுக்கு நடனம் அமைத்த ‘தி டான்சர்ஸ் கிளப்’ இந்தப் பாடலுக்கான நடனம் அமைத்துள்ளனர். சோனி மியூசிக்கில் மகளிர் தினத்தன்று வெளியாகியுள்ள இந்தப் பாடலை, இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டார்.