Skip to main content

1900 பிச்சைக்காரர்களிடம் பேசினோம்... 190 பேர் வாழ்க்கையை மாற்றினோம்!

Published on 10/01/2018 | Edited on 10/01/2018
1900 பிச்சைக்காரர்களிடம் பேசினோம்... 
190 பேர் வாழ்க்கையை மாற்றினோம்!

சேவைக்காக தேசிய விருது பெற்ற தமிழன்!   






இந்தியா, உலகிலேயே மிகவும் இளமையான நாடு. இங்கு 50% இளைஞர்கள் உள்ளனர். அவர்களின் பங்கு, இந்த சமூகத்திற்கு எவ்வளவு பலம் என்பதை ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்காக ஒட்டுமொத்த தமிழக இளைஞர் பட்டாளமே இணைந்து போராடி  வெற்றிகண்டபோது  உணர்ந்தது இந்த தேசம். தமிழகம் மட்டும் அல்ல மொத்த இந்தியாவும் திரும்பிப் பார்த்தது. தற்போது மீண்டும், இளைஞர்களின் சமூக அக்கறையை வெளிப்படுத்தும் வகையில் தமிழகத்தைச்  சேர்ந்த நவீன் குமார்  என்ற இளைஞர் சமூக சேவைக்கான தேசிய விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரிடம் பேசினோம்...

"என் பெயர் நவீன் குமார். நான் தனியார் பொறியியல் கல்லூரியில்  பேராசிரியர் . திருச்சி மாவட்டத்தில் முசிறி பக்கத்தில் உள்ள பைத்தம்பாறை என்ற கிராமம் தான் என் சொந்த ஊர். எங்க அப்பா பெயர் பெரியண்ணன். அம்மா பெயர் அமிர்தவள்ளி. கூடப் பிறந்தது ஒரு தங்கச்சி. என் பள்ளிப்படிப்பை பைத்தம்பாறை அரசு பள்ளியில் தான் முடித்தேன். பி.இ.மெக்கானிக்கல் இன்ஜினியரிங் ககுமாரபாளையத்தில் பொறியியல் படித்தேன். 'அட்சயம்' என்ற சமூக சேவை அமைப்பைத்  தொடங்கி இதுவரை 190 பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு கொடுத்திருக்கிறோம். 

பிச்சை எடுப்பவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் எப்பொழுது வந்தது?

எஞ்சினியரிங் முடிச்சுட்டு, கேட்(GATE) தேர்வுக்குப் படிப்பதற்காக சேலத்தில் தங்கியிருந்தேன். ஒரு நாள், பஸ் ஸ்டான்டில் பஸ் ஏறப் போகும்போது  வயசான அம்மா ஒருவர், 'பசிக்குது காசுகொடுப்பா'னு கேட்டாங்க. நான் ஒரு பத்து ரூபா கொடுத்தேன். அப்படி மத்தவங்க கேட்கும்போது நான் சாப்பிட வச்சிருந்த காசைக் கூட கொடுத்துட்டு உதவி பண்ண திருப்தியில்  சாப்பிடாம இருந்திருக்கேன். அதே மாதிரி இன்னொரு நாள், ஒரு  இளைஞன் 'நான் ஊருக்குப்  போகணும் காசு இல்ல'னு கேட்டான், நானும் கொடுத்தேன். அதேபோல அடுத்த நாள், அதே இளைஞன்  வேறு ஒருவரிடம்  அதே வசனத்தை சொல்லி காசு கேட்டான். இவன் அந்த காசவச்சு என்ன தான் பண்றானென்று பார்க்க பின்னாடியே போனேன். பார்த்தா, அந்தக்  காசை வச்சு  குடிச்சிட்டு  பிரியாணி சாப்பிட போனான். 'ஏன் இது மாதிரி  எல்லோரையும் ஏமாத்துற?' என்று கேட்டதுக்கு என்னை கெட்ட வார்த்தையில்  திட்டிவிட்டு  போய்விட்டான். ஒரு பக்கம் உண்மையாகவே இயலாமல் பிச்சை எடுப்பவர்கள்...இன்னொரு பக்கம் ஏமாற்றுபவர்கள். உண்மையாக முடியாமல் பிச்சை எடுப்பவர்களுக்கு ஏதாவது பண்ணனும்னு நினைத்தேன். நண்பர்களெல்லாம், 'உன் குடும்ப சூழ்நிலை இப்படியிருக்கும்போது, அதை மட்டும் நீ பாரு' என்று கூறினார்கள். ஆனா, நான் என் நண்பன்கிட்ட கேமரா ஃபோன் வாங்கிட்டுப் போய் ஒரு பிச்சைக்காரரை பின்தொடர்ந்து படமெடுத்தேன். அவர்கிட்ட பழகுனேன். ராஜ்குமார் என்ற அவரின் பிரச்சனையைக் கேட்டு, அவரை ஒரு ஆசிரமத்தில் வாட்ச்மேனா சேர்த்துவிட்டேன். இப்படி ஆரம்பிச்சது தான்.   





அட்சயம் அமைப்பு பற்றி? 

எனக்கு முதலில் ஒரு அமைப்பு ஆரம்பித்து அதனைப் பதிவு செய்ய வேண்டும் என்பதெல்லாம் தெரியாது. நான் எம்.இ (M.E) சேர்ந்து பின்னர் 'அட்சயம்' என்ற அமைப்பைத் தொடங்கினேன். முதலில் கம்மியானவர்கள் தான் அமைப்பில் இருந்தனர். அவர்களைக் கொண்டு வாரா வாரம் இது போல் பிச்சைக்கார்களை சந்தித்து அவர்களின் பிரச்சனைகளைக்  கேட்டு பதிவு செய்துகொள்வோம். நாங்கள் எடுத்த கணக்கின்படி மனநிலை பாதிக்கப்பட்டு, ஊனமுற்று, வீட்டாரால் ஒதுக்கப்பட்டு என 19 வகையான பிச்சைக்காரர்கள் உள்ளனர். 1900 பிச்சைக்காரர்களை சந்தித்துப் பேசி, அதில் 190 பேருக்கு மட்டும் தான்  இப்போது வரை எங்களால் உதவ முடிந்தது. இதற்கு  நிதி பற்றாக்குறையும் ஒரு காரணம். எங்களின் பணத்தைதான்  செலவு செய்கிறோம்.190 பேரில் 40 பேர் பெண்கள். அவர்களின் சோகத்தைக்  கேட்கும் போது இன்னும் வருத்தமாக இருக்கும். இப்போது அவர்கள் வேலையில் இருக்கிறார்கள். பிச்சைக்காரர்களிடம் பேசும் போது முக்கால்வாசிப்பேர் சொன்னது, 'காசாக பிச்சை போடாதீர்கள்... பொருளாகவோ, உணவாகவோ கொடுங்கள். அது தான் தர்மம். நீங்கள் காசு கொடுப்பது புண்ணியம் இல்லை பாவம்' என்று சொன்னார்கள்.

தற்போது அட்சயம் அமைப்பில் 150 உறுப்பினர்கள் உள்ளனர். இதில்  90% இளைஞர்கள் தான். நாங்கள் முதலில் சேலம், ஈரோடு, நாமக்கல் ஆகிய மூன்று மாவட்டங்களை பிச்சைக்காரர்கள் இல்லா மாவட்டங்கள் ஆக்குவோம். இந்தியாவை பிச்சைக்காரர்கள் இல்லா தேசமாக்க வேண்டுமென்பதுதான்  எங்கள் இலக்கு.





பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள இவருக்கு, தற்போது தேசிய  இளைஞர் நலன் மற்றும் விளயாட்டுத்துறை அமைச்சகம், சிறந்த சமூக சேவைக்கான தேசிய விருதை அறிவித்துள்ளது. வரும் ஜனவரி  12ஆம் தேதி உத்திரபிரதேசத்தில் நொய்டா அருகில் உள்ள கெளதம் குப்தா நகரில் விருது வழங்கப்பட இருக்கிறது. 

"இது  பெரிய விஷயமில்லைங்க... எங்களால் மறுவாழ்வு பெற்று வாழும் மனிதர்கள் சந்தோஷமாக வாழ்வதைப்  பார்ப்பது தான் எனக்கு வெற்றி, விருது எல்லாம்" என்கிறார்.

இந்த தேசமும் அரசும் செய்ய வேண்டிய வேலையை தனி மனிதர் செய்கிறார். 'அட்சயம்' நவீன் குமாரை விருது கொடுத்து அங்கீகரிப்பதோடு நிறுத்தாமல் மாநில அரசும்,  மத்திய அரசும் உதவினால் இந்தியா பிச்சைக்கார்கள் இல்லா தேசமாகும். அமெரிக்க அதிபர் மகள்  எப்போது வந்தாலும் பிச்சைக்காரர்களை பிடித்து மறைத்து வைக்க வேண்டாம்.

ஹரிஹரசுதன் 

சார்ந்த செய்திகள்