Advertisment

“அண்ணா என்ற அறிவாயுதத்தை இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பது காலத்தின் கட்டாயம்” - மருத்துவர் எழிலன் பேச்சு!

fg

சென்னையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் புத்தக கண்காட்சியில், அண்ணா தொடர்பான நூல் வெளியீட்டு விழா நேற்று (03.03.2021) நடைபெற்றது. விழாவில் திராவிட இயக்க ஆதரவாளர்களில் ஒருவரான மருத்துவர் எழிலன் கலந்துகொண்டு உரையாற்றினார். அவரின் உரை வருமாறு, "புத்தக கண்காட்சியில் பலவிதமான நூல்கள் வெளியிடுவார்கள்.அதுதொடர்பான கருத்துக்களை ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த கோணத்தில் தெரிவிப்பார்கள். அந்த வகையில், சென்னை புத்தக கண்காட்சி மட்டும் எப்போதும் அரசியல் கருத்துக்களை தெரிவிக்கும் ஒரு இடமாகவே தொடர்ந்து இருந்து வருகிறது. எல்லா அரசியல் கட்சிகளும் இங்கே ஸ்டால் அமைத்து, தங்களுடைய பிரச்சாரத்தை வெளியில் நடப்பதைப் போல் இங்கேயும் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அறிஞர் அண்ணா பற்றி அங்கே பேசும்போது, அரசியல் பேசாமல் எப்படி இருக்க முடியும். இது ஒரு அரசியல் மேடைதான். தமிழகத்தின் அரசியல் மேடைதான். தமிழக மக்கள் என்ன பேச வேண்டும் என்பதைத் தீர்மானித்த அண்ணா, நமக்கு அறிவு கொடை. அவரை நாம் கொண்டாடாமல் இருக்க முடியாது. புலி பாய்வதற்கு முன்னால் கொஞ்சம் பின்னோக்கி சென்று பிறகு பாயும். நாம் கூட பள்ளத்தைத் தாண்ட வேண்டும் என்றால், இரண்டு மூன்று அடிகள் பின்னோக்கி சென்று நாம் தாண்ட முயற்சிப்போம். அதனால்தான் இன்றைக்கு அண்ணா புத்தகத்தை தமிழ் ஆளுமைகளை வைத்து பேச வைக்கிறார்கள். அவர்களால்தான் இன்றைக்கு இளைஞர்களிடம் விரைவாக அண்ணாவின் கருத்தைக் கொண்டு சேர்க்க முடியும்.

Advertisment

இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தல்களை விட, இந்தத் தேர்தல் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல். நம்முடைய திராவிடக் கோட்டையை அகற்றெறியும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மத்திய பாஜக அரசு, தன்னுடைய ஆரிய சித்தாந்தத்தை தமிழகத்தில் திணிப்பதற்கான அனைத்து வேலைகளையும் அமைதியாக செய்துகொண்டிருக்கிறது. மற்றொரு கட்சியை அடிமையாக மாற்றிய பின்பு, இந்தத் தேர்தல் களத்தைச் சந்திக்க அவர்கள் தயாராகிக்கொண்டிருக்கிறார்கள். இது திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மட்டுமான தேர்தல் கிடையாது. இது தமிழக மக்களுக்கான தேர்தல், அவர்களை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு சேர்ப்பதற்கான தேர்தல். தமிழ்நாட்டின் நலத்திற்கான தேர்தல். அறிஞர் அண்ணாவைப் பாதுகாப்பதற்கான தேர்தல். அது ஏன் என்று நாம் பார்க்க வேண்டும். இந்த புத்தகத்தை இளைஞர்கள் படிக்கும் நோக்கில், நான்கு பிரிவாக தொகுத்து வழங்கி இருக்கிறார்கள். அண்ணாவின் சட்டமன்ற உரைகள், மேடை இலக்கியங்கள் என பல்வேறு தலைப்புகளில் அவரின் உரையைத் தொகுத்து வழங்கியிருக்கிறார்கள். இன்றைக்கு அவரின் கருத்துக்கள் தமிழ் சமூகத்துக்கு அவசியம் தேவைப்படுகிறது. இன்றைய இளைஞர்களுக்குத் திராவிடக் கருத்தியல் எளிதாகச் சென்று சேர நம்முடைய திராவிட முன்னோடிகள் அதற்கான வழிகளை இந்த மாதிரியான புத்தகங்கள் வாயிலாக தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்கள்.

Advertisment

ஏனென்றால் அண்ணாவின் பாதையும் அதுதான். சுயமரியாதை பாதையில் அதனால்தான் அவரால் தொடர்ந்து பயணிக்க முடிந்தது. அதன் ஒரு பகுதியாகவே திமுகவை அவரால் உருவாக்க முடிந்தது. மக்கள் நலன் சார்ந்து திமுக இருக்க வேண்டும் என்ற கொள்கை அடிப்படையிலேயே அதனை அவர் உருவாக்கினார். அவரின் இந்தப் பாதையைத்தான் நமக்கு அவர்கள் புத்தக வடிவில் கொடுத்துள்ளார்கள். இப்போது இருக்கின்ற அரசியல் சூழ்நிலைகளை அவரின் காலம் தொட்டு நாம் பொருத்திப் பார்க்க வேண்டும். நிறைய இடங்களில் வேல், அம்பு முதலியவற்றை ஆயுதமாக கொடுக்கிறார்கள். ஆனால் அய்யா இளவழகன் அவர்கள் இந்தப் புத்தகத்தைத் தமிழர்களுக்கு ஆயுதமாக கொடுத்துள்ளார். அதைப் பயன்படுத்த வேண்டிய பொறுப்பு நமக்கு அதிகம் இருக்கிறது. அந்த அறிவாயுதம்தான் நமக்கு எப்போதும் நிரந்தரமாக இருக்கும். காலங்காலமாக நம்மை சூழ்ந்துகொண்டிருக்கும் இந்த ஆரிய சூழ்ச்சிகளை அகற்ற, அந்த அறிவாயுதத்தை நாம் தூக்கிப் பிடிக்க வேண்டிய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. எனவே அவர்களின் அனைத்து சூழ்ச்சிகளை முறியடித்து நாம் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் பாதுகாக்க வேண்டிய கட்டாயம். எனவே அந்த முயற்சியில் நாம் வெற்றி பெறுவோம்" என்றார்.

Anna
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe