Advertisment

நமக்கு நல்ல சிக்னல் கிடைச்சிருக்கு..! அமைச்சர்களிடம் எச்சரிக்கை தொனியில் பேசிய எடப்பாடி!

ddd

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசின் இடைக்கால பட்ஜெட் இம்மாதம் 22-ந்தேதி தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது. சட்டமன்ற தேர்தல் காலம் என்பதால் இந்த இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகளை அளிக்க திட்டமிட்டு, என்ன மாதிரியான சலுகைகளை அறிவிக்கலாம் என பொருளாதார நிபுணர்களுடன் விவாதித்து முடித்திருக்கிறார் எடப்பாடி.

Advertisment

குறிப்பாக, "இந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் போது பெண்கள், இளைஞர்கள், புதிய வாக்காளர்கள் மற்றும் நடுத்தர மக்களின் நம்பிக்கையை தேர்தல் களத்தில் கவரும் வகையில் புதிய அறிவிப்புகள், இலவசங்கள், தள்ளுபடிகள் என சில பல அறிவிப்புகளை 110 விதியின் கீழ் அறிவிக்க முடிவு செய்துள்ளார் முதல்வர் எடப்பாடி'' என்கின்றனர் பேரவை செயலக அலுவலர்கள்.

Advertisment

இதுகுறித்து அமைச்சரவையின் ஒப்புதலைப் பெறுவதற்காக கேபினெட் கூட்டத்தை 13-ந்தேதி தலைமைச் செயலகத்தில் நடத்திய எடப்பாடி, தமிழக தொழில்துறை மூலம் நிறைவேற்ற வேண்டிய சில திட்டங்களுக்கு ஒப்புதலைப் பெற்றிருக்கிறார். கேபினெட்டின் ஒப்புதல் பெறுவதையும் கடந்து, அந்த கூட்டத்தில், தேர்தல் அரசியல் மற்றும் கட்சி அரசியல் குறித்து காரசாரமாக விவாதிக்கப்பட்டிருக்கிறது.

இந்த விவகாரம் கட்சியின் சீனியர்கள் மட்டத்தில் எதிரொலிக்கும் நிலையில், அது குறித்து நாம் விசாரித்தபோது, "கேபினெட் கூட்டம் முடிந்ததும் அதிகாரிகளை வெளியே அனுப்பிவைத்து விட்டு தேர்தலை சந்திப்பது பற்றி அமைச்சர்களிடம் விவாதித்துள்ளார் எடப்பாடி. அப்போது, உளவுத்துறை எனக்கு கொடுத்துள்ள சர்வே ரிப்போர்ட்டில், எந்த ஒரு கட்சிக்கும் 100 சதவீத ஆதரவு அலை வீசவில்லை. சர்வே எடுக்கும் போது ஒரு விதமாகவும், தனிப்பட்ட முறையில் பேசும்போது ஒரு விதமாகவும் கருத்துகளை வாக்காளர்கள் பதிவு செய்கிறார்கள். அதனால் தங்களின் விருப்பு வெறுப்புகளை ஓரங்கட்டி விட்டு தேர்தல் பணிகளில் மட்டும் அதிக கவனம் செலுத்தினால் மூன்றாவது முறையாக அ.தி.மு.க. ஆட்சி தொடர்வதற்கும் வாய்ப்பிருக்கிறது'' என உளவுத்துறை சொல்லியிருப்பதாக தெரிவித்துள்ளார் எடப்பாடி.

மேலும், ஒவ்வொரு தொகுதியிலுமுள்ள பிரச்சனைகள், வெற்றி-தோல்வியை தீர்மானிக்கும் விவகாரங்கள், மக்களின் எதிர்பார்ப்புகள் என பல விசயங்களை உளவுத்துறை தனது ரிப்போர்ட்டில் கொடுத்திருப்பதையும் பகிர்ந்து கொண்ட எடப்பாடி, அம்மா (ஜெ.) இருக்கும் போது தேர்தலில் எப்படி கவனம் செலுத்துவோமோ அதே தீவிரத்துடன் செயல்பட்டால் வெற்றி பெறலாம் எனும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

பொங்கல் பரிசாக 2,500 ரூபாய் கொடுத்தது, விவசாயிகளின் கடன் தள்ளுபடி ஆகியவை நமக்கு நல்ல சிக்னலை தந்திருக்கிறது. புதுசா நாம் சொல்லப்போகும் அறிவிப்புகளும் நமக்கு நல்ல ரிசல்ட்டை கொடுக்கும். அதனால், அமைச்சர்கள் தங்களின் விருப்பு வெறுப்புகளை ஓரங்கட்டிவிட்டு தேர்தல் பணி செய்யுங்கள். மீண்டும் ஒரு குடும்பத்தின் அதிகார வளையத்துக்குள் நாம் சிக்கிவிடக் கூடாது எனச் சொல்லியுள்ளார் .

அப்போது குறுக்கிட்ட துணை முதல்வர் ஓ.பி.எஸ்., "நாம் என்ன பேசுகிறோம்னு தெரியாமலே சில அமைச்சர்கள் பேசிவிடுகிறார்கள். அது சரியில்லை. சட்ட அமைச்சர் (சி.வி.சண்முகம்) சமீபத்தில் பேசியவை குறிப்பிட்ட சமூகத்தை இழிவு செய்வதாக இருக்கிறது. ஒருமையில் பேசுவதும் தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்துவதுமான பேச்சுகள் தவிர்க்கப்பட வேண்டும்'' எனச் சொல்ல, சீனியர் அமைச்சர்கள் சிலரும் ஓபிஎஸ்சின் கருத்தை ஆமோதித்ததோடு, "சட்ட அமைச்சர் அப்படி பேசியிருக்கக் கூடாது. அவரது வார்த்தைகள் ரொம்பவும் ஓவர்'' என ஆதங்கப்பட்டிருக்கிறார்கள்.

ddd

"நேற்றே அதற்கு வருத்தம் தெரிவித்துவிட்டேன்'' எனச் சொன்ன சி.வி.சண்முகம், "குறிப்பிட்ட சமூகத்தை மையப்படுத்தி நான் பேசவில்லை. என் பேச்சு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. என்னுடைய வார்த்தைகள் அவரை (டிடிவி தினகரன்) மையப்படுத்தி மட்டும்தான்'' எனச் சொல்லியிருக்கிறார்.

அப்போது, "இனி பேட்டி கொடுக்கும் போதோ, நிகழ்ச்சிகளில் பேசும் போதோ அமைச்சர்கள் கவனமாக இருக்க வேண்டும். யாரையும் ஒருமையில் பேசாதீர்கள். அநாகரீகமாக சின்னதாக நாம் நடந்துகொண்டால் கூட அதுதான் பெரிதாகக் காட்டப்படும். அநாகரீகமாக நாம் நடந்து கொள்வதைத்தான் எதிரிகள் எதிர்பார்க்கிறார்கள். அதற்குப் பலியாகிவிடாதீர்கள்'' என எச்சரிக்கை தொனியில் பேசியுள்ளார் எடப்பாடி" என்று அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு நடந்ததைச் சுட்டிக்காட்டுகிறார்கள் அதிமுகவின் சீனியர்கள்.

cnc

இந்த விவாதம் முடிந்ததும் ஒவ்வொரு அமைச்சரும் நாமக்கல் கவிஞர் மாளிகையின் கூட்ட அரங்கிலிருந்து வெளியேறி தங்களின் துறை அலுவலகத்திற்குத் திரும்பினர். சி.வி.சண்முகம், தங்கமணி, வேலுமணி மூவரும் காரிடாரில் பேசிக்கொண்டே நடந்தனர். அப்போது, "நிதானமிழந்து நான் பேசுவதாக தினகரன் சொல்கிறார். நிதானமிழந்துங்கிற வார்த்தை, கேட்க டீசண்டாக இருக்கலாம். ஆனா, அது என்னை கேவலப்படுத்துற வார்த்தைதானே? அதான், அப்படி பேசினேன்'' என்று ஆவேசப்பட்டிருக்கிறார்.

சண்முகத்தின் பேச்சு அ.ம.மு.கவில் மட்டுமின்றி, அதிமுகவில் சாதி ரீதியாகவும் எதிரொலிக்கத் துவங்கியுள்ளது. அதாவது, இரு பெரும் சமூகத்திற்கிடையே மோதலை உருவாக்க ஆட்சியாளர்கள் தரப்பில் சிலர் முயற்சிக்கிறார்கள். அதற்கு சண்முகத்தைப் பயன்படுத்துகின்றனர் என்கிற குரல் அதிமுகவிலுள்ள வன்னியர் சமூகத் தலைவர்களிடம் எதிரொலிக்கிறது.

ministers admk tn assembly election
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe