Skip to main content

ஒரு குடம் தண்ணிக்கு ரோடு ரோடா அலையுறோம்... ஆனா இந்த அரசியல்வாதிங்க... பொதுமக்களின் கண்டன குரல்கள்...

 

சென்னை வடபழனியில் வாடகை வீட்டில் நாங்க நான்கு பேர் தங்கியிருக்கோம். தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் நாங்கள் தண்ணீர் இல்லாத காரணத்தினால் கடந்த ஒரு வாரத்தில் இரண்டு நாள்தான் குளித்தோம். எங்களது உடைகளும் தண்ணீர் இல்லாமல் துவைக்க முடியவில்லை. அலுவலகத்திற்கு குளிக்காமல் போவதும், துவைக்காத உடைகளை மறுநாள் அணிந்து செல்வதற்கு கஷ்டமாக இருக்கிறது என்கிறார் ஒரு இளைஞர். 

 

Water shortage


பல்லாவரத்தில் அதிகாலை 3 மணிக்கு சைக்கிள்களிலும், பைக்குகளிலும் பிளாஸ்டிக் குடங்களை கட்டிக்கொண்டு அலைந்தாலும் தண்ணீர் கிடைக்கவில்லை என்கிறனர் பொதுமக்கள். டீ கிளாஸ்ஸில் டீ கொடுத்தப் பிறகு அதனை கழுவி சுத்தம் செய்ய தண்ணித் தட்டுப்பாடா இருக்கு... பிளாஸ்டிக் கப்பிலும் டீ கொடுக்கக்கூடாதுன்னு சொல்றாங்க என்கிறார் ராயப்பேட்டையில் டீக்கடை வைத்துள்ள ஒரு வியாபாரி. குளிப்பதற்காக தண்ணீர் வருவதற்காக அரை மணி நேரம் காத்திருந்தேன் என பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் மேடையிலேயே பேசியிருக்கிறார். ராயப்பேட்டை, வடபழனி, பல்லாவரம் மட்டுமல்ல, சென்னை மற்றும் புறநகர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகம் முழுவதும் இதே நிலைதான். 
 

சமைக்கும்போது, காய்கறிகளை சுத்தம் செய்யும்போது, காலையில் பல் துலக்கும்போது, குளிக்கும்போது, துணி துவைக்கும்போது, முகசவரம் செய்யும்போது தண்ணீரை எப்படி பயன்படுத்த வேண்டும், தண்ணீரை சேமிப்பது எப்படி என்று இணையதளங்களில் பொதுமக்களுக்கு சொல்லப்பட்டும் வருகிறது. அதற்கு தண்ணீர் இருந்தாதானே இதையெல்லாம் செய்வதற்கு என்று பதில் கமெண்டுகளும் வருகின்றன. 
 

கடுமையான வெள்ளம் ஏற்படும்போது, கடுமையான புயல் ஏற்படும்போது எந்த ஆட்சி இருந்தாலும் அரசு நிர்வாகத்தில் உள்ளவர்கள், அமைச்சர்கள் வெள்ளப்பாதிப்பை பார்வையிடுவது மாதிரி வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுப்பார்கள். ஆனால் மக்களுக்கு எந்த தீர்வும் கிடைக்காது. அதைப்போலவே தண்ணீர் தட்டுப்பாடு வரும் நேரத்தில் அதுகுறித்து ஏசி அறையில் ஒரு சில அமைச்சர்களை வைத்து பேசுவது, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, உத்தரவிடப்பட்டுள்ளது என பேட்டி கொடுப்பது போன்றவைதான் நடக்கிறது. அரசின் இந்த போக்கு ஒவ்வொரு தெருவிலும் வைத்திருக்கும் காலி குடங்களை நிரப்புமா? 


 

 

ஒவ்வொரு எம்எல்ஏவும், அமைச்சரும் தங்கள் தொகுதியில் உள்ள எந்த பகுதிக்கு இன்று தண்ணீர் சென்றது. நேற்று எந்த பகுதிக்கு சென்றது. நாளைக்கு எந்தப் பகுதிக்கு செல்ல வேண்டும் என்று கணக்கு எடுக்கிறார்களா? வீதியில் இறங்கி சென்று தண்ணீர் நேற்று வந்ததா என்று விசாரிக்கிறார்களா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 

இந்த நிலையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் பலர் வெளிநாடு சுற்றுலா சென்றுள்ளார்களாம். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இயற்கை முறையில் சிகிச்சை பெறுவதற்காக கோவை சென்றார். அங்கு அவருக்கு டாக்டர்கள் இயற்கை மருத்துவ முறையில் புத்துணர்வு சிகிச்சை அளித்தனர். அவர் தொடர்ந்து ஒரு வாரம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுகிறார். 

 

o panneerselvamபல கிராமங்களில் குடிநீருக்கு தண்ணீர் இல்லாமல், பல கி.மீ.தூரம் சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர். ஒரு குடம் தண்ணிக்கு ரோடு ரோடா மக்கள் அலைகின்றனர். மக்கள் இந்த அளவுக்கு வேதனையை அனுபவித்து வரும் நிலையில், அது குறித்த எந்தவித கவலையும் இல்லாமல் துணை முதல்வர் புத்துணர்வு சிகிச்சை பெறுவது அவசதியம்தானா? இப்போது இது தேவையா? என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 
 

இதுதொடர்பாக அதிமுகவினரை விசாரிக்கும்போது, ஒவ்வொரு ஆண்டும் மே அல்லது ஜூன் மாதம் ஓ.பன்னீர்செல்வம் கோவை வருவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு இயற்கை முறையில் புத்துணர்வு சிகிச்சை பெறுவதற்காக வந்திருக்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தண்ணீர் பிரச்சனை குறித்து ஆலோசனை நடந்தது. அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றனர். 

 


 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்