அமெரிக்க அதிபர் பதவி என்பது உலகிலேயே அதிதீவிரமாக கவனிக்கப்படும் பதவிகளில் ஒன்று...இப்பதவியில் இருப்பவரின் செயல்கள் உற்று நோக்கப்படுவதையும் தாண்டி, பெரும் தாகத்தை ஏற்படுத்தும். ஏற்கனவே, இந்தப் பதவி அதிகம் கவனிக்கப்படும்போது, தற்போது அதிபராக இருக்கும் டிரம்ப் கூடுதல் கவனத்தின் மீது அதிக ஈர்ப்புடையவர்.
சரியோ, தவறோ, சட்டப்படியோ, சட்டவிதிமீறலோ, நட்போ, பகையோ, தான் எதில், என்ன செய்தாலும் அது கூடுதல் கவனம் பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர். பொய்யே சொன்னாலும் பரவாயில்லை, தான் பேசுபொருளாக இருக்கவேண்டும் என நினைப்பவர். அவரின் ஒவ்வொரு முடிவிலும், ஒவ்வொரு பேச்சிலும் இது வெளிப்படும். தன் செயல்கள் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும், எப்படி நாட்டை பாதிக்கும் என்பதைப்பற்றி அவர் பெரிதாக கவலைப்படமாட்டார்.
தன்னை எப்போதும் பல்வேறு நாட்டு தலைவர்களும், மக்களும் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள் என தெரிந்தும் அவர் பல சர்ச்சைகளை ஏற்படுத்துவதுண்டு. அப்படி ஒன்றைத்தான் தற்போது அவர் செய்து ஒரு அரசியல் புயல் ஏற்படுத்தியுள்ளார். AI-யை வைத்து உருவாக்கப்பட்ட ஒரு போலி காணொளியை பகிர்த்துள்ளார் டிரம்ப். இந்த காணொளி பொய் என எனத் தெரிந்தும், 'பரவாயில்லை, நம்மை யார் கேட்பார்கள்' என்ற மனநிலையில் பகிர்ந்துருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அவர் தனது சமூக வலைத்தளமான ட்ரூத் சோசியலில் பகிர்ந்த போலி காணொளியில், முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா FBI அதிகாரிகளால் கைதுசெய்யப்படுவது போல காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த காட்சிகள் மூலம் டிரம்ப் எதிர்பார்த்த 'கவனிப்பை' இந்த பதிவு பெற்றுள்ளது. ஒருபுறம், டிரம்ப் ஆதரவாளர்கள் இந்த போலி காணொளியை கொண்டாடினாலும், மறுபுறம், டிரம்ப், அதிபர் பதவியை நகைப்புக்குரியதாக மாற்றுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதில், நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விவகாரம் என்னவென்றால் இந்த AI வீடியோ டிக்டாக் பயனாளி ஒருவரால் உருவாக்கப்பட்டிருப்பதும், இந்த காணொளியில் டிக்டாக் பெயர் இருப்பதும்தான். அதையும்தாண்டி, டிரம்ப், ஒபாமா கைதுசெய்யப்படுவதுபோல இருக்கும் காணொளி, 'சித்தரிக்கப்பட்டவை' என்று கூட குறிப்பிடவில்லை. இது அவருடைய இயல்பான பாணி தான்...ஆனால், நான் நினைத்தால் ஒரு முன்னாள் அதிபரையே கைது செய்ய முடியும் என்பதை அவருடைய அரசியல் நண்பர்களுக்கும், எதிரிகளுக்கும் காட்டவே இதை பகிர்ந்தார் என்றும் கூறப்படுகிறது.
டிரம்ப் பகிர்ந்த காணொளி, உண்மையான வீடியோக்களும், AI வீடியோக்களும் கலந்த ஒரு கலவையாக இருக்கிறது. வீடியோவில், பராக் ஒபாமா, ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் பேசுவதுபோலவும், அதில் அவர் 'அதிபர் சட்டத்திற்கு மேலானவர்' எனக் கூறுவது போலவும் இருக்கிறது. இதற்கு பிறகு, பல முக்கிய ஜனநாயகக் கட்சி தலைவர்கள், முன்னாள் அதிபர் பைடன் உட்பட்ட, 'யாரும் சட்டத்திற்கு மேலானவர்கள் கிடையாது' என கூறுகிறார்கள்.
இதைத்தொடர்ந்து வரும் AI காணொளி, டிரம்பும், ஒபாமாவும் வெள்ளை மாளிகையில் அமர்த்திருப்பதுபோலவும், பிறகு அங்கு வரும் இரண்டு FBI அதிகாரிகள் ஒபாமாவை முட்டியிடவைத்து கைதுசெய்வது போலவும், அதை கண்டு டிரம்ப் சிரிப்பது போலவும் இருக்கிறது. இந்த வீடியோ வைரலான பிறகு, யாருமே சட்டத்திற்கு மேலானவர்கள் இல்லை எனவும், ஒபாமாவை உடனடியாக கைது செய்யவேண்டும் எனவும் குடியரசுக் கட்சியினர் வலியுறுத்துகின்றனர்.
இந்த போலி வீடியோ, ஒபாமா, கைதிகள் உடுத்தும் ஆரஞ்சு உடையுடன் ஒரு சிறையில் இருப்பது போன்ற காட்சிகளுடன் முடிகிறது.
ஒபாமாவிற்கு ஏன் திடீர் எதிர்ப்பு? இந்த காணொளியின் பின்னணி என்ன?
டிரம்ப் இந்த வீடியோவை வெளியிட்டதற்கு பின்னணி காரணமும், குடியரசுக் கட்சியினரின் இந்த திடீர் ஒபாமா எதிர்ப்பிற்கு பின்னணியில் உள்ள காரணமும் ஒன்றுதான் - அது அமெரிக்காவின் உளவுத்துறையின் தலைவரால் சமீபத்தில் பகிரப்பட்ட கருத்துதான். அமெரிக்காவின் உளவுத்துறை தலைவராக இருக்கும் துளசி கப்பார்ட் ஜனநாயகக் கட்சியிலிருந்து, குடியரசுக் கட்சிக்கு வந்து, பின்பு தீவிர டிரம்ப் விசுவாசியாக மாறினார். அந்த விசுவாசத்திற்கு டிரம்ப் கொடுத்த பரிசுதான் உளவுத்துறை தலைவர் பதவி.
சமீபத்தில், தன்னுடைய பதவியின் இறுதி காலத்தில், ஒபாமாவும் அவருடைய அதிகாரிகளும் டிரம்பிற்கு எதிராக செயல்பட்டதாக கப்பார்ட் கூறினார். 2016ஆம் ஆண்டு ஒபாமாவின் பதவிக்காலம் முடிவிற்கு வந்தது. அந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் டிரம்பும், ஹிலாரி கிளின்டனும் மோதினர். இறுதியில், டிரம்ப் வெற்றிபெற்றார். அப்போது நடைபெற்ற தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாகவும், ரஷ்ய உளவாளிகள் ஹிலாரிக்கு எதிராக மறைமுக பிரச்சாரம் மேற்கொண்டதன் விளைவாகவே டிரம்ப் அந்த தேர்தலில் வெற்றிபெற்றார் என கருதப்பட்டது.
இது அமெரிக்காவில் பெரும் புயலை வீசியது. அப்போது, முதல்முறையாக அதிபரான டிரம்பிற்கு இந்த விவகாரம் ஒரு பலத்த அடியாக அமைந்தது. பின்னாட்களில், ரஷ்யாவின் சைபர் முயற்சிகளால் அமெரிக்க அதிபர் தேர்தல் பாதிக்கப்படவில்லை என உறுதியான அறிக்கையும் வந்தது. அதிபர் டிரம்ப் அப்போதிலிருந்து தற்போதுவரை ஒரு சர்ச்சை நாயகராக இருந்தாலும், இந்த ரஷ்ய தலையீடு விவகாரம் அவருக்கு ஒரு பின்னடைவாக அமைந்தது. இந்த விவகாரத்தில் தான், சமீபத்தில் துளசி கப்பார்ட், ரஷ்ய தலையீடு என்பது ஒபாமா மற்றும் அவரது அதிகாரிகளால் டிரம்பின் வெற்றிக்கு எதிராக உருவாக்கப்பட்ட ஒரு தியரி என குறிப்பிட்டிருந்தார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/07/21/d-2025-07-21-18-47-55.jpg)
டிரம்பின் ஆட்சியை கவிழ்ப்பதற்காக ஒபாமா மற்றும் அவரது மூத்த அதிகாரிகள் 2016ஆம் ஆண்டு, அமெரிக்க உளவுத்துறையை தங்களது அரசியல் ஆயுதமாக பயன்படுத்தினர் என்றும், இது அமெரிக்க மக்களின் விருப்பத்திற்கு எதிராகவும், அமெரிக்காவின் இறையாண்மைக்கு எதிராகவும் இருக்கும் செயல் எனவும் கப்பார்ட் குற்றம்சாட்டினார். இது ஒரு சதிச்செயல் எனவும் தேசதுரோகம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
கப்பார்டின் குற்றச்சாட்டிற்கு வலுசேர்க்கும் விதமாக, டிரம்ப் சமீபத்தில், ஒபாமாவை ஒரு மிகப்பெரிய தேர்தல் மோசடிக்காரர் என குற்றம்சாட்டினார். அதைத்தொடர்ந்துதான், இப்போது டிரம்ப், ஒபாமா கைது செய்யப்படுவதுபோல் ஒரு AI காணொளியை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை தொடர்ந்து, டிரம்ப் நிர்வாகம் ஒபாமாவின் மீது நடவடிக்கை எடுக்கப்போகிறதா என கேள்விகள் எழுந்துள்ளன.
டிரம்பிற்கு தற்போது இருக்கும் டிக்டாக் பாசமும், முன்பிருந்த எதிர்ப்பும்:
AI-யால் ஒரு நிகழ்வை எப்படிவேண்டுமானாலும் போலியாக, செயற்கையாக உருவாக்கமுடியும். ஆனால், அதிகாரமிக்க பதவியிலிருக்கும் ஒரு அதிபர் AI காணொளிகளை எப்படிவேண்டுமானாலும் பகிரலாமா? அது அவரின் அதிபர் பதவிக்கு ஒரு இழுக்கு ஆகாதா? என்பதே இங்கும் எழும் கேள்வி. ஒரு அதிபரே போலியான ஒரு வீடியோவை பகிர்ந்தால், அது மற்றவர்களை ஊக்குவிக்கும், சமூக வலைத்தளங்கள் முழுவதும் போலிகளே நிரம்பி வழியும் என டிரம்ப் எப்படி கணிக்காமல், யோசிக்காமல் விட்டார் எனவும் கேள்வி எழுகிறது.
மேலும், தற்போது டிரம்ப் தன்முன் இருக்கும் குற்றச்சாட்டுகளை திசைதிருப்ப, இந்த போலி காணொளியை பகிர்த்ததாகவும் கூறப்படுகிறது. எந்த டிக்டாக்கை டிரம்ப் ஒரு காலத்தில் எதிர்த்தாரோ, அதே டிக்டாக்கை தற்போது ஆதரித்து, அதில் வெளியாகும் வீடியோக்களை அவர் பகிர்ந்துவருகிறார். 2020இல், டிக்டாக் சீனாவை சேர்ந்தது எனவும், அதன்மூலம் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் டிரம்ப் கூறிவந்தார்.
அமெரிக்கர்களின் அந்தரங்க விவகாரங்களை சீன கம்யூனிஸ்ட் கட்சி, டிக் டாக் செயலி மூலம் திருடுவதாக குற்றம்சாட்டினார். சில ஆண்டுகளுக்கு பிறகு, டிக்டாக்கை தன்னால் மட்டுமே காப்பாற்றமுடியம் என்று டிரம்ப் கூறத்தொடங்கினார். இந்த மாற்றத்திற்கு பின்னிருந்த காரணம், இளைஞர்களின் வாக்குவங்கி. அமெரிக்காவில் பெரும்பாலான இளைஞர்கள் டிக்டாக்கை பயன்படுத்துகின்றனர். மேலும், இவர்கள் டிரம்பின் டிக் டாக் எதிர்ப்பை விரும்பவில்லை. இந்த இளைஞர்களின் வாக்குகளை கவர, டிக்டாக்கை ஆதரித்து, டிக் டாக்கில் டிரம்ப் செய்த பிரச்சாரம் அவருக்கு 2024 தேர்தல் கைகொடுத்ததுமட்டுமின்றி, அது ஒரு வரலாற்று நிகழ்வாகிப்போனது.
டிரம்பின் சமூக வலைதள அரசியல் முதல், தற்போது, அவர், டிக்டாக்கில் வெளிவந்த ஒரு போலியான காணொளியை, அது 'சித்தரிக்கப்பட்டது' எனக்கூட குறிப்பிடாமல் பகிர்ந்திருப்பது வரை என நாம் பார்ப்பது எல்லாம் அந்த வரலாற்றின் ஒரு நிகழ்வுதான்.
-அழகு முத்து ஈஸ்வரன்