/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/walt1.jpg)
இன்றைய நவீன அனிமேஷன் துறைக்கு முன்னோடி எட்வர்ட் முய்பிரிட்ஜ்தான். 1872ல் ஓடும் குதிரையை பனிரெண்டு புகைப்பட கேமராக்களை தொடர்ச்சியாக வைத்து படம் பிடித்த அவரது சோதனைதான் உலகின் முதல் அனிமேஷன் படம் என்று கூறப்படுகிறது. இதன் பின்னர், 1900-களில், அனிமேஷன் குறும்படங்கள் தயாரிக்கப்பட்டன. படக்கதைகளுக்கு (Comics - காமிக்ஸ்) வரைவது போன்று ஒவ்வொரு காட்சி துண்டுகளாக வரையப்பட்டு, அதை இணைத்து ஒளிப்படமாக காண்பிக்கப்பட்டது. 1906ல் உருவாக்கப்பட்ட ‘Humorous Phases of Funny Faces’ என்னும் குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அரிதிலும் அரிதாக இன்றும் அப்படம் காணக்கிடைக்கிறது. 1914ல் ‘Winsor McCay’ என்னும் ஓவியர் ‘Gertie the Dinosaur ’ அனிமேஷன் கார்டூன் குறுந்திரைப்படம் உருவாக்கினார். இதையடுத்து, அனிமேஷன் துறை அடுத்தடுத்த வளர்ச்சியை எட்டியது. 1937ல் ‘Snow White and the Seven Dwarfs’ என்று ஒரு முழு நீளத்திரைப்படமாக அனிமேஷன் பரிமாணித்தது. இது வால்ட் டிஸ்னியின் சினிமா.
இன்று நவீன தொழில்நுட்பத்தில் அனிமேஷன் படங்கள் உருவாக்கப்பட்டாலும், அன்றைக்கு அத்தனை கதாபாத்திரங்களுக்கும் கைகளாலேயே வரைந்து உயிர் கொடுத்தவர் டிஸ்னி. அவர் தன்னுடைய கதாபாத்திரங்களுக்கு மட்டுமல்ல, திரைத்துறையில் அனிமேஷன் துறை பிரிவிற்கே உயிர் கொடுத்தவர்.
உலகம் முழுவதிலும் உள்ள மனிதர்களை சிரிக்கவைத்துவிடும் மந்திரக்காரன் சார்லி சாப்ளின். அந்த மாமனிதனுக்கு இணையாக உயிரற்ற ஒன்று உலகை சிரிக்க வைத்திருக்கிறது. அதுதான் மிக்கி மவுஸ் (Mickey Mouse). இதை உருவாக்கியவர் வால்ட் டிஸ்னி. கற்பனை உலகை கொடி கட்டி பறக்க வைத்த அந்த கதாபாத்திரம் மிக்கி மவுஸ், பெரியவர்களைகூட குழந்தைகளாக மாற்றி சிரிக்க வைத்தது. அந்த மந்திர கதாபாத்திரத்தை உலகுக்கு தந்தவர் வால்ட் டிஸ்னி. சார்லி சாப்ளினின் சாயலில்தான் அந்தப் பாத்திரத்தை உருவாக்கியதாகப் பின்னாளில் கூறினார் வால்ட் டிஸ்னி. தனக்கு மிகவும் விருப்பமான திரைப்பட நாயகன் சார்லி சாப்ளினைப்போல் டிஸ்னி பள்ளியில் நடித்துக்காட்டுவார். அந்த அளவிற்கு சாப்ளின் மீது ஈடுபாடு கொண்ட டிஸ்னி, சாப்ளினைப்போலவே ஒரு கற்பனை கதாபாத்திரத்தை உருவாக்கியது இன்றளவும் ஈடு இணையற்ற ஒன்றாக ரசிக்கப்படுகிறது.
அனிமேஷன் துறையில் ஆளுமைமிக்க படைப்பாளியாய் வென்ற டிஸ்னியின், கனவுலகம்தான், ’டிஸ்னி வேர்ல்ட்’. அது கற்பனைப் பாத்திரங்களின் நிஜ உலகம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/walt3.jpg)
தீராக்காதல்:
ஒரு எலி, ஒரு வாத்து. இந்த இரண்டும் சேர்ந்து ஒரு மனிதனை உலகம் கொண்டாடும் அளவிற்கு உயர்த்தியது. பறவைகள் மீதும் விலங்குகள் மீதும் தீராக்காதல் கொண்ட வால்ட் டிஸ்னி, அப்பறவைகளாளும், விலங்கினாலுமே உயர்ந்தார்.
ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர் வால்ட் டிஸ்னி. சிகாகோவில், 5.12.1901ல் இலியாஸ் டிஸ்னி - ஃப்ளோரா தம்பதியரின் நான்காவது மகனாகப்பிறந்தார் வால்ட். ரயில்வே பணியின் காரணமாக, வால்ட்டின் தந்தை ஊருக்கு ஊர் மாறிக்கொண்டே இருந்தார். சிகாகோவில் இருந்து எலியாஸ் டிஸ்னி, தனது குடும்பத்தை மிஸ்ஸுரிக்கு மாற்றினார். அப்போது வால்ட் டிஸ்னிக்கு வயது ஆறு. அங்கே, வீட்டின் அருகில் கிடைத்த சிவப்புக் களிமண்ணைப் பயன்படுத்தி, பொம்மைகள் செய்து, அதை பேசவைக்கிறேன் என்று நண்பர்கள் கூட்டத்தை கூட்டி. பொம்மைகளை வைத்துக் கொண்டு, குரலை மாற்றி மாற்றிப் பேசினார். முன்னதாக, நான்கு வயதில் இருந்தே ஓவியம் வரையத் தொடங்கிவிட்டார் வால்ட்.
இளம் வயதில் தூங்கிக்கொண்டு இருந்த ஆந்தையை பிடிக்க போய் அது இவருடன் போராடி உயிரைவிட்டது, அப்போதிலிருந்து மிருகங்கள், பறவைகள் மீது எல்லையில்லாத காதல் கொண்டார் வால்ட் டிஸ்னி. ஆட்ஷிஸன் என்ற ஊருக்கு எலியாஸ் குடிபெயர்ந்தார். விவசாயம் சார்ந்த அந்த நகர்ப் பகுதியில் முயல் வளர்ப்பு, வெள்ளைப் பன்றிகள், கோழிப் பண்ணை, மாட்டுத் தொழுவம் என நிறைய இருந்தன. விதவிதமான விலங்குகளோடு நாள் முழுதும் கும்மாளம் அடித்தார் டிஸ்னி. குளக்கரையில் வாத்துகளுடனும், வெள்ளை எலிகளைத் துரத்தியும் விளையாடினார். வீட்டில் நண்பர்களைச் சேர்த்துக்கொண்டு, ஜன்னல் வழியே விழும் சூரிய ஒளி மூலம், தனது கைகளால் சுவரில் விதவிதமான விலங்குகளை நிழலாகக் காட்டினார்.
முதலாம் உலகப்போர் சமயத்தில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றியபோது, வண்டி முழுக்க விலங்குகள் விதவிதமான வடிவங்களில் வரையப்பட்டு இருக்கும். அது அவரை உந்தித்தள்ளியது . தொடர்ந்து கார்டூன்கள் வரைந்துகொண்டே இருந்தார் வால்ட்.
அமெரிக்காவின் கான்சாஸ் நகரில் வால்ட் டிஸ்னி வசித்த பொழுது எலிகளை வளர்த்தார். தெருவில் இருந்த தொட்டியில் இவர் போடும் சாப்பாட்டு மிச்சங்களுக்காகவே தினமும் காத்திருக்கும் எலிக்கூட்டம். அந்த எலிக்கூட்டத்தில் பிரவுன் கலர் எலி வால்ட்டுக்கு ரொம்ப செல்லம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/walt4.jpg)
மிக்கி மவுஸ்:
சுய விருப்பத்தின் பேரில் ஓவியங்கள் வரைந்துகொண்டிருந்த வால்ட்டுக்கு அதுவே தொழிலானது. பத்திரிகைகளுக்கு கார்ட்டூன் வரையும் பணி கிடைத்தது. ஆலிஸ் நாடகங்களுக்கு கார்ட்டூன் வரையும் ஒப்பந்தம் கிடைத்தது வால்ட் வாழ்வின் திருப்புமுனையாக அமைந்தது. அத்துடன், தன்னிடம் பணிபுரிந்த வில்லியன் மீது காதல் கொண்டதால், வால்ட்டின் கல்யாணமும் இனிதே முடிந்தது.
அபாரமான கற்பனைத் திறனுடன் அசையாச் சித்திரங்களை அடுக்கடுக்காய் வரைந்து கொண்டிருந்த வால்ட் டிஸ்னிக்கு அசைவுகள் நிரம்பிய வாழ்வில் ஆசை வந்தது. உயிரற்ற கற்பனை கதாபாத்திரங்களை உயிருடன் நடமாடவிட்டால் எப்படி இருக்கும் என்ற கற்பனை வந்தது. உயிரற்ற பாத்திரங்களை,கார்ட்டூன்களை அசையவிட்டு, பேசவைக்கும் முயற்சியில் இறங்கினார். இதற்காக,1922ல் தனது 21வது வயதில், வால்ட் டிஸ்னி என்ற தனது முதல் நிறுவனத்தை சகோதரர் ராய் உடன் சேர்ந்து ’லாஃப் ஓ கிராம்’ ஸ்டூடியோவை தொடங்கினார். தனது மாமாவிடம் 500 டாலர் கடனாக பெற்று அந்த நிறுவனத்தை ஆரம்பித்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/walt10_0.jpg)
கேலிச்சித்திர படங்களை உருவாக்குவதில் சோதனை செய்து பார்த்த அவர் Alice in Cartoon land என்ற கார்ட்டூன் படத்தை தயாரித்தார். அது தோல்வியைத் தழுவியது. மனம் தளராத வால்ட் டிஸ்னி அடுத்து Oswald the Lucky Rabbit என்ற புதிய கேலிச்சித்திரத்தை உருவாக்கினார். அது ஓரளவுக்கு சிறப்பாக அமைந்தாலும் அதன் உரிமையை இன்னொருவர் வாங்கிக்கொண்டு டிஸ்னியை ஏமாற்றினார். மேலும் பல முயற்சிகள் செய்தபோது, அவற்றை பார்த்த பலர், இது கற்பனை வறட்சி என்று ஒதுக்கினர்.
தோல்விகள் துரத்தியடித்துக்கொண்டிருந்த அந்த நேரத்தில் ஒரு ரயில் பயணம். கலங்கிய கண்களுடன் ஒரு இடத்தை வெறித்தார். அங்கே ஒரு எலி எதையோ கொறித்துக்கொண்டிருந்தது. அப்போது வால்ட்டுக்கு தனது பிரவுன் கலர் எலியும், அதன் சேட்டைகளும் நினைவுக்கு வந்தன. அந்த துன்ப வேளையில், எலியின் சேட்டைகள் நினைவுக்கு வந்தபோது தனது கனவு நாயகன் சார்லி சாப்ளினும் நினைவுக்கு வந்தார். வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு, சிரித்தார் வால்ட். அப்போதே பென்சிலை எடுத்து வரைந்தார். மனிதனின் சாயலில்( சார்லி சாப்ளின்) ஒரு எலியை உருவாக்கினார். அதற்கு மார்டிமர் மவுஸ் என பெயர் வைத்தார். அப்பெயர் நன்றாக இல்லை என அவரின் மனைவி வைத்தப்பெயர் தான் ’மிக்கி மவுஸ்’.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/walt.jpg)
ரயில் பயணம் முடிந்ததும், தொடர்ந்து நாம் சொந்தமாக தொழில் செய்வோம். நமக்கு கைகொடுக்கப் போவது ஓர் எலி. யாருக்கும் அதை தாரை வார்க்க வேண்டாம். அது நமக்கே சொந்தமாக இருக்கும் என்று சகோதரர் ராயிடம் கூறினார் வால்ட். அப்போது உலகுக்கு அறிமுகமான அந்த அதிசய எலிதான் மிக்கி மவுஸ். முகம், இரண்டு பெரிய காதுகள் என வெறும் மூன்று வட்டங்களால் உருவானது மிக்கி மவுஸ். பிறந்த ஓரிரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே அது உலகப்புகழ் பெற்றது.
வால்ட் டிஸ்னியின் பக்கம் ஹாலிவுட்டின் கவனம் திரும்பியது. மிக்கிக்கு உருவம் தந்த டிஸ்னிதான் அதற்கு குரலும் கொடுத்தார். அவர் அடுத்தடுத்து தயாரித்த Steamboat Willie, The Skeleton Dance போன்ற கேலிச்சித்திரங்களில் அந்த மிக்கி அடித்த லூட்டிகளையும் அதன் சேட்டைகளையும் இமை கொட்டாமல் மக்கள் பார்த்து ரசித்தனர், குழந்தைகள் கற்பனை வானில் சிறகடித்துப் பறந்தனர். பெரியவர்கள் மீண்டும் குழந்தைகளாகி தங்கள் கவலைகளை மறந்து சிரித்தனர். அந்த எலியை உருவாக்கியதற்கு அவருக்கு சிறப்பு ஆஸ்கர் வழங்கப்பட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/walt9.jpg)
1932-ல் டிஸ்னி உருவாக்கித்தந்த 'Flowers and Trees' என்ற திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. மிக்கி மவுஸ் என்ற சுட்டி எலியை தந்த டிஸ்னி கேலிச்சித்திர உலகில் அடுத்து அறிமுகப்படுத்திய வெற்றி கதாபாத்திரம் 'Donald டொனால்ட் டக் என்ற வாத்து. அந்த வாத்தும், எலியும் செய்த சேட்டைகளை எண்ணி இன்றும் தன்னை மறந்து சிரிப்பவர்கள் ஏராளம். 1937-ல் Snow White and the Seven Dwarfs என்ற முழுநீள கேலிச்சித்திரத்தை வழங்கினார் டிஸ்னி. அதற்கு அப்போது ஆன செலவு ஒன்றரை மில்லியன் அமெரிக்க டாலர். அவ்வுளவு பொருட்செலவில் உருவான அந்தப்படம் மிகப்பெரிய வசூல் சாதனையை செய்தது. ’ஸ்னோ வைட்டும் ஏழு குள்ளர்களும்’ படத்துக்கு பத்து லட்சம் படங்கள் வரையப்பட்டு இரண்டு லட்சம் படங்கள் மட்டுமே பட உருவாக்கத்தில் பங்கு பெற்றன. கச்சிதம்,கடும் உழைப்பு எல்லாமும் சேர்ந்து உலகம் பார்க்காத பெரிய வெற்றியை தந்தன. அதன் பின்னர் Pinocchio, Fantasia, Dumbo, Bambi போன்ற புகழ்பெற்ற கேலிச்சித்திர படங்களை அவர் உருவாக்கினார்.
மிக்கி மௌஸ், டொனால்ட் டக் போன்ற கார்ட்டூன் கதாபாத்திரங்களை உருவாக்கி திரைப்பட இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் உயர்ந்த வால்ஸ் டிஸ்னி, 26 ஆஸ்கார் விருதுகளும், 7 எம்மி விருதுகளும் பெற்றுள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/walt2.jpg)
கனவு உலகம்:
திரையில் மட்டுமே காட்ட முடிந்த கற்பனை உலகை நிஜமாக்கி காட்ட விரும்பிய டிஸ்னி, 1955-ல் 17 மில்லியன் டாலர் செலவில் மிகப்பிரமாண்டமான 'Disneyland Park' என்ற பொழுதுபோக்குப் பூங்காவை அமெரிக்காவில் உருவாக்கினார். ஒவ்வொரு குழந்தையும் சென்று பார்த்து வர விரும்பும் கனவுலகம் அது. முதல் 25 ஆண்டுகளில் பல உலகத்தலைவர்கள் உட்பட 200 மில்லியன் பேர் கண்டு ரசித்தனர் அந்த உலகத்தை.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/walt5.jpg)
வறுமையால் ரயில் வண்டியில் கூட ஏற முடியாத அளவுக்கு ஏழ்மையில் வளர்ந்த வால்ட் டிஸ்னி, தனது 60வது வயதில் வீட்டில் தனியாக ஒரு டிராக் வைத்து ரயில் வண்டி விடுகிற அளவிற்கு உயர்ந்தார். கற்பனை என்ற சொல்லுக்கு புது அர்த்தம் கொடுத்து, அசையும் சித்திரங்களையும், பேசும் சித்திரங்களையும் உருவாக்கி, அனிமேஷன் துறையின் பிதாமகனாக விளங்கி்ய வால்ட் டிஸ்னி, புற்றுநோய்வாய்ப்பட்டு 15.12. 1966-ல் தமது 65-வது வயதில் அசையாச்சித்திரம் ஆனார்.
- கதிரவன்
Follow Us