Skip to main content

“இரண்டு நாட்கள் உணவு கொடுக்கலாம்னு நெனச்சோம் ஆனால்...” -செங்கல்பட்டு சேவை இளைஞர்கள்

chengalpattu

 

கிட்டதட்ட நான்கு மாத ஊரடங்கு யாரும் எதிர்பார்க்காத ஒன்று. நாட்டின் பொருளாதாரத்தையும், தனிமனித பொருளாதாரத்தையும் இது அசைத்துப்போட்டுவிட்டது என்றே சொல்லவேண்டும். உணவுக்கு வழியில்லாமல், சொந்த ஊர்களுக்கு செல்ல வழியில்லாமல் நடுத்தெருவில் நின்றவர்கள் ஏராளம். நோய் வந்து இறக்கும் முன், பசியால் இறந்துவிடுவோம் என்று அலறியவர்கள் பலர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், சிலர் தன்னார்வலர்களாகவும், தன்னார்வ அமைப்புகளாகவும் செயல்பட்டு அப்படிப்பட்ட மக்களின் பசியை தங்களால் முடிந்த அளவு தீர்த்து வருகின்றனர். அப்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் கிட்டதட்ட 30,000 பேருக்கு உணவளித்த ஒரு தன்னார்வ குழுவின் முன்னெடுப்பாளர் நிர்மல், நம்முடன் பகிர்ந்துகொண்ட கருத்துகள்...

 

மார்ச் 25 முதல் ஜூலை 5 வரை கிட்டதட்ட 30,000 பேருக்கு உணவு கொடுத்திருக்கிங்க, இந்த முயற்சி எங்க ஆரம்பித்தது?

என்னிடம் இருந்த 6,000 ரூபாய், என் நண்பர் ரீகன் கொடுத்த 15 கிலோ அரிசி இதை வச்சுதான் நாங்கள் இதை செய்ய ஆரம்பிச்சோம். தேவையான காய்கறிகளை வாங்கி, வீட்டிலேயே சமச்சு, இரண்டு நாட்களுக்கு மட்டும் கொடுக்கலாம்னு நினைச்சுதான் இதை தொடங்கினோம்... தொடக்கத்தில் மறைமலை நகரிலுள்ள சர்ச் பாதிரியார், என்னை உணவு கொடுக்கும் பணியில் ஈடுபடுத்தினார். அந்த பணியை 10 நாட்கள் செய்தேன். அதன்பிறகுதான் சரி, நாமே இதை செய்து கொடுக்கலாம்னு முடிவெடுத்து செய்தோம்.

 

chengalpattu

 

அதற்கு அடுத்த நாள் ரீகன் 3,000 ரூபாய் கொடுத்தார். மேலும் இதை ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்ததால், அதன் மூலமும் அரிசி, எண்ணெய், பணம் என அவர்களால் என்ன உதவிகள் செய்ய முடியுமோ அதை செய்தார்கள். இப்படித்தான் மார்ச் 25ம் தேதி தொடங்கிய பயணம் அவ்வளவு நாட்கள் நீடித்தது. கிட்டதட்ட இதில் 20 பேரோட உழைப்பு இருக்கு. 

 

எந்தெந்த பகுதிகளில் நீங்கள் உணவுகளை கொடுத்தீங்க? 

நாங்கள் சமைத்து கொடுக்கிறோம் என தெரிந்தபோது, உணவில்லாதவர்கள் சிலர் 5 மணிக்கே இங்கு வந்துவிடுவார்கள். அதன்பிறகு நாங்கள் சமைத்து அவங்களுக்கு உணவுகளை கொடுப்போம். பிறகு நாங்கள் அதை பேக் செய்து ஹாஸ்பிடல், போலிஸ் ஸ்டேசன், பஸ் ஸ்டாண்ட் போன்ற பகுதிகளில் கொடுத்தோம். மொத்தமாக செங்கல்பட்டு பைபாஸ் முதல், ஹாஸ்பிடல் வரை கொடுத்தோம். செங்கல்பட்டு ஹாஸ்பிடல்ல மட்டும் கிட்டதட்ட 1000 பேர் தங்கி இருந்தாங்க, பஸ் வசதி இல்லாததால அவங்கள்ல சிலருக்கும் கொடுத்தோம். 

 

இந்த ஊரடங்கு நாம எதிர்பாக்காத ஒன்றுதான், இந்த நேரத்துல அவர்களோட நிலை எப்படிப்பட்டதா இருந்தது?

அவங்க நிலை மோசமாதான் இருந்தது. வீடு இருக்கவங்களுக்கு பணம் இல்லை, பணம் இருக்குறவங்களுக்கு உணவு இல்லை, அதைவிட கொடுமை இந்த இரண்டுமே இல்லாம, ஊருக்கு போக பஸ்ஸும் இல்லாம, சாலைகள்லயே தங்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானவங்களோட நிலைதான். சரியான பாத்ரூம் வசதி இல்லை, தங்க இடம் இல்லை இப்படி நிறைய சொல்லலாம். சிலர் எங்களை தேடியே வருவார்கள் இன்னைக்கு சாப்பாடு கொடுப்பீங்களானு. அவங்களோட நிலைமை ரொம்ப கஷ்டமானதுதான். நிறைய பேரு கொஞ்சம் அரிசி கொடுங்க, நாங்க சமச்சுக்கிறோம்னு கேட்டாங்க, அப்படியும் சிலருக்கு கொடுத்தோம். காய்கறி கொடுப்போம். மார்க்கெட்ல இருந்த நிறைய பேர் இதுக்காக ஹெல்ப் பண்ணாங்க.

 

chengalpattu

 

இரண்டு நாள் கொடுக்கலாம்னு ஆரம்பிச்சது, இத்தனை நாட்கள் தொடர்ந்தே பெரிய விஷயம் எனக்கு, நிறைய பேர் கையெடுத்து கும்பிட்டாங்க. அதுமட்டுமில்லாம என்னுடைய நண்பன் ரீகன் கிட்டதட்ட 53 நாட்கள் சமைச்சாரு. தினமும் 35 கிலோ அளவு இருக்க உணவ, இது சாதாரண விஷயம் இல்லை. நாங்க கூட இருந்து ஹெல்ப் பண்ணிருந்தாலும்கூட அவரோட உழைப்பு அதிகமானது.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்