Advertisment

பின்னி மில் நிலத்தை வளைத்துப்போட்ட விவேக்!

பின்னி மில் நிலத்தை வளைத்துப்போட்ட விவேக்!


Advertisment
அரசுக்கு சொந்தமான பின்னி மில் நிலத்தையே அபகரித்ததாக விவேக் மீது புதிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அதைப்பற்றிய விவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
தமிழகத்தின் முதல் தொழிற்சாலையான பின்னி மில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது. 254 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த மில் விடுதலைக்கு பிறகு மத்திய அரசின் பொறுப்புக்கு மாறியது.
எம்ஜியார் ஆட்சிக் காலத்தில் இந்த மில்லின் பங்குகளை வெறும் 6 கோடி ரூபாய்க்கு வாங்கினார் சாராய அதிபரான ராமசாமி உடையார். 2011 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் பின்னி மில் நிலத்தை பிரித்து விற்றார்கள்.
Advertisment
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் இந்த நிலத்தில் கட்டிடம் கட்டும் வேலைகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த வேலைகளில் ஈடுபடும் கட்டுமான நிறுவனங்களில் சசிகலாவின் தம்பி மகன் விவேக்கின் நிறுவனங்களும் உள்ளன. இது தொடர்பாகவும் வருமானவரித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். இந்த விசாரணை அவரை சிறைக்கு அனுப்பும் அளவுக்கு தீவிரமானது என்கிறார்கள்.
இன்றைய மதிப்பில் 7 ஆயிரத்து 620 கோடி ரூபாய் மதிப்புள்ள பின்னி மில் நிலத்தை அபகரித்ததாக கூறப்படும் விவேக்கின் கதைதான் என்ன?
பெரிய அத்தை ஜெயலலிதா எனக்கு அப்பா மாதிரி. சின்ன அத்தை சசிகலா எனக்கு தலைவர் மாதிரி. இளவரசி என்னுடைய தாய் என்று கூறுகிறார் ஜெயா டிவி, ஜாஸ் சினிமாஸ் ஆகியவற்றின் நிர்வாக இயக்குனரான விவேக்.
சமீபத்தில் ஜெயா டி.வி., ஜாஸ் சினிமாஸ் ஆகியவற்றில் நடந்த வருமானவரிச் சோதனைகளைத் தொடர்ந்தே இவருடைய பெயரும் முகமும் பாப்புலர் ஆனது.
2014ல் சொத்துக்குவிப்பு வழக்கில், அன்றைக்கு முதல்வராக இருந்த ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்த சமயத்தில்தான் விவேக் முதன்முதலில் மீடியாக்களில் அறிமுகமானார்.
அதற்குமுன் அவர் என்ன செய்துகொண்டிருந்தார்?
விவேக் ஒன்றரை வயது பையனாக இருக்கும்போது அவருடைய தந்தையும் சசிகலாவின் தம்பியுமான ஜெயராமன், ஹைதராபாத்தில் உள்ள ஜெயலலிதாவுக்கு சொந்தமான திராட்சைத் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி மரணம் அடைந்தார்.
விவேக்கின் மூத்த சகோதரிகளான ஷகீலாவும், கிருஷ்ணப்பிரியாவும் மன்னார்குடி பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களைத் தொந்தரவு செய்யாமல் விவேக்கையும், அவருடைய அம்மா இளவரசியையும் போயஸ் கார்டனுக்கு வரவழைத்தார் ஜெயலலிதா.
அப்போதிருந்து ஜெயலலிதாவின் வீடே தனது வீடாக வளர்ந்திருக்கிறார் விவேக். ஆனால், மூன்று விதமான பெண்களின் பாதுகாப்பிலும் வளர்ப்பிலும் பத்திரமாக வளர்ந்திருக்கிறார்.
பெரிய அத்தை ஜெயலலிதா அவருக்கு ரொம்பவும் செல்லம் கொடுப்பாராம். அவருடைய குறும்புகளை ரசித்து பாதுகாப்பாராம்.



விவேக்கை திட்டுகிற, அடிக்கிற ஒரே ஆள் சின்ன அத்தை சசிகலா மட்டும்தானாம். விவேக்கிற்கு எது நல்லது என்பதை அவர்தான் தீர்மானிப்பாராம்.

சிட்னியில் பிபிஏ படித்துவிட்டு, புனேயில் எம்பிஏ முடித்தவரை போயஸ் கார்டனுக்கு வருவதை சசிகலா தவிர்த்தாராம். பின்னர் சாம்சங் கம்பெனியில் பயிற்சி முடித்த பிறகு, ஐடிசி கம்பெனியில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார்.
ஐடிசியில் வேலை செய்யும்போது விவேக் சாதாரண ஊழியராகத்தான் இருந்திருக்கிறார். யாருக்கும் அவருடைய பின்னணி தெரியாதாம்.
2014 ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அப்போது விடுமுறை கேட்கும்போதுதான் காரணத்தை சொல்லியிருக்கிறார் விவேக். இதையடுத்தே கம்பெனி முதலாளிக்கு விவேக் யாரென்று தெரிந்திருக்கிறது.
தன்னை தாயாக வளர்த்தவர்களின் சிறை வாழ்க்கை விவேக்கை ரொம்பவே பாதித்திருக்கிறது. நான்கு பேரும் ஜாமீனில் விடுதலை ஆகும்வரை பெங்களூரிலேயே தங்கி அவர்களுக்கு உதவியாக இருந்திருக்கிறார் விவேக்.
பின்னர், அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு சென்னை வந்திருக்கிறார்.
இந்தச் சமயத்தில்தான் ஜாஸ் சினிமாஸின் பொறுப்பை ஏற்கும்படி சசிகலா கூறியிருக்கிறார். அதைத் தொடர்ந்து ஜெயா டி.வி.யின் பொறுப்பும் இவரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஜாஸ் சினிமாஸின் முந்தைய உரிமையாளரான ஹாட் வீல்ஸ் என்ஜினியரிங் சம்பந்தமாக எதுவுமே தனக்கு தெரியாது என்கிறார் விவேக்.
"வருமானவரித் துறை ரெய்டு எனக்கு புதிது. என்னமாதிரியான கேள்விகள் கேட்பார்கள் என்றுகூட எனக்கு தெரியாது. இருந்தாலும் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு சரியாகவே பதில் சொன்னேன். அவர்கள் அவர்களுடைய கடமையைத்தான் செய்தார்கள். ஜாஸ் சினிமாஸில் உள்ள எனது அறைக்கு சீல் வைத்திருக்கிறார்கள். எனது மனைவியின் நகைகள் குறித்து கேட்டார்கள். நல்லவேளையாக அவற்றுக்கு எனது மாமனார் ஆவணங்களை வைத்திருந்தார். அவற்றை அதிகாரிகளிடம் கொடுக்க வேண்டும். இனி எப்படி போகிறது என்பதைப் பொறுத்தே இதில் அரசில் உள்நோக்கம் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்" என்கிறார் விவேக்.
மன்னார்குடி குடும்பம் என்ற வட்டத்தில் சேராமல் நான் ஒருவன்தான் வளர்க்கப்பட்டேன். நான் ஒருவன்தான் மன்னார்குடி குடும்பத்தில் பாதுகாக்கப்பட்டவன் என்று நினைத்தேன். ஆனால் இப்போது எல்லாம் மாறிக்கொண்டிருக்கிறது. மன்னார்குடி குடும்பத்தில் நானும் ஒருவன் என்பதை பெருமையாகவே நினைக்கிறேன் என்று தெம்பாகவே சொல்கிறார் விவேக்.

ஏதோ மன்னார்குடி குடும்பம் ராஜ பரம்பரை என்பதுபோல விவேக் பேசுகிறார். ஊழல் செய்து மக்கள் பணத்தை கொள்ளையடித்து குற்றவாளிக் கூண்டிலும், சிறையிலும் கிடக்கிற ஒரு குடும்பத்தை சேர்ந்தவர் என்று சொல்லிக் கொள்வதில் என்னதான் பெருமையோ தெரியவில்லை.
- ஆதனூர் சோழன்
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe