Skip to main content

பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் தொடர்ந்து முதலிடம்! முன்னோர் ஆசிபெற்ற விருதுநகர் மாவட்டம்!

yearly


கடந்த (2017) கல்வி ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் (2018) பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது விருதுநகர் மாவட்டம். 2013-14 மற்றும் 2015-16 ஆகிய இரண்டு கல்வியாண்டுகளில் மட்டுமே 3-வது இடத்துக்குத் தள்ளப்பட்ட விருதுநகர் மாவட்டம், இந்த ஆண்டும் முதலிடம் பெற்றிருக்கிறது.

இந்த ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் 10797 மாணவர்கள் 13500 மாணவிகள் என, மொத்தம் 24297 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினார்கள். இவர்களில் மாணவர்கள் 10285 பேர் (95.26%), மாணவிகள் 13295 பேர் (98.48%) தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தத்தில் 97.05% தேர்ச்சி விகிதம் பெற்று, முதலிடத்தை தக்கவைத்திருக்கிறது விருதுநகர் மாவட்டம்.

தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், சிறப்பு பயிற்சி வகுப்புக்களை அர்ப்பணிப்பு உணர்வுடன் நடத்தியதும், அதற்கு பெற்றோர் தரப்பில் முழு ஒத்துழைப்பு அளித்து வந்ததும், மாணவர்களின் ஆர்வமும் உழைப்புமே, இப்படி ஒரு வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கிறது. ஆனாலும், இந்தத் தொடர் வெற்றிக்கு அழுத்தமான ஒரு பின்னணி உண்டு.
 

kam


அப்போது விருதுபட்டியாக இருந்தது. ஏதேனும் அவசரத் தகவலைத் தாங்கிய தந்தி வீடுகளுக்கு வரும். தந்தியில் உள்ள வாசகங்களை விருதுபட்டி மக்களுக்கு படிக்கத் தெரியாது. தந்தியை டெலிவரி செய்பவர், படித்து விபரங்களைக் கூறுவார் என்று எதிர்பார்க்க முடியாது. அந்தத் தந்தியை பெற்றுக்கொள்பவர், விருதுபட்டியில் படித்த பிராமணர் வீட்டை நோக்கி ஓடுவார். பார்த்தாலே தீட்டு என்றிருந்த காலம் என்பதால், பயத்தால் நடுங்கியபடியே, பிராமணர் வீட்டு வாசலில் நிற்பார். ‘சாமீ’ என்றெல்லாம் குரலெழுப்ப முடியாது. அந்த வீட்டிலிருந்து யாராவது வெளியே வரும் வரை காத்திருக்க வேண்டும். அப்படி வருபவரின் பக்கவாட்டில், உடம்பை வளைத்துப் பணிவு காட்டி நின்று, பவ்யமாக தந்தியை நீட்ட வேண்டும். அவர் படித்துப்பார்த்துவிட்டு, ‘சாவுத் தந்திடா’ என்று இறந்தவர் பெயரையும் ஊர் விபரத்தையும் கூறுவார். அந்த இடத்திலேயே ‘போயிட்டியா.. எங்கள விட்டுட்டுப் போயிட்டியா..’ என்று தலையில் அடித்துக்கொண்டு அழுவார் தந்தியைக் கொண்டுவந்தவர். பிராமணரோ ‘என் வீட்டு முன்னால எதுக்குடா ஒப்பாரி வைக்கிற? உன் வீட்டுல போயி அழு’ என்று விரட்டியடிப்பார்.

தந்தி மூலம் வரும் ஒரு துக்க விஷயத்தைக்கூட தெரிந்துகொள்ள முடியாத தற்குறிகளாக இருக்கிறோமே என்ற ஆதங்கம் வெளிப்பட்டபோதெல்லாம் கல்வியின் அவசியத்தை உணர்ந்தார்கள். ஒவ்வொரு நாளும் வீட்டுக்கு வீடு ஒரு பிடி அரிசியை கலயங்களில் சேகரித்தனர். அந்தப் பிடி அரிசி வீடுதோறும் மகமையாக வசூலிக்கப்பட்டது. அந்த அரிசி விற்று கிடைத்த தொகையில், 1888-இல் சத்திரிய வித்யாசாலா என்ற பள்ளியை விருதுநகரில் தொடங்கினார்கள். வியாபாரிகள் மகமை என்ற பெயரிலும் குறிப்பிட்ட ஒரு தொகையை சங்கத்தில் சேர்த்து, அந்த நிதியைக் கல்விக்குப் பயன்படுத்தி வந்தார்கள். வியாபாரிகளும் மகமை என்ற பெயரில் குறிப்பிட்ட ஒரு தொகையை சங்கத்தில் சேர்த்தனர். அந்த நிதியையும் கல்விக்கே பயன்படுத்தினார்கள்.

தமிழகத்தில் கல்விக்கண் திறந்தவர் என்று போற்றப்படும் காமராஜர் படித்தது இந்த விருதுநகர் பள்ளியில்தான். தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தபோது, ‘கோவில் எதுக்குண்ணே? மொதல்ல பள்ளிக்கூடம் கட்டு’ என்று, நகரம், கிராமம் என்ற பாரபட்சமின்றி, பள்ளிகளை உருவாக்கி, கல்விப் புரட்சிக்கு வித்திட்ட அவர் பிறந்த ஊரும் விருதுநகர்தான்.

விருதுநகர் கல்வி மாவட்டம், மாவட்ட அளவில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருவதும், 31-வது முறையாக இந்த ஆண்டும் முதலிடம் பெற்றிருப்பதும், முன்னோர்களின் தியாகத்துக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...