Skip to main content

பழகி மிரட்டி பாலியல் தொழிலில் தள்ளிய வில்லன்! - பாதிக்கப்பட்ட பெண்கள் பகீர் வாக்குமூலம்!

 

The villain who got used to and intimidated into the wrong way, Affected Women shocking Confession

 

"வில்லன்னா வில்லன் அப்படியொரு வில்லன்...'’ என்று அடிக்குரலில் இருந்து கதறினார்கள், அவனால் பாதிக்கப்பட்ட கலைவாணியும் நாகமணியும். சிவகாசி டவுண் காவல் நிலையத்தில் வழக்கு பதிவாகியுள்ள நிலையில், அவ்விருவரும் நம்மைச் சந்தித்தனர்.

 

விவகாரம் என்னவென்று பார்ப்போம்!

"இவன் பெயர் மாரிச்செல்வம்’என்று போட்டோவுடன் முகநூலில் சுட்டிக்காட்டி, ‘பைனான்ஸ் என்ற பெயரில் பெண்கள் பலரையும் ஏமாற்றி, லட்சக்கணக்கில் அபகரித்து, குடும்பத்தினர் பெயரில் சொத்துகளைச் சேர்த்துள்ளான்''’ என எச்சரிக்கை விடுத்துள்ளார் முனீஷா ஜெயஸ்ரீ என்பவர்.

 

ஆதரவற்ற பெண்களுக்கு குறி!

தோழிகளான கலைவாணியும் நாகமணியும், முனீஷா ஜெயஸ்ரீயின் பதிவை ‘முற்றிலும் உண்மை’ என ஆமோதித்துப் பேசி, நடந்ததை விவரித்தனர். "ஸ்ரீ ஆறுமுகா பைனான்ஸ் என்ற பெயரில், பணத் தேவையுள்ள எந்த வீட்டுப் பெண்ணையும் மாரிச்செல்வத்தால் எளிதில் அணுகிவிடமுடியும். அவன் குறிவைத்தது, விவாகரத்தான பெண்கள், கணவனைவிட்டுப் பிரிந்த பெண்கள், சுயதொழிலுக்கான பணத்தேவையுள்ள பெண்களைத்தான். அந்த வகையில்தான், பியூட்டி பார்லர் வைத்துள்ள, ஆண் துணையில்லாத எங்களைப் போன்ற பெண்களை, அவனுடைய வலையில் சிக்கவைத்தான்''’என்றனர்.

 

"அவனுக்கு மனைவி, குழந்தை இருந்தும் என்னோடு ஆறுமாத காலம் நெருங்கிப் பழகினான். என் வீட்டிலும் தங்கினான். உடல்நலம் இல்லாமல் இருந்தபோது, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று என்னை அக்கறையாகக் கவனித்துக்கொண் டான். ஏற்கனவே விவாகரத்தான நான், பாதுகாப்பான வாழ்க்கை இவனிடம் கிடைக்கும் என்று நம்பினேன். என் நகைகளைக் கொடுத்தேன். அதை அவன் பெயரில் அடகுவைத்து, ரூ.7 லட்சம் வரை ஏமாற்றிவிட்டான். என்னிடம் பாசம் காட்டியதெல்லாம் நடிப்பு என்று தெரிந்ததும், இழந்த பணத்தைக் கேட்டேன். ‘"இத்தனை நாள் உன்கூட படுத்தேன்ல, அதுக்கு இந்த 7 லட்ச ரூபாய் சரியாப் போச்சு'’ என்று அடித்தான்; நகத்தால் பிராண்டினான்; கடித்தான்; கழுத்தை நெரித்தான். வீட்டிலுள்ள பொருட்களை உடைத்தான்.

 

ரோட்டில் வைத்து மானபங்கப்படுத்தினான். அதன் பிறகுதான் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தேன். பெயருக்கு வழக்குப் பதிவு செய்துவிட்டு, அவனிடம் பணத்தை வாங்கிக்கொண்டு தப்பவிட்டார்கள். உள்ளூரில்தான் இருக்கிறான். ஆனால், அவன் தலைமறைவாகிவிட்டதாக போலீஸே பொய் சொல்கிறது. எனக்கு நடந்ததெல்லாம் சாதாரணம். பல பெண்களை எப்படியெல்லாம் ஆட்டிவைத் தான் தெரியுமா? எத்தனைபேர் வாழ்க்கையைச் சீரழித்தான் தெரியுமா?''’என கலைவாணி குமுறலோடு கொட்டிய விவகாரங்கள் அதிர்ச்சிகரமானவை.

 

ffafa

 

கூட்டு பாலியல் கொடுமை!

"சீரழிந்த பெண்களில் நானும் ஒருத்தி'’என நாகமணி நம்மிடம் விவரித்த சாட்சியம் இது- "சிவகாசியில் நான் பியூட்டி பார்லர் நடத்தி வந்தேன். ‘அதிரடியாக எதையும் செய்யக்கூடியவன்’ என்று தோழி மூலமாக, 2 வருடங்களுக்கு முன் அறிமுகமானான் மாரிச்செல்வம். அப்போது, காரியாபட்டி ராதாகிருஷ்ணனிடம் அரசு வேலைக்காக ரூ.4லட்சம் கொடுத்து ஏமாந்திருந்ததால், அதை வாங்கித் தரச்சொன்னேன். அதில் ரூ.2 லட்சம் வரை, வேறொருவர் மூலமாக எனக்கு திரும்பக் கிடைத்தது. மீதி ரூ.2லட்சத்தை ராதாகிருஷ்ணனிடம் நான் கேட்டபோது, மாரிச்செல்வத்திடம் கொடுத்துவிட்டதாகச் சொன்னான். உடனே, மாரிச்செல்வத்திடம் பணத்தைக் கேட்டேன். அதற்கு அவன், ‘"நான் அந்தப் பணத்தை வட்டிக்கு விட்ருக்கேன். ஒவ்வொரு மாசமும், ஒரு லட்சத்துக்கு பத்தாயிரம் ரூபாய் வட்டி தர்றேன்''’ என்றான்.

 

என்னிடம் இருந்த பணத்தில் மாரிச்செல்வத்துக்கு பிரேஸ்லெட்டும் மோதிரமும் வாங்கிக் கொடுத்தேன். என்னுடன் எப்போதும் சண்டை போட்ட குடிகாரக் கணவனை, "எனக்கு போலீஸ் தெரியும். நானே பெரிய ரவுடி...'’என்று மிரட்டி அடக்கினான். "போலீஸே என்னைப் பார்த்து பயப்படுவாங்க...'’என்று சீன் போட்டான். "உன் புருஷன விரட்டிருவோம். நான் உனக்கு ஃபுல் சப்போர்ட்டா இருப்பேன்'’என்று பேசி என் மனதுக்கு நெருக்கமானான். அப்போது, காவல் நிலையத்தில் வழக்கொன்று பதிவாகி, அவன் தலைமறைவாக இருந்தபோது... நண்பனையும் என் வீட்டுக்கு அழைத்துவந்து தங்கினான். அப்போது என் கணவன் வீட்டிலில்லை. அவனிடம், உனக்கு கல்யாணம் ஆயிருச்சா?ன்னு கேட்டேன். அதற்கு அவன் "இன்னும் ஆகல.. எங்க வீட்ல நான்தான் கடைசி பையன். பெண் பார்க்கிறாங்க, எனக்கு இஷ்டமில்ல. என்னுடைய லட்சியம், விதவைப் பெண்ணுக்கு வாழ்க்கை கொடுக்கணும் கிறதுதான்''’என்று சொன்னான். "ஏன் இப்படி ஒரு முடிவு? உனக்கு வேற பிரச்சனை இருக்கா?''’என்று கேட்டேன். "என் அம்மாவும் விதவைதான். என்னை கஷ்டப்பட்டு வளர்த் தாங்க. அதனாலதான், எனக்குள் இப்படி ஒரு வைராக்கியம் வந்திருச்சு'' என்று ஃபீல் பண்ணி சொன்னான். நானும் ரொம்ப நல்லவனா இருக்கானே’ என்று நினைத்தேன்.

 

நான் வசிப்பது கிராமத்தில். நண்பனுடன் மாரிச்செல்வம் என் வீட்டில் தங்கினால், யாராவது தப்பாகப் பேசிவிடுவார்கள் என்று பயந்தேன். அதனால், என் தோழி ஒருத்தியை வரவைத்து, அவனுடைய நண்பர்கள் இருவரோடு ராம்நாடு போய் தங்கினோம். அங்கே வைத்து ‘லவ்-ப்ரபோஸ்’ பண்ணினான். "உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் கார்டியனா இருப்பேன். கடைசி காலம் வரைக்கும் உனக்கு பாதுகாப்பாக இருப்பேன்'’என்று சொன்னான். பிறகுதான், அவனிடம் என்னைக் கொடுத்தேன். அந்த நம்பிக்கை சில மணி நேரம் கூட நீடிக்கவில்லை. அந்த விடுதியில் ‘ஒருத்திக்கு இருவர்,’என்று என் தோழியோடு அவனுடைய நண்பர்கள் இருவர் தங்கியிருந்த அறையில், இவனும் போய்ச் சேர்ந்து கொண்டான். அங்கு நடந்த கூட்டு பாலியல்’ கொடுமையைத் தெரிந்துகொண்டு, நான் அழுதேன். அவனோ, "நீ நினைக்கிற மாதிரி நான் எதுவும் பண்ணல'’என்று சொல்லி, என் நெற்றியில் குங்குமம் வைத்தான். நான் உருகிப்போனேன்.

 

The villain who got used to and intimidated into the wrong way, Affected Women shocking Confession

 

உடலை நடுங்கவைத்த மிரட்டலான சூழல்!

அப்போது, பியூட்டி பார்லரில் பெரிதாக வருமானம் இல்லை. அந்த ரெண்டரை லட்சத்துக்கு வட்டி தராததால் கேட்டேன். "அசலும் வட்டியும் அப்படியே வராம நிக்குது. என்ன பண்ணுறதுன்னு தெரியல. அருப்புக்கோட்டைல 11 லட்சம் வாங்கினவரு உசிருக்கு போராடுறாரு. அவரு செத்துப் போனா பணம் திரும்ப வராது''’என்று சொன்னவன், "என்ன பண்ணுறதுன்னே தெரியல. உன்கிட்ட வாங்கின மாதிரியே நாலஞ்சு பேர்கிட்ட வாங்கிருக்கேன். அவங்க என் சட்டையப் பிடிச்சு பணத்த கேட்பாங்க. என்ன பதில் சொல்லுறதுன்னு தெரியல. எங்க வீட்ல யாரும் எனக்கு சப்போர்ட் பண்ணமாட்டாங்க. செத்துப்போயிருவேன்''’என்று அழுதான். அவனைத் தேற்றியபோது,"உன்கிட்ட சொல்லுறதுக்கு கஷ்டமா இருக்கு. நீ வேணும்னா சென்னைக்கு போ. கை நிறைய பணம் கிடைக்கும். என் கடனெல்லாம் அடைஞ்சிரும். ரெண்டு மாசத்துல நீ திரும்பி வந்திருவ. நம்ம கையில ஒரு பத்து லட்சம் இருந்துச்சுன்னா.. அதை வச்சு பிசினஸ் பண்ணுனா, நம்ம லைஃப் செட்டில் ஆயிரும்''’என்று நம்பிக்கையை வெளிப்படுத்தினான்.

 

எப்போதுமே, அவன் தனியாக சென்னைக்கு வரமாட்டான். யாராவது ஒரு நண்பனைக் கூட்டி வருவான். செல்வச் செழிப்பான வாழ்க்கைக்கு வழிகாட்டுவதாகச் சொன்னதும், குஷியோடு சென்னை சென்றோம். கோயம்பேட்டில் இறங்கியதும், காரில் வந்தவனிடம் லம்ப்பாக பணத்தைப் பெற்றுக்கொண்டு, டாட்டா காட்டி அனுப்பிவிட்டான். அந்தக் கார் எங்கே போய் நின்றது என்று அப்போது எனக்குத் தெரியாது. பிறகுதான் தெரிந்துகொண்டேன், நுங்கம்பாங்கம் ஏரியா, நடிகர் சத்யராஜ் வீட்டுக்கு சற்று தள்ளி இருக்கும் பங்களா என்பதை. ஏழெட்டு பெண்களோடு என்னையும் வரிசையில் நிற்கவைத்தார்கள். மாரிச்செல்வம் சொன்னதுபோல், கால்-சென்டர் வேலை கிடையாது என்பது புரிந்துபோனது. அங்கிருந்த இன்சார்ஜ் லேடி,"உன்னை வைத்து தொழில் பண்ண ஐந்து லட்சத்துக்கு அக்ரிமெண்ட் போட்டிருக்கான் மாரிச்செல்வம்' என்றாள். "நான் உடலை வைத்து சம்பாதிக்கும் பணமெல்லாம், அவனுக்கே போய்விடும்' என்றாள். மிரட்டலான அந்தச் சூழலில், எனக்கு உடம்பெல்லாம் நடுங்கியது. அப்போது, ஊரிலுள்ள பிள்ளைகள் இருவரும், அடைக்க வேண்டிய கடனும் பெரிதாகத் தெரிந்தது. "பிள்ளைகளைப் பற்றி கவலைப்படாதே...நான் பார்த்துக்கொள்கிறேன்' என்று மாரிச்செல்வம் சொன்னதும், ஆயா பொறுப்பில் பிள்ளைகளை விட்டு வந்ததும், அந்தம்மாவுக்கு சம்பளம் கொடுக்க வேண்டிய பொறுப்பு அவனுக்கு இருப்பதும் நினைவுக்கு வந்தது.

 

அங்கிருந்து தப்பிக்க முடியாது; சம்மதிக்கா விட்டால் அடிவிழும்; பட்டினி போட்டு வழிக்கு கொண்டுவருவார்கள் என்பதை அந்தச் சூழ்நிலை உணர்த்தியது. வேறு வழி? யார் யாருடைய உடல் சுகத்துக்காகவோ நான் விலைபோனேன். இதற்கிடையில், ஊரில் என் பிள்ளைகளைக் கவனிப்பதையும் ஆயாவுக்கு சம்பளம் தருவதையும் மாரிச்செல்வம் நிறுத்திட்டான். என் புருஷனும் அத்தையும் பிள்ளைகளைக் கூட்டிட்டு போயிட்டாங்க. சென்னையில் ஒரு கும்பலிடம் வசமாக என்னைச் சிக்கவைத்துவிட்டு, வாராவாரம் சென்னை வந்து, ஒப்பந்தம் போட்டவரிடம் என் உழைப்புக்கான பணத்தை வாங்கிக்கொண்டு போவான். சிலநேரம் அவனுடைய வங்கிக் கணக்கிலும் பணம் போட்டுவிடுவார்கள். சென்னை வரும்போது போனில் மட்டுமே பேசுவான். நேரில் என்னைப் பார்க்க மாட்டான்.

 

சிதைக்கப்பட்ட சிறுமிகள்!

நரகம் எப்படியிருக்கும் என்று யாருக்குத் தெரியும்? அங்கே நரகத்தைக் காட்டிலும் பல கொடுமைகள், சர்வசாதாரணமாக நடந்தன. அந்த நுங்கம்பாக்கம் பங்களாவில், என் போன்ற பெண்களை தினமும் 10-லிருந்து 15 பேர் வரை அட்டென்ட் பண்ணச் செய்வார்கள். வாடிக்கையாளர்கள் நிறையபேர் வந்துவிட்டால், ஒவ்வொருவரும் அட்டென்ட் பண்ண வேண்டிய எண்ணிக்கை கூடிவிடும். மிகவும் வலிக்கிறது.. தாங்கமுடியவில்லை..’ என்று சொன்னால் ‘ஊசி’ போட்டு விட்டு அனுப்புவார்கள். பீரியட் வரும்போது காட்டன் வைக்கும் ‘ட்ரீட்மென்ட்’ எல்லாம் நடக்கும். ஒவ்வொரு கஸ்டமரிடமும் ரூ.3000-லிருந்து ரூ.4000 வரை வசூல் பண்ணுவார்கள்.

 

இந்த கொடுமையை எப்படிச் சொல்வதென்று தயக்கமாக இருக்கிறது. வயது ஐந்தோ,ஆறாகத்தான் இருக்கும். அந்தச் சிறுமிகளுக்கு ‘ட்ரெயினிங்’ கொடுப்பார், ஒரு லேடி. ஒரு டீமே இதற்கான வேலையைச் செய்யும். குழந்தைகள் என்றும் பார்க்கமாட்டார்கள். சோறு போடாமல் அடிப்பார்கள். தொடர்ந்து பசி தாங்கமுடியாமல், கஸ்டமர்களிடம் போகப் பழகிவிடுவார்கள். பெரிய பெரிய ஆட்கள்தான், குழந்தைகளை விரும்பிக் கேட்பார்கள். இதற்கு ஸ்பெஷல் ரேட், லட்சத்தில் இருந்துதான் ஆரம்பிக்கும். அந்த பங்களாவில் நான் மூன்று மாதங்கள் வரை இருந்தேன். அப்போது, பத்து, பதினைந்து குழந்தைகள் வரை பார்த்திருக்கிறேன். குழந்தைகளை மாற்றிக்கொண்டே இருப்பார்கள்.

 

அனைவரும் ஆன்லைன்’ வாடிக்கையாளர்களே!

காம்பவுன்ட் ஏறிக் குதித்து, நானும் இன்னொருத்தியும் தப்பித்து கொளத்தூர் போனோம். ‘"மூன்று மாதம் சம்பாதித்தது போதாது, இன்னும் நிறைய தேவையிருக்கிறது'’என்று மாரிச்செல்வம் நச்சரித்தான். பெண்களைக் கொடுமைப்படுத்தாத வேறொரு நெட்வொர்க்கில் சேர்ந்தோம். சரவணா ஸ்டோர்ஸ் அருகில் ஒரு பங்களா. நாள் ஒன்றுக்கு ரூ.3000 வாடகை. அங்கும் 10-க்கும் மேற்பட்ட பெண்களை வைத்து தொழில் நடத்தினார்கள். இந்த நெட்வொர்க்கில், 10 மாதங்கள் வரை இருந்தேன். ஒரு கஸ்டமருக்கு பிடித்துப்போனால், எவ்வளவு வேண்டுமானாலும் தருவார். சிலர், நகைகளைக்கூட தருவார்கள். எதுவும் நேரடியாக எங்கள் கைக்கு வராது. கலெக்ஷன் டேபிளில் இருப்பவரிடம்தான் போகும். நெட்வொர்க் நடத்துபவர்கள், கஸ்டமர் பிடிப்பதெல்லாம் போன் மூலம்தான். எல்லாமே ஆன்லைனில் நடக்கும். ஆப்’ மூலம் வரும் ஆட்களில் போலீஸ் யாரும் வந்துவிடக் கூடாது என்பதில் உஷாராக இருப்பார்கள்.

 

ஃபேஸ்புக் போன்ற விபரங்களைச் சரி பார்த்த பிறகே, முகவரியைச் சொல்லி அழைப்பார்கள். சில நேரங்களில் வி.ஐ.பி. மாதிரி வரும் பெரிய ஆட்கள், கம்பெனி கொடுக்கும் பெண்ணைப் பிடித்துப் போனால் ஐம்பதாயிரமோ, அறுப தாயிரமோ தருவார்கள். இந்தப் பணமும் மாரிச்செல்வத்துக்கு போயிரும். அவன் என்னை என்கரேஜ் பண்ணிட்டே இருப்பான். "வர்ற கஸ்டமர்கிட்ட செல்போன் நம்பரை வாங்கி வச்சிக்கோ.. நீயே தனியா தொழில் பண்ணும்போது, கூப்பிட்டா வருவாங்க.. நெட்வொர்க்ல உனக்கு 500 கிடைச்சா.. டைரக்டா தொழில் பண்ணும்போது மூவாயிரம் கிடைக் கும்'’ என்று ஆலோசனை சொல்வான். இந்தத் தொழிலில், ஒரு நாளைக்கு முப்பதாயிரம், நாற்பதா யிரம் என்று சாதாரணமாக கிடைக்கும். சாப்பாடு, தங்கும் செலவு அதிகபட்சம் பத்தாயிரம் என்று வைத்துக்கொண்டாலும், ரூ.30,000 மிச்சம் இருக்கும்.

 

இப்படியே வருஷம் ஓடிப் போச்சு. அப்போதுதான், ஒருத்தரைப் பார்த்தேன்.‘"இது வேணாம்மா... ரொம்ப தப்பும்மா. உடம்பு போயிரும், சம்பாதித்தது மருத்துவச் செலவுக்கே போயிரும்'’என்று சொல்லி, சிவகாசியில் வீட்டில் கொண்டுவந்து விட் டார். வந்து இரண்டு வாரம்தான் ஆகுது. அதுவரைக்கும் சென்னையில் தான் இருந்தேன். இப்போது எனக்குத் தெரிந்து அடையாறு, வடபழனி முழுவதும் ரெய்டு நடந்தது. போட்டோவுடன் செய்தியும் வந்தது. டி.வி.யிலும்கூட காட்டினார்கள்.

 

உடலை விற்ற பணம் போய்விட்டதே!

சிவகாசிக்கு வந்ததும் மாரிச்செல்வத்தைப் பார்த்தேன். அவன் என்னை ஏமாற்றிவிட்டான் என்பதை அவன் பேச்சே காட்டிக்கொடுத்தது. அவனுடைய அண்ணன் கருப்பசாமியிடம் பேசினேன். பிறகு மாரிச்செல்வமே லைனில் வந்தான். "நீ எப்படி சென்னைல இருந்தன்னு உன் கிராமத்துல சொல்லி உன்னை நாறடிச்சிருவேன். உனக்கு கூடப் பிறந்த தங்கச்சி இருக்கா. அவ வாழ்க்கை வீணாப் போயிரும்'னு மிரட்டி னான். நானும் தங்கச்சிக்கு கல்யாணம் வச்சிருந்ததுனால, போய்த் தொலைடான்னு விட்டுட்டேன். இப்ப தங்கச்சிக்கு கல்யாணம் நடந்து செட்டிலாயிட்டா. கலைவாணியவும் சென்னைக்கு போயி தொழில் பண்ணச் சொல்லிருக்கான். அவ சுதாரிச்சிட்டா. அவளுடைய புகாரில் எப்.ஐ.ஆர். ஆனதும், நானும்தானே பாதிக்கப்பட்டேன்னு, கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கேன். இப்ப ஓப்பன் ஸ்டேட்மென்டும் கொடுத்திருக்கேன்.

 

மாரிச்செல்வத்தோட லைஃப் ஸ்டைலை சொல்லுறேன். ஒவ்வொரு நாளும் ஆறேழு பேருக்கு செலவு பண்ணுவான். ஒவ்வொருத்தனும் குறைந்தது 500 ரூபாய்க்காவது தண்ணியடிப்பான். ஆர். எஸ்.ஆர். பார்ல, இதெல்லாம் ரெக்கார்டா இருக்கு. சைடு டிஷ் எல்லாம் சேர்த்து, ஃப்ரண்ட்ஸுக்காக ஒரு நாளைக்கு ஆறாயிரம் வரைக்கும் வாரியிறைப்பான். இதற்கெல்லாம் பணம் எங்கிருந்து வருது? அவன் என்ன பெரிய கோடீஸ்வரனா? கோடீஸ் வரன்கூட இந்த மாதிரி செலவழிக்கமாட் டான். இதுல கொடுமை என்னன்னா, மாரிச்செல்வத்தோட ஃப்ரண்ட்ஸ் சென்னை வரும்போதெல்லாம், எங்க தொழில் நடக்கிற இடத்துல நாலஞ்சு பேரை அட்டென்ட் பண்ணிட்டு, அந்த பில்லை என் தலையில கட்டிட்டு போயிருவாங்க.

 

பணத்தை வட்டிக்கு விட்டு தொழில் பண்ணுறதா, மாரிச்செல்வம் சொல்லுறது பொய். என்னை மாதிரியே, நிறைய பெண்களை ஏமாற்றியிருக்கான். விருதுநகரில் மாரி, அப்புறம் சொர்ணா, இந்தமாதிரி நெறய பொண்ணுங்க, மானத்துக்கு பயந்து புகார் கொடுக்காம இருக்காங்க. பெண்களை ஏமாற்றி சம்பாதித்த பணத்தில், அவன் குடும்பத்தினர் பெயரில் அங்கங்கே நிலம் வாங்கிப் போட்டிருக்கான். புதுசா காம்பவுண்ட் வீடு கட்டிருக்கான். அந்த வீட்டுக்கும் எனக்கும் சம்பந்தம் இருக்கு. என்னோட சதை, எலும்பு எல்லாத்தையும் விற்று மாரிச்செல்வத்திடம் ரூ.52 லட்சம் வரைக்கும் கொடுத்தேன். எல்லாத்துக்கும் கணக்கு வச்சிருக்கேன். ஆதாரமும் இருக்கு. இன்னைக்கு ஒண்ணுமில்லாம, உடம்பும் வீணாப்போயி சோர்ந்துட்டேன். இந்த உடம்பை வச்சிக்கிட்டு இனி ஒரு வேலையும் செய்ய முடியாது. நாட்டு சர்க்கரை பாக்கெட் விற்று பிழைப்பு நடத்துறேன்.

 

சிவகாசி டவுண் போலீஸ் ஸ்டேஷனில் மாரிச்செல்வம் மீது புகார் கொடுத்தேன். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் சிராஜுதீன், "பாலியல் தொழிலில் தள்ளிவிட்டதாகப் புகார் கொடுத்தால், உன் மீதும் வழக்கு பதிவு செய்வோம். நீயும் ஜெயிலுக்கு போகணும். இல்லைன்னா, ஹோமுக்கு அனுப்புவோம்''’ என்று மிரட்டலாகப் பேசினார். கலைவாணி புகார் கொடுத்தபோதே அவனைப் போலீஸால் கைது செய்திருக்க முடியும். அவன் போலீஸை கவனித்துவிட்டானோ என்னவோ, வேண்டுமென்றே தப்பவிட்டு, முன்ஜாமீன் எடுப்பதற்கு துணைபோயிருக்கிறார்கள்'' என்று மூச்சுவாங்கியபடி பேசி முடித்தாள் நாகமணி.

 

புகாரளித்த பெண்கள் கெட்டவர்களே!

தலைமறைவாக இருந்த மாரிச்செல்வம் நம்மைத் தொடர்பு கொண்டார். "எனக்கு விருதுநகரில் மாரி என்ற பெண்ணுடன் தொடர்பு இருப்பது உண்மை. கலைவாணி என்கூட மட்டும் பழகல. ஜெயில்ல வேலை பார்க்கிற ஒருத்தரோட மூணு வருஷமா பழகிட்டிருக்கா. அவனுக்கு ஒவ்வொரு மாசமும் பணம் அனுப்புறா. நான் நல்லவன்னு சொல்லமாட்டேன். ஆனா.. அவளுக ரெண்டுபேரும் கெட்டவளுக. வீட்டை அடிச்சு நொறுக்கினேன்னு நாடகமாடுறா கலைவாணி. சென்னையில் நாகமணியைக் கூட்டிட்டுபோயி தொழிலில் தள்ளிவிட்டதா சொல்லுறா. அந்தத் தொழிலில் அவளை ஈடுபடுத்திய இன்னொருத்தன், யாருன்னு சொல்லட்டும் பார்ப்போம். அவங்க ரெண்டுபேர்கிட்டயும் நான் பணம் வாங்கல. பொய்ப்புகார் கொடுத்திருக்காங்க''’என்று ஒரே போடாகப் போட்டார்.

 

The villain who got used to and intimidated into the wrong way, Affected Women shocking Confession

 

மாரிச்செல்வம் ஒரு பொறுக்கி!

சிவகாசி டி.எஸ்.பி. பாபுபிரசாத்திடம் பேசினோம். "எஸ்.ஐ. அந்தமாதிரி சொல்லல. ஹோமுக்கு அனுப்புற மாதிரி இருக்கும்னு சொன்னாரு. நாகமணி மாற்றி சொல்லுறாங்க.பாதிக்கப்பட்டவங்கள ஜெயிலுக்கு அனுப்பமாட்டாங்க. அவங்க மேல வழக்கும் வராது. 52 லட்சம் கொடுத்ததா நாகமணி சொல்லுறாங்க. இவ்வளவு ஷார்ட் பீரியட்ல, 52 லட்சத்தை பாலியல் தொழில் பண்ணி சம்பாதிக்க முடியுமா? பெரிய அமவுன்டா சொல்லுறாங்க. 52 லட்சத்தை கொடுக்கிற அளவுக்கு நாகமணியோட வாழ்க்கைத் தரம் இருக்கிற மாதிரி தெரியல. மாரிச்செல்வம் மனைவி ஒரு புகார் கொடுத்திருக்காங்க. என் கணவனை மயக்கி கூட்டிட்டு போயிட்டாங் கன்னு. இவங்க மாரிச்செல்வம்கூட மட்டும் பழகல. எல்லார்கூடவும் பழகுறாங்க. இவங்களே ஃபீமேல் செக்ஸ் ஒர்க்கர்னு சொல்லுறாங்க. இவங்கள கூட்டிட்டு நுங்கம்பாக்கத்துக்கு அவன் போனானாங்கிறது, விசாரணைலதான் தெரியும். அந்த மாரிச்செல்வம் ஒரு பொறுக்கி. அவன் மேல ஏற்கனவே 307 கேஸ் இருக்கு. போலீஸ், இந்தமாதிரி ஆளை கண்டிப்பா விடாது. நேற்றுகூட, மாரிச்செல்வத்தை பிடிக்க நாகமணிகூட ஒரு போலீஸை அனுப்பினேன். அவனைப் பிடிக்கிறதுக்கான எல்லா நடவடிக்கையும் எடுத்திட்டு இருக்கோம். கலைவாணி கேஸ்ல அவன் பெயில் வாங்கினாகூட, டெக்னிகல் கேஸ் போட்டு ரிமாண்ட் பண்ணிருவோம்'' என்றார் உறுதியுடன்.

 

தடம் மாறும் பெண்கள் பாலியல் தொழிலில் தள்ளப்படும் அவலம் தொடர்வது, சமூகத்தைச் செல்லரிக்கும் கலாச்சாரக்கேடு அல்லவா!

 


 
 

 

இதை படிக்காம போயிடாதீங்க !