Skip to main content

விஜயநகர மன்னர் கால வில் வீரனின் நடுகல் சிற்பம் பற்றிய வெளிவராத தகவல்கள்!

Published on 28/03/2023 | Edited on 28/03/2023

 

vijayanagara kingdom age bow warrior statue discovered in virudhunagar thirusuli area

 

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே வேடநத்தம் என்ற ஊரில் 600 ஆண்டுகள் பழமையான விஜயநகர மன்னர் காலத்தைச் சேர்ந்த வில் வீரனின் நடுகல் சிற்பம் பற்றிய வெளிவராத புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. 
 

வேடநத்தம் வீரபூசையா கோயில் அருகில் நீத்தார் நினைவுச் சின்னங்கள் உள்ள பகுதியில் பழமையான சிற்பங்கள் இருப்பதாக அவ்வூர் ஆசிரியர் பா.சிலம்பரசன் கொடுத்த தகவலின் பேரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, சி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லூரி மாணவி வே.சிவரஞ்சனி, திருப்புல்லாணி, சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்ற மாணவர்கள் அ.முகம்மது சகாப்தீன், சு.ஸ்ரீவிபின் ஆகியோர் அப்பகுதியை ஆய்வு செய்து இதுவரை வெளி கொண்டு வராத தகவல்களை வெளிக் கொண்டு வந்துள்ளனர்.

 

இதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது, "நிரை கவர்தல், மீட்டல், ஊரை எதிரிகளிடமிருந்து காத்தல், புலி, பன்றி, யானையுடன் சண்டையிடுதல், அரசனின் வெற்றிக்காக போரிடுதல் ஆகிய காரணங்களால் இறந்த வீரர்களுக்கு அவர்கள் நினைவாக நடுகற்கள் நட்டு வழிபாடு செய்வது சங்ககாலம் முதல் தமிழ்நாட்டு மக்களிடையே காணப்படும் வழக்கம். சாதாரண மக்களின் வரலாறு, வழக்காறுகளை அறிந்து கொள்ள நடுகற்கள் உதவுகின்றன.

 

vijayanagara kingdom age bow warrior statue discovered in virudhunagar thirusuli area

 

இங்கு வில் வீரன் சிற்பம், நடுகற்கள், சதிக்கல் மண்டபம் ஆகிய நினைவுச் சின்னங்கள் உள்ளன. இதில் வில் வீரன் சிற்பம் தனிச் சிற்பமாக கருங்கல்லில் வடிக்கப்பட்டுள்ளது. இதன் உயரம் 60 செ.மீ, அகலம் 26 செ.மீ, பருமன் 16 செ.மீ ஆகும். இடது கையில் வில்லைத்தாங்கி வலது கையில் ஒரு அம்பை எடுத்து அதை கீழே ஊன்றியவாறு வீரன் நிற்கிறார். வில் அவரைவிட உயரமாய் உள்ளது. வலது தோளில் உள்ள அம்பறாத்தூணியில் அம்புகள் நிறைந்துள்ளன. உறையுடன் உள்ள குறுவாளை இடுப்பில் செருகியுள்ளார்.

 

vijayanagara kingdom age bow warrior statue discovered in virudhunagar thirusuli area

 

கழுத்தில் மாலையுடன் முழங்கால் வரை ஆடை அணிந்துள்ளார். மேலாடை இல்லை. கொண்டை இடதுபக்கம் சரிந்த நிலையில் உள்ளது. கைகளில் காப்புகள், கால்களில் வீரக்கழல், நீளமாக வளர்ந்த காதில் குண்டலமும் அணிந்து காணப்படுகிறார். மீசை திருகி மேல் நோக்கியுள்ளது. வீரனின் சிற்பம் மிக அழகாக நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது. சிற்ப அமைதியைக் கொண்டு இது  கி.பி.14-15-ம் நூற்றாண்டு விஜயநகர மன்னர் காலத்தைச் சேர்ந்தது என்பதை மதுரை தொல்லியல் அறிஞர் சொ.சாந்தலிங்கம் உறுதிப்படுத்தியுள்ளார்.

 

இச்சிற்பம் திருப்புல்லாணி பெருமாள் கோயிலில் உள்ள விஜயநகர மன்னர் காலத்தைச் சேர்ந்த வில் அம்பு ஏந்திய ராம, லட்சுமணர் சிற்பங்களை ஒத்த அமைப்பில் உள்ளது. வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை போன்ற வட மாவட்டங்களில் வில் அம்பு ஏந்திய வீரன் சிற்பத்தை வேடன் கல் அல்லது வேடியப்பன் கல் என அழைக்கிறார்கள். இவ்வூர் பெயர் வேடர் நத்தம் என்பது கூட இவரைக் குறித்து அமைந்த பெயராக இருக்கலாம்.

 

இதன் அருகிலுள்ள நான்கு கால் மண்டபத்தில் கணவன் மனைவி நின்ற நிலையில் 3 அடி உயரமுள்ள ஒரு சதிக்கல் சிற்பம் உள்ளது. இதில் ஆண் வலது கையில் வாளை ஏந்தி, இடது கையை தொடையில் வைத்துள்ளார். பெண் வலது கையை உயரே தூக்கி, இடது கையில் மலர் செண்டு ஏந்தி தொடையில் வைத்துள்ளார். ஆணுக்கு இடதுபுறமும், பெண்ணுக்கு வலதுபுறமும் கொண்டை சரிந்துள்ளது. சிற்பத்தின் மேல்பகுதியில் திருவாசிகை உள்ளது. சதிக்கல் சிற்பம் கி.பி.15-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனலாம். இதன் அருகில் மேலும் பல நடுகற்கள் உள்ளன.

 

vijayanagara kingdom age bow warrior statue discovered in virudhunagar thirusuli area

 

நுண்கற்காலத்தைச் சேர்ந்த கருவிகளும் செதில்களும் நடுகற்கள் உள்ள இடத்தில் அதிகம் காணப்படுகின்றன. கி.பி.14-ம் நூற்றாண்டில் தொடங்கிய நடுகல் வைக்கும் வழக்கம், சமீப காலம் வரை இவ்வூரில் தொடர்வது குறிப்பிடத்தக்கது" என்று கூறினார்.