Skip to main content

விஜயகாந்த் சொத்து ஏலத்தில் பின் இருக்கும் அரசியல்! உண்மை நிலவரம்!

Published on 27/06/2019 | Edited on 27/06/2019

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தின் சொத்துக்கள் ஏலத்திற்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் மேல்மருவத்தூரை அடுத்த மாமண்டூரில் விஜயகாந்த்திற்கு சொந்தமான ஆண்டாள் அழகர் கல்லூரி அமைந்துள்ளது. மொத்தம் 4 லட்சத்து 38 ஆயிரம் சதுர அடி பரப்பில் கட்டிடங்கள். 25 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள கல்லூரி உள்ளது. பல்கலைக்கழக மதிப்பீடுகள்படி முதல் தரத்தில் இருக்கும் இந்த கல்லூரியின் மதிப்பு என 92 கோடியே 5 லட்சத்து ஐயாயிரத்து 51 ரூபாய் என வங்கி மதிப்பிடுகிறது. அந்த கல்லூரியின் மார்க்கெட் மதிப்பு இந்த மதிப்பை விட பத்து மடங்கு அதிகமாகும். தற்போதைய கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கையுடன் பேருந்து மற்றும் விடுதி வசதிகளுடன் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது இந்த கல்லூரி.

 

dmdk



இந்த கல்லூரியை ஏலம் விடப் போவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மவுண்ட் ரோடு கிளை அறிவித்துள்ளது. "விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதாவுக்கு சொந்தமான இந்த கல்லூரியையும் சென்னை விருகம்பாக்கம் காவேரி தெருவில் உள்ள 1027 சதுர அடி பரப்பளவுள்ள வங்கி மதிப்பீட்டின்படி 4 கோடியே 34 லட்சத்து 849 ரூபாய் மதிப்புள்ள விஜயகாந்த் திற்கு சொந்தமான வீட்டையும், அதே விருகம்பாக் கம் கண்ணபிரான் காலனியில் உள்ள மூன்று கோடியே 4 லட்சத்து 34 ஆயிரம் மதிப்புள்ள 3013 சதுர அடி பரப்பளவு வணிக வளாகத்தையும் ஏலம் விட முடிவு செய்துள்ளோம். இந்த கல்லூரிக்காக வாங்கிய கடனை கட்டவில்லை. அந்த கடனுக்கான ஜாமீன் சொத்தாக விஜயகாந்த்தின் வீடும் வணிக வளாகமும் சான்றளிக்கப்பட்டுள்ளன. இந்த சொத்துக்களின் மொத்த மதிப்பு சுமார் 98 கோடி ரூபாய். இத்தனை சொத்துக்களையும் வங்கியில் வாங்கிய கடன் தொகையில் கட்டாமல் விடப்பட்ட 5 கோடியே 52 லட்சத்து 78 ஆயிரத்து 825 ரூபாய்க்காக ஏலம் விடப் போகிறோம்' என அறிவித்துள்ளது இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மவுண்ட் ரோடு கிளை.

 

dmdk



ஐந்தரைக் கோடி ரூபாய் கடன் பாக்கிக்காக வங்கி மதிப்பில் 98 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை எப்படி ஏலம் விடலாம் என எழுந்த கேள்விக்கு விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா பதிலளித்தார்.  நாங்கள் வங்கியில் வாங்கிய கடனை சரியாக கட்ட முடியவில்லை. கல்லூரி ஊழியர்களுக்கு சரியாக சம்பளம் கூட தர முடியவில்லை. சமீபகாலமாக எங்கள் குடும்பத்திற்கு சரியான வருமானமில்லை. எனது மகன் சண்முகபாண்டியன் நடித்த படம் கூட வெற்றிப்படமாக அமையவில்லை. அதனால் நாங்கள் குடியிருக்கும் வீடே ஏலத்திற்கு வந்து விட்டது. இந்த கடுமையான சூழலை எப்படி தீர்ப்பது என வங்கி அதிகாரிகளிடம் பேசி வருகிறோம்'' என்கிறார் உருக்கமாக.
 

dmdk



நாம் வங்கி அதிகாரிகளிடம் பேசினோம். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மவுண்ட் ரோடு கிளை மேலாளரிடம் கேட்டோம். "இது ஒன்றும் ஏல அறிவிப்பல்ல. உடனடியாக நாங்கள் விஜயகாந்த் தின் சொத்துக்களை ஏலம் விடப் போவதில்லை. யார் வங்கியில் கடன் வாங்கியிருந்தாலும் தொடர்ந்து மூன்று மாதம் அந்த கடன் தொகையை கட்டவில்லையென்றால் அந்த கடன்தொகை வருமானம் ஈட்டாத சொத்தாக மாறிவிடும். அதுவே ஆறு மாதம் கட்டவில்லையென்றால் அதை ஏலத்தில் விடுவோம் என வங்கி நிர்வாகம் பத்திரிகை விளம்பரம் மூலம் அறிவிப்பு ஒன்றை வெளியிடும். அதற்கு பெயர் டிமாண்ட் நோட்டீஸ். அதைத்தான் விஜயகாந்தின் சொத்துக்கள் மீது வங்கி நிர்வாகம் வெளியிட்டிருக்கிறது'' என்றார். மேலும் விபரம் அறிய சட்டப்பிரிவு மேலாளர் திரு. அனூப் அவர்களை தொடர்பு கொள்ளச் சொன்னார்கள்.
 

dmdk



அனூப் பேசும்போது,  இது ஒரு சாதாரண அறிவிப்புதான். இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட 60 நாட்களுக்குள் வங்கிக்கு கட்ட வேண்டிய ஐந்தரைக் கோடி ரூபாயை எப்படி கட்டுவேன் என விஜயகாந்த் விளக்க வேண்டும். அவர் சரியான விளக்கம் தருவாரேயானால் இந்த அறிவிப்பை நாங்கள் வாபஸ் பெறுவோம். இல்லையென்றால் அந்த சொத்துக்களை ஏலம் விடும் பணியை 60 நாட்களுக்குப் பிறகு தொடங்குவோம்'' என்றார். கடந்த 19-ம் தேதி பத்திரிகை விளம்பரமாக வந்த இந்த ஏல அறிவிப்பை தொடர்ந்து விஜயகாந்த் குடும்பத்தினர் வங்கியை தொடர்பு கொண்டு கடனை அடைப்பது தொடர்பாக பேசினார்களா? என வங்கியின் மவுண்ட்ரோடு கிளை மேனேஜரை கேட்டோம். ""இதுவரை இல்லை'' என்றார்.

விஜயகாந்த் மனைவி பிரேமலதா நினைத்தால், வீட்டுக்கே வந்து பல மணி நேரம் கூட்டணி பேரம் நடத்திய மத்திய மந்திரி பியூஷ் கோயல் மூலமாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடமே பேச வாய்ப்பிருக்கிறதே? ஒரு போன் மூலம் இந்த ஏல அறிவிப்பையே நிறுத்தியிருக்கலாமே, என்ன தான் நடக்கிறது என தே.மு.தி.க. காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளரும், ஆண்டாள் அழகர் கல்லூரியின் நிர்வாகத்தின் சார்பாக விஜயகாந்த்தின் காஞ்சிபுரம் சொத்துக்களை நிர்வகிப்பவருமான ராஜேந்திரனை கேட்டோம். எனக்கொன்றும் தெரியாது'' என அவர் ஒதுங்கிக் கொண்டார்.


ஏலத்தில் வந்துள்ள மூன்று சொத்துக்களில் சென்னை விருகம்பாக்கம் கண்ணபிரான் காலனி ஷாப்பிங் காம்ப்ளக்சை விற்றாலே மொத்த கடனையும் அடைக்கலாம். இது தவிர சென்னை போரூரில் ஒரு பெரிய வீட்டை விஜயகாந்த் சில வருடங்களுக்கு முன்புதான் கட்டினார். அத்துடன் கல்லூரி அமைந்துள்ள மாமண்டூருக்கு பக்கத்தில் உள்ள மதுராந்தகத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பண்ணை வீடு அமைத்துள்ளார். இப்படி ஏகப்பட்ட சொத்துக்கள் இருக்கும்போது வெறும் ஐந்தரைக் கோடி ரூபாய்க்காக, நூறு கோடி ரூபாய்க்கு மேல மார்க்கெட்டில் விலை போகும் கல்லூரியை ஏன் ஏலத்திற்கு கொண்டு வந்தார்கள் என தெரியவில்லை'' என்கிறார்கள் தே.மு.தி.க. தலைவர்கள்.


2009-2011 காலகட்டத்தில் தே.மு.தி.க. பிரமுகர்களிடம் இருந்து கட்சி வளர்ச்சி நிதி என்ற பெயரில் சுமார் 300 கோடி ரூபாயை தே.மு.தி.க. வசூல் செய்துள்ளது. தொடர்ந்து தோல்விக் கூட்டணியில் பிரேமலதா தே.மு.தி.க.வை இடம் பெற செய்வதால் இனி கட்சிக்கு எதிர்காலம் இல்லை என பணம் கொடுத்தவர்கள், அதனைத் திரும்ப கேட்டு நச்சரிக்க ஆரம்பித்து விட்டார்கள். அவர்களை சமாளிக்க பிரேமலதா போட்ட டிராமாதான் இந்த ஏல அறிவிப்பு'' என ஏல அறிவிப்பின் பின்னணியை விவரிக்கிறார்கள் தே.மு.தி.க. தலைவர்கள்.

சொத்துக்கள் ஏலத்துக்குப் போய் வீதிக்கு வரும் அளவுக்கு விஜயகாந்தின் நிலை இல்லை. அவரது அயராத உழைப்பு நல்ல முறையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. எனினும், அரசியலுக்காக சில ஸ்டண்ட்டுகள் தேவைப்படுகின்றன'' என்கிறார்கள் விபரமறிந்தவர்கள். 

 

Next Story

“16 அடி இல்லை 32 அடி கூட பாய்வேன்” - விஜய பிரபாகரன் அதிரடி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
DMDK candidate Vijaya Prabhakaran speech at election campaign

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.

அந்த வகையில் முதன்முதலாக தேர்தல் களத்தை சந்திக்கிறார் விஜயகாந்தின் வாரிசான விஜய பிரபாகரன். தே.மு.தி.க சார்பில் விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் விருதுநகர் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், நேற்று நடைபெற்ற பிரச்சாரத்தில் விஜய பிரபாகரன் பேசியதாவது, “விஜயகாந்த் உடைய தைரியம் எனக்கும் இருக்கிறது. அது ரத்தத்திலே எங்க அப்பா எனக்கு கொடுத்தது. ஆனால், அந்த தைரியத்தை வைத்து மட்டும் இந்த தேர்தலை என்னால் சந்திக்க முடியாது. அந்த தைரியத்தை மக்களாகிய நீங்கள் முரசு சின்னத்தில் வாக்களிப்பதன் மூலம் கொடுக்க வேண்டும்.

மக்களை தங்கத்தட்டில் வச்சு தாலாட்ட வேண்டும் என்று எங்க அப்பா அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார். நிச்சயம் இந்த விருதுநகர் மக்களை தங்கத்தட்டில் வச்சு தாலாட்ட நான் தயாராக இருக்கிறேன். உங்க வீட்டில் இருக்கிற பசங்க வயசுதான் எனக்கும் இருக்கிறது. எனக்கும் பல ஆசைகள் இருக்கிறது, ஆனாலும் அதை எல்லாம் ஓரம் கட்டி ஒதுக்கி வைத்துவிட்டு எங்க அப்பாவோட கனவை நிறைவேற்றவும், எங்க கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும் இந்த மக்கள் முன்னாடி நான் வந்து நிற்கிறேன் என்றால் மக்களுக்கு நீங்கள் எனக்கு முழு ஆதரவு கொடுக்க வேண்டும்.

அதேபோல், இளைஞர்கள் பலரும் எத்தனையோ வாய்ப்பு தேடி சுற்றிக் கொண்டிருப்பார்கள். அந்த மாதிரி என் தந்தை தாய் ஸ்தானத்தில் இருக்கின்ற மக்கள் ஆகிய உங்களிடம் ஒரு வாய்ப்பை தருமாறு கேட்கிறேன். ஏனென்றால், வாய்ப்பு கொடுத்தால் தான் நாங்கள் என்ன செய்வோம் என்று உங்களுக்கு தெரியும். இரண்டு முறை காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களித்து பத்து ஆண்டுகளாக எம்.பியாக ஆக்கி அவரை பார்த்தீர்கள். ஆனால், அவரது முகம் கூட பலருக்கும் தெரியாது. ஏன் அவர் பெயர் கூட யாருக்கும் தெரியாது.

எம்.ஜி.ஆர் வழியில் வந்தவர் விஜயகாந்த். இரண்டு தலைவர்களுமே, தன் சொந்த பணத்தை மக்களுக்கு செலவு செய்த தலைவர்கள். அந்த வழியில் வந்தவர்கள் தான் அ.தி.மு.க- தே.தி.மு.க கூட்டணியும். ‘புலி 8 அடி பயந்தால் குட்டி 16 அடி பாயும்’ என்று சொல்வார்கள். நான் ஆணவத்தில் பேசவில்லை, எங்க அப்பாவோட ஆசை நிறைவேற்றுவதற்கு 16 அடி இல்லை 32 அடி கூட பாய்வதற்கு தயாராக இருக்கிறேன். ஆனால் அந்த வாய்ப்பை கொடுத்தால் தான் அதை நிரூபிக்க முடியும். விஜயகாந்த் புதைக்கப்படவில்லை கோடிக்கணக்கான மக்களின் மனதில் விதைக்கப்பட்டுள்ளார். இன்றைக்கு எம்ஜிஆர் மறைவு, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பெருசா பேசப்படுவது விஜயகாந்தினுடைய மறைவு மட்டும் தான்

யூடியூப், ரீல்ஸ் போன்றவற்றை பார்த்து, இளைஞர்களாகிய நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு ஏதோ ஒரு கட்சிக்கு ஓட்டு போட்டு விடாதீர்கள். இந்தத் தொகுதியிலேயே தங்கி உங்களுக்கு செய்ய நான் தயாராக இருக்கிறேன். துளசி கூட வாசம் மாறும், ஆனால் தவசி வார்த்தை மாறவே மாறாது. சொன்னா சொன்னதுதான். நிச்சயமாக உங்களுக்கு சேவை செய்ய  தயாராக இருக்கிறேன்” என்று கூறினார்.

Next Story

'இதெல்லாம் இல்லாததால் தான் நான் அரசியலுக்கு வருகிறேன்'-விஷால் பேட்டி

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'It is because of the lack of all this that I am coming to politics' - Vishal interview

நடிகர் விஷால் திரைப்படங்களில் நடித்துக் கொண்டே, அறக்கட்டளையின் மூலம் மக்களுக்குப் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். கடந்த 2017 ஆம் அண்டு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக சுயேட்சை வேட்பாளராக மனுத் தாக்கல் செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரது மனு நிராகரிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் புது அரசியல் கட்சி விஷால் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகக் கூறப்பட்டது. ஆனால் அதனை திட்டவட்டமாக மறுத்த விஷால், வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால், அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன் என்று பேசியிருந்தார்.

இந்தநிலையில் நடிகர் விஷால் புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விஷால், 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன் புதிய கட்சியைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு வேட்பாளர் பட்டியலில் என் பெயரும் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் விஷால் பேசுகையில், ''அரசியலுக்கு வருகிறேன் என்று நான் ஏன் ஓப்பனாக சொல்கிறேன் என்றால் நான் எதையுமே மூடி மறைத்தது கிடையாது. எதற்கு விஷால் அரசியலுக்கு வரவேண்டும். நிறைய பேர் இருக்காங்களே. இவர் வந்து என்ன செய்யப் போகிறார் என்று கேட்பார்கள்.

மக்களுக்கு எந்த ஒரு குறையும் இல்லை. விவசாயிகளுக்கு எந்த குறையும் இல்லை. கிராமத்தில் குடிநீர் பிரச்சனை  இல்லை. ரோடு நல்லா போட்டிருக்கிறார்கள், தூர்வாரி இருக்கிறார்கள், மெட்ரோ இருப்பதால் டிராபிக் நெரிசல் இல்லாமல் நல்லாவே இருக்கிறது, சாலை எல்லாமே கரெக்டா இருக்கும்போது இவன் அரசியல் எதுக்கு தேவையில்லாமல் வரான் என்று கேள்வி எழுப்புவார்கள். ஆனால் இதெல்லாம் இல்லாததால் தான் நான் அரசியலுக்கு வருகிறேன். அதுதான் உண்மை. அதுதான் என்னுடைய பதில். நல்லவேளை விஜயகாந்த் சார் மாதிரி என்கிட்ட கல்யாண மண்டபம் இல்லை. இல்லைன்னா இதை நான் சொன்னதனால் இடிச்சு தள்ளியிருப்பாங்க. டைம் வரும்போது சொல்கிறேன்'' என்றார்.