Skip to main content

“தே.மு.தி.கவுக்கும் மட்டுமல்ல அனைத்து கட்சிகளுக்கும் அந்த விமர்சனத்தை வைக்க வேண்டும்” - விஜய பிரபாகரன்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Vijaya Prabhakaran says Not only DMDK but all parties should be criticized

நாடாளுமன்றத் தேர்தல், ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்தத் தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அந்த வகையில், தி.மு.க. அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் முதன்முதலாக தேர்தல் களத்தை சந்திக்கிறார் விஜயகாந்தின் வாரிசான விஜய பிரபாகரன். தே.மு.தி.க சார்பில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். நக்கீரன் சார்பாக அவரைப் பேட்டி கண்டோம். நம்முடைய கேள்விகளுக்கு  விஜய பிரபாகரன் அளித்த பேட்டி பின்வருமாறு...

முதன் முதலாக தேர்தலை சந்திக்கிறீர்கள். களம் எப்படி இருக்கு?

“களம் ரொம்ப நல்லா இருக்கு. இந்த முறையும் அதிமுக - தேமுதிக கூட்டணி அமைத்திருக்கிறோம். இங்கு அதிமுகவுக்கு தனி செல்வாக்கு இருக்கு. அதே போல், தேமுதிகவுக்கும் தனி செல்வாக்கு இருக்கு. இரண்டு கட்சிகளும் சேரும் போது வெற்றி வாய்ப்பு பிரகாசமா இருக்கு”

உங்களுக்கு எதிராக நிற்கும் வேட்பாளர், இந்தியா கூட்டணியை சேர்ந்தவர். அவருக்கு கூட்டணி பலம் அதிகமா இருக்குனு அவர்கள் சொல்கிறார்களே?

“அப்படி பார்த்தா எங்களுடைய கூட்டணி பலமும் அதிகமாக தான் இருக்கு. அதிமுக, தேமுதிக தவிர பல சமுதாய மக்களும் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். அதிமுக ஒரு மிகப்பெரிய கட்சி. சாதி, மதம் எல்லாவற்றையும் தாண்டி அனைத்து மக்களும் அந்தக் கட்சியில் இருக்கிறார்கள். அதே போல், தேமுதிகவும். அதனால், அவர்கள் கூட்டணியாக பெருசா தெரியலாம். ஆனால், மக்களின் எண்ணிக்கை, கட்சிக்காரர்கள் என அனைவரும், எங்களுடைய கூட்டணிக்கு ஆதரவாக இருக்கிறார்கள்”.

அதே போல், பா.ஜ.க வேட்பாளரும் பிரபலம் என்றும், கூட்டணி பலம் வலுவாக வைத்திருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்களே?

“ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு வியூகம் இருக்கும். ஜூன் 4 ஆம் தேதி அன்று மக்களின் தீர்ப்பின் மூலம் தெரியும். எந்தக் கூட்டணி உண்மையான பலமான கூட்டணி என்று”.

Vijaya Prabhakaran says Not only DMDK but all parties should be criticized

ஒரு வேட்பாளராக வருவேன் என்று கடந்த வருடம் கூட உங்களுக்கு தெரிந்திருக்காது. அப்படி இருக்கையில், இப்படியான கூடுதல் பொறுப்பை எப்படி பார்க்கிறீர்கள்?

“ஒரு நாள் இங்கு வருவேன் என்று எனக்கு தெரியும். ஆனால், இவ்வளவு சீக்கீரம் இங்கு வருவேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால், விஜயகாந்த் கடந்த 10 வருடமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு ஆதரவாகத்தான் களத்தில் இறங்கி, அவர் பார்க்க வேண்டிய வேலையை நாங்கள் பார்த்து வந்தோம். ஆனால், இப்போது இது எனக்கு கூடுதல் பொறுப்புதான். இப்போது, ஒரு வேட்பாளராக இறங்கும்போது, நிச்சயமாக வெற்றி பெற்று கட்சிகாரர்களுக்கு ஒரு நம்பிக்கையாக இருக்க வேண்டும். அவர்களுடைய எதிர்காலம் அனைத்தும் இந்தத் தேர்தலில் தான் இருக்கு. விஜயகாந்துக்கு அடுத்தபடியாக யார் இருக்கிறார்கள் என்று அனைவரது பார்வையும் என் மீது திரும்பும் போது கூடுதல் பொறுப்பு அதிகமாக இருக்கு.

விஜயகாந்த் மகன் என்ற பொறுப்பு சின்ன வயசுல இருந்தேதான் இருக்கு. இன்னும் இந்த கூடுதல் பொறுப்பை கஷ்டமாகவோ, சுமையாகவோ பார்க்கவில்லை. எங்க அப்பாவுடைய ஆசையையும், கனவையும், நிறைவேற்றுவதற்கு ஒரு வழி எனக்கு கிடைச்சிருக்கு. கண்டிப்பாக இந்த தேர்தலில் வெற்றிபெற்று எங்க அப்பாவுக்கு சமர்ப்பிக்கனும் என நினைக்கிறேன்”.  

அனைத்து கிராமங்களிலும் நீங்கள் செல்லும்போது, மக்கள் என்ன சொல்கிறார்கள்?

“மக்கள் முழு ஆதரவு கொடுக்கிறார்கள். விஜயகாந்த் இல்லாத இந்த நேரத்தில், மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கு. எல்லோருமே விஜயகாந்தை மிஸ் பண்றாங்க. ஊருக்குள்ளே போகும்போது பெண்கள் எல்லாரும் என் கையைப் பிடித்து அழுகிறார்கள்.  ஏற்கெனவே என் மனதில் துக்கங்கள் அடக்கி இருக்கும் இந்தச் சூழ்நிலையில், அவர்களை பார்க்கும்போது இன்னும் அழுத்தம் கொடுக்குது. இருந்தாலும், அவர்களுக்கு ஆறுதல் சொல்கிற சூழ்நிலையில் நான் இருக்கேன்”. 

விஜயகாந்தோடு தே.மு.தி.க போயிருச்சு என்கிற விமர்சனத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

“அப்படி பார்க்கையில், எம்.ஜி.ஆர் அ.தி.மு.க.வை ஆரம்பித்தார். அவருக்கு பின்னால், அந்தக் கட்சியை ஜெயலலிதா வழிநடத்தினார். அவருக்கு பின்னால், இன்னைக்கு எடப்பாடி பழனிசாமி வழிநடத்தி வருகிறார். அதே போல், தி.மு.க.வை அறிஞர் அண்னா ஆரம்பித்து, கலைஞர், மு.க.ஸ்டாலின் என வழிநடத்தி வருகிறார்கள். அந்த மாதிரி, காலத்துக்கும் ஒரு தலைவர் வந்துகொண்டேதான் இருப்பார்கள். கட்சி என்றைக்குமே அழியாது. தே.மு.தி.கவை விஜயகாந்த் ஆரம்பித்தார். இன்றைக்கு, பிரேமலதா விஜயகாந்த் அக்கட்சியை வழிநடத்தி வருகிறார். அப்படி பார்த்தால், தே.மு.தி.கவுக்கு மட்டுமல்ல அனைத்து கட்சிகளுக்கும் இந்த விமர்சனத்தை வைக்க வேண்டும்”.