publive-image

Advertisment

நடிகர் விஜய் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். அந்த நிகழ்வில் மாணவர்கள் எதிர்காலம் குறித்து பல்வேறு விசயங்களை பகிர்ந்திருந்தார். விஜய்யின் இந்த செயல் குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் காலம் அவர்களின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜை சந்தித்து பேட்டி கண்டோம்.

நடிகர் விஜய் மாணவர்களைச் சந்தித்து பேசுகையில் புதிய வாக்காளர்களாகிய நீங்கள் பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போட வேண்டாம் என்று உங்கள் பெற்றோர்களிடம் சொல்லுங்கள் என்று பேசிருக்கிறாரே?

அந்த நிகழ்ச்சியில் விஜய் பேசியது மூலம் அரசியலில் வருவதற்கான முன்னெடுப்பில் உள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது. இந்த ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். இந்த நிகழ்ச்சியின் மூலம் விஜய் அரசியலில் மாற்றத்தை உருவாக்கலாம். அதற்கு என்னுடைய வாழ்த்துகள். அதைத்தொடர்ந்து, விஜய் மாணவர்களிடம் பேசியது மிகவும் வரவேற்கத்தக்க விசயமாகத்தான் தெரிகிறது. அப்துல் கலாம், பல்வேறு நிகழ்வுகளில் கிட்டத்தட்ட 2 கோடி மாணவர்களிடம், ஓட்டுக்கு பணம் வாங்க வேண்டாம் என உங்கள் பெற்றோர்களிடம் வலியுறுத்துங்கள் என்று கூறியிருக்கிறார்.

Advertisment

ஒரு முறை திருப்பதியில் நடந்த ஒரு மாநாட்டில் 1 லட்சம் மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களிடம் ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என்று போஸ்ட் கார்டில் கையெழுத்து வாங்கி அப்துல் கலாம் அவர்களிடம் கொடுத்தார்கள். அவர் சொன்னது போல மக்கள் ஓட்டுக்கு பணம் வாங்காமல் இருந்தால் அரசியல்வாதிகள் எந்த வித ஊழலிலும் ஈடுபட மாட்டார்கள். மேலும், மக்களும் ஓட்டுக்கு பணம் வாங்குவதன் மூலம் ஊழலில் பங்குதாரர்களாக இருக்கிறார்கள். அதன் காரணமாகத் தான் அரசியல்வாதிகளும் ஊழல் செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. தேர்தல் ஆணையம் கொடுத்த செலவு வரம்பில் வேட்பாளர்கள் பயன்படுத்த வேண்டும் என்ற வாய்ப்பை மக்கள் கொடுத்தால் ஊழல் செய்பவர்களை தட்டி கேட்பதற்கான அங்கீகாரம் மக்களுக்கு கிடைக்கும். மேலும் இன்றைய நவீன உலகில் ஊழல் செய்பவர்களை உடனே வெளிச்சத்துக்கு கொண்டு வந்து அவர்களும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

எனவே ஊழலற்ற அரசாங்கம் வருவது மிகவும் வரவேற்கத்தக்கது தான். விஜய் எந்தளவுக்கு ஊழலுக்கு எதிர்த்து போராடுகிறார் என்பதையும் மத்திய, மாநில அளவிலேயே ஊழல் செய்பவர்களை எதிர்த்து களமாடுகிறார் என்பதையும் என்ன கொள்கைகளை முன்னெடுத்து வருகிறார் என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஏனென்றால் எம்.ஜி.ஆர் திமுகவில் இணைந்து பல காலம் அரசியலில் இருந்து தான் அதிமுகவை கட்டமைத்தார். அது போல இன்றைக்கு இருக்கkகூடிய நடிகர்களின் அரசியல் வெற்றிவாய்ப்பு வெறும் சினிமாவில் மட்டும் வராது என்பதை அவர்கள் உணர வேண்டும். மக்களோடு இணைந்து மக்களுக்காக போராடினால் தான் அது சாத்தியம். அதை விஜய் செய்தால் வரவேற்போம்.

அம்பேத்கர், பெரியார், காமராஜ் போன்றவர்களைப்படியுங்கள் என்று விஜய் கூறிருக்கிறாரே?

Advertisment

அவர் சொன்னது உண்மை தான். ஏனென்றால் அம்பேத்கர், பெரியார், காமராஜரைப்பற்றி இன்றைய தலைமுறைகள் மறந்து விட்டனர். அம்பேத்கரையும், பெரியாரையும் படித்தால் சமூக நீதி, சுயமரியாதை, பகுத்தறிவு பற்றி தெரியக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. காமராஜரைப் பற்றி படித்தால் தேசபக்தியையும், நாட்டுடைய வளர்ச்சியையும் பற்றி தெரிந்து கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல் பல்வேறு தலைவர்கள் இந்த நாட்டின் வளர்ச்சிக்காகப் போராடி இருக்கிறார்கள். அவர்களைப் பற்றியும் மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டும். எதிர்காலத் தலைவர்களை உருவாக்கக் கூடிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். பல கோடி ரசிகர்களை வைத்திருக்கும் விஜய் இதைப் பற்றி கூறுவதால் பெரிய சமூக மாற்றம் ஏற்படும். ஆனால் விஜய் பேசியது எந்தளவுக்கு முன்னெடுப்பாக அமையும் என்று தெரியவில்லை. விஜய் சமூக கருத்துக்களை மக்களுக்கு சொல்கிறார் என்பதைத்தாண்டி எவ்வளவு தூரம் மக்களுக்காக களத்தில் இறங்குறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க முடியும்.