Vijay politics entry spoke with party member about Ajith

“நான் வரவா தனியே வரவா” என ‘லியோ’ சினிமா படத்தில் பாடும் விஜய், அரசியலுக்கு வருவதற்கான ஆயத்த வேலைகளில் இறங்கிவிட்டார் என்கிறார்கள் அவரது ரசிகர்கள். லியோ படத்துக்குப் பிறகு வெங்கட்பிரபு இயக்கத்தில்‘தளபதி 68’ என்கிற படத்தில் நடிக்கும் விஜய், “அதற்குப் பிறகு நான் படங்களில் நடிக்க மாட்டேன் இரண்டு வருடங்கள் அரசியல்தான். அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவேன்” என தனக்கு நெருக்கமான வட்டாரங்களில் பேசியதாக பரபரப்பான செய்தி வெளியானது.

Advertisment

அதைத் தொடர்ந்து பனையூரில் உள்ள அவரது வீட்டுக்குப் பக்கத்தில் விஜய் கட்டி வைத்துள்ள ரசிகர்மன்ற ஆபீசில் இரண்டுநாள் சட்டமன்றத் தொகுதிவாரியாக ரசிகர்களின் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார் விஜய். அதில் “காமராஜர் பிறந்த தினத்தன்று தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு ஊரிலும் இரவு பாடசாலை அமைக்க வேண்டும். அதற்கான இடத்தைத் தேடுங்கள்” என உத்தரவிட்டு அதன்படி இரவு பாடசாலையையும் கடந்த 15ம் தேதி துவங்கிவிட்டார். அத்துடன் காங்கிரஸின் ராகுல்காந்தி ஸ்டைலில் தமிழகம் முழுவதும் பாத யாத்திரை நடத்தப்போகிறார் என செய்திகள் வெளியானது.

Advertisment

Vijay politics entry spoke with party member about Ajith

எப்பொழுதும் விஜய்க்கென சமூக வலைத்தளங்களில் ஒரு டீம் இருக்கும். அந்த டீமை சேர்ந்தவர்களிடம், “இனி அஜித்தை தாக்கி மட்டும் செய்திகள் வெளியிட வேண்டாம். ரஜினியை விட விஜய் பெரிய ஆள் என்கிற பிம்பத்தை உருவாக்குங்கள். விஜய்யின் பெயர் இளைஞர்களுக்கு பெரிய அளவிற்கு போய்ச் சேரவேண்டும்” என விஜய் உத்தரவிட்டிருக்கிறார்.

ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் “உங்கள் ஊரில் அரசியல் ஆர்வம்மிக்க இளைஞர்களை கண்டுபிடியுங்கள். அவர்கள் எந்த அரசியல் கட்சியில் இருந்தாலும் பரவாயில்லை. அவர்களை விஜய் மன்றத்தில் சேர்த்து பொறுப்பு கொடுங்கள். இந்த வேலை அடுத்த வருடத்திற்குள் நடக்க வேண்டும்” என உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.

Vijay politics entry spoke with party member about Ajith

“விஜய் அரசியலுக்கு வந்தால் நாங்கள் அவரை வரவேற்போம்” என அண்ணாமலையும், வானதி சீனிவாசனும், நயினார் நாகேந்திரனும், குட்டித்தலைவரான அமர்பிரசாத் ரெட்டியும் அறிக்கை விட்டனர். முன்பு ஜோசப் விஜய் என்று விமர்சித்த பா.ஜ.க.வினர் இன்று விஜய்க்கு ஆரத்தி எடுக்கின்றார்கள்.

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது ரஜினியை அரசியலுக்கு கொண்டுவர ஒரு டீம் முயன்றது. குருமூர்த்தி தலைமையில் இயங்கிய அந்த டீமில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளாக இருந்து ஓய்வு பெற்றவர்கள் இருந்தனர். அந்த டீம் மறுபடியும் இயங்க ஆரம்பித்திருக்கிறது. அவர்கள் விஜய் அரசியலுக்கு வந்தால் அவரது கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவை பற்றி ஒரு நீண்ட அறிக்கையை தயார்செய்து ஓய்விலிருக்கும் விஜய்யிடம் படிக்கக் கொடுத்திருக்கிறார்கள்.

இந்த டீம் 2021ல் ரஜினி அரசியலுக்கு வந்தால் என்ன நடக்கும் என சர்வே எடுத்த டீம். ரஜினி, தி.மு.க., அ.தி.மு.க.வில் இருந்து தொண்டர்களைப் பிரித்து எடுத்து ஒரு கட்சியை உருவாக்கினால் இருபதிலிருந்து இருபத்திரெண்டு சதவீத வாக்குகளைப் பெறுவார். ரஜினியுடன் விஜய் இணைந்தால் ஆட்சி அமைப்பார் என பி.ஜே.பி.க்கு அறிக்கை கொடுத்த டீம். இப்பொழுது ரஜினியின் அரசியல் வரவு ‘சூனியம்’ ஆனதால், அந்த வாக்குகள் விஜய் பக்கம் வரும் என விஜய்க்கு சொல்லியிருக்கிறார்கள்.

Vijay politics entry spoke with party member about Ajith

அதனால்தான் நான் ரஜினியை விட பெரிய ஆள் என சமூக வலைத்தளங்களில் பரப்பச் சொல்லியிருக்கிறார். விஜய் 2014ல் நரேந்திரமோடியை சந்தித்தார். கோவையில், விஜய் அப்பா சந்திரசேகரின் ஏற்பாட்டில் நடந்த அந்த சந்திப்பை, "அதைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது” என அப்பா மீது பழிபோட்டு தப்பித்தார் விஜய்.

இப்பொழுது அவர் அரசியலுக்கு வர வேண்டுமென்றால் தனியாகத்தான் வரவேண்டும். அதற்கு ஏராளமான பணம் தேவைப்படும். ஒரு தொகுதிக்கு குறைந்தபட்சம் இருபது கோடி ரூபாய் தேவைப்படும் என்ற இன்றைய சூழ்நிலையில், தமிழகம் முழுவதும் அரசியல் கட்டமைப்பை ஏற்படுத்த நூற்றுக்கணக்கான கோடிகள் தேவைப்படும். இதற்கான நிதி உதவியை யார் செய்வார்கள்?

ஏற்கெனவே ரஜினியை சுற்றியிருந்த பா.ஜ.க. டீம் தற்பொழுது விஜய்யை சுற்றி வியூகம் அமைத்துள்ளது. ‘பாராளுமன்றத் தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்தவேண்டும். மோடி எதிர்ப்பு ஓட்டுக்களை அவர் சிதறடிக்க வேண்டும் என்பது தான் விஜய் அரசியல் வியூகத்தின் டார்கெட்’ என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

Vijay politics entry spoke with party member about Ajith

இதற்கிடையே “நான்தான் புதுச்சேரி எம்.பி.” என்று புஸ்சி ஆனந்த் சொல்ல ஆரம்பித்திருக்கிறார். விஜய் சினிமாவில் இருந்து ஓய்வு, பாத யாத்திரை போன்றவை எல்லாம் நடக்காத விசயங்கள் என்கிறார்கள் சினிமா வட்டாரத்தை சேர்ந்தவர்கள். முன்னர் சசிகலா காலில் அ.தி.மு.க. வினர் விழுவதுபோல இப்பொழுது புஸ்சி ஆனந்தின் கால்களில் விழ ஆரம்பித்துவிட்டார்கள் விஜய் ரசிகர்கள்.