Skip to main content

விஜய் டிரான்ஸ்பர்மேசன்: ரக்கட் பாய் ஆன சாக்லேட் ஹீரோ - விரிவான பார்வை

Published on 22/06/2023 | Edited on 22/06/2023

 

vijay birthday special Article

 

நடிகர் விஜய்  பல திரைப்படங்களில் நடித்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் இன்று விஜய்யின் 49வது பிறந்தநாளை முன்னிட்டு விஜய் நடித்த லியோ படத்தின் முதல் போஸ்டரை படக்குழு இரவு 12 மணிக்கு வெளியிட்டனர். அதனைத் தொடர்ந்து லியோ படத்தின் புகைப்படத்தை பகிர்ந்து பல திரைப் பிரபலங்களும் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் நடிகர் விஜய்க்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து ஆக்‌ஷன் படத்தில் நடிக்கும் விஜய் இந்த புகைப்படத்தில் கடுங்கோபத்தோடு இருப்பது போல் காட்சியளிக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த விஜய் ரசிகர்கள் பலரும் ரசித்து வந்தாலும் 90’ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்தமான ரொமான்ஸ் படத்தில் நடித்த விஜய்யை காணமுடியவில்லை என்று கவலையோடும் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகையில் நடிகர் விஜய் எப்போது ரொமான்ஸ் ஹீரோவில் இருந்து ஆக்‌ஷன் ஹீரோவாக மாறினார் என்பதை விரிவாகப் பார்ப்போம்.

 

ஆரம்பத்தில் விஜய் தனது தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் குழந்தை நட்சத்திரமாக 1984 ஆம் ஆண்டு வெளிவந்த வெற்றி படத்தில் நடித்தார். பின்பு சில படங்களில் சிறிய தோற்றத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1992 ஆம் ஆண்டு தனது 18வது வயதில் முதல் படமான நாளைய தீர்ப்பு படத்தில் நடித்தார். அந்த படத்தில் விஜய்யை  உருவ கேலியால் பலரும் விமர்சித்து வந்தனர். மேலும் குடும்ப ரசிகர்களை கவராமல் போனதால் நாளைய தீர்ப்பு படுதோல்வி அடைந்தது.

 

இதனையடுத்து, மனம் தளராத விஜய் அடுத்த படத்தில் நடிக்க தயாரானார். எஸ்.ஏ.சந்திரசேகர் தனது மகனை கிராமப்புறங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக அன்றைக்கு முன்னணி நடிகராக இருந்த விஜயகாந்த் உடன் செந்தூரபாண்டி என்ற படத்தில் விஜய்யை நடிக்க வைத்தார். இந்த படம் விஜயகாந்திற்காக ஓரளவுக்கு திரையரங்குகளில் ஓடியது. அதைத் தொடர்ந்து ரசிகன், தேவா, ராஜாவின் பார்வையிலே, விஷ்ணு, கோயம்புத்தூர் மாப்பிள்ளை போன்ற படங்களில் நடித்தார் விஜய். அந்த படங்களில் எல்லாம் விஜய்யை பல குடும்பங்களில் ரசிக்காமலே இருந்தனர். ஏனென்றால் அதுவரை விஜய் நடித்த அனைத்து படங்களிலும் கவர்ச்சி அதிகமாக இருக்கும். அதனால் பல படங்கள் பேர் சொல்லும் அளவிற்கு இல்லாமல் போயின.

 

இந்நிலையில் தான் 1996 ஆம் ஆண்டு அன்றைக்கு கொடிகட்டிப் பறந்த இயக்குநர் விக்ரமன் விஜய்யை வைத்து பூவே உனக்காக படத்தை எடுக்கத் தயாரானார். ஆனால் விஜய்யை வைத்து இப்படி ஒரு கனமான கதை உள்ள படத்தை எடுப்பதா என்று பலரும் அச்சப்பட்டனர். ஆனால் இயக்குநர் விக்ரமன் தான் எடுத்த முடிவில் உறுதியாக இருந்து அந்த படத்தை இயக்கினார். அந்த திரைப்படம் கிட்டத்தட்ட 200 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி மாபெரும் வெற்றியை தந்தது. மேலும், அந்த படம் தான் விஜய்யை பல குடும்பங்களுக்கு எடுத்துச் சென்று அவரது சினிமா வாழ்க்கையை அடுத்தகட்டத்திற்கு கொண்டு போனது என்றே சொல்லலாம்.

 

vijay birthday special Article

 

தனக்கு இது போன்று கதை தான் சரியாக வரும் என்று எண்ணி விஜய் தொடர்ந்து காதல் படங்களான காலமெல்லாம் காத்திருப்பேன், லவ் டுடே, ஒன்ஸ்மோர் போன்ற படங்களில் நடித்து அந்த படங்களை வெற்றி படமாகவும் மாற்றினார். 1997 ஆம் ஆண்டு வெளிவந்த காதலுக்கு மரியாதை படம் முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி வந்ததால் அனைத்து பெண் ரசிகர்களும் விஜய் வசமானார்கள். இந்த படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்து விஜய் படம் என்றால் குடும்பத்தோடு சென்று பார்க்கலாம் என்ற நிலை வந்தது. மேலும், 1999 ஆம் ஆண்டு வெளிவந்த துள்ளாத மனமும் துள்ளும் படமும் மாபெரும் வெற்றியை பெற்று தந்து பல விருதுகளை வாரிக் குவித்தார் விஜய்.

 

இந்நிலையில் தொடர்ந்து காதல் படங்களில் நடித்து வந்ததாலும் ஒரே மாதிரியான கதையில் நடிக்கிறார் விஜய் என்று விமர்சனம் வந்ததாலும் சில படங்கள் படுதோல்வியை சந்தித்தன. இதனிடையே 2002 ஆம் ஆண்டு வெளிவந்த பகவதி ஆக்‌ஷன் படமாக இருந்தாலும் பாட்ஷா படத்தின் சாயல் இருந்ததால் அந்த படம் தோல்வியை சந்தித்தது. எந்த மாதிரியான கதையை தேர்ந்தெடுத்து நடிப்பது என்று குழம்பி தமிழன், வசீகரா, புதிய கீதை போன்ற படங்களில் நடித்து தொடர் தோல்வியை சந்தித்தார் விஜய்.

 

இந்நிலையில் தான் 2003 ஆம் ஆண்டில் இயக்குநர் ரமணா இயக்கத்தில் திருமலை படத்தில் நடித்தார். அந்த படத்தில் விஜய் தனது மென்மையான தோற்றத்தை மாற்றி சென்னை தமிழ் பேசும் ஒரு இளைஞராக துள்ளலாக நடித்திருந்தார். இது போன்று ஆக்‌ஷன் படத்தில் விஜய் நடித்ததே இல்லை என்று பல ரசிகர்கள் திருமலை படத்தை மாபெரும் வெற்றி படமாக மாற்றினார்கள். இப்படம் தான் சாக்லேட் பாயாக இருந்த விஜய்யை ரக்கட் பாயாக மாற்றியது

 

அடுத்த ஆண்டான 2004 ஆம் ஆண்டில் விஜய்யை முழுக்க முழுக்க ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றிய படம் என்றால் அது கில்லி திரைப்படம் தான். அந்த படம் தெலுங்கு படத்தின் ரீமேக்காக இருந்தாலும் தெலுங்கில் ஓடியதை காட்டிலும் தமிழில் பட்டிதொட்டி எங்கும் ஓடி மாபெரும் வெற்றியை தந்தது. குறிப்பாக அந்த படத்தில் இடம்பெற்ற ‘அப்படி போடு’ பாடல் இந்தியாவில் உள்ள அனைத்து ரசிகர்களையும் ஆட வைத்தது என்றே சொல்லலாம்.

 

கில்லியை தொடர்ந்து மதுர, திருப்பாச்சி, சிவகாசி, ஆதி, போக்கிரி என பல ஆக்‌ஷன் படங்களில் நடித்தார் விஜய். இதனையடுத்து அழகிய தமிழ் மகன், குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா போன்ற தோல்வி படங்களிலும் நடித்தார். சுறா படத்தின் படுதோல்விக்கு பிறகு இனிமேல் விஜய்யால் தமிழ் சினிமாவில் நீடிக்க முடியாது என்று பலரும் கூறி வந்தார்கள். ஆனால் சுறா படத்திற்கு பிறகு 90’ஸ் கிட்ஸ்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக காவலன் என்ற காதல் படத்தில் நடித்தார் விஜய். ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வந்த விஜய் திடீரென்று காதல் படத்தில் நடித்ததாலும் அந்த படம் நன்றாக இருந்ததாலும் திரையரங்குகளில் ஓரளவுக்கு ஓடியது.

 

vijay birthday special Article

 

இதனையடுத்து வேலாயுதம் படத்தை தொடர்ந்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி படத்தில் நடித்தார். அந்த படத்தில் விஜய் முந்தைய படங்களை போல் அதிக வசனம் பேசாமல் ஆக்‌ஷனில் மட்டும் கவனம் செலுத்தி ஒரு ராணுவ வீரராக நடித்திருப்பார். அந்த படம் சுமார் 185 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து விஜய்யை மாஸ் ஹீரோவாக மாற்றியிருந்தது. இந்த படத்தில் இருந்து விஜய்யை வைத்து படம் தயாரித்தால் படம் நன்றாக இல்லாமல் போனாலும் அதிக வசூல் ஈட்டித் தரும் என்று பல தயாரிப்பாளர்கள் விஜய்யை வைத்து படம் எடுக்கத் தயாரானார்கள்.

 

தொடர்ந்து, தலைவா, ஜில்லா, தெறி, புலி, கத்தி, தெறி என்று படங்களை கொடுத்து ரசிகர்களை ரசிக்க வைத்தார் விஜய். அதில் சில படங்கள் தோல்வி அடைந்தாலும் வசூல் ரீதியாக எந்த பாதிப்பும் ஏற்படாமல் தயாரிப்பாளர்களை மகிழ்வித்தார். இதனையடுத்து 2017 ஆம் ஆண்டு இயக்குநர் அட்லீ இயக்கத்தில் மெர்சல் படத்தில் விஜய் நடித்தார். இந்த படத்தில் இறுதி காட்சியில் அரசியல் வசனங்கள் விஜய் பேசியதால் கோபத்துக்குள்ளான பாஜகவினர் அந்த படத்தை மிகவும் எதிர்த்தனர். அந்த எதிர்ப்பில் மெர்சல் திரைப்படம் இந்தியா முழுக்க ‘மோடியும் விஜய்யும்’ என்ற கேள்வி எழுந்து பல ஊடகங்களில் பேசுபொருளாக மாறியது. அதுவே இந்த படத்திற்கு சாதகமாக அமைந்து இந்தியா முழுதும் கொண்டு சென்று 250 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து மாபெரும் வெற்றியை பெற்று தந்தது.

 

அதனைத் தொடர்ந்து சர்கார், பிகில், மாஸ்டர், பீஸ்ட், வாரிசு போன்ற படங்களில் நடித்து தற்போது வேறு ஒரு விஜய்யாக மாறி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துள்ளார். மேலும் துப்பாக்கி படத்திற்கு பிறகு அனைத்து படங்களும் வசூல் ரீதியாக மாபெரும் சாதனை படைத்து வருகிறது. தற்போது வெளிவரவிருக்கும் லியோ படம் கூட முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர். இப்படி தொடர்ந்து காதல் படங்களில் நடித்த பின்பு தனக்கு எது சரியாக வரும் என்பதை எண்ணி ஆக்‌ஷன் படங்களில் நடித்து வருகிறார். மேலும் ஆரம்பக் கட்டத்தில் விஜய்யை அவரது உருவத்தை வைத்து ஒதுக்கிய தமிழ் சினிமா இன்றைக்கு தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறது. தயாரிப்பாளர்களின் செல்லப்பிள்ளையாக மாறி வசூல் மன்னனாக களத்தில் நிற்கிறார்.