Skip to main content
Nakkheeran Magazine Nakkheeran Magazine

உளவுத்துறை ரிப்போர்ட்டால் மோடி,அமித்ஷா அதிர்ச்சி!

indiraprojects-large indiraprojects-mobile

மே 23-ல் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவும், காங்கிரஸ் முயற்சியில் நடக்கவிருக்கும் ஆட்சி மாற்றத்தை தடுக்கவும் பகீரதப் பிரயத்தனம் செய்து வருகிறார் மோடி. காங்கிரசும் பல வகைகளில் காய்களை நகர்த்தியபடி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் பா.ஜ.க.வின் தேர்தல் பேரணி வன்முறைக்குப் பிறகு, பீகாரில் இருந்த மோடியிடம்  அமித்ஷா பேச, அவர் கூறிய ஆலோசனையின்படி பா.ஜ.க.வின் மூத்த தலைவர்கள் ராஜ்நாத்சிங், நிதின்கட்கரி, பியூஷ்கோயல், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டவர்களோடு அவசர ஆலோசனை நடத்தப்பட்டது. "பாதுகாப்புப் படை யினர் மட்டும் இல்லாது போயிருந்தால் பேரணியில் நான் கொல்லப்பட்டிருப்பேன்' என அதிர்ச்சி விலகாமல் விவரித்திருக்கிறார் அமித்ஷா. இதனையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் எடுத்த முயற்சியில், மேற்கு வங்கத்தில் மட்டும் தேர்தல் பிரச்சாரத்தை ஒரு நாள் முன்னதாகவே முடித்துக்கொள்ள உத்தரவிட்டது இந்திய தேர்தல் ஆணையம். 
 

modi amithshaபா.ஜ.க. தரப்பில் விசாரித்தபோது, தேர்தல் நடந்து முடிந்துள்ள தொகுதிகள் குறித்து மத்திய உளவுத்துறையும் அந்தந்த மாநில பா.ஜ.க.விடமிருந்தும் வந்த ரிப்போர்ட்டுகளுடன் நிலவரங்களை முழுமையாக இந்த கூட்டத்தில் ஆராய்ந்திருக்கிறார்கள். தனிப் பெரும்பான்மைக்கான இடங்கள் கிடைக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்துள்ளனர். தோழமை கட்சிகளின் வெற்றி குறித்தும் திருப்தி இல்லை. ஆனாலும், பா.ஜ.க. ஆட்சி என்பதில் அமித்ஷா உறுதிகாட்டிய நிலையில், "80 இடங்களுக்குள் காங்கிரஸ் சுருண்டுவிட்டால் மூன்றாவது அணியை உருவாக்க கடுமையாக போராடுவார் ராகுல்காந்தி. அதனை நாம் உடைக்க வேண்டும். காங்கிரசை தூக்கிப் பிடிக்கும் மாநில கட்சிகளில் தி.மு.க.தான் அதிக ஆர்வம் காட்டுகிறது. உளவுத்துறையின் ரிப்போர்ட்டின்படி, காங்கிரஸ் ஆதரவிலிருந்து மு.க.ஸ்டாலினை விலக வைத்தாலே காங்கிரஸ் முயற்சியை உடைப்பதில் 50 சதவீத வெற்றி நமக்கு கிடைத்து விடும்' என தெளிவுபடுத்தியிருக்கிறார் ராஜ்நாத்சிங். 

 

soniyaஸ்டாலின்-சந்திரசேகரராவ் சந்திப்பின் விபரங்களை அறிந்து கொள்வதில் சோனியாவும், ராகுலும் ஆர்வமாக இருந்தனர். சோனியாவின் ஆர்வம் சந்திரபாபு நாயுடு வழியாக  ஸ்டாலினுக்குத் தெரியவர, நாயுடுவை சந்திக்க துரைமுருகனை அவர் அனுப்பி வைத்தார். இந்த சந்திப்புகள் குறித்து அறிவாலய வட்டாரங்களில் விசாரித்த போது, ஸ்டாலினிடம் சந்திரசேகரராவ், "புதிய பிரதமரை தேர்வு செய்வதில் மாநில கட்சிகளின் கைகள்தான் ஓங்கும். குறிப்பாக, தென் மாநிலங்களின் முக்கியத்துவம் அதிகமாக இருக்கும். தென் மாநிலத்தை சேர்ந்தவர்தான் பிரதமராகவோ அல்லது துணை பிரதமராகவோ வர வேண்டும்.   ஆந்திராவில் தனிப்பட்ட முறையில் நான் எடுத்த சர்வே கூட, சந்திரபாபு நாயுடுவுக்கு சாதகமாக இல்லை. ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆதரவு  உள்ளது. தெலுங்கானாவிலுள்ள 17 இடங்களையும் எனது கட்சி கைப்பற்றிவிடும். அதேபோல தமிழகத்தில் தி.மு.க. போட்டியிடும் 20 இடங்களிலும் நீங்கள்தான் ஜெயிப்பீர்கள். ஜெகன்மோகன் ரெட்டியுடன் கர்நாடகாவின் குமாரசாமியையும் நம் பக்கம் கொண்டுவந்துவிடலாம். ஆக, இந்த 4 மாநிலங்களும் சேர்ந்தால் நாம் சொல்பவர்தான் பிரதமர். காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமையும் சூழல் உருவானால் அதனை நீங்கள் ஆதரிப்பதில் எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால், மூன்றாவது அணியை காங்கிரஸ் உருவாக்கினால் அதற்கு ஆதரவு தராதீர்கள். மாறாக, நான் உருவாக்கும் மூன்றாவது அணிக்கு நீங்கள் வாருங்கள். துணை பிரதமர் பதவி தி.மு.க.வுக்கு கிடைக்கவும் வாய்ப்புண்டு' என வலை வீசினார்.
 

stalinஅதற்கு ஸ்டாலின், "காங்கிரஸ் கூட்டணியில் இருந்துகொண்டு அதற்கு மாறாக மூன்றாவது அணி என்ற முடிவை எடுப்பது சரியாக இருக்காது' என சொல்லியிருக்கிறார். அதற்கு ராவ், "பிரதமர் ரேசில் காங்கிரசுக்கு இணையாக மம்தாவும் மாயாவதியும் இருக்கிறார்கள்.  அவ்வளவு எளிதாக காங்கிரசை ஜெயிக்க விடமாட்டார்கள். அந்த சமயத்தில், தென் மாநிலங்களில் நமது வெற்றி பெரியதாக இருக்கும் போது மாயாவதி-மம்தா போன்றவர்கள் நமது ஆதரவை பெற முயற்சிப்பார்கள். அதனால், ஆப்ஷனை இரு பக்கமும் ஓப்பனாக வைத்திருங்கள்' என தெளிவுபடுத்தியிருக்கிறார். 

நாயுடு மூலம் ஸ்டாலின்-சந்திரசேகரராவ் சந்திப்பு விவரங்களைத் தெரிந்துகொண்ட சோனியாவுக்கு திருப்தி என்கிறது டெல்லி வட் டாரம். அதேநேரத்தில், மே 23-ந்தேதி டெல்லியில் நடக்கும் கூட்டத்துக்கு சந்திரசேகரராவையும்  அழைத்து சோனியா எழுதிய கடிதம், சந்திரபாபு நாயுடுவுக்கு அதிருப்தியை தந்துள்ளதாம். "ராவ் அழைக்கப்படுவதில் எனக்கு உடன்பாடில்லை' என சோனியாவிடம் பஞ்சாயத்தை கூட்டியிருக்கிறார்.  அதற்கு சோனியாகாந்தி, காங் கிரஸ் கூட்டணி கட்சிகளையும் ஆதரவு கட்சிகளையும் உடைக்க சந்திரசேகரராவை பா.ஜ.க. பயன்படுத்துவது போல நாமும் மாற்றுத் திட் டத்தில் இறங்க வேண்டுமென்று காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தினர். குறிப்பாக,  நம் கூட்டணியிலுள்ள தி.மு.க.வை உடைக்க மோடி திட்டமிடுகிறார். அதேபோல பா.ஜ.க. ஆதரவாளர்களாக இருக்கும் ஒடிசா முதல்வர் நவின் பட்நாயக்கையும் ஆந்திர ஜெகன்மோகன் ரெட்டியை யும் நம் பக்கம் இழுத்து பா.ஜ.க. திட்டத்தை உடைக்கலாமென காங்கிரஸ் தலைவர்கள் யோசனை தெரிவித்தனர். இதற்கான ப்ளான் ப்ரியங்காவை வைத்து உருவாக்கப்பட்டது. 

இதற்கிடையே காங்கிரஸ் கூட்டணியிலுள்ள கட்சிகளுடன் ஒரு ஆலோசனை கூட்டத்தை 21-ந்தேதியும், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் மற்றும் பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகளுடன் ஒரு கூட்டத்தை 23-ந் தேதியும் கூட்டுவதற்கு காங்கிரஸ் தலைமை ஆலோ சித்திருக்கிறது. இதற்கான கடிதங்களை சம்பந்தப் பட்ட கட்சிகளுக்கு அனுப்பி வைத்திருக்கிறார் சோனியாகாந்தி. மேலும், தேர்தல் முடிவுகள் வரு வதற்கு முன்பாக, நாயுடு தலைமையில் ஒருங் கிணைக்கப்பட்ட 21 கட்சிகளுடன் ஜனாதிபதியை சந்தித்து, பெரும்பான்மைக்கு குறைவாக அதிக இடங்களில் ஜெயித்த கட்சி என்கிற முறையில் எந்த கட்சியையும் ஆட்சி அமைக்க அழைக்கக் கூடாது என்பதை வலியுறுத்தவும், அதனையும் மீறி அழைத்தால் பெரும்பான்மைக்கான ஆதரவு கடிதங்களை பெற்றுத்தர சம்பந்தப்பட்ட கட்சிக்கு அதிக நாட்கள் அவகாசம் தரப்படக் கூடாது என வலியுறுத்தவும் திட்டமிட்டுள்ளது காங்கிரஸ். எதிர்க்கட்சிகளின்  தொடர்ச்சியான-வேகமான நகர்வுகள் மோடி-அமித்ஷா டீமை அப்செட்டாக்கியுள்ளது. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...