Skip to main content

தமிழிசைக்கு பதவி...உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்...அதிர்ச்சியில் தமிழக பாஜக சீனியர்கள்!

கவர்னர் பதவியை குறிவைத்து தமிழக பா.ஜ.க. தலைவர்கள் பலரும் காய்களை நகர்த்தி வந்த நிலையில், தமிழிசைக்கு தெலங்கானா கவர்னர் வாய்ப்பு கிடைத்ததில் பா.ஜ.க. தலைவர்கள் பலருக்கும் அதிர்ச்சி. இந்த இடத்தை அடைய தமிழிசை கடந்து வந்த பாதை நெடியது. தமிழிசைக்கு படிக்கும் காலத்திலிருந்தே அரசியல் மீது ஆர்வம் அதிகமாக இருந்தது. தனது குடும்பம் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் காங்கிரசை தேர்ந்தெடுக்காமல் பா.ஜ.க.வை தேர்ந்தெடுத்தார் தமிழிசை.

 

bjpபொதுவாக கட்சியில் பொறுப்புகள் கிடைக்கும்வரை வேகமாக ஓடுபவர்கள், பொறுப்புகள் கிடைத்ததும் முடங்கி விடுவதுண்டு. ஆனால், அக்கா தமிழிசை அப்படி அல்ல. பொறுப்புகள் கிடைத்ததும் கட்சியை வளர்ப்பதில் பல மடங்கு உழைத்தார். தமிழகத்தில் பா.ஜ.க.வை பட்டிதொட்டியெல்லாம் தெரிய வைத்ததில் தமிழிசையின் பங்களிப்பு அதிகம். பிரதமர் மோடி மற்றும் தேசிய தலைவர் அமித்ஷாவின் நம்பிக்கையை பெற்றதால் 2014-ல் தமிழக பா.ஜ.க. தலைவராக நியமிக்கப்பட்டார் தமிழிசை. அவருக்கு பதவி நீட்டிப்பு கிடைத்தது. கட்சியின் சட்டவிதிகளின்படி இரண்டு முறைக்கு மேல் தலைவர் பதவியில் ஒருவர் இருக்க முடியாது. அவரே எதிர்பார்க்காத சூழலில் உயரிய பதவிகளில் ஒன்றான ஆளுநர் பதவியில் அவரை நியமித்திருக்கிறார் பிரதமர் மோடி. உழைப்பையும் நேர்மையையும் அங்கீகரிக்கும் பரிசாக அவருக்கு இந்த பதவி கிடைத்துள்ளது'' என்கிறார் தமிழக பா.ஜ.க. வின் ஊடகப் பிரிவு தலைவரான ஏ.என்.சுப்ரமணியபிரசாத் பெருமிதமாக.

 

bjpமாநில தலைவர்களின் பதவிக்காலம் முடிபவர்களில் சிலரின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் அவர்களை கவர்னர்களாக நியமிக்க டெல்லியிலுள்ள அகில இந்திய பா.ஜ.க. தலைமையகத்தில் கடந்த மாதம் ஆலோசனை நடந்திருக்கிறது. அந்த ஆலோசனையில் தமிழக பா.ஜ.க.வை முதலில் கையிலெடுத்துள்ளார் அமித்ஷா. இதனையடுத்து, மத்திய உளவுத்துறையின் ரீஜினல் டைரக்டருக்கு இரண்டு உத்தரவுகள் பறந்திருக்கின்றன. அதாவது, தமிழிசையின் அரசியல் பணிகள் ஏற்படுத்திய தாக்கம் குறித்தும், புதிய தலைவராக நியமிப்பதில் கீழ்க்கண்ட 9 நபர்களின் பாசிட்டிவ், நெகட்டிவ் குறித்தும் நீண்ட களஆய்வு நடத்தி இரண்டு வாரங்களுக்குள் முழுமையான ரிப்போர்ட் தரும்படி உத்தரவிடப்பட்டிருக்கிறது. இதில் பட்டியலிடப்பட்ட 9 நபர்களைப் பற்றிய குறிப்புகளை அறிய 10 கேள்விகளையும் உளவுத்துறைக்கு அனுப்பி வைத்துள்ளது பா.ஜ.க.வின் தேசிய தலைமை. முதலில் தமிழிசையின் அரசியல் பணிகள் ஏற்படுத்திய தாக்கம் குறித்து 80 சதவீதம் பாசிட்டிவ்வாகவே ரிப்போர்ட் தந்துள்ளது உளவுத்துறை. அதனால்தான் "மேதகு' தமிழிசை என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளார்.
 

bjpஇந்த நிலையில், இரண்டாவது ரிப்போர்ட் குறித்து உளவுத்துறை வட்டாரங்களில் விசாரித்த போது, "தமிழக பா.ஜ.க.வில் கோலோச்சும் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, லஷ்மணன், நரேந்திரன், வானதி சீனி வாசன், கேசவ விநாயகம், நயினார் நாகேந்திரன், கருப்பு முருகானந்தம் ஆகிய 9 நபர்களைப் பற்றி 10 கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கான ரிப்போர்ட் தரும்படி கேட்டுள்ளார் பா.ஜ.க.வின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா. தமிழகத்தில் திராவிட கட்சிகளை கையாளும் திறமை, இவர்கள் மீது மாநிலம் முழுவதும் மக்களிடமிருக்கும் ஆழமான பார்வை, சிவில் மற்றும் குற்ற நடவடிக்கைகள், நிர்வாகிகளையும் தொண்டர்களையும் அரவணைக்கும் பாங்கு மற்றும் தனி மனித ஒழுக்கம், கட்சி அல்லது அரசாங்கத்தின் உயர் பதவிகள் வழங்கினால் அதனை வழிநடத்தும் ஆற்றல் என்கிற கேள்விகளுக்கு விரிவான பதிலை கேட்டிருந்தனர். மேலும், இந்த கேள்விகளுக்கு பதிலை தயாரிக்கும் அதிகாரி விருப்பு வெறுப்பின்றி உண்மைத் தகவல்களை அளிக்க வேண்டும். ஏனெனில், இன்னொரு குழுவும் இதேரீதியில் விசாரணையில் இறங்கியுள்ளது எனவும் எச்சரித்தது பா.ஜ.க. தலைமை.

 

bjpஇதனையடுத்து முழுமையான தகவல்களை கடந்த 28-ந்தேதி தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளனர் உளவுத்துறை அதிகாரிகள். உளவுத்துறையின் ரிப்போர்ட்டில், 9 நபர்களில் 5 பேர் மீது ஏகத்துக்கும் புகார்கள் வாசிக்கப்பட்டுள்ளன. 4 பேர்தான் 70 சதவீதம் பாசிட்டிவ் ரிப்போர்ட்டுகளை பெற்றுள்ளனர். அதில் முதலிடத்தில் இருப்பவர் நரேந்திரன். அந்த வகையில் நரேந்திரன், ஹெச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் ஆகியவர்களிடையே புதிய தலைவருக்கான போட்டி வலிமையாக இருக்கிறது'' என்கிறது உளவுத்துறை.


புதிய தலைவர் தேர்வு குறித்து மூத்த தலைவர் ஒருவரிடம் நாம் பேசியபோது, "மாநில பொறுப்புகளில் இப்போது இருப்பவர்களில் ஒருவர் மீதும் கட்சித் தலைமைக்கு நம்பிக்கை இல்லை. இருப்பினும் ஒவ்வொருவரும் தங்களுடைய டெல்லி லாபியை முழுமையாக பயன்படுத்த துவங்கியுள்ளனர். அதேசமயம், சாதி சமூக அரசியலை முன்னிறுத்தி பிரபலமே இல்லாத ஒருவரை நியமித்து தலைவர் பொறுப்பை ஒப்படைத்தால் என்ன? என்கிற ஸ்கெட்ச்சும் டெல்லியில் நடக்கிறது. இதனையும் தாண்டி, கட்சியின் கொள்கை வகுப்பாளர்களோ, "நடிகர் ரஜினியை தலைவராக்கினால் பா.ஜ.க.வின் அரசியல் வளர்ச்சி அதிரடியாக இருக்கும்' என அமித்ஷாவிடம் வலியுறுத்தி வருகிறார்கள். இரண்டாவது முறை மிருகபலத்துடன் மோடி பிரதமர் ஆனதில் ரஜினி பல விசயங்களை யோசிக்க ஆரம்பித்திருக்கிறார். அதனால், ரஜினியை பா.ஜ.க.விற்கு கொண்டுவர முயற்சிக்க வேண்டும் என அமித்ஷாவிற்கு அழுத்தம் தரப்படுகிறது. இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை'' என சுட்டிக்காட்டுகிறார்.

இதற்கிடையே, "தேர்தல் களத்தில் போட்டியிட்டு பலமுறை தோல்வியடைந்த தமிழிசைக்கு கவர்னர் பதவி வழங்கப்பட்டது கௌரவமானது என்றாலும் அந்த பதவியைக் கொடுத்து அவருடைய அரசியல் வளர்ச்சியை முடக்கி விட்டனர்' என்கிறார்கள் தமிழிசைக்கு நெருக்கமான பா.ஜ.க. வினர். இதுகுறித்து முன்னாள் தலைவர் ஒருவரிடம் விவாதித்த போது, ""கவர்னர் பதவியில் நியமித்து விட்டால் அவர்களுக்கு அரசியல் எதிர்காலம் கிடையாது என நினைக்க வேண்டாம். கட்சி தலைமை நினைத்தால் கவர்னர் பதவியிலிருந்து விலக்கி மீண்டும் அரசியலுக்கு கொண்டுவர முடியும். இதற்கு சில முன் உதாரணங்கள் இருக் கின்றன'' என்கிறார் அழுத்தமாக.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்