Skip to main content

‘வென்றால் சந்தோஷம்! தோற்றால் அதைவிட சந்தோஷம்!’ -ரஜினியின் மடைமாற்றம்!

Published on 20/07/2018 | Edited on 20/07/2018

“எதுக்கெடுத்தாலும் சென்னைக்கு கிளம்பி வராதீங்க. அந்தந்த மாவட்ட பிரச்சனையை அந்தந்த மாவட்டத்துலயே பேசி முடிச்சிக்கங்க. பணத்தையும் நேரத்தையும் எதுக்கு தேவையில்லாம வேஸ்ட் பண்ணுறீங்கன்னு கறாரா சொல்லிட்டாங்க. வேற வழியில்ல. மாவட்ட நிர்வாகிகள் அவங்கவங்க மாவட்டத்தை, இனி  நல்லபடியா பார்த்துத்தான் ஆகணும்.” என்றார் சிவகாசியில் நம்மைச் சந்தித்த ரஜினி ரசிகரான ரஜித் பாலாஜி. 
 

daaktar ilavarsan

டாக்டர் இளவரசன்



மாவட்ட நிர்வாகிகளுக்கு ரஜினி மக்கள் மன்ற தலைமை அனுப்பிய சுற்றறிக்கை இது – 

மாவட்ட வாரியாக புகார் மற்றும் குறை தீர்ப்புக்குழு ரஜினி மக்கள் மன்ற மாவட்டக் குழுவிலிருந்து அமைக்கப்படுகிறது. இந்தக் குழு மாவட்ட செயலாளர் தலைமையில் வழக்கறிஞர் அணி செயலாளர், இளைஞரணி செயலாளர், மகளிர் அணி செயலாளர், வர்த்த அணி செயலாளர் ஆகிய ஐந்து உறுப்பினர்களைக் கொண்டு செயல்பட வேண்டும். மாதம் இரண்டு முறை இந்தக் குழு கூடி, மாவட்ட மன்ற உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட புகார் மற்றும் குறைகளை விசாரித்து அதற்குரிய தீர்வை, இந்தக் குழுவே முடிவு செய்து அமல்படுத்த வேண்டும்.

 

 


உடனடியாக விசாரிக்க வேண்டிய அவசர புகார்களை விசாரித்திட,  மாவட்ட செயலாளர், தேவைக்கேற்றபடி இந்தக் குழுவைக் கூட்டி, விசாரித்து உரிய தீர்வை வழங்க வேண்டும். தலைமையில் பெறப்படும் அனைத்து புகார் மற்றும் குறை சம்பந்தப்பட்ட கடிதங்களும் இந்த மாவட்ட குழுவிற்கு உரிய தீர்வுக்காக அனுப்பி வைக்கப்படும்.இந்த சுற்றறிக்கை வாயிலாக ஒன்றைத் தெரிந்துகொள்ள முடிகிறது.  தமிழகத்தில் உள்ள  திராவிட கட்சிகளைப் போல, மாவட்ட செயலாளர்களுக்கு முழு அதிகாரத்தையும் வழங்கியிருக்கிறார் ரஜினி.  இதனைத் தொடர்ந்து,  மன்றத்தினர் எந்த வழியாக ராகவேந்திரா மண்டபத்துக்குள் நுழைய வேண்டும் என்பதிலிருந்து சகலத்திலும் புது நடைமுறையைக் கொண்டு வந்திருக்கிறார்கள். 

 

raju mahalingam

ராஜு மகாலிங்கம்

 

அதிரடி மாற்றங்கள் அரங்கேறிவரும் நிலையில், ரஜினி மக்கள் மன்ற முக்கிய நிர்வாகிகளிடம் பேசினோம். சில கேள்விகளை முன்வைத்தோம். ஆதங்கத்தோடு அவர்கள் வெளிப்படுத்திய தகவல்கள் இதோ...

ராஜு மகாலிங்கத்தை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்ளலாம். பன்னாட்டு கார்பரேட் நிறுவனங்களில் 15 ஆண்டுகள் தலைமை அதிகாரியாகப் பணியாற்றிய இவரை,  ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில செயலாளர் ஆக்கிவிட்டு,  இப்போது நீக்கிவிட்டதாக பேச்சு கிளம்பியது.  ‘இது உண்மைக்கு புறம்பான தகவல்; யாரும் நம்ப வேண்டாம்’ என்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் மறுத்தாலும், ராஜு மகாலிங்கம் இப்போது ஆக்டிவாக இல்லை என்பதே உண்மை. காரணம் – மாநிலம் முழுவதும் மன்றத்தினர் முன்வைத்த குறைகளைக் கேட்பதிலோ, அவற்றுக்கு தீர்வு காண்பதிலோ கவனம் செலுத்தாமல், ரஜினி மக்கள் மன்றத்தை கார்பரேட் நிறுவனம் போல நடத்த நினைத்ததுதான். மக்கள் மன்ற பணிகளுக்கு அவர் சரிவர மாட்டார் என்பது தெரிந்ததும் ரஜினியே அழைத்துப் பேசினார். இப்போது  ராஜு மகாலிங்கம் சுத்தமாக ஒதுங்கிவிட்டார்.

தலைமையின் கண்ணசைவில், மன்றப் பணிகளைக் கவனிப்பதற்கென்று   புதிதாக மூவர்குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குழுவில், ரஜினியின் நம்பிக்கைக்குரியவர்களாக கருதப்படும் மாநில அமைப்புச் செயலாளர் டாக்டர் இளவரசன், முன்னாள் காவல்துறை அதிகாரி ராஜசேகர், தூத்துக்குடி மா.செ. ஏ.ஜே.ஸ்டாலின் ஆகிய மூவரும் இடம் பெற்றிருக்கின்றனர்.
 

 

aj

ஸ்டாலின்


அமைப்புச் செயலாளர் டாக்டர் இளவரசன்,  பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் முன்னாள் (திமுக) மத்திய அமைச்சர்  ஜெகத்ரட்சகன் ஆகியோருக்கு ஒருவிதத்தில் உறவினர் ஆவார். ரிட்டயர்ட் ஐ.பி.எஸ். அதிகாரியான ராஜசேகர், மன்றத்தினருக்கு அறிவுரை வழங்கி, ஒழுங்குபடுத்தும் பணியைச் செய்து வருகிறார். ரசிகர் மன்றத்திலிருந்து மக்கள் மன்றமாக மாற்றம் கண்டிருக்கும் நிலையில், மன்றத்தினரின் எண்ண ஓட்டங்களை நன்கறிந்தவர் என்ற வகையில், தூத்துக்குடி மா.செ. ஸ்டாலினை, இக்குழுவில் இடம்பெற செய்திருக்கிறார் ரஜினி.

 

 


கடந்த 18-ஆம் தேதியிலிருந்து, சென்னை, ராகவேந்திரா மண்டபம், தலைமை அலுவலகத்தில் வைத்து,  மாவட்ட நிர்வாகிகளைச் சந்தித்து, குறைகளைக் கேட்க ஆரம்பித்திருக்கிறது மூவர்குழு. வெளி மாவட்டங்களில் இருந்து வருவதால்,  நிர்வாகிகள் தங்குவதற்கு, அங்கேயே ஏஸி அறையெல்லாம் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஒரு மாவட்டத்துக்கு அதிகபட்சம் இரண்டு மணி நேரம் ஒதுக்கி, நாள் ஒன்றுக்கு ஆறு மாவட்ட நிர்வாகிகளைச் சந்தித்து வருகிறார்கள். 25-ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும்,  36 மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு வாயிலாக கிடைத்த மொத்த பகிர்வுகளையும், அறிக்கையாக தயார் செய்து ரஜினியிடம் சேர்த்துவிடும் மூவர்குழு. 
 

 

mn

 

மாவட்ட நிர்வாகிகள் என்ன சொல்கிறார்கள்? எப்படி ‘ரியாக்ட்’ பண்ணுகிறது மூவர் குழு?

‘அவரு என் பேச்சை கேட்கிறதில்ல; இவரு என்னை மதிக்கிறதில்ல’ என்கிற ரீதியிலேயே, மாவட்ட நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்துகிறார்கள். அவர்களிடம், ‘இதுபோன்ற சாதாரண குறைகளையெல்லாம் பெரிதுபடுத்தாதீர்கள்.  பூத் கமிட்டி விஷயத்துக்கு வாருங்கள்.’ என்று மன்ற விஷயங்களைப் பேச ஆரம்பித்துவிடுகிறது மூவர்குழு.

‘அரசியலுக்கு வந்தால் பணம் சம்பாதிக்கும் எண்ணத்தோடு வருபவர்களை அருகில்கூட சேர்க்க மாட்டேன்.’ என்று சொல்லித்தானே, ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றம் ஆக்கினார் ரஜினி. நேர்மையான அரசியல் என்பதே குறிக்கோள். மன்றத்தினர் நல்லவர்களாக இருந்தால்தான் இது சாத்தியப்படும். மாவட்ட செயலாளரே சரியில்லை என்றால் தமிழ்நாடு சிஸ்டத்தை எப்படி சரிபண்ண முடியும்? கட்சி தொடங்குவதற்கு முன்பே இப்படி என்றால், அப்புறம் எப்படி? சேவை மனப்பான்மை கொண்டவர்கள் மட்டுமே கட்சி பொறுப்புக்களில் நீடிக்க முடியும். அதனால்தான், களை எடுக்கிறோம்  என்பதையெல்லாம் மனதில் பதியும் விதத்தில் மன்றத்தினரிடம் எடுத்துச் சொல்கிறது மூவர் குழு.

விவகாரம் ஒன்றுமே இல்லையா? களைகள் பிடுங்கப்பட்டனவா?

அரசியல் ஆர்வத்தால், திமுக, அதிமுகவினரிடம், ஏற்கனவே விலைபோன நிர்வாகிகளும் இருக்கிறார்கள். இன்றுவரையிலும், தொடர்பில் உள்ளவர்களும் உண்டு. ஒருசில மாவட்டங்களில், ஒன்றிய செயலாளர்களோ, வேறு பொறுப்புக்களில் உள்ளவர்களோ, சற்று வசதியானவராகத் தெரிந்தால், ‘தலைவரிடம் சொல்லி, உனக்கு எம்.எல்.ஏ. சீட் வாங்கித் தருகிறேன்; எம்.பி. சீட் வாங்கித் தருகிறேன்.’ என்று உறுதியளித்து, அந்த நபர்களிடம் மாவட்ட செயலாளர் பணம் வாங்குவதும், அவ்வப்போது மது விருந்துக்கு ஏற்பாடு செய்து தரச்சொல்வதும் நடந்திருக்கிறது. அவர்கள் யார் என்பதை விசாரணையின் மூலம் தெரிந்துகொண்டோம். நிச்சயம் நடவடிக்கை எடுப்போம். 

 

 


ரஜினியின் வீட்டிலிருந்தே சில நிர்வாகிகளால் காய் நகர்த்த முடிகிறது என்று சொல்வதெல்லாம் பச்சைப் பொய். ரஜினியின் வீட்டில் யார்  இருக்கிறார்கள்? அவரது மனைவி லதா, ஒரு போன் அட்டென்டர், ஒரு சமையல்காரர், இரண்டு டிரைவர்கள். அவ்வளவுதான். என் குடும்பத்தில், அரசியலில்  நான் ஒருவன் மட்டுமே என்பதில் உறுதிகாட்டும் ரஜினி,   கட்சிக்கும் தன் குடும்பத்தினருக்கும் எந்தவித தொடர்பும் இருக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்.  ட்விட்டரோ, முகநூலோ, காலண்டரோ எதிலும், தன் மனைவி லதாவின் படத்தைப் போடக்கூடாது என்று உத்தரவே போட்டுவிட்டார்.

திண்டுக்கல் மாவட்ட செயலாளராக இருந்த தம்புராஜ் ஏன் நீக்கப்பட்டார்? சுயநலமாக செயல்பட்டார் என்று தலைமை அறிவித்ததன் பின்னணியில், வேறொரு காரணமும் இருக்கிறது. பவுன்டேஷன் என்ற பெயரில் உதவுவதாகச் சொல்லி, லதா ரஜினிகாந்தை அவரால் அணுக முடிந்தது. இதை வைத்து,  ‘எனக்கு மேடத்தை தெரியும்’ என்று மன்றத்துக்கு எதிரான சில காரியங்களைச் செய்தார். அதனால்தான், அவர் நடவடிக்கைக்கு ஆளானார். நிலைமை இப்படியிருக்கும்போது, ரஜினி வீட்டில் யாரும் யார் மூலமும் காய் நகர்த்தி பொறுப்புக்களைப் பெற்றுவிட முயற்சிப்பதாகச் சொல்வதெல்லாம் திட்டமிட்ட வதந்தியே. 

 

la

 


சினிமாவில் ரஜினியின் நடிப்பைப் பார்த்து ரசித்துக் கைதட்டி, மன்றம் ஆரம்பித்தவர்களிடம், நேர்மை, நியாயம், சமூக சேவை என்றெல்லாம் பலவித கட்டுப்பாடுகளை விதிப்பது நடைமுறைக்கு சரியாக வருமா? 

நடிகரான பிறகு, சிகரெட், மது போன்ற சில தீய பழக்கங்கள் ரஜினியிடம் வந்து ஒட்டிக்கொண்டாலும், அனைத்து மட்டத்திலும் நல்ல மனிதர் என்று பெயர் எடுக்க அவரால் முடிந்தது. ஏனென்றால், சிறு வயதிலிருந்தே அவர் நெறிப்படுத்தப்பட்டார். அப்போது, மிகவும் சேட்டை செய்பவராக இருந்த ரஜினியை, படிப்புக்காக  ராமகிருஷ்ணா மடத்தில் கொண்டுபோய் சேர்த்தார் அவருடைய அண்ணன் சத்யநாராயணா. அங்குதான் ஆன்மிகம், ஒழுக்கம், கட்டுப்பாடு என, பல விஷயங்களையும் கற்றார். சிறுவயதிலேயே ரஜினியை மிகவும் பக்குவப்படுத்தியது ராமகிருஷ்ணா மடம். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் டார்ஜிலிங்கில் ஷூட்டிங், தமிழ்நாட்டில் அரசியல் என்று இத்தனை பிசியாக இருந்தும், கல்கத்தா சென்று, ராமகிருஷ்ணா மடத்தின் தலைவர் ஸ்வாமி ஸ்மரநந்தா மஹாராஜை சந்தித்திருக்கிறார் என்றால், ஆன்மிகத்தின் துணைகொண்டு, தமிழக மக்களுக்கு எந்தெந்த விதத்தில் நல்லது பண்ண முடியும் என்ற தணியாத வேட்கைதான். 

 

sw

 

அரசியல் கட்சி தொடங்கி, மனசாட்சியுடன் மக்களுக்கு சேவை செய்து,  அதன்மூலம் வெற்றி கிடைத்தால்  சந்தோஷம். தோல்வி கிடைத்தால் அதைவிட சந்தோஷம் என்று ரஜினி பேசுவதிலிருந்தே, அவருடைய நிலைப்பாட்டை அறிந்துகொள்ள முடியும். அதனால், அவரை நேசிக்கும் ரசிகர்களும், நல்லாட்சி தருவார் என்று நம்புபவர்களும், அவருடைய வழியைப் பின்பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை.

தூத்துக்குடியில் சமூக விரோதிகள் என்று பேசியதும், எட்டு வழிச்சாலைக்கு ஆதரவு தெரிவித்திருப்பதும், மக்களின் மனநிலையை பிரதிபலிக்காமல், விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கிறதே?

கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினியின் ஜோடி சிம்ரன். ஒரு பாடல் காட்சிகூட முடிந்துவிட்டது. எங்கெல்லாமோ சென்று சினிமாவில் நடிப்பவர் என்பதால்,  மக்களுக்கும் ரஜினிக்கும் வெகுதூரம் என்று நினைத்துவிடாதீர்கள். படப்பிடிப்பு இடைவேளையின் போதெல்லாம், ட்விட்டர் பார்க்கிறார். பத்திரிக்கைகளைப் படிக்கிறார். தமிழகத்தில், இந்த  ஊழல் அரசியலில் இருந்து மக்களை எப்படி  விடுவிப்பது குறித்து ஆலோசிக்கிறார். விவசாயிகளைப் பாதிக்காமல் எட்டு வழிச்சாலை போட வேண்டுமென்றுதான் சொல்லியிருக்கிறார். தூத்துக்குடியில் சமூக விரோதிகள் என்று அவர் அன்று பேசியது இப்போது நிரூபணம் ஆகிவிட்டது.  குற்றம் குறை சொல்வதையே  வாடிக்கையாகக் கொண்ட அரசியல்வாதிகளின் விமர்சனத்துக்கெல்லாம் அப்பாற்பட்டவர் ரஜினி. காமராஜரின் பொற்கால ஆட்சி, மக்கள் மீது எம்.ஜி.ஆர். வைத்திருந்த உண்மையான பாசம், இதையெல்லாம் உள்வாங்கிக் கொண்டுதான், அரசியலில் இறங்கவே முடிவு செய்தார். மக்கள் ரஜினி மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அவர் தமிழகத்தின் முதலமைச்சர் ஆவது உறுதி.

‘கூடிய விரைவிலேயே தமிழக மக்களுக்கு நல்ல காலம் பிறக்கும்’ என்று நம்பிக்கையோடு பேசினார்கள் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜனநாயக கடமையாற்றினார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Actor Rajinikanth cast his vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  அதன்படி நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

Next Story

“அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்!”- ரஜினிகாந்த்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Rajinikanth has said that he will not answer political questions

வேட்டையன் படப்பிடிப்பிற்காக சென்னையிலிருந்து ஹைதராபாத் சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த், படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார்.ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளிவரும் திரைப்படமான வேட்டையன் படப்பிடிப்பு, ஹைதராபாத் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து வருகிறது.

அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள, சென்னையிலிருந்து விமானம் மூலம் கடந்த 9ஆம் தேதி ஹைதராபாத் புறப்பட்டார். 75 சதவீத படப்பிடிப்பு நிறைவுற்ற நிலையில், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

“படப்பிடிப்பு நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது..” என்று மீடியாக்களிடம் ரஜினிகாந்த் தெரிவித்தபோது, நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு  “அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்..” என்று கூலாகச் சொல்லிவிட்டு கிளம்பினார்.