Skip to main content

"நல்லக்கண்ணு அய்யாவை நடிக்கவைத்தது இப்படித்தான்..." - லவ்குரு ராஜவேலின் ‘வெரி வெரி பேட்’ அனுபவம்  


 

very very bad jipsy


 

"ஸ்டேஷனுல ஏன்டா கட்டப்பஞ்சாயத்து நடத்துற... ஏவிவிட்ட டாகுக்கெல்லாம் எலும்புத்துண்டு பொறுக்குற?"  - கேட்டவுடன் ஜெர்க்காகி கவனிக்க வைத்த இந்த வரிகள் கோவனின் பாடல் வரிகள் அல்ல, ஒரு சினிமா பாடலின் வரிகள். 'யார்யா அவரு எனக்கே பாக்கணும் போல இருக்கு'ன்னு பார்த்தா 'ஜோக்கர்' எடுத்த ராஜூமுருகனின் அடுத்த படமான 'ஜிப்ஸி' படத்தில் வரும் பாடல் வரிகள். படத்தின் ப்ரோமோஷன் சாங்காக வந்திருக்கும் 'வெரி வெரி பேட்' பாடலின் வரிகள். வீடியோ பார்த்தால் அதற்கு மேல் ஆச்சரியம். நடித்திருப்பவர்கள் நல்லகண்ணு அய்யா, திருமுருகன்காந்தி, பாலபாரதி, பியுஸ் மானுஷ், வளர்மதி, முகிலன், க்ரேஸ் பானு இந்த கூட்டணியே கலக்கலாக இருக்கிறதே, யாரு ஐடியா என்றால் நம்ம 'லவ்குரு'வின் இயக்கம்தான் இந்தப் பாடல். இரவில் தன் மயக்கும் குரலில் ரேடியோவில் லவ்குருவாக காதலர்களுக்கு கைடன்ஸ் கொடுக்கும் இவர் பகலில் பல சமூக செயல்பாடுகளில் இறங்குகிறார். இப்போது இந்த ஜிப்ஸி பாடல். லவ்குருவுக்கு ஃபோன் அடித்தோம். 'சொல்லுங்க உங்க லவ்ல என்ன பிரச்சனை?' என்று கேட்கும் தொனியில் ஹலோ சொன்னார். அவரிடம் பேசியது...  
          

வெரி  அண்மையில் வெளியாகி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது  ஆதரவைப் பெற்ற ஜிப்ஸி படத்தின் ‘வெரி வெரி பேட்’ பாடலின் இயக்குனர் ராஜவேல் நாகராஜனின் பேட்டி. 

 

வெரி வெரி பேட் பாடல் புரமோஷன் பாடலா, அல்லது படத்திலேயே இடம்பெறும் பாடலா?
 

இது வெறும் புரமோஷனல் பாடல் இல்லை, இந்தப் பாடல் படத்தின் தொடக்கத்தில் வரும். ஆனால் வேறொரு வெர்ஷனில். காவல்துறையின் அத்துமீறலை விமர்சிக்கும் விதமாக வரும். காவல்துறையை எதிர்த்து படத்தில் இப்பாடலை ஜீவா பாடுவதாக வரும்.

 

நாட்டில் விமர்சிக்கப்பட வேண்டியவர்களில் முக்கியமானவர்கள் அரசியல்வாதிகள், அப்படியிருக்கையில் காவல்துறையை விமர்சித்தது ஏன்?

எனக்கு கதை என்னவென்று தெரியும், அதனால் சொல்கிறேன். இதையே இயக்குனர் ராஜூ முருகன் பல இடங்களில் கூறியுள்ளார். கதைக்களம் அப்படி அமைந்ததால்தான் விமர்சிக்கும் விதமாக வரிகளும் அமைந்தது. காவல்துறை அரசாங்கத்தின் ஊழியர்கள், அவர்களுக்கு அரசாங்கம் சொல்வதுதான் கட்டளை, அதைத்தான் செய்வார்கள். உதாரணமாக ஜல்லிக்கட்டு போராட்டத்தை எடுத்துக்கொள்வோம். போராட்டம் நடந்த பத்து நாட்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுமாறு அரசு கூறியது. அதனால் பாதுகாப்பாக இருந்தனர். கடைசி நாள் அடித்துக் கலைக்கச்சொன்னது. அதனால் தடியடி நடத்தி போராட்டத்தைக் கலைத்தனர். எப்போதுமே காவல்துறையின் நடவடிக்கைகள் எல்லாம் எளிய மக்களிடம்தான் இருக்கும். ‘நோ பார்க்கிங்’கில் நிற்கும் வண்டியென்றாலும்கூட விலையுயர்ந்த கார்களுக்கோ, அரசு ஊழியர்களின் வாகனங்களுக்கோ பூட்டு போடமாட்டார்கள். அதுவே ஏழை, எளிய மக்கள் சிறிய அளவில் விதிமீறினாலும் அவர்களுக்கு நிச்சயம் அபராதம் விதிக்கப்படும். இந்தப் பாடலை மொத்தம் பத்து இலட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். அதில் 88 ஆயிரம் பேர் இதை லைக் செய்திருக்கிறார்கள், இதிலிருந்தே தெரிகிறது மக்களின் உணர்வைதான், நாங்கள் பிரதிபலித்துள்ளோம் என்று.

 

இயக்குனர் ராஜூ முருகன் எதுவும் டிப்ஸ் கொடுத்தாரா?

எனக்கும், தோழர் ராஜூ முருகனுக்கும் விகடனில் பணியாற்றும் போதிருந்தே நட்பு இருந்தது. அவர் ஒருநாள் அழைத்து இப்படி ஒரு சாங் பண்ணவேண்டும் எனக் கூறினார். இது சாதாரணமான புரமோஷனல் சாங்காக இருக்கக்கூடாது என முடிவு செய்தோம். அதன் பிறகுதான் இந்தக் கான்செப்ட்டை கூறினேன். இதில் ராஜூ முருகன், சந்தோஷ் நாராயணன், யுகபாரதி ஆகியோர் இருப்பார்கள் என்றும் கூறினேன். நன்றாக இருக்கிறது என்று இதையே ஃபைனல் செய்தோம். அதன்பின்தான் இதில் யார், யாரை அழைக்கலாம், எப்படி காட்சி அமைக்கலாம் என்பதை முடிவு செய்தோம்.


 

very very bad jipsy


 

சமூக செயற்பாட்டாளர்களை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள்?

சமகாலத்தில் மக்களுக்காக போராடி, சிறைசென்ற சமூக செயற்பாட்டாளர்களை அழைக்கலாம் என முடிவுசெய்தோம். அதிலும் ஒரு சிக்கல் இருந்தது. ஏனென்றால் வளர்மதி சேலத்தில் இருந்தார். திருமுருகன் காந்தி கருஞ்சட்டை மாநாடு பணிகளுக்காக திருச்சியில் இருந்தார், பியூஸ் மானுஷ் சேலத்தில் இருந்தார். பாலபாரதி திண்டுக்கல்லில் இருந்தார். இப்படி அனைவரும் ஒவ்வொரு ஊரில் இருந்தனர். அவர்களையெல்லாம் ஒரே இடத்தில் சேர்த்தோம். அதன்பின் அவர்கள் போராடிய பிரச்சனைகளையே அவர்களுக்கான வசனங்களாகக் கொடுத்தோம்.

 

தோழர் நல்லக்கண்ணுவை ஐயாவை எப்படி சம்மதிக்க வைத்தீர்கள்?
 

ராஜூ முருகன்தான் இதற்கு ஏற்பாடு செய்தார். ஷூட்டிங்கிற்கு எல்லாம் ஏற்பாடு ஆகிக்கொண்டிருந்தபோதுதான் அவர் கூறினார், நான் போய் நல்லக்கண்ணு ஐயாவை கூட்டிக்கொண்டு வருகிறேன் என்று. அவருக்கும், ஐயாவிற்கும் முன்பே அறிமுகம் இருந்தது. ராஜூமுருகனுக்கு கம்யூனிஸம் குறித்த ஈடுபாடும் இருந்ததால் அவர்களுக்குள் நெருக்கம் இருந்தது. ‘ஜோக்கர்’ படத்தை ஐயா பார்த்திருக்கிறார், அதிலிருந்தே அவர்களுக்குள்ளான உறவு இன்னும் நெருக்கமானது. அதனாலும், இந்த கான்செப்ட் பற்றி கூறியவுடனும் உடனே அவர் அதற்கு சம்மதித்துவிட்டார்.

 

திருமுருகன் காந்தி மிகுந்த ஈடுபாட்டோடும், உற்சாகமாகவும் இதில் பணியாற்றியிருந்தார், அது அந்தக் காட்சிகளிலும் வெளிபட்டிருந்தது. அவருடனான படப்பிடிப்பு அனுபவங்கள் எப்படி?
 

இந்த கான்செப்ட்டை சொன்னவுடன் அவரும் உடனே சம்மதித்துவிட்டார். ஷூட்டிங் தொடங்கியது, ஒவ்வொருவரும் ஏன் ஜெயிலுக்கு வந்தீர்கள் என கேட்பார்கள். அப்போது திருமுருகன் காந்தியின் தருணம் வந்தபோது அவர் முன்னரே கேட்டார், 'எழுவர் விடுதலையை பற்றியும் பேசலாமா, உங்களுக்கு எதுவும் தயக்கமா' என்று. நாங்கள் 'அதெல்லாம் ஒன்றுமில்லை பேசலாம்' என்றோம். இப்படிதான் ஈழத் தமிழர் விடுதலைக்காகவா, எழுவர் விடுதலைக்காகவா என அவர் கேட்கும் பகுதி உருவானது. அவர் அந்த ஷூட்டிங்கின் போதே உற்சாகமாகத்தான் இருந்தார்.

இன்னொரு விஷயம் யோசித்தோம். நாங்கள் அதை நேரமின்மையால் விட்டுவிட்டோம். நாங்கள் ஸ்க்ரிப்ட் முடிவுசெய்யும்போதே எழுவர் விடுதலையையும் உள்ளே கொண்டுவரவேண்டுமென முடிவுசெய்தோம். அதற்காக அந்த சிறைக்குள் (ராஜூ முருகன், சந்தோஷ் நாராயணன், யுகபாரதி இருப்பார்களே) எழுவர் இருப்பதுபோல் காட்சியமைக்கவேண்டும் என முடிவுசெய்தோம். ஆனால் அது நேரமின்மையால் காட்சிப்படுத்த முடியாமல் போனது.

 

சந்தோஷ் நாராயணன் எப்படி தோழர் சந்தோஷ் நாராயணன் ஆனார்?

அவருக்கு அது சரியானதாகத்தான் இருக்கும். ஏனென்றால் சமூகம் சார்ந்த, சமூகக்கொடுமைகள் சார்ந்த படங்கள் அனைத்திற்கும் அவர்தான் இசையமைப்பாளர். அது அட்டக்கத்தியாக இருக்கட்டும், மெட்ராஸாக இருக்கட்டும், பரியேறும் பெருமாளாக இருக்கட்டும், அவையனைத்திற்கும் அவர்தான் இசையமைப்பாளர். அவர் புரமோஷனல் சாங், லிரிக்கல் வீடியோ என எதிலும் பங்கேற்கமாட்டார். நாங்கள் இது சாதாரண புரமோஷனல் சாங்காக இருக்காது என்று கான்செப்ட்டைக் கூறினோம். அவர் மகிழ்ச்சியாகி உடனே சம்மதித்து விட்டார். அவரிடம் கறுப்பு உடை அணிந்திருக்க வேண்டும் என்று மட்டும்தான் கூறினோம். அவராகவேதான் அந்த சேகுவேரா டி-சர்ட் எல்லாம் போட்டுக்கொண்டு இது நன்றாக இருக்கிறதா எனக்கேட்டார். அந்தளவுக்கு அவர் அதில் ஈடுபாடாக இருந்தார்.

 

இப்படத்தின் கதாநாயகன் ஜீவா. இயல்பாகவே அவருக்கு கம்யூனிஸ தலைவரின் பெயர் அமைந்துவிட்டது. அவரின் அரசியல் பார்வை எப்படி? 

ஜீவாவிற்கு ஒரு தெளிவான அரசியல் பார்வை இருக்கிறது. அரசியல் பாதை இல்லை, தெளிவான அரசியல் பார்வை. அதுதான் அவரை இந்தப் படத்தில் நடிக்க சம்மதிக்க வைத்துள்ளது. ஏனென்றால் இந்தப்படத்தை ஒப்புக்கொள்ளவே ஒரு அரசியல் பார்வை வேண்டும். அது அவரிடம் தெளிவாக இருந்தது. அவரே ஒரு முறை கூறியிருந்தார், இந்தப் படம் வெளிவந்தவுடன் எல்லோரும் என்னைப் பார்த்து பொறாமை கொள்வார்கள் என்று. அது உண்மைதான், இந்தப்படமும் அவ்வாறுதான் இருக்கும்.

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்