Skip to main content

"பாஜக கூட்டணி... 3 லட்சம் முஸ்லிம் வாக்குகள்" வேலூரில் திக்குதெரியாமல் முழிக்கும் அதிமுக!

Published on 25/07/2019 | Edited on 25/07/2019

வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு வரும் ஆகஸ்ட் 5 தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. அதிமுக, திமுக சார்பாக கடந்த முறை போட்டியிட்ட ஏ.சி சண்முகம் மற்றும் கதிர் ஆனந்த் ஆகிய இருவரும் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். வேலூர் தொகுதி இதுவரை 16 நாடாளுமன்ற தேர்தல்களை சந்தித்துள்ளது. அதில் காங்கிரஸ் மற்றும் திமுக தலா 5 முறையும், அதிமுக இரண்டு முறையும் வென்றுள்ளது. தற்போது அதிமுக சார்பாக களமிறங்கியுள்ள ஏ.சி சண்முகம் 1984-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றுள்ளார். மேலும் 1980-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவையில் தேர்தலில் அதிமுக சார்பாக ஆரணி தொகுதியில் போட்டுயிட்டும் வெற்றிபெற்றுள்ளார். எம்.ஜி.ஆருக்கு மிக நெருக்கமாக இருந்த அவர், எம்.ஜி.ஆர் பெயரில் பல்வேறு கல்லூரிகளை நடத்தி வருகிறார். திமுக சார்பாக களமிறங்கும் கதிர் ஆனந்த் முதல் முறையாக தேர்தல் களத்தை சந்திக்கிறார். 

 

  vellore MP election special news


வேலூர் நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரையில் அது திமுகவுக்கு சற்று சாதகமான தொகுதியாகவே இருந்து வருகிறது. 2011ல் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து மாநகராட்சியிலும் திமுக மண்ணை கவ்விய நிலையிலும், வேலூர் மாநகராட்சியில் மட்டும் சில ரவுண்டுகள் அதிமுகவை பின்னுக்கு தள்ளி திமுக ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அந்த வகையில், அதிமுகவுக்கு தேனி போன்று, திமுகவுக்கு வேலூர் மாவட்டம் என்று திமுகவினர் கூறுவது உண்டு. அந்த வகையில் வேலூர்  நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டப்பேரவை தொகுதிகளில் வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம், ஆம்பூர் ஆகிய தொகுதிகளில் திமுக-வை சேர்ந்தவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். கே.பி குப்பம், வாணியம்பாடி ஆகிய தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்ட சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற்றிருந்தாலும், மக்களவைக்கு என்று தனியாக இடைத்தேர்தல் நடைபெற்று இல்லை. எனவே, வேலூர் மக்களவையின் தொகுதியில் யார் வெற்றிபெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகம் எழுந்துள்ளது.

 

இதற்கிடையே வேலூர் தொகுதியை பொறுத்தவரையில் சில சமூகங்களை சார்ந்த மக்களே தேர்தல் வெற்றியை தீர்மானிப்பவர்களாக இருக்கிறார்கள். குறிப்பாக முதலியார்கள், வன்னியர்கள் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகள் தேர்தல் வெற்றியை தீர்மானிக்கும் என்பது நிதர்சனமான உண்மை. அந்த வகையில் முதலியார் சமூகத்தை சார்ந்த ஏ.சி சண்முகம் அந்த சமூக வாக்குகளை முழுவதுமாக பெற பல்வேறு உத்திகளை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பாமக கூட்டணியில் உள்ளதால் வன்னியர்கள் வாக்குகளும் அதிமுகவிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு அடுத்ததாக கிட்டதட்ட மூன்று சட்டமன்ற தொகுதிகளில் வெற்றியை தீர்மானிக்கும் முஸ்லிம் வாக்குகளை பெற என்ன வழி என்று அதிமுக அமைச்சர்கள் முழித்துக் கொண்டிருப்பதாக ஒரு தகவல்கள் வெளியாகி உள்ளது.

மூன்று லட்சம் வாக்குகளை கொண்ட முஸ்லிம் சமூகம் யாருக்கு வாக்களிக்கிறார்களோ அவர்களே வெற்றிபெற அதிக வாய்ப்புக்கள் உண்டு என்று கூறப்படும் நிலையில், பாஜகவுடன் உள்ள கூட்டணி காரணமாக அந்த வாக்குகள் அதிமுகவிற்கு வருவதற்கு வாய்ப்பில்லை என்று அதிமுக தலைமை நினைப்பதாக சில மாதங்களுக்கு முன்பே ஒரு டாக் ஓடியது. இதுக்குறித்து உளவுத்துறை அளித்த தகவலால் உஷாரான ஆளும் தரப்பு, மாநிலங்களவை தேர்தலில் முஸ்லிம் சமூகத்துக்கு பிரதிநிதித்துவம் அளிப்பதை போன்று அந்த சமூகத்தை சேர்ந்த ஒருவரை நாடாளுமன்றத்துக்கு அனுப்பினார்கள். தேர்தல் பிரச்சாரத்துக்கு இதனை பயன்படுத்தி கொள்ளலாம் என்று ஆளும் தரப்பு நினைப்பதாக கூறப்படுகிறது. மேலும், திமுக முஸ்லிம் சமூகத்தை சார்ந்த யாரையாவது நாடாளுமன்றத்துக்கு அனுப்பியதா? என்று கேள்வி எழுப்பவும் ஆளும் தரப்பு தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. 

 


 

Next Story

வேட்பாளரை வசைபாடும் நிர்வாகிகள்; அடுத்தடுத்து வெளியாகும் ஆடியோவால் பரபரப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Argument to party officials with Vellore candidate AC Shanmugam

தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. வாக்குப்பதிவு நடந்து முடிந்த பின் சில இடங்களில் உட்கட்சி மோதல் உச்சத்துக்குச் சென்றுள்ளது. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜகவின் தாமரை சின்னத்தில் புதிய நீதி கட்சியின் நிறுவனர் ஏசி சண்முகம் போட்டியிட்டார். தமிழ்நாட்டில் பணமழை பொழிந்த சிலதொகுதிகளில் மிக முக்கியமானது வேலூர் நாடாளுமன்ற தொகுதி. வாக்காளர்களுக்கு தலா 500 ரூபாய், ஒரு பூத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் என சுமார் 100 கோடிக்கு மேல் தேர்தல் களத்தில் செலவு செய்துள்ளாராம் ஏசி சண்முகம்.

பாஜக நிர்வாகிகள், பாமக நிர்வாகிகள் மாவட்டம் ஒன்றியம் நகர கிளை வரை லட்சங்களில் தேர்தல் பணிக்காக ஏ.சி.சண்முகத்திடம் பணம் வாங்கி உள்ளனர். இப்படி பணம் வாங்கியவர்கள் வாக்குப்பதிவு முடிவுக்கு பின்னர் பங்கு பிரிப்பதில் அடித்துக்கொண்டு இருக்கின்றனர். தேர்தலுக்கு முன்பே ஏ.சி.சண்முகத்திடம் பணம் வாங்குவதில் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து சில ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. வாக்குப்பதிவு முடிவுக்கு பின்னர் இப்பொழுது ஏ.சி. சண்முகத்தை கடுமையான முறையில் விமர்சிக்கும் ஆடியோக்கள் வெளியாகி உள்ளன. அதன் தொடர்ச்சியாக தினமும் சண்டையும் அடித்துக் கொண்டும் சாலை மறியலிலும் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியில் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததும் பணம் பங்கு பிரிப்பதில் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பாஜக வழக்கறிஞர் கோகுல் தரப்பினரை மற்றொரு தரப்பினர் தாக்கியதில் காயம் அடைந்த கோகுலை காவல்துறையினர் மீட்டு அழைத்து வந்த போது காவல்துறையினர் முன்னிலையில் மீண்டும் சரமாரியாக தாக்கினர். இதனைத் தொடர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கோகுல், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், மற்றும் ஸ்ரீ வர்ஷன் ஆகிய மூன்று பேரை போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பேரணாம்பட்டு ஒன்றியத்தில் பாஜக நிர்வாகிகள் பணம் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் புதிய நீதிக் கட்சி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு ஏ.சி. சண்முகத்தை ஆபாசமான வார்த்தைகளில் கொச்சையாகத் திட்டி பேசி உள்ளனர். இந்த ஆடியோ தற்போது வெளியாகி, பாஜக தரப்பை நெருக்கடிக்கு உள்ளாக்கியது. இதனால் வேலூர் மாவட்ட பாஜக தலைவர் மனோகரன்,  பேரணாம்பட்டு ஒன்றியத்தை மொத்தமாக களைத்து விட்டார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் யாரும் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என அறிக்கை வெளியிட்டுள்ளார். இப்படி தேர்தல் முடிந்த பின்னரும் தினம் தினம் வேலூர் மாவட்ட பாஜகவில் அடிதடியும் சண்டையும் நடந்து வருகின்றது.

புதிய நீதிக் கட்சியின் குடியாத்தம் பகுதி நிர்வாகிகளும், வேலூர் மாவட்ட நிர்வாகிகள் சிலரும் கட்சியிலிருந்து நீக்குவதற்கான பணியில் ஏ.சி. சண்முகம் ஈடுபட்டுள்ளார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.