Skip to main content

“3 மணிக்கு படுத்துட்டான்... 2 மணிக்கே தண்ணியடிச்சிட்டான்... பட்டைய உரிச்சிடுவன்...” - துரைமுருகன் அதிரடி 

Published on 07/08/2021 | Edited on 07/08/2021

 

ddd

 

"எனக்கு நீ ஓட்டுப் போடல, அதுக்காக நான் கோச்சிக்கல. எனக்குத் தெரியும், நீங்க எனக்கு ஓட்டுப் போட்டிங்க, போட்டுருப்பீங்க, போட வேணாம்னு சொன்னவன் பலர் எங்கக்கிட்டயே இருக்கான். தேர்தலன்னைக்கு 3 மணிக்குப் போய் படுத்துட்டான். 2 மணிக்கே தண்ணியடிச்சிட்டான். எதிர்கட்சிக்காரன்கிட்ட காசு வாங்கிட்டான். அது யார் யாருன்னு போலீஸை வச்சி கண்டுபிடிச்சிட்டேன். பட்டைய உரிச்சிடுவன் மகனுங்களா உங்கள. பஞ்சாயத்து தேர்தல் வருது, அப்போ தெரியும் யார் யாரை உரிக்கப் போறேன்னு. அதுவரைக்கும் விட்டுவைக்கறேன். தபால் வாக்குகள் இல்லையென்றால் வெற்றி பெற்றிருக்க முடியாது. உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கு சீட் தரணும் அப்படிங்கறதில் தலையிடுவேன். வேலை செய்தால்தான் பதவி''

 

கடந்த வாரத்தில் வேலூர் மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம், காட்பாடி மேற்கு ஒன்றிய, வாலாஜா மேற்கு ஒன்றிய பொது உறுப்பினர்கள் கூட்டங்கள், பொன்னையில் நியாயவிலைக் கடை திறப்பு என அடுத்தடுத்து நடந்தது. அந்தக் கூட்டங்களில்தான் மேற்கண்டவாறு திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பேசினார்.

 

இதுபற்றி கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவரிடம் பேசியபோது, "மிகமிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. வாக்கு எண்ணிக்கையின்போது கண்ணீர்விட்டவர், ‘தொகுதிக்கு எவ்வளவோ செய்தேனே' என புலம்பினார்.

 

தொகுதியில் பலமாக வன்னியர்கள் இருந்தாலும் அதே அளவுக்கு ஈக்வலாக உள்ள மற்ற சாதியினரின் கூட்டணி பெரியதாக எடுபட்டது. வேலூர் மா.செ. நந்தகுமார் எம்.எல்.ஏ.வை ஓரம்கட்டுகிறார்கள் என நாயுடு சமுதாய மக்களும், வேலூர் மாநகரச் செயலாளர் கார்த்தி எம்.எல்.ஏ.வை ஓரம்கட்டுகிறார் என முதலியார்களும் எதிராக நின்றார்கள். அதேநேரத்தில் வன்னியர்களில் பெரும்பாலானவர்கள் 10.5 சதவித இடஒதுக்கீட்டால் அதிமுக ஆதரவு எடுத்தது தெரியவந்தது. எல்லாவற்றையும்தான் மனக்குமுறலாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனாலும், சீனியரான அவருக்கு இன்னும் சில விஷயம் புரியவில்லை.

 

2019 நாடாளுமன்ற தேர்தலின்போது காட்பாடி தொகுதியில் மட்டும் அதிமுகவை விட 55 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றார் எம்.பி ஜெகத்ரட்சகன். அதே தொகுதியில் திமுகவின் பெருந்தலையான துரைமுருகன் தோல்வியின் விளிம்புக்குச் சென்றார் என்றால் அணுகுமுறைதான் காரணம். மாநில அரசியலில் கவனம் செலுத்தினாலும், உள்ளூர் தொண்டர்களை அணுசரிக்கணும். பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றணும். 10 ஆண்டுகள் திமுக எதிர்க்கட்சியா இருந்ததால அவரால பெருசா செய்ய முடியலை. அதிமுக ராமு, வாக்கு கேட்கும்போது எளிய மக்களிடம் நெருக்கமாக வாக்கு கேட்டது, மரியாதை தந்தது மக்களைக் கவர்ந்தது.

 

வேலூர் மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அவைத்தலைவர் முகமது சகி, "10 வருடமா திமுக தொண்டர்கள் வருமானமின்றி கட்சிக்கு செலவு செய்வதைச் சுட்டிக்காட்டிப் பேசினார். அமைச்சர் பதிலே சொல்லலை. அவங்களுக்காக செலவும் செய்யலை. அவரது மகன் கதிர்ஆனந்த் எம்.பியாக இருக்கிறார். அவரும் செய்வதில்லை. அவரை மா.செ.வாக்கிடணும்னு மந்திரி விரும்புறாரு. கட்சியில் எந்தப் பதவியிலும் இல்லாமல், காட்பாடியைவிட்டு வெளியே வராமல் இருந்தவருக்கு, வேலூர் எம்.பி. சீட் வாங்கித் தந்தார். வெற்றிபெற்றதும் தொகுதி வேலைகளைச் செய்வதை விட்டுவிட்டு கட்சி நிர்வாகத்தில் குழப்பத்தைத்தான் ஏற்படுத்துகிறார். கதிர் டார்ச்சர் தாங்க முடியாமல் துரைமுருகனால் பதவிக்கு வந்த திருப்பத்தூர் மா.செ. தேவராஜ் எம்.எல்.ஏ., அமைச்சர் வேலுவின் ஆதரவாளராகிவிட்டார். துரை முருகனின் தம்பி துரை. சிங்காரம், துரைமுருகனின் தீவிர ஆதரவாளரான வன்னிராஜா, மாநகர மண்டல தலைவராக இருந்த சுனில்குமார் போன்றவர்களால் பாதிக்கப்பட்ட நிர்வாகிகள், இப்போது நேரடியாக கதிர் ஆனந்தால் பாதிக்கப்படுகிறார்கள்.

 

போதாக் குறைக்கு கதிர்ஆனந்தின் பி.ஏ. எனச் சொல்லிக்கொள்பவர்கள், கட்சி நிர்வாகிகளை மிக மோசமாகப் பேசுகிறார்கள். இதுயெல்லாம் சேர்ந்துதான் அமைச்சருக்கு எதிராக தேர்தலில் வேலை செய்தது'' என்றார்கள்.

 

துரைமுருகன் ஆதரவாளர் ஒருவரிடம் பேசியபோது, "தேர்தல் களத்தில் நிறைய செலவு செய்தார். 10 நாளைக்கு முன்னாடியே ஓட்டுக்கு, பூத் செலவுக்கு தர வேண்டியதைத் தந்துட்டார். அதில் 60 சதவீதம் கூட மக்களுக்குப் போய் சேரல. சிங்கத்தை சுண்டெலி ஜெயிச்சிடுமான்னு எகத்தாளமா தேர்தல் வேலையே செய்யல. உண்மை எங்கே வெளியில வந்துடுமோன்னு பயந்துக்கிட்டு, அமைச்சருக்கு எதிரா நெகட்டிவ் இமேஜ் மக்கள் மத்தியில் இருக்குன்னு காட்ட முயற்சி செய்யறாங்க. கட்சியில் உழைப்பவர்களை அமைச்சர் ஓரம்கட்டுவதில்லை. கதிர்ஆனந்தை அமைச்சர் அடக்கித்தான் வச்சிருக்கார். அமைச்சரை வீழ்த்த நடக்கும் அரசியலும் அவருக்குத் தெரியும்'' என்றார்.

 

தன் தொகுதியில் கட்சியைப் பலப்படுத்துகிறேன் என காட்பாடி தொகுதிக்குள் வரும் காட்பாடி ஒன்றியம், வாலாஜா ஒன்றியம், சோளிங்கர் மேற்கு ஒன்றியத்தில் 10 ஊராட்சிக்கு ஒரு ஒன்றியச் செயலாளர் என ஒன்றியத்தைப் பிரித்து ஒன்றியப் பொறுப்பாளர்களை நியமிக்க வைத்தார் பொதுச் செயலாளர் துரைமுருகன். கே.வி. குப்பம், குடியாத்தம் தொகுதியிலும் மாற்றங்கள் செய்ய, இதுவும் இப்போது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Next Story

ரூ. 20 லட்சம் வரை சொத்து சேர்த்த பஞ்சாயத்து கிளார்க்; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anti-corruption department raids panchayat clerk house

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தற்போது பொன்னை அடுத்த பாலேகுப்பத்தில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியில் உள்ளார்.

2011 - 2017 ஆகிய இடைப்பட்ட காலகட்டத்தில் பணியின் போது வருமானத்திற்கு அதிகமாக சுமார் 20 லட்சம் வரை சொத்து சேர்த்ததாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் பிரபு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து இன்று வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியில் உள்ள பஞ்சாயத்து கிளார்க் பிரபு என்பவரின் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சோதனையில் வங்கி பரிவர்த்தனை மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்கள், பிரபுவின் வருமானம் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்