Veerappan supporters pay tribute at Veerappan Memorial in Mettur

"வீரவணக்கம்... வீரவணக்கம்... வனத்தை காத்த மாவீரனுக்கு வீரவணக்கம்" என்று கோஷங்கள் மேட்டூர் அருகே உள்ள மூலக்காடில் எதிரொலித்தன. வீரப்பனின் 20ஆம் ஆண்டு நினைவஞ்சலிக்காக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்து மரியாதை செலுத்தியவர்கள் எழுப்பிய கோஷம்தான் இது....

Advertisment

தமிழக அதிரடிப்படையால் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டு 20 ஆண்டுகள் கடந்து விட்டன. 1952 ஆம் ஆண்டு தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள கோபிநத்தம் கிராமத்தில் பிறந்தார் வீரப்பன். சிறு சிறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட வீரப்பன், திடீரென ஒரு காட்டையே கட்டி ஆளும் அளவுக்கு வல்லமை படைத்தவராக மாறினார். அதற்குக் காரணமும் அரசாங்கம் தான் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

Advertisment

தமிழ்நாடு, கர்நாடகா அரசுகளுக்கு பெரும் தலைவலியாக மாறிப்போன வீரப்பனை பிடிக்க இருமாநில அதிரடிப்படைகள் களமிறக்கப்பட்டன. ஆனால் காட்டைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருந்த வீரப்பனை பிடிக்க இரு அரசுகளும் திணறிப்போயின. ஒரு பக்கம் வீரப்பன் மீது பல்வேறு குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர் எனப் புகார் வந்தாலும், மற்றொரு பக்கம் அவர் வசிக்கும் காட்டுப் பகுதியைச் சுற்றியுள்ள கிராம மக்கள் வீரப்பனை கடவுளாக நினைத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2004 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ஆம் தேதியன்று தருமபுரியை அடுத்துள்ள பாப்பாரப்பட்டியில் தமிழக அதிரடிப்படையினரால் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டார் எனக் கூறப்படுகிறது.

கொல்லப்பட்ட பின்பு பல்வேறு குழப்பங்கள், போலீஸ் மற்றும் அரசின் அழுத்தம், கொந்தளிப்பு என அனைத்தையும் தாண்டி வீரப்பன் குடும்பத்தின் பூர்வீக இடம் இருந்த மூலக்காட்டில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. மேட்டூர் அணை கட்டப்படும் முன்பு வீரப்பனின் மூதாதையர்கள் அந்தப் பகுதியில் விவசாயம் செய்து வந்தனர். மேட்டூர் அணைக்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட பிறகு, அவர்கள் கர்நாடக மாநிலம் கோபிநத்தம் சென்று குடியேறினர். அந்த ஊர்தான் இன்று வீரப்பனின் சொந்த ஊராக சொல்லப்படுகிறது.

Advertisment

அங்கு அடக்கம் செய்தால் பிற்காலத்தில் நினைவை அனுசரிக்கவும் வழிபடவும் கர்நாடக அரசால் தடை வரும் என்று கருதி வீரப்பன் உடல் இங்கு அடக்கம் செய்யப்பட்டது. அதற்கு முன்பே வீரப்பனின் அண்ணன் மாதையனின் மகன் மணி விபத்தில் மரணமடைய அவரது உடலும் இங்குதான் அடக்கம் செய்யப்பட்டது. வீரப்பனின் அண்ணன் மாதையனின் உடல் வீரப்பனுக்கு அருகிலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இப்போது அந்த இடம் நடுவில் வீரப்பன், அவருக்கு இடப்புறம் அவரது அண்ணன் மாதையன் வலப்புறம் மாதையன் மகன் மணி என மூவரின் நினைவிடமாகத் திகழ்கிறது.

நேற்று அதிகாலையிலிருந்தே மக்கள் வரத்தொடங்கினர். மாலை, சூடம், பத்தியுடன் வந்து அவருக்கு மரியாதை செலுத்தி வணங்கிச் சென்றனர். கர்நாடகத்தின் சில ஊர்களில் இருந்தும் இளைஞர்கள் வந்து அஞ்சலி செலுத்தினர். இளைஞர்கள் மட்டுமல்ல இளம் பெண்களையும் கணிசமான எண்ணிக்கையில் பார்க்க முடிந்தது. மேலும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, நாம் தமிழர் கட்சி மற்றும் பாமகவைச் சேர்ந்த நிர்வாகிகள் மூலக்காட்டுக்கு வந்து அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த ஆதரவாளா்களும் வீரப்பன் உடலுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.