ADVERTISEMENT

விஷமான ஆறு, அமில மழை, சகதி நீர்... ஜாம்பியாவில் ஸ்டெர்லைட்!

02:14 AM Apr 06, 2018 | vasanthbalakrishnan

வேதாந்தா நேச்சுரல் ரிசோர்சஸ், அதாங்க, நம்ம ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் நிறுவனம், உலகமெங்கும் உலோகம், இயற்கை கனிமங்கள் சார்ந்து செயல்பட்டு வரும் ஒரு பணக்கார நிறுவனம். இந்த நிறுவனத்தை நிறுவியவர் அனில் அகர்வால். பீஹார் மாநிலத்தில் பிறந்த சாதாரண இந்திய குடிமகன். தற்போது இவரது நிறுவனத்தின் தலைமையிடமோ லண்டனில் இருக்கிறது. மேலும் இந்த நிறுவனம் எண்ணெய் கிணறு மற்றும் எரிவாயு போன்றவற்றையும் பூமியில் இருந்து எடுத்து பிரிக்கிறது. இவர்களின் முக்கிய பொருட்களாக இருப்பது தாமிரம், ஜிங்க், அலுமினியம், லெட் மற்றும் பெட்ரோலியம் ஆகும். 1988ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இவரது நிறுவன சாம்ராஜ்யம் இன்று வரை வளர்ந்துகொண்டே இருக்கிறது.

ADVERTISEMENT



இந்த ஸ்டெர்லைட் நிறுவனத்தால் என்ன பாதிப்புகள் எல்லாம் நேர்கிறது என்பதை ஊர் அறிந்துவிட்டது. இருந்தாலும் அரசுகளும், சில அறிவாளிகளும் மட்டும் இதை மறுத்தே வருகின்றனர். அதாவது, ஸ்டெர்லைட் நிறுவனத்தால் ஏற்படும் நச்சு புகை கழிவையும் காற்றை மாசுபாட்டையும் தூத்துக்குடியில் கார், பைக் புகையினால் தான் இப்படி ஆகிறது என்னும் அளவுக்கு போகிற போக்கில் சொல்கின்றனர். இந்த நிறுவனம் உலகம் முழுவதும் இருக்கிறது, இங்கு தமிழகத்தில் மட்டும் தான் இதற்கு எதிர்ப்பும், மக்கள் குறைகள் சொல்வதும் என்பது போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்குகிறார்கள்.

ADVERTISEMENT


ஜாம்பியா நாட்டில் சிங்கோலா என்னும் ஊரில்தான் ஆப்பிரிக்க கண்டத்திலேயே தாமிர சுரங்கம் மிகவும் பெரிதாக இருக்கிறது, தாமிரமும் அதிகம் எடுக்கப்படுகிறது. அங்கு கான்கோலா காப்பர் மைன்ஸ் என்ற பெயரில் இயங்குகிறது வேதாந்தாவின் ஆலை. இந்த ஊர் மக்கள், 'எங்கள் ஊரில் வந்து பாருங்கள் மாசு என்ற ஒன்றை சுவாசிப்பீர்கள், சுவைப்பீர்கள்' என்கின்றனர். சுரங்கம் பக்கத்தில் ஊர் மக்களுக்கு என்று ஒரு தண்ணீர் குழாய் உள்ளது. அதிலிருந்து வரும் நீர் பார்க்க குடிக்கும் நீர் போன்றே இருக்காது. வெள்ளத்தில் சேற்றை வாரிக்கொண்டு வரும் சகதி போன்ற அந்த நீர் இருக்கும், அதையே குடித்துப் பார்த்தால் அமில வாடையை கொண்டிருக்கும், அது நீர் இல்லை அமிலம் தான் "சல்பர் டை ஆக்சைட்" கலந்து வருகிறது. மனிதனுக்கு நீர் என்பது இன்றிமையாத ஒன்றாக இருக்கலாம். ஆனால் இந்த அருவெறுக்க தக்க நீரை குடிக்கும் போது நீரே வேண்டாம் என்று நமக்குள் தோன்றிவிடும்.



சரி, ஆள்துளை நீரில் தான் இப்படி அமிலம் கலந்துவிட்டது என்று பார்த்தால், அங்குள்ள காஃபூ ஆற்றிலும் அமிலம் கலந்து அமிலநீராக அதுவும் மாறியது. ஆற்றிலிருந்து சூரியனின் மூலம் ஆவியாகி, பின்னர் அந்த ஆவி மேலே சென்று மேகமாகி. அது குளிரும் போது மழையாக பொழியும். அதுதான் இயற்கை, அதுபோன்றுதான் இங்கும் நடக்கிறது. அமிலமாக இருக்கும் நீரோடைகளால் மழையும் அமிலமாக பொழிகிறது. இங்கிருக்கும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் நச்சு புகையினால் காற்றிலும் அமிலம் கலந்திருக்கிறது. இது அனைத்திற்கும் ஒரே மாதிரியான காரணங்கள் தான் இந்த ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.


வேதாந்தாவால் அமைக்கப்பட்டிருக்கும் இந்தத் தாமிர சுரங்கமும் தாமிர சுத்திகரிப்பு தொழிற்சாலை தான் இதற்கு காரணம் என்று அந்த மக்களும் தெரிவிக்கின்றனர். கனடாவில் இருந்து வந்த ஒரு ஆய்வுக் குழுவும் தெரிவிக்கிறது. பஞ்ச பூதங்கள் அனைத்தும் பாதிப்படைந்திருக்கிறது. நிலத்தில் அறுவடை செய்த பயிர்களும் வாடிவிட்டது, சோளமும் மக்கி விட்டது. நிலமும் ரசாயன பொருட்களால் அவதிப்பட்டு அதற்கும் மனிதனை போல நோய் தொற்றியிருக்கிறது. ஆற்றில் இருக்கும் மீனை சாப்பிட்டால், அதை சாப்பிட்டவர்களின் உடல்நிலைக்கு பங்கம் வந்துவிடுகிறது. நாற்பது வருடமாக இயங்கி வரும் இந்தத் தாமிர சுரங்கம், அந்த ஊர் சுற்றுப்புற சூழலை அழித்து வந்திருக்கிறது.



அவர்களும் சட்டத்தை நம்பி லண்டன் நீதிமன்றத்தில் போராடித்தான் வந்திருக்கின்றனர். அவர்களுக்கு நஷ்ட ஈட்டுத் தொகை வழங்க உத்தரவிட்டிருக்கிறது. இந்தியாவில் பல தொழிற்சாலைகள் வைத்திருக்கும் வேதாந்தா பழங்குடி மக்களும், கிராம மக்களும் தங்களின் நிலப்பரப்பை விட்டு வெளியே செல்லும் அளவுக்கு தாக்கத்தை சுற்றுச் சூழலுக்கு ஏற்படுத்துகிறது. இப்படி சென்ற இடமெல்லாம் சுற்றுச் சூழல் சீர்கேட்டை ஏற்படுத்தும் இத்தகைய ஆலைகளும் அவற்றின் நிர்வாகங்களும் மிகுந்த கவனத்தோடும் கண்டிப்போடும் கையாளப்பட வேண்டியவை. ஆனால், நம் ஆட்சியாளர்களின் கவனம் என்று மக்கள் நலன் மீது இருந்திருக்கிறது?

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT