Advertisment

‘வெல்லும் ஜனநாயகம்’ - திருச்சியில் ஆர்ப்பரித்த சிறுத்தைகள் படை! 

VCK State Conference in trichy

குடியரசு தினமான ஜனவரி 26 அன்று வி.சி.க.வின் ‘வெல்லும் ஜனநாயகம்’ மாநாடு நடைபெற்றது.

Advertisment

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ‘வெல்லும் ஜனநாயகம்’ என்ற தலைப்பில் ஜனவரி26 ஆம் தேதி திருச்சி சிறுகனூரில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அரசியல் வெள்ளி விழா, கட்சித் தலைமையின் அகவை 60 மணி விழா, இந்தியா கூட்டணி தேர்தல் வெற்றி கால்கோள் விழா என முப்பெரும் விழாவாக மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் வெளிப் பந்தல் நாடாளுமன்ற வடிவத்திலும், மாநாட்டின் மேடை புதிய நாடாளுமன்ற வடிவத்திலும் வடிவமைக்கப்பட்டிருந்தது. மேலும், மாநாட்டு பந்தலுக்குள் நுழைய மூன்று வாயில்கள் இருந்தன. அவை, சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் சுதந்திரம் வாயில்களாக இருந்தன.

Advertisment

காவிரியில் புரண்டோடும் வெள்ளம்போல், காவிரிக் கரையின் சிறுகனூரில் திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகளின் தொண்டர்கள் பல லட்சம் பேர் மாநாட்டுத்திடலின் உள்ளேயும்வெளியேயும் திரண்டனர். மாநாட்டிற்காக கடந்த 24ம் தேதி சென்னையில் உள்ள கட்சித்தலைமையகமான அம்பேத்கர் திடலில் இருந்து வழக்கறிஞர் பாவேந்தர் தலைமையில் துவங்கிய சமத்துவச் சுடர், 25ம் தேதி வழக்கறிஞர் ரஜினிகாந்த் தலைமையில், தஞ்சை கீழ்வெண்மணி தியாகிகள் நினைவிடத்திலிருந்து துவங்கிய சகோதரத்துவச் சுடர், மேலவளவு முருகேசன் நினைவு இடத்திலிருந்து சங்கத்தமிழன் தலைமையில்துவங்கிய சுதந்திரச் சுடர் ஆகியவை மேடைக்கு வந்தன. மூவரிடத்தில் இருந்தும் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சுடர்களைப் பெற்று மாநாட்டைத்துவக்கி வைத்தார். மாநாடு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு துவங்கப்பட்டது.

VCK State Conference in trichy

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், தொடர்ந்து சிறப்புப்பேருரைகளைத் தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க. ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா, சி.பி.ஐ.எம்.எல் (விடுதலை) கட்சியின் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சாரியா, திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும் தலைவருமான வேல்முருகன், கொங்கு மக்கள் தேசிய கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும் தலைவருமான ஈ.ஆர். ஈஸ்வரன், சி.பி.ஐ (எம்.எல்) தமிழக மாநிலச் செயலாளர் ஆசைத்தம்பி, ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைவர் வசீகரன் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாகத்தமிழக அமைச்சர்கள் கே.என். நேரு, ஆ. ராசா, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எஸ்.எஸ். சிவசங்கர், சி.வெ. கணேசன் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

இந்த மாநாட்டில், பாலஸ்தீன மக்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் ஆதரவு. பாலஸ்தீனத்தின் மீது தொடர்ந்து போர் தொடுக்கும் இஸ்ரேல் அரசுக்கு கண்டனம், அங்கு போர் நிறுத்தத்திற்கு இந்திய அரசு அனைத்து வித முன்னெடுப்புகளையும் எடுக்க வேண்டும். இலங்கையில் தமிழர்களுக்கு அனைத்து விதமான சமமான உரிமைகள் கிடைத்திட இந்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பெரும்பான்மைவாத அரசியலைப் புறக்கணிப்பு, மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுதல், சென்னையை இந்தியாவின் 2வது தலைநகராக அறிவித்தல், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும், வழக்காடு மொழியாகத் தமிழை அறிவித்தல், ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையைத் திரும்பப் பெற வேண்டும், ஆளுநர் பதவியை ஒழித்தல், மாநில அதிகாரங்களை அதிகரிக்க வேண்டும், அமைச்சரவையிலும், மேலவைகளிலும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு, ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கு சட்டம் இயற்றுதல், பழங்குடியினருக்கு சாதிச் சான்றிதழ் வழங்குதல், வகுப்புவாத வன்முறைத் தடுப்புச் சட்டத்தை இயற்றுதல் உள்ளிட்ட 33 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் தொல். திருமாவளவன், “குடியரசு தினமான இன்று அரசியல் அமைப்புச் சட்டத்தின் முகப்புரையை உறுதி மொழியாக ஏற்போம். மேடையில் உள்ள தலைவர்கள் உட்பட அனைவரும் எழுந்து நிற்கவும்” என்றதும். மேடையில் இருந்த தலைவர்களும், கீழே இருந்த தொண்டர்களும் எழுந்து நின்று, திருமாவளவன் வாசித்த, “இந்திய மக்களாகிய நாம், இறையாண்மையுள்ள, சம தர்மம் உள்ள, மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசைக் கொண்டு இந்தியாவைக் கட்டமைத்திடவும், அதன் குடிமக்கள் யாவருக்கும் சமூக, பொருளாதார, அரசியல் ரீதி சிந்தனை, வெளிப்பாடு, பற்றுறுதி, நம்பிக்கை, வழிபாடுஆகியவற்றின் சுதந்திரம் தகுதிப்படுத்துதல், வாய்ப்பளித்தல் மற்றும் அவற்றை குடிமக்களிடையே மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கான சமத்துவம், தனிநபரின் மாண்பு, தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கு உறுதி அளிக்கும் சகோதரத்துவம்யாவற்றையும் பாதுகாத்திட அதற்கு இந்தியா கூட்டணியை ஆட்சியில் அமர்த்திட இந்தக் குடியரசு நாளில் மனப்பூர்வமாக உறுதி ஏற்கிறோம்” என்று சொல்ல அனைவரும் அந்த உறுதிமொழியை ஏற்றனர். பிறகு தலைவர்கள் ஜனநாயகச் சுடரை ஏந்தி நாட்டில் ஜனநாயகத்தை மீட்டுக் காப்போம் எனும் வகையில் வெளிப்படுத்தினர்.

மாநாட்டின் இறுதியில் பேசிய திருமாவளவன், “பொதுவாக சிறுத்தைகள் காடுகளில் இருக்கும். இங்குதான் ஒவ்வொரு கிராமத்திலும்சிறுத்தைகள் உள்ளன. தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு வீரர்களாக சிறுத்தைகள் இருக்கிறோம். சனாதன சக்திகளை எச்சரிக்கும் மாநாடு இது. பா.ஜ.க.வை, சங் பரிவார்களை, சனாதன சக்திகளை வீழ்த்துவோம். ஆட்சி அதிகார பீடத்தில் இருந்து விரட்டி அடிப்போம், இந்தியா கூட்டணியை வெல்ல வைப்போம், வெல்லும் ஜனநாயகம்” என எழுச்சி உரையாற்றத்தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.

trichy vck
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe